திடீரென இதய நோயால் பாதிக்கப்பட்டு தரையில் விழுந்த அவளைப் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் தாங்கி எழுந் திருக்கச் செய்தபோது, அவள் வேக வைத்து எடுத்த ஒரு மீனைப்போல வியர்த்துக் கொண்டும் வாயைத் திறந்து வைத்துக்கொண்டும் இருந்தாள். அவளின் கண்களில் முழுமையான ஆச்சரியம் மட்டுமே தெரிந்தது. அவற்றில் ஈரமில்லை. அண்டை வீட்டுக்காரர்களை அழைத்து வர வைத்த அவளுடைய சிறிய மகன் தன் தேநீர்க் கறை படிந்த உருண்ட விரல்களைக் கொண்டு அவளின் நெற்றியைத் தடவியவாறு "அம்மா! அம்மா! கொஞ்சம் பரவாயில்லையா? சற்று பரவாயில்லையா?'' என்று அவளுடைய காதில் உச்சரித்துக் கொண்டிருந்தான். குடும்ப மருத்துவருக்குத் தகவலுடன் ஒரு ஆள் ஓடினான். சில பெண்கள் அவளின் புடவையின் நுனிப் பகுதியை கீழ் நோக்கி இழுத்து விட்டு, அந்த முழங்கால்களை வேகமாக மறைத்தார்கள். ஒரு வெளிறிய நிலவைப் போல, ஒரு மார்பகத்தின் கீழ்ப்பகுதி ரவிக்கைக்குக் கீழே தெரிந்தது. ஆனால், அவளின் நெஞ்சில் கையை வைப்பதற்கு அவர்களில் யாருக்கும் தைரியம் வரவில்லை. அது ஒரு இதய பாதிப்பு  என்பது அனைவருக்கும் புரிந்திருந்தது.

Advertisment

முதல் பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் அவளுடைய கணவனின் அலுவலகத்திற்கு போன் செய்தார்.

Advertisment

உடனடியாக அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதாக டாக்டர் கூறினார். அவளின் கணவன் தெளிவே இல்லாமல் போனில் முணுமுணுத்தான்: "சரி.... டாக்டர். நான் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நான் மருத்துவமனையில் இருப்பேன். நன்றி.... நன்றி... நன்றி...''

நடுத்தர வயது என்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு தான் அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக ஒரு சிவப்பு நிற புடவையை வாங்கிக் கொடுக்காத விஷயம் அந்த நிமிடத்தில் கணவனுக்கு ஞாபகத்தில் வந்தது. "நாம் இளம் வயதில் இருப்பவர்கள் அல்ல.'' - அன்று மனைவியிடம் அவன் கூறினான்: "நம் பிரதம அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே... "நடுத்தர வயதில் இருப்பவர் களுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவையில்லை' என்று.'' "தாமதமாகிவிட்டது.... தாமதமாகிவிட்டது....''- அவனுடைய மனசாட்சி அழுதது. அவன் தன் உயரதிகாரியின் அறைக்கு ஓடிச் சென்று, அங்கு யாருமே இல்லை என்பது தெரிந்ததும், மேஜையில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, வேகமாக கோட்டை அணிந்துகொண்டு வெளியே ஓடினான்.

Advertisment

ஆம்புலன்ஸ் வண்டியில் அவள் மவுனத்துடனும் அசைவே இல்லாமலும் படுத்திருந்தாள். அவளுடைய கால் பகுதியில் அமர்ந்திருந்த நான்கு வயதுக்காரனுக்கு  வேகமாக இருந்த அந்தப் பயணம் கிட்டத்தட்ட பிடித்திருந்தது. தங்களுடைய பெரிய வாகனத்திற்கு வழி உண்டாக்கித் தருவதற்காக சிறிய வாகனங்கள் வேகமாக ஒதுங்குவதைப் பார்த்தவாறு அவன் அமர்ந்திருந்தான். எதிர் பக்க இருக்கையில் டாக்டரின் சிபாரிசு கடிதத்தைக் கையில் இறுகப் பிடித்தவாறு தன் பொருளாதார நிலையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டும் அவனின் தந்தை அமர்ந்திருந்தான். வங்கியில் இருநூறு ரூபாய் மட்டுமே இருந்தது. இன்று... ஆகஸ்ட் மாதம் இருபத்தெட்டாம் தேதி அவளுக்கு மரணம் ஏற்பட்டால், மின்சக்தியைக் கொண்டதும், கட்டணம் குறைவாக இருக்கக்கூடியதுமான பிண அடக்கத்தை மட்டுமே அவனால் செய்ய முடியும். அவனுக்குக் கடனாக பணம் தரக்கூடிய ஒரேயொரு நண்பன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறான். அவள் நோயிலிருந்து குணமா னால், மருத்துவமனையை நடத்துபவர்கள் அவனை ஏழையாக ஆக்கிவிடுவார்கள். அவளின் வைரக் கம்மல்களை விற்றுவிடலாம். ஆனால், குழந்தையை யார் பார்த்துக் கொள்வது? வண்டி திடீரென ஒரு அதிர்ச்சியுடன், ஓரத்தில் கள்ளக்கடத்தல் செய்பவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் வெளிநாட்டு நறுமண பொருட்களும் மற்ற பொருட்களும் இருக்கக்கூடிய பெட்டிக் கடைகள் இருக்கும், இருண்டு அகலமாக இருக்கும் தெருவிற்குள் திரும்பியது. அவள் உதடுகளை ஈரமாக்கினாள். அவள் பிரார்த்திக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது. சிவப்புநிற பட்டுப்புடவையை அவனுடைய மனசாட்சி ஞாபகப்படுத்தியது. 

அவளுடைய தோலின் பிரகாசத்திற்கு மேலும் மெருகு சேர்க்கும் அந்த சிவந்த பட்டு. அவள் அதை அணிந்து கொண்டு சண்முகானந்தா ஹாலுக்கு அவனுடன் சேர்ந்து பாலமுரளியின் இசையைக் கேட்பதற்கு வருவதாக இருந்தாள். சரியான உணவு இல்லாததால், மெலிந்தும் வெளிறியும் காணப்பட்டாலும், பார்ப்பதற்கு அவள் அழகானவளாகவே இருந்தாள். அடர்த்தியான நிறங்களை அணிந்து, கூந்தலில் முல்லை மலர் சரங்களைச் சூடி, சண்முகானந்தாவில் சென்று அமரும் வேளைகளில், அங்கு அமர்ந்திருக்கும் ஆண்கள் தாகத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

வண்டி மருத்துவமனைக்கு முன்னால் நின்றது. ஒரு உந்து வண்டியுடன் இரண்டு மருத்துவமனை பணியாட்கள் அவளை தூக்கி எடுப்பதற்காக முன்னோக்கி ஓடிவந்தார்கள். அவர்கள் எமனின் தூதர்களைப்போல இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. என்ன ஒரு கறுப்பு! என்ன ஒரு பயங்கரமான தோற்றம்! அவன் கூறினான்: "ஒரு நிமிடம் இருங்க. நான் அவளை மருத்துவமனையில் அனுமதித்து விடுகிறேன்.'' இருவரும் பெரிய புன்சிரிப்புகளை அவனுக்குப் பரிசாக அளித்தார்கள். ஐ.சி.யூ.வில் கட்டில் தயார் செய்து வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அவர்கள் கூறினார்கள்: "டாக்டர் சாஹிப் போன் பண்ணினார். நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இடத்திற்குச் சென்று, கையெழுத்து இட்டால்  மட்டும் போதும். நாங்கள் உடனடியாக அம்மாவை மேலே கொண்டு போய்விடுவோம். அங்கு பெரிய டாக்டர் சாஹிப் அவங்களுக்காக காத்து நின்றுகொண்டிருக்கிறார்.''

அவர்கள் அவனுடைய மனைவியை உந்து வண்டியில்  உருட்டி, லிஃப்டில் ஏற்றினார்கள். சக்கரங்களின் சத்தம் ஒரு குலுங்கல் சிரிப்பைப் போல அவனுக்குத் தோன்றியது. குழந்தை அவனுடைய முழங்காலை இறுகப் பிடித்தான். "என்னைத் தூக்குங்க, அப்பா!''- அவன் அழுது கொண்டே கூறினான்: எனக்கு உறக்கம் வருது.

அவனுடைய கண்ணீர் படிந்த கன்னங்களைப் பார்த்துவிட்டு, அவன் கேட்டான்: நீ எந்த அளவிற்கு தைரியமாக நடந்தாய்! நீ எந்த அளவிற்கு தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினாய். எனினும், நீ இப்போது அழுகிறாயா? உன் அம்மா இரண்டு நாட்களுக்குள் உடல் நலக்கேடு நீங்கி, வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவாள். பிறகு.... நீயும் நானும் அம்மாவும் சேர்ந்து ஒரு சுற்றுலா பயணம் செல்வோம்.

லோனாவாலாவிற்கு. இல்லாவிட்டால்... டார்ஜிலிங்கிற்கு... காரணம்- உன் அம்மாவிற்கு பனியைப் பார்ப்பது என்பது எப்போதோ ஆரம்பித்த விருப்பம்....''

இதய நோயாளிகளுக்கான வார்டில் உறங்கிய சிறுவனை தோளில் படுக்க வைத்தபோது, அவனுடைய மனைவி ஒரு மூலையில் கண்களை மூடிப் படுத்திருப்பதை அவன் பார்த்தான். வெண்ணிற துணியைக் கொண்டு பல அறைகளாக ஆக்கி பிரிக்கப்பட்டிருந்த அந்தத் தளம், ஒரு பாலைவனத்தின் பசுமையைப் போல காட்சியளித்தது. களைப்படைந்த பயணிகள் கூடாரம் உண்டாக்கி ஓய்வு எடுப்பதைப் போல இதய நோயாளிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடைய இதயத் துடிப்புகளை எந்திரங்கள் ஒலித்து கேட்கச் செய்தன. துயரத்தை வெளிப்படுத்தும் செண்டைகளைப் போல நடுங்கின. பெரிய டாக்டர் அவனுக்கு அருகில் வந்து, குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு கூறினார்: "பயப்பட வேண்டாம். அவங்க தூங்கிக்கிட்டு இருக்காங்க. ஒரு தடவை இதயம் பாதிக்கப்பட்டிருக்கு. இன்ஃபெக்ஷனும் இருக்கு. ஆனால், இரண்டு வாரங்கள் கடந்தால், குணமாகிவிடும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த வயதில் இது வரக்கூடாது. முப்பத்தைந்துக்கு மேலே இருக்காதுன்னு நினைச்சேன். முப்பத்தொன்பதா? என்னால் அதை நம்பவே முடியவில்லை. அவங்களுக்கு மனக் கவலை ஏதாவது சமீப காலத்தில் உண்டானதா? ஏதாவது மன அழுத்தம்....''

கணவன் கூறினான்: "இல்லை, டாக்டர். அவளுக்கு எந்தவொரு மனக் கவலையும் உண்டாகவில்லை. அனைத்து மனக் கவலைகளையும் நான்தான் அடைந்திருக்கிறேன். அவளுக்குச் சிந்திப்பதற்கோ கவலையில் மூழ்குவதற்கோ நான் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் இதுவரை தந்ததில்லை.''

"ஹா.... ஹா....'' - டாக்டர் சிரித்தார்: "உங்களுடைய மனக் கவலைகளையும் இன்றிலிருந்து என்னிடம்  ஒப்படைத்து விடுங்கள்.... மிஸ்டர். ராகவன். வீட்டிற்குத் திரும்பிச் சென்று சுகமாக உறங்குங்க.''

இரவில் சிறுவனுக்கு சாதத்தையும், காலையில் அம்மா தயாரித்து வைத்திருந்த லட்டையும் சாப்பிடுவதற்குக் கொடுத்துவிட்டு, அவனுடைய கேள்விகளுக்கு பயத்தை உண்டாக்காத பதில்களைக் கூறிவிட்டு, அவன் தூங்குவதற்காக படுத்தான். 

அவன் உறங்கி விட்டான் என்பது உறுதியாகத் தெரிந்த பிறகு, அவன் எழுந்து சாப்பிடும் மேஜைக்கு அருகில் சென்று அமர்ந்து, கடிதங்கள் எழுத ஆரம்பித்தான். முதலில்... மனைவியின் தந்தைக்கு. இரண்டாவது.... ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மூத்த பிள்ளைகளுக்கு. மூன்றாவது... தன் பணத்தை மாதத்தின்  ஆரம்பத்தில் செலுத்தக்கூடிய வங்கிக்கு. "என் மனைவி இதய நோயின் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் இருப்பதால், எனக்கு 500 ரூபாய்க்கான ஓவர்ட்ராஃப்டை தயவுகூர்ந்து அனுமதிக்கும்படி நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.''

அந்த வாக்கியத்தின் மதிப்பை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அலுவலகத்தில் அவன் எழுதும் ட்ராஃப்டுகளைப் பற்றி பலருக்கும் பொறாமை இருந்தது. கடந்த வாரத்திலும் உயரதிகாரி தன் அறைக்கு அவனை வரவழைத்து, கூறினார்: "ராகவன், 

பல வருடங்களுக்கு முன்னால்... மதிப்பிற்குரிய ஈஸ்வரய்யாவிற்குக் கீழே  பணி செய்யக்கூடிய மிகப் பெரிய அதிர்ஷ்டம்  எனக்குக் கிடைத்தது. ஈஸ்வரய்யா, ஐ.ஸி.எஸ்.... ராகவன், நான் கடவுளின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஆங்கில வார்த்தைகளை ஈஸ்வரய்யாவைப்போல எழுதுவதற்கு இந்தியாவில் அந்தக் காலத்தில் ஒரு ஆளும் இல்லை. நேற்று நீங்கள் கொடுத்த ரிப்போர்ட்டை நான் ஆர்வத் துடன் வாசித்தேன். எனக்கு ஆச்சரியம் உண்டானது, ராகவன். ஈஸ்வரய்யா, ஐ.ஸி.எஸ்ஸின் காலத்திற்குப் பிறகு, இவ்வளவு அருமையாக ஆங்கில வார்த்தைகளை எழுதக்கூடிய ஒரு மனிதர் நீங்கள் மட்டும் தான்... நீங்கள் ஒரே ஆள்தான்.... ராகவன், நீங்கள் மட்டும்தான்....''

"அப்பா, நாம என்னைக்கு டார்ஜிலிங்கிற்குப் போறோம்?'' - சிறிய மகன் படுக்கையில் எழுந்து அமர்ந்து கொண்டு சத்தமாகக் கேட்டான். "நான் நினைத்தேன்.... நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று.''- அவன் கூறினான். அவன் சிறுவனைத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொண்டு படுக்கையில் படுத்தான். சிறுவனின் வாய்க்கு நெய்யின் வாசனை இருந்தது. ஒரு பனி மூட்டத்தைப்போல தூக்கம் அவனுடைய கண்களில் தவழ்ந்து விளையாடியது. அவன் தன் தந்தையை இறுக கட்டிப் பிடித்தவாறு முணுமுணுத்தான்:

"நாம டார்ஜிலிங்கிற்குப் போகணும். அம்மா விற்கு வெண்பனியைப் பார்ப்பதில்தான் எவ்வளவு விருப்பம்!''        

ss-