பொதுவாக நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகன் என வர்ணிக்கப்படக்கூடிய கிரகமாகும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் அந்த ஜாதகர் எதிலும் தைரியத்தோடும், துணிவோடும் செயல்படக்கூடிய நபராக இருப்பார். அதுவே சந்திரன் பலவீனமாக இருந்தால் அந்த ஜாதகர் சற்று குழப்பவாதியாக இருப்பார். பொதுவாக சந்திரன் வளர்பிறையில் சுப கிரகமாகவும், தேய்பிறையில் பாவ கிரகமாகவும் பலன் தருகிறார். இதை எளிதில் அறிந்துகொள்வதற்கு ஜாதகக் கட்டத்தில் சூரியன் இருக்கக்கூடிய கட்டத்தில் இருந்து முதல் 7 கட்டத்திற்குள் சந்திரன் இருந்தால் அவர்கள் வளர்பிறையில் பிறந்தவர்கள் என்றும், 7-ஆவது கட்டத்திலிருந்து 12-ஆவது கட்டத்துக்குள் சந்திரன் இருந்தால் அவர்கள் தேய்பிறையில் பிறந்தவர்கள் என்றும் நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். தேய்பிறையில் பிறப்பதே கெடுதியென கூறமுடியாது. அதிலும் குறிப்பாக சூரியனுக்கு 11, 12 ஆகிய ஸ்தானங்களில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய அமைப்பு தேய்பிறையில் கடைசி நாட்களாக வருவதால் அந்நாட்களில் பிறப்பவர்களுக்கு சந்திரன் சற்று பலவீனமாக இருப்பார்.

Advertisment

சரி; அடுத்து சந்திரன் பலம் பெறுவதைப் பற்றி பார்க்கின்ற பொழுது சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றாலும் சந்திரன் தனது நட்பு கிரகம் என சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், குரு போன்ற கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், சுப கிரக நட்சத்திரத்தில் இருந்தாலும் பலமாக இருந்து நற்பலன்களைத் தருவார். அதிலும் குறிப்பாக சுப கிரக நட்சத்திரங்களில் சந்திரன் இருக்கின்றபொழுது சந்திரன் நல்ல பலன் தருவதற்கான வாய்ப்புகளும், எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலமும் உண்டாகும்.

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெறுவதோ சனி, ராகு, கேது போன்ற பாவ கிரக சேர்க்கை பெறுவதோ அவ்வளவு சிறப்பு என கூறமுடியாது. அதிலும் குறிப்பாக சந்திரன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பது, சந்திரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 

அப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்களுக்கு தேவையற்ற மனக்குழப்பம், தைரியம் இல்லாத நிலை, சின்ன விஷயத்தை கண்டுகூட அஞ்சக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சந்திரன் பலவீனமாக இருப்பவர்களுக்கு சந்திரனின் தசை புக்தி நடைபெறுகின்றபொழுது மனக்குழப்பம், தேவையற்ற நிம்மதி குறைவுகள் ஏற்படும். ஒருசிலருக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு தேவையற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய ஒரு அமைப்புகள் உண்டாகும்.

Advertisment

ஒருவர் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் மனோ காரகன் சந்திரன் கோட்சாரரீதியாக ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய கூடிய நாட்களில் அவர்களுக்கு தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படும். அதனைதான் நாங்கள் ராசிபலன்கள் எழுதுகின்ற பொழுது சந்திராஷ்டம நாட்கள் என கூறுகிறோம். 

அடுத்து குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரங்கள் சந்திர ஓரை நேரமாக இருக்கும். 

சந்திர ஓரை நேரங்கள்:  

ஞாயிற்றுக்கிழமை: காலை 9.00-10.00, மாலை 4.00-5.00. 

திங்கட்கிழமை: காலை 6.00-7.00, பகல் 1.00-2.00, இரவு 8.00-9.00. 

செவ்வாய்க்கிழமை: பகல் 10.00-11.00, மாலை 5.00-6.00. 

புதன்கிழமை: காலை 7.00-8.00, மாலை 2.00-3.00, இரவு 9.00-10.00. 

வியாழன்கிழமை: பகல் 11.00-12.00, மாலை 6.00-7.00. 

வெள்ளிக்கிழமை: காலை 8.00-9.00, மதியம் 3.00-4.00, இரவு 10.00-11.00. 

சனிக்கிழமை: பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00. 

அந்த நேரங்களில் ஒரு முயற்சியில் ஈடுபட்டால் அந்த நேரங்களில் தேவையற்ற மன குழப்பங்கள், எடுத்த காரியம் சுபமாக முடியாமல் தடங்கள் ஏற்படக்கூடிய ஒரு நிலை உண்டாகும். 

பொதுவாக சந்திர ஓரை நேரங்களில், சந்திராஷ்டம நாட்களில் சுப முயற்சிகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. 

சந்திரன் பலவீனமாக இருந்து சந்திரனின் தசை புக்தி நடைபெறுகின்ற காலங்களில் முடிந்தவரை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும், பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும், பெருமாள் வழிபாடு மேற்கொள்வதும் நன்மை தரும்.