நமது மனதில் வியாபித்துள்ள தெய்வீக குணங்களையும், அவற்றை ஆக்கிரமித்து மனதுக்கு சொல்லொனா துன்பங்களை விளைவிக்கும் அசுர குணங்களையும் தெய்வீக சக்தியின் துணைகொண்டு தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் அறிவாற்றலைப் பெறுவதுதான் நமது பயணத்தின் முதல்படி.
இறைவன்மீது அசைக்க முடியாத தீவிர நம்பிக்கை விழிப்புணர்வு.
எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான அன்பு நன்றி உணர்வு மன்னித்தல் போன்ற அனைத்து நற்குணங்களும் இறை சக்தியின் வெளிப்பாடு.
பயமும், வஞ்சகமும் அசுர சக்தியின் மறு உருவம்.
இறைவன் அளித்த வரமான மனதையும், ஐம்புலன்களையும் "தூண்டுதல்' என்னும் ஆயுதத்தின்மூலம் ஆக்கிரமித்து பயம், வஞ்சகம், சூழ்ச்சி, பழிவாங்கும் உணர்வு, ஆக்ரோஷம், பொறாமை, சந்தேகம், அகங்காரம், குரூர எண்ணங்கள், வக்ர எண்ணங்கள் போன்ற அனைத்து துர்குணங்ளையும் மனதில் வேரூன்ற முற்படுகிறது அசுர சக்தி.
இறைவன் தண்டிப்பார் என்ற பயத்தை உருவாக்கியதும் அசுர சக்திதான்.
மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்பதை இறைவனின் அவதாரங்களாக இறை சக்தியின் குணங்களோடு உலகில் அவதரித்த சித்தர்களும் ஞானிகளும் மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அத்தகைய வழிகாட்டிகளின் துணை கொண்டு ஒவ்வொரு நாளும் நமது எண்ணங்களை விழிப்புணர்வுடன் பார்க்கப் பழக வேண்டும்.
விழிப்புணர்வு என்பது இருட்டுக்குள் செல்லும்போது கையில் தீப்பந்தம் எடுத்து செல்வதுபோல.
ஞானிகள் மிக சாதாரணமாக அருளிய "கட உள்' என்ற பேராற்றலை பயன்படுத்த வேண்டும்.
மனதினுள் நுழைந்து ஐம்புலன்களின் தூண்டுதலால் உருவாகும் எண்ணங்களில் (விழிப்புணர்வு என்னும் தீ பந்தம் பிடித்து) எவையெல்லாம் அசுர சக்தியின் வெளிப்பாடு, எவை எல்லாம் இறை சக்தியின் வெளிப் பாடு என தனித்தனியாகப் பிரித்து பார்க்க வேண்டும்.
இறைவன்மீதுள்ள தீவிர நம்பிக்கையும் விழிப்புணர்வும்தான் அசுர சக்தியின் தூண்டுதல்களை வெற்றிகொள்ளமுடியும். இது சாதாரணமான செயல் அல்ல.
இறைவனை பணம் அச்சடிக்கும் இயந்திரமாக பார்க்கும்வரை நம்மிடம் எந்த மாற்றமும் உருவாகாது.
உலகம் முழுவதும் வியாபித்துள்ள இறை சக்தியை முழுமையாக தீவிரமாக நம்பும்போதுதான் அசுர சக்தியை வென்று தெய்வீக குணங்களோடு வாழமுடியும்.
அந்த உணர்வு நம் எண்ணங்களுக்குள் ஆழமாக பதியும்போது தான் நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிடமும் இறைசக்தி வியாபித்துள்ளது என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும். எல்லா இடத்திலும் எல்லாரிடத்திலும் இறை சக்தியை உணர முடியும்.
நம்முள் உள்ள இறை சக்தியையும் அசுர சக்தியையும் தனித்தனியாக பிரிக்க இயலும்.
இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான கோவில்களின் மகிமையையும், பலன் களையும் அனுதினமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அங்கெல்லாம் செல்லும் பொழுது நம் மனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்-க்கொடுத்ததை எல்லாம் நாம் மறந்துவிட்டோம்.
எதிர்பார்ப்பு இல்லாத தூய்மையான அன்புஒவ்வொரு தாயிடம் உள்ளது எதிர் பார்ப்பு இல்லாத தூய்மையான அன்பு.
தனது பிள்ளை நல்லவனாக இருந்தாலும் கெட்டவனாக இருந்தாலும் தாயைப் பொறுத்தவரை பிள்ளையின் சந்தோஷம் தான் தனது சந்தோஷம். அதுபோன்ற பேரன்பு நாம் நம்மை சுற்றி உள்ளவரிடம் காண்பிக்கின்றோமா? அல்லது அன்போடு இருப்பது போல பாசாங்கு செய்கிறோமோ?
நமது காரியத்திற்காக அன்பாக இருப்பதுபோல் நடிக்கிறோமா? என்பது நம்மைத்தவிர வேறு எவருக்கும் தெரியாது.
ஒருவருடைய இறப்பு யாரையெல்லாம் கதறி கதறி அழ வைக்கின்றதோ. அவை தூய அன்பின் வெளிப்பாடுகள். கதறி கதறி அழுபவர்களது குணங்கள் அல்ல. இறந்தவரது குணங்கள்தான் எதிர்பார்ப்பு இல்லாத அன்பின் வெளிப்பாடுகள். கதறி கதறி அழுவதற்கு காரணம் சுயநலம்தான்.
இப்படி ஒருவர் இனிமேல் நமக்கு கிடைக்கமாட்டாரே, அவரைபோல் நமக்கு வேண்டியதை செய்வதற்கு யாரும் இல்லையே என்ற சுயநலம்தான் அழுவதற்கான காரணம்.
நமது குழந்தைகளோ- பெற்றோரோ இறந்தால் எந்த அளவிற்கு துன்பம் அடைவோமோ அந்த அளவுக்கு நம் மனம் துன்பம்அடையுமானால் அது எதிர்பார்ப்பு இல்லாத அன்பு. (தெய்வீக குணம்) வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார்.
நன்றி உணர்வு
சக மனிதர்களின் உதவி இல்லாமல் எந்த மனிதனும் வாழ இயலாது. ஆனால் அந்த உணர்வே இல்லாமல் சக மனிதனின் குறைகளை மட்டுமே மனதில் பதிய வைத்துக்கொள்கிறோம்.
அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதற்கொண்டு நமது தேவைகள் அனைத்தையும் சக மனிதர்களின் உதவியால்தான் பெறுகிறோம் என்ற புரிதலும் இல்லை. அத்தகைய உணர்வு நமது நினைவில் எப்போதும் இருந்தது இல்லை. யாருக்கும் எதற்காகவும் நன்றி உள்ளவர்களாக இருப்பதில்லை.
அவ்வளவு ஏன்? நமக்கு தக்கசமயத்தில் மிகப்பெரிய உதவிசெய்த, வசதியாக இருக்கும் ஒருவர் நம்மை முழுமையாக நம்பி நம்மிடம் ஒரு பொருளை பேரம் பேசாமல் நாம் சொல்லும் விலைக்கு வாங்க வருகிறார் என்றால்கூட அவரிடம் எந்த லாபமும் எதிர்பார்க்காமல் அந்த பொருளைக் கொடுக்கும் மனநிலை நம்மிடம் உள்ளதா?
முழு மனதுடன் எந்தவித ஆதாயமும் இல்லாமல் அந்தப் பொருளை அசலுக்கு விற்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தாலே தெரியும்.
அவரிடம் தான் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் அதிகமான லாபம் எடுத்துக் கொள்கிறோம்.
இது இயல்புதானே. இதில் என்ன தவறு இருக்கமுடியும். அவரும் இப்படித்தானே சம்பாதித்திருப்பார் என நமக்கு சாதகமான விளக்கங்களையும் நாம் கொடுத்துக் கொள்கிறோம். இருப்பவர்களிடம் சிறிது பணம் எடுத்துக்கொள்வது தவறல்ல. இறைவன் அவர்மூலம் நமக்கு கொடுத்த வரம் என்று நாமே முடிவு செய்துகொள்கிறோம். (அசுர குணம்.)நம்மால் உதவிபெற்ற ஒருவரை முழுமையாக நம்பும்போது, நம்பிக்கை துரோகம் செய்தால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்.
பிறந்ததி-ருந்து பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோர்களுக்கு கூட நன்றி செலுத்தும் உணர்வு இல்லாத காலமாக மாறி விட்டது.
அடுத்தவர் தவறு செய்தால் நாம் தவறு செய்யலாம் என்று அறம் நமக்கு சொல்-க் கொடுக்கவில்லை.
நாமே நமக்கு சாதகமான எண்ணங்களை (அசுர சக்தியின் துணைகொண்டு) உருவாக்கிஅதை தீவிர நம்பிக்கையாக உருமாற்றி மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொண்டோம்.
மன்னிக்கும் குணம் எல்லா உயிர்களிடத்தும் இறை சக்தி வியாபித்துள்ளது என்ற உணர்வு மேலோங்கும்போதுதான் அவர்கள் அறியாமல் செய்கிற தவறுகளை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலும்.
சிக்ன-ல் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். ஒருவர் டிராஃபிக் சிக்னலை மதிக் காமல் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்.
அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கும் என்ற எண்ணம் இல்லாமல் நாம் அவரை வசைபாடிக் கொண்டிருப்போம். (அசுர குணம்)அதையே மாற்றி யோசித்துப் பார்ப்போம்.
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ள குடும்ப உறுப்பி னரை பார்க்க சென்றுகொண்டிருக்கிறோம். டிராஃபிக் சிக்னலை மதிக்காமல் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.
சுற்றி இருப்பவர்கள் திட்டுவதைக் கண்டுகொள்ளாமல் செல்கிறோம். நமது சூழ் நிலையை யாருக்கும் விவரிக்க இயலாது. நாம் செய்வது சரிதான் என்று நாமே தீர்மானிக்கிறோம். மேலோட்டமான சிந்தனையில் நாம் செய்தது சரியாகத்தான் இருக்கிறது.
அதையே பிறர் செய்யும்பொழுது அதற்கும் ஏதாவது காரணம் இருக்கும் என்று உணராமல் அவரை உண்டு இல்லையென்று ஒரு பிரளயத்தையே உருவாக்கிவிடுவோம்.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
என்பதன் பொருள் நமக்கு எப்பொழுதுமே புரிந்தது இல்லை.
நாம் செய்யும் தவறான செயல்களுக்கு சரியான காரணங்களை உருவாக்கிக் கொள்வதுபோல எல்லாருக்குமே அவரவர் செயல்களுக்கு தெளிவான ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என்ற ஞானம் நமக்கு உருவாகவேண்டும்.
அவ்வாறு நமது எண்ணங்களை சீர் செய்வதன் வாயிலாக சக மனிதரின் இறை சக்தியோடு ஊடுருவ இயலும்.
அத்தகைய ஞானத்தை அடையும்போது இறைசக்தியோடு ஐக்கியமாக முடியும்.
நமது தவறுகளை நியாயப்படுத்துவது போல அவர்கள் தவறுகளையும் நியாயப் படுத்தும் பேரறிவு நமக்கு உதயமாகும்.
இதுபோன்ற சிந்தனைகளை நிலை நிறுத்துவதற்குதான் இறைவனை நோக்கிய பயணம் இருக்கவேண்டும்.
-மாற்றி யோசிப்போம்