"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.'' 

ஒரு மனிதன் உறங்குவது என்பது இறந்த தற்கு சமமாகும். அவன் மீண்டும் விழித்து எழுவதே பிறப்பு என்பதாகும். 

Advertisment

இதில் ஒளிந்து இருக்கக்கூடிய உண்மை பொருள், ஒருவன் உறங்கி எழுந்தால்தான் அவனது உயிர் உடலில் இருப்பது உறுதி யாகும். 

Advertisment

நம் உயிரே நிலையற்றதாக இருக்கும் பொழுது,  நமது உடலும், உடமையும் அதாவது- நாம் சேர்த்து வைத்திருக்கக்கூடிய பொன், பொருள், பணம், நிலம் எதுவும் நிச்சயமற்றது, நிலையில்லாதது. ஆகவே, நாம் உயிர் உள்ளபோதே பிற உயிர்களுக்கு ஏதேனும்  உபயோகமான வகையில் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும். ஏனென்றால், சுமார் 15,000 வருடங்களுக்கு முன்பே திருமந்திர சிற்பி திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கூறியுள்ள தைப் பார்க்கலாம்-

"நாட்டுக்கு நாயகன் நம்மூர்த்
தலைமகன் 
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை 
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட 
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.'' 

Advertisment

நாட்டுக்கு தலைவனாக இருந்தவனும் , நமது ஊரில் மிகுந்த சிறப்புக்குரியவனாகவும், பெருமைக்குரியவனாக திகழ்ந்தவனுமாகிய  அவனது உடலை விட்டு உயிர் பிரிந்து பாடையில் ஏறி கடைசிப் பயணம் போகின்றது . நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வருகின்றார்கள். 

முன்னே பறை ஒலிக்கப் போகின்றது மன்னனது இறுதி ஊர்வலம். நாட்டுக்கு தலைவனாக, மன்னனாக ஊருக்குள் பெருமைமிக்க உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற உச்சபட்ச மரியாதை இதுதான். இனி அவன் உயிர் திரும்பி வராது. உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும், தகுதியும், பெருமையும் தன்னை சுற்றி இருக்கக்கூடிய உறவுகளும், தான் சேர்த்துவைத்த உடைமைகளும் உண்மையாக தெரியும். அத்தனையும் மாயை! ஏனென்றால், உயிர் போய்விட்டால் உடலை பிணம் என்று கூறுகிறோம். அந்த பிணம் இறுதியாக செல்லுமிடம் சுடுகாடு. இவ்வளவுதான் வாழ்க்கை. இந்த நிகழ்வு மன்னனுக்கு மட்டுமல்ல, மனிதர்களாக இருக்கும் சிறியவன்- பெரியவன் என்ற பாரபட்சம் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் எந்த நிமிடமும் உயிர் பிரிந்துவிடும் காலம் வந்ததும் காலன் (யமன்) நமது உயிரை கவர்ந்து விடுவான். 

இது எதை உணர்த்துகிறது என்று பார்க்க வேண்டும். திருமூலர் சொல்கிறார், "எல்லா உயிர்களிடத்தும் இலங்கும் உயிர்.'' ஒவ்வொரு உயிருக்கும் கடவுள் இருக்கிறான் என்பதே இதன் உண்மை பொருள் ஆகும். பஞ்ச மகா பாதகமான கொடூர செயல்களை ஒருவன் செய்து விட்டு அவன் பக்தி செய்வதென்பது பயனற்ற ஒன்றாகும். ஒழுக்கம் நிறைந்த, அறத்துடன்கூடிய பக்தியே  பிரபஞ்ச சக்திக்கும், பஞ்சபூத சக்திக்கும், நவகிரக சக்திக்கும், 27 நட்சத்திர சக்திக்கும், இயற்கை சக்திக்கும் மேலாக இவற்றை வழிநடத்தும் இறைவனுக்கு பிடித்த பக்தியாகும். திருவண்ணாமலையில் மட்டும்தான் கிரிவலம் வர வேண்டும் என்பது விதி ஒன்றும் அல்ல. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒவ்வொரு திருக்கோவிலிலும் அமைந்துள்ள அமைவிடங்களை, திருத்தலங்களை குறைந்தபட்சம் 27 சுற்றுகள் முதல் 108 சுற்றுக்கள் வரை வலம்வருவது என்பதும் "திருவலம்' எனும் "கிரிவலம்' ஆகும். 

பரம்பொருள் ஜோதி ஸ்வரூபம் ஆகவே காட்சி தருகின்றவன் என்பதை உலகிற்கு முதலில் சுமார் 15,000 ஆண்டுகளுக்குமுன்பே எடுத்துரைத்தவன் திருமந்திர சிற்பி திருமூலராவார். ஏற்கெனவே நாம் பலமுறை எழுதிவிட்டோம். அதாவது- அணுவுக்குள் அணுவாக, "பரமாணுவாக' இருப்பவனே ஜோதி ஸ்வரூபமான சிவப்பரம் பொருளாகும். 

இது தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வினை இப்போது பார்க்கலாம். 

 திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் "குருகேசர்' எனும் இயற்பெயரில் பிறந்தவரே திருக்கோஷ்டியூர் நம்பி ஆவார். 

பாண்டிய மன்னனுக்கு மந்திரியாய் இருந்த பெரியாழ்வாருக்கு அடியவனான செல்வ நம்பி வம்சத்தில் காஷ்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீக அம்சமாக இவர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இராமானுஜரின் ஐந்து ஆச்சாரிய பெருமக்களில் இவரும் ஒருவர். 

ஒருசமயம் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக வைணவ திருத்தலமான திருக்கோஷ்டியூருக்கு  இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு நடந்தே இங்குவந்தார். நம்பியின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு அழைத்தார் இராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பி யாரென்று? கேட்டார். நான் இராமானுஜன் வந்திருக்கிறேன் என்றார். 

திருக்கோஷ்டியூர் நம்பி வீட்டுக்குள் இருந்தபடியே, நான் செத்து வா என்றார். இதைப் புரியாத இராமானுஜரும் திரும்ப ஸ்ரீரங்கம் சென்றுவிட்டார். இப்படியாக தொடர்ந்து 17 முறை வந்த போதும் நம்பி இதே பதிலை சொல்லி அவரை பார்க்காமல் திருப்பி அனுப்புகிறார். 

18லிஆவதுமுறை சென்ற இராமானுஜர் நம்பியை அழைத்து "அடியேன் வந்திருக்கிறேன்" என்றார். இந்த இடத்தில் நான் எனும் அகந்தை ஒழிய வேண்டும் என்பதை உணர்த்தவே நம்பி அவர்கள் இராமானுஜனை பல முறை பார்க்காமல் திருப்பி அனுப்புகிறார். அடியேன் சொன்ன பிறகே இராமானுஜனை உள்ளே அழைத்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. அந்த சமயம் "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திர உபதேசத்தை இராமானுஜருக்கு அருளிச்செய்தார். அதோடு மட்டுமில்லாமல் இந்த மந்திரத்தை வெளியில் நீ யாரிடமும் சொல்லக்கூடாது என்று கட்டளையும் பிறப்பித்தார். இதை மீறி நீ, எவருக்கேனும் இம் மந்திரத்தை சொன்னால் உனக்கு நரகம்தான் கிடைக்கும் என்று எச்சரித்தார். கைகட்டி, வாய் பொத்தி மந்திர உபதேசத்தை கேட்ட இராமானுஜர் தலையசைத்து ஆமோதித்து, நம்பியின் வீட்டிலிருந்து கிளம்பி விறுவிறுவென  கோவிலுக்குள் வந்து, கோவிலில் அமைந்துள்ள விமானத்திற்குள் சென்றார். கோவிலின் உச்சியில் நின்றுகொண்டு, அனைத்து தரப்பு மக்களையும் பெருங்குரலெடுத்து அழைத்தார். இதோ நம் உயிர் காத்து நம்மை உய்விக்கும் மந்திரம் ஒன்றை சொல்கின்றேன், எல்லோரும் கேளுங்கள். உங்களுக்கு பரமபதம் நிச்சயம், வைகுண்டம் கிடைப்பது உறுதியாகும். மோட்சத்துக்கு செல்வீர்கள் என்று கூறியவாறு "ஓம் நமோ நாராயணா' எனும் மந்திரத்தை பெருங்குரலெடுத்துச் சொல்லி, மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்து அருளினார். அவ்வளவுதான் கடும் கோபம்கொண்ட ஆச்சாரியார் நம்பி, இராமானுஜரை கடுமையாக கடிந்துகொண்டார். ஆனால் இராமானுஜரோ திருக்கோஷ்டியூர் நம்பியின் திருவடி பணிந்து எனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, இந்த மந்திரத்தை சொல்வதனால் பல கோடி மக்கள் நன்றாக, நலமாக வாழ்வார்களே! அதுவே எனக்கு போதும் என்றார். இதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்த நம்பி, நீ என்னிலும் பெரியவன், "எம்பெருமா னார்' என்று சொல்லி இராமானுஜரை ஆரக்கட்டித்தழுவி கொண்டார். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணர் திருக்கோவிலில், நம்பி, இராமானுஜர் இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது.  ஏழுமலையான் தனது குருவாக இராமானுஜரை ஏற்றுக்கொண்டதாக ஒரு தகவலும் உண்டு. இராமானுஜரைப் போன்று சாதி, மத பேதமின்றி சமத்துவம், சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம் எனும் கோட்பாட்டோடு வாழ்ந்தவரும், சமரச சுத்த சன்மார்க்கம் என்ற  நெறியை நிறுவி மனித குலத்திற்கு வழிகாட்டியவரும் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரே ஆவார். 

இவர் அருளி செய்த ஒரு மந்திரமே "ஒளியே தெய்வம்... உலகே சுபிட்சம்' எனும் பெரும் மந்திரமாகும். 

இதையெல்லாம் மறந்துவிட்டு பத்தி செய்கிறேன் என்ற பெயரில் கோவிலுக்கு செல்வதில் கோஷ்டி பிரித்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதும், இறைவழிபாடு செய்யும்போது, வரிசையில் நிற்கும்பொழுது நான் முந்தி, நீ முந்தி என்று ஒருவரை ஒருவர் பின்னுக்குத் தள்ளி தாக்கிக்கொள்வதும் பக்தி அல்ல. இறைவழிபாடு செய்யும் கோவிலை மூடி வைப்பதோ, இவர்தான் வழிபடவேண்டும் என்று தடை செய்வதோ உண்மையான பக்தி இல்லை. இறைவனும் இயற்கையும் பொதுவானது. இதனை வழிபடுவதற்கு நேரமும், காலமும், இடமும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. "புத்தியில் சுத்தமில்லாதவனின் பக்தி ஒருபோதும் வெற்றி பெறாது''. நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் ஏகன், அனேகனின் மூன்றா வது கண் உற்று கவனித்துக்கொண்டே இருக்கிறது. அது தன் வேலையை காட்ட நினைத்தால் உன் கதி அதோ கதிதான்! இவ்வளவு நவீன விஞ்ஞான வசதிகள் இருந்தும் "டிட்வா புயலில்' இருந்து இலங்கையை பாதுகாக்க முடிந்ததா? ஆறறிவு படைத்த மனித இனமே கொஞ்சமாவது யோசித்துப் பார். உன் விஞ்ஞான பம்மாத்து  வேலைகளையெல்லாம் வெகு விரைவில் முடிவு கொண்டுவந்துவிடும் ஒரு அழிவு உபகரணம் தான் ஏஐ தொழில்நுட்பம். அது உச்சபட்சம் அடையும்பொழுது இந்த பூமிப்பந்தை மெய்ஞான சிவப்பரம்பொருள் சம்காரம் செய்துவிடுவார். இதை நினைவில்கொண்டு உனது ஒவ்வொரு கண்டுபிடிப்பும், எந்தவொரு உயிர்களுக்கும் தீங்கிழைக்காததாகவும், ஒழுக்கக்கேட்டை 

அனுமதிக்காத வகையிலும் இருக்கவேண்டும் என்பதை நினைவில்கொள். நீ தீபமேற்றவும், தீபத்தை பார்க்கவும் எங்கும் செல்ல வேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் சுத்தமான "எள்நெய்' என்று சொல்லப்படும் நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபடுங்கள். அந்த வெளிச்சத்தில்தான் பரம்பொருள் குடிகொண்டிருக்கிறார். அது உனக்கு வாழ்க்கை வெளிச்சத்தை கொடுக்கவும் முடியும், அந்த வெளிச்சத்தால் பூமிப்பந்தை எரித்து அழித்துவிடவும் முடியும், புரிந்துகொண்டு பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். பக்தி செலுத்துவதில், பக்தி செய்வதில் பாகுபாடு காட்டாதவனே பரம் பொருளின் திருவடியை அடையமுடியும். ஏனென்றால், 

"ஒளியே தெய்வம் உலகே சுபிட்சம் 
அருட்பெரும் சோதி...!
அருட்பெரும் சோதி...!
தனிப்பெரும் கருணை...! 
அருட்பெரும் ஜோதி...!''