லகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். 

Advertisment

மகளிர் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

இந்த மகத்தான வெற்றியின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வசப்படுத்தும் நான்காவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெறுகிறார்திவ்யா தேஷ்முக். 

இவருக்கு முன்பாக கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி மற்றும் ஹரிகா ஆகிய இந்திய செஸ் வீராங்கனைகள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருந்தனர்.

Advertisment

மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி -திவ்யா தேஷ்முக் மோதினர்.

இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.

இறுதிப் போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக், ஹம்பியுடன் 41-வது நகர்த்தலில் டிரா செய்தார். 

Advertisment

இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இதையடுத்து, 2-வது ஆட்டத்தில் ஹம்பி - திவ்யா மீண்டும் மோதினர்.

இந்த ஆட்டம் 34-வது நகர்த்தலின்போது டிராவில் முடிவடைந்தது. 

deshmukh1

இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் போட்டி நடந்தது. விறுவிறுப்பான இந்த டை-பிரேக்கரில் வென்று 2.5 - 1.5என்ற புள்ளிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வென்றார் திவ்யா தேஷ்முக்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றனர்.

8 பேர் கலந்து கொள்ளும் கேண்டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் வென்ஜுன் ஜூவுக்கு எதிராக போட்டி யிடுபவர் தேர்வு செய்யப்படுவார்.

இறுதிப் போட்டியில், ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை வீழ்த்திய 19 வயதான நாக்பூரை சேர்ந்த திவ்யா தேஷ்முக் ஆனந்தக் கண்ணீருடன் வெற்றியைக் கொண்டாடினார்.

சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்குக்கு ரூ.43.24 லட்சம் பரிசுத் தொகையும், 2-வது இடத்தை பெற்ற கோனேரு ஹம்பிக்கு ரூ.30.26 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) தரவரிசையில் குறைந்தது 2500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். தவிர, ஒரே தொடரில் குறைந்தது இரண்டு கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்றவர்களை வீழ்த்துவது உட்பட 3 அந்தஸ்து பெற வேண்டும்.

திவ்யாவை பொறுத்தவரையில், 2463 புள்ளி தான் பெற்றுள்ளார். இருப்பினும் பிடே விதிப்படி உலக கோப்பை உள்ளிட்ட மிகப்பெரிய தொடரில் கோப்பை வெல்பவருக்கு நேரடியாக இந்த அந்தஸ்து தரப்படுகிறது. இதன்படி திவ்யா, கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

உலக கோப்பை தொடரில் இந்திய ஜாம்பவான் ஆனந்த், 2000, 2002 என இரு முறை சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்து உலக கோப்பை வென்ற இந்தியர் ஆனார் திவ்யா.

உலக செஸ் தொடரில் சாதித்த திவ்யா, இந்தியாவின் 88-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.