கடவுள்மீது நாம் வைக்கும் நம்பிக்கை தீவிர நம்பிக்கை. கடவுள்மீது உள்ள நம்பிக்கையைப் பொறுத்து மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
1. முழுமையாக கடவுளை நம்புகிறவர்கள்.
தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இன்பமோ- துன்பமோ எது நிகழ்ந்தாலும் அது கடவு ளால் தனக்கு அளிக்கப்பட்டது என்று முழுமையாக நம்புபவர்கள். இறைசக்தி முழுமையாக தன்னை ஆட்கொண்டுள்ளது என அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள்.
2. இறைவன்மீது அவநம்பிக்கை கொள்பவர்கள்.
கடவுள்மீது நம்பிக்கைகொண்டு மிகுந்த பக்தியோடு பல ஆண்டுகள் வாழ்ந்தவர்கள், தொடர்ந்து வாழ்க்கையில் துன்பம் ஏற்பட ஏற்பட கடவுள் இருக்கிறாரா? இல்லையா, கடவுள் இருந்தால் தனக்கு இப்படி துன்பம் நேருமா? என கடவுள்மீது அவநம்பிக்கை கொண்டவர்கள்.
3. இறைவன்மீது சிறிதளவும் நம்பிக்கை இல்லாதவர்கள்.
4. இறைவனோடு வியாபாரம் செய்பவர்கள்.
இறைவனுக்காக நான் ஒன்றை செய்தால் அவர் எனக்கு ஒன்றைத் தருவார்.
நான் பக்தியை செலுத்தினால் அவர் எனக்கு வரம் தருவார்.
நான் அவரை நம்பினால் எனக்கு சொர்க்கத்தைத் தருவார்.
நான் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டால் இறைவன் எனக்கு பத்து ரூபாய் தருவார் என பணத்துடன் இறைவனைத் தொடர்புபடுத்தி செல்வம் இருந்தால் இறைவனது வரம் என்றும் வறுமை இருந்தால் தண்டனை என்றும் அறியாமையில் உழல்பவர்கள்.
இறைவன் என்ன வியாபாரியா? இறைவன் மனிதனுக்காக மட்டும் தான் வாழ்கிறாரா அல்லது அவரது வாழ்க்கையை மனிதனுக்காக மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டு உள்ளாரா?
80 லட்சம் உயிரினங்கள்கொண்ட இந்த பூமியில் மனித இனங்களை மட்டுமே அவர் பராமரித்துக் கொண்டிருக்கிறாரா?
இறைவன் எந்தத் திட்டமும் இல்லாமல் மனிதர்களைப் படைத்துவிட்டு ஒவ்வொரு நொடியும் அவர்களது செயல்களை கண்காணித்துக்கொண்டு சரி- தவறு என்று ஓய்வில்லாமல் பார்த்து பார்த்து அனுதினமும் வரமும் தண்டனையும் தருவிப்பவரா? இம்மாபெரும் அண்ட சராசரங்களை இயக்கும் இறைவனின் மகா சக்தியை முழுமையாக புரிந்துகொள்ள மிகப்பெரிய ஞானியாக இருக்கவேண்டும்.
அல்லது உலக ஞானம் எதுவுமில்லாத குழந்தையாக இருக்கவேண்டும்.
நமக்குத் தெரிந்த, நாம் உணர்ந்த, சின்னஞ்சிறு அறிவை வைத்துக்கொண்டு இறைவனை அளவீடு செய்வது நமது அறியாமை.
ஞானிகளும் சான்றோர்களும் மனிதன் எப்படி வாழவேண்டும்- எப்படி வாழக்கூடாது என்று காலம் காலமாக வரையறுத்து இருக்கிறார்கள்.
நாம் எப்படி இருக்கவேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்று படித்தது, கேட்டது அனைத்துமே பல்வேறு கதைகளின் மூலமாகவும் உதாரணங்களின் மூலமாகவும் விளக்கப்பட்டவை.
ஆன்மிகம் சார்ந்த 20 கதை களை எடுத்துக்கொண்டு அதன்மூலம் எது சரி- எது தவறு என்று விளக்கப்பட்டுள்ள நீதியை பார்த்தோமானால் ஒன்றுக் கொன்று முரண்பட்டு இருப்பதைக் காணலாம்.
ஒருநாள் முழுவதும் இறைவனையே நினைத்துக் கொண்டிருப்பவரைவிட ஒருநாளில் இரண்டுமுறை இறைவனை நினைத்தவருக்குக்கூட வரம் அதிகமாகக் கொடுத்த கதைகளைக் கேட்டு இருக்கிறோம்.
வாழ்நாள் முழுவதும் இறைவனை நினைக்காமல் ஒருமுறை மட்டுமே நினைத்தவருக்கு முக்தி கிடைத்ததாக கதைகளைக் கேட்டிருக்கிறோம்.
வாழ்நாள் முழுவதும் இறைவனை நினைத்துக்கொண்டிருந்தவர் ஒரு தவறு செய்ததற்காக நரகத்திற்குச் சென்றதாக கதைகளை கேட்டிருக்கிறோம்.
வாழ்நாள் முழுவதும் தவறே செய்துகொண்டிருப்பவர்கள் எந்தவித கஷ்டமுமில்லாமல் சந்தோஷமாக இருப்பவர்களையும், வாழ்நாள் முழுவதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பவர்கள் வாழ்க்கை முழுமையும் துன்பப்பட்டுக் கொண்டிருப் பவர்களையும் பார்த்துவிட்டு இறைவன் இருக்கிறாரா? இல்லையா? எனக் குழப்பம் அடைந்து அறியாமையில் உழல்கிறோம்.
இந்த முரண்பாடுகளுக்கெல்லாம் காரணம் என்ன?
இறைவனையும் மனிதனைப்போலவே உருவகப்படுத்திக் கொண்டு மனிதனின் குணங்களோடு இறைவனை தொடர்பு படுத்திக்கொண்டு இறைவனின் குணமும் மனிதனின் குணங்களைப் போலவே இருக்குமென ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையில் இறைவனை கற்பனை செய்துவைத்திருக் கிறோம்.
மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் துன்பத்தை இறைவன் தனக்கு அளித்த தண்டனையாக நாம் நம்புகிறோம்.
இந்த நிமிடத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றால் அது கடவுள் எனக்குக் கொடுத்த வரம். நான் துன்பத்தில் உழல்கிறேன் என்றால் எனது எண்ணங்களில் தவறு இருக்கிறது. அதை மாற்றவேண்டும் என்று கடவுள் எனக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கிறார் என்று பொருள்.
இந்தத் தொடர் கட்டுரையின்மூலமாக இறைவனை- இறைவனின் மகா சக்தியை சிறிது சிறிதாக உணரத் தொடங்கலாம்.
கடவுள் என தமிழ் அறிஞர்கள் பெயர் வைத்திருப்பது மனதின் மூலமாக எண்ணங்களுக்குள் நுழைந்து கடவுளை உணரத் தொடங்குவதுதான்.
எனவே மனதையும், மனதின் இயல்பையும், (மனதின் அறிவியல்) எண்ணங்களையும், எண்ணங்களோடு ஒன்றிய சிந்தனைகளையும், சிந்தனை வாயிலாக உருவான நமது நினைவுப் பெட்டகத்தில் பதிய வைத்துள்ள அறிவையும் தீவிரமாக ஆராயும்பொழுது இறைவனது மகாசக்தியை நோக்கி நாம் பயணப்பட முடியும்.
கடவுள்நம்பிக்கை என்ற தமிழ் வார்த்தைக்கு நான்குவகை பொருள் உள்ளது.
1. இறைவன்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை -(FAITH).
2. நம்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை - தன்னம்பிக்கை(SELF CONFIDENCE).
3. சக மனிதனோடு நமக்கு இருக்கும் நம்பிக்கை (TRUST).
4. நாம் கற்றுக்கொண்ட அறிவோடு நமக்கு இருக்கும் நம்பிக்கை.
ஒவ்வொரு மனிதனின் செயல்களையும் சரி- தவறு என்று பிரித்து ஆராய்ந்து அனுதினமும் ஒவ்வொருவருக்கும் பலனையும் தண்டனையும் கொடுத்துக்கொண்டிருப்பது இறைவனது வேலையல்ல.
மனிதனைப் படைக்கும்பொழுதே இறைவன் மனம் எனும் மகா சக்தியையும் ஒவ்வொரு மனிதனுக்கும் படைத்துவிட்டான்கடவுள் எனும் மகாசக்தியை உணர்ந்துகொள்ள பயணப்படுவோமானால் இறைவன் நமக்கு அருளிய மனம் என்னும் மகாசக்தியே வாகனம். எனவே மனதை புரிந்துகொள்வது தான் இறைவனை புரிந்துகொள்வதற்கான முதல்படி.
மனம் (MIND) எண்ணங்கள், சிந்தனைகள் விழிப்புணர்வு ஆகியவற்றின் வித்தியாசங்களை நன்றாகத் தெரிந்து கொண்டால் மனதைப் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும்.