மனித வாழ்க்கை இயற்கையை அடிப்படையாக அமைத்துக்கொண்டு வாழவேண்டும். இந்தப் பூமியில் இருக்கும் எல்லா உயிர்களும் இயற்கையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டே வாழ்கின்றன. நாகரிக மனிதன் இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டான் என்ற எண்ணம் எந்த அளவுக்கு உண்மையானதோ அதே அளவுக்கு, ஆண்டுதோறும் அவன் இயற்கையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறான் என்பதும் மறுக்கமுடியாத பேருண்மை. அறிவியல் சாதனங்கள் இல்லாத காலத்திலேயே இயற்கையைப் பற்றிப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். அப்படி இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்ட விவசாயத் தைத் தனக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் எல்லா உயிர்களுக்கும் உணவு தரும் பணியாக அதை மாற்றிக்கொண்டான். தேவையான அளவு உணவை உற்பத்தி செய்து, அதைப் பகிர்ந்து கொடுத்து வாழப் பழகினான்.
Advertisment
நம்முடைய அடிப்படைத் தேவையான உணவு உற்பத்திக்கு முக்கியப் பங்காற்றுவது சூரிய ஒளியே என்ற அறிவியல் உண்மையைத் தெரிந்துவைத்திருந்தான் என்பது நம்மை வியக்கவைக்கிறது. அந்த இயற்கைக்கு நன்றி செலுத்தும்விதமாக ஒரு திருவிழாவையும் ஏற்படுத்தி, அது காலங்காலமாக நடைமுறையில் இருப்பதற்கும் காரணமாக அமைந்திருப்பதும் பேரதிசயம். தைத்திருவிழா மனிதாபிமானத்தின் நீட்சியாக, பண்பாட்டின் தொடர்ச்சியாக, மரபின் ஆணிவேராகப் பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. முன்பனிக் காலம் என்று குறிப்பிடப்படும் தை மாதம் அறுவடை நாளாக மாறி மகிழ்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
Advertisment
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று இன்றைய ஆன்மிகம் மார்கழி மாதத்தைக் கொண்டாடும்போது, சங்க இலக்கியங்கள் தை மாதத்தில் விழா எடுக்கின்றன. மக்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த திருநாள் தைத்திருநாள். இந்த உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழிலைப் போன்ற சிறந்த தொழில் வேறெதுவும் இல்லை என்பது வள்ளுவரின் தீர்ப்பு.
"சுழன்றும் ஏர்ப்பின்னதுஉலகம் அதனால்
உழந்தும் உழவே தலை''
என்ற திருக்குறளின் சத்திய வாக்கு எல்லா காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொருத்தமானது. பயிர்த்தொழில் செய்யும் மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். வெளிநாடுகளிலும் அறுவடைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப் படுவதை இன்று வரை பார்க்கிறோம்.
Advertisment
சமீபத்தில் வெளியான "கும்கி' படத்திலும்,
"வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும்
வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய் "சொய் சொய்''
என்ற பாடல் பழங்குடியினர் வாழ்க்கையில்,
அறுவடைக்காகப் பாடப்படுகிறது என்பதைத் திரைப்படத்தின் வழியாகப் புரிந்துகொள்கிறோம். இந்தப் பாடலில் தை மாதத்தில் நிகழும் அறுவடைத் திருவிழாவை, உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடிய பண்பாட்டுக் கூறுகளைக் காண முடிகிறது.
தை மாதம் என்றாலே கிராமப்புறங்களில் உற்சாகமும் - மகிழ்ச்சியும் களை கட்டத் தொடங்கி விடும். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் குவியலாகக் கிடக்கும். இதிலிருந்து உண்டாகும் வாசனையும், அறுவடை நாளில் உண்டாகும் மண்வாசனையும் நம் உணர்வுக்குள் கலந்து இதயத்தை இதமாக்கும். நெல்மணிகளின் பதர்களை நீக்கி அரிசியாக மாற்றி குவியலாக வைக்கப்பட்டிருக்கும் காட்சி மக்களின் வயிற்றுப் பசிக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் சாட்சியாக அமையும். மஞ்சளின் மங்கலமும், இஞ்சியின் வாசமும், கரும்பின் சுவையும், பசுவின் நெய் மணக்க முந்திரி -
திராட்சை வறுத்து மணக்க மணக்க தயாராகும் சர்க்க ரைப் பொங்கல் தை மாதத்திற்கே உரிய உன்னதமான படையல்.
ஒரு பக்கம் வீட்டைச் சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, வாசலில் அழகிய கோலம் போட்டு, மாட்டுச் சாணத்தில் பூவை நடுவிலே நட்டு வைத்து ஒவ்வொரு வீடும் விழாவிற்கு தயாராகிவிட்டோம் என்பதை மௌனமாகச் சொல்லிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் தனக்கான இணையைத் தேடிக் கண்டவர்கள், திருமணக் கனவில் மிதந்துகொண்டிருப்பர். உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளும் அலங்கரிக்கப்பட்டு மனித அன்பில் நனைவது நன்றியுணர்ச்சிக்குச் சான்றாக அமையும். இந்தக் கலவையான உணர்வுகளைப் பொங்கல் பண்டிகையைத் தவிர வேறு எந்தப் பண்டிகையால் தரமுடியும். பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடப்பதும், சாதிமத பேதம் இல்லாமல் சமத்துவப் பொங்கல் என்று கிராமமே கொண்டாடுவதும் தமிழர் திருநாளாம் பொங்கலின் தனிச்சிறப்பு.
"தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் (தை)
ஆடியிலே வெத வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனி யெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம் (தை)''
என்ற பாடலாசிரியர் மருதகாசியின் வரிகளில் பண்டிகையின் பெருமையும், விவசாயத்தின் இயல்பும் தத்ரூபமாகச் சொல்லப்படுகிறது. தமிழர்கள் உணர்வுகளுடன் கலந்திருக்கும் தைப்பொங்க லைப் பாடாத கவிஞர்களே இருக்கமுடியாது. தை மாத விழாவில் கன்னிப் பெண்களின் நோன்பும் இணைந்து கொள்வதால் இன்னும் சிறப்பாக மாறிவிடுகிறது.
தை மாதத்தில் இளம்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி நோன்பு இருந்தனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் காணமுடிகிறது. ஆவணி மாதம் முதல் மழை பெய்ததால் ஆறுகள், குளங்கள், குட்டைகள் ஆகியவை நீரால் நிரம்பிக் கிடக்கின்றன. தை மாதம் பனிக்காலம் என்பதால், வாடைக் காற்றும் வீசுவதால் நீர்நிலைகள் குளிர்ந்திருக்கும்.
இதை, புறநானூறு சொல்லும் விதமே தனி அழகு!
"தைஇத் திங்கள் தண் கயம் போல
கொளக் கொளக் குறையா கூழுடை வியனகர்''
என்ற வரிகளில் சோழ அரசனின் நகரச் சிறப்பும் விவரிக்கப்படுகிறது. எப்படி தை மாதத்தில் எல்லா குளங்களும் குளிர்ச்சியை வாரி வாரி வழங்குகிறதோ,
அதைப்போல அள்ள அள்ளக் குறையாத உணவு
நிறைந்த வீடுகளைச் சோழ நாடு முழுக்கப் பார்க்கலாம்
என்று புலவர் பாடுகிறார். இதுபோல இன்னொரு பாடலும், திருமண நிகழ்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்கள் குளிர்ந்த நீரில் நீராடிய வழக்கத்தைப் பேசுகிறது. நல்ல கணவனைப் பெறுவதற்காகக் குளத்து நீரில் நீராடும் திருமண மாகாத பெண்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது நற்றிணைப் பாடல்.
"இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇ
தைஇத்திங்கள் தண் கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கு''
என்ற வரிகளில் நோன்பின் சிறப்பு சொல்லப்படுகிறது. நோன்பு என்பது, தான் எண்ணியிருக்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தனக்கு நேரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய மனவுறுதி என்று புரிந்துகொள்ளலாம். வெட்கம் என்ற பண்பு இயல்பாக மகளிருக்கு அமைந்திருப்பதால், காதலனோடு புறப்பட்டுச் சென்றுவிடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறது. அதனால் நோன்பு இருக்கவேண்டிய சூழல். இப்படி நீராடும் பெண் மீது காதல் கொண்ட ஒருவன் தன் உள்ளத்து ஆசைகளை மற்றவர் கேட்கும்படி வெளிப்படை யாகப் பேசும் இடத்தில் அன்புக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
நீர்நிலைகளில் நீராடும் இந்தப் பெண்ணே எனக்கு நோயைச் செய்பவளாகவும் அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறாள் என்று ஒரு காதலன் தன்னுடைய காதல் நோயைப் பக்கத்திலிருந்து காதலியின் தோழி கேட்குமாறு பேசுகிறான். இப்படிப் பெண்கள் நீராடுவதை 'அம்பா ஆடல்' என்று பரிபாடலும் உறுதிசெய்கிறது. அதாவது திருமணமாகாத இளம் பெண்கள் தன் அம்மாவைப் பக்கத்தில் இருக்கவைத்து நீராடுவதால், 'அம்பா ஆடல்' என்று அழைக்கப்பட்டது. சங்க கால மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்பதற்கு இந்தத் தை நீராடல் ஒரு முக்கியமான உதாரணம். நோன்புக்குப் பிறகு அறுசுவை உணவு சமைத்து உண்ணும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த நோன்பின் தொடர்ச்சியாக, திருப்பாவையும் - திருவெம்பாவையும் மார்கழி மாதத்தின் பாவை நோன்பினைக் காட்டி மகிழ்கின்றன. பல்லவர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 400 முதல் கி.பி. 800 வரை) தை நீராடல் என்ற விழா தமிழ் நிலத்தில் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வந்தது. காலப்போக்கில் அதில் சிறு மாற்றம் ஏற்பட்டு அது மார்கழி மாதத்திற்குச் சென்றிருக்கலாம்.
தை மகளின் சிறப்புகளைக் கூறும்போது கவியரசர் கண்ணதாசனின் "தைப்பாவை' என்ற படைப்பைக் குறிப்பிடாமல் கடந்துவிடமுடியாது. திராவிடக் கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தபோது இந்நூலை எழுதினார் கவிஞர். முன்பிருந்த பாவை நூல்களில் இருக்கும் வழக்கத்தைத் தனக்குப் பிடித்த வழக்கமாக மாற்றி அமைத்தார். "எம்பாவாய்' என்ற முறையை "தைப்பாவாய்!' என்று பாடுவது தைமகளை அழைப்பதாகவே என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
"காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர் தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர் வாய்த்தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமால்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!'
என்ற வரிகளில் மங்கலச் சொற்களும், இயற்கைச் சூழலும் கைகோத்து வரவேற்கின்றன. அதே போல, இலக்கியத்தை நிறைவு செய்யும்போதும் கண்ண தாசனின் கவிநயத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். நமக்கான நல்வாழ்வு தரக்கூடிய வாழ்த்தை "தை'
மகளிடமே வேண்டி நிற்கிறார் கவிஞர்,
"வானேறி மேகம் விழ
மண்ணுழவர் பொன்னுதிர
ஊனாகி வந்தெம்
உயிர் காக்கும் மெய்வடிவே!
பூ நேர் விழியாரும்
பூத்துவரும் குலந்தளிரும்
வான் வாழ்வு வாழ
வாழ்த்தாயோ தைப்பாவாய்'
என்ற வரிகளில் தை மகளிடம் கவிஞர் நன்மைகளை வேண்டிநிற்கும் நிலை தெளிவாகப் புரிகிறது. தமிழர்கள் தை மாதத்தின் முதல் நாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடும் வழக்கத்தைத் திராவிட கருத்தியலை அடிப்படையாக அமைத்துக்கொண்டு தமிழர் மரபுக்கு மேலும் வலுச் சேர்க்கிறார். இதிலே காதல் வாழ்வு, மூவேந்தர்களின் சிறப்பு முதலிய பல செய்திகளையும் சுவையுடன் கவிதைகளாக வடித்துக் கொடுத்திருக்கிறார். தை மகள் திருமண வரம் தருபவள்; அவளால் எல்லா நன்மைகளும் கிடைக்கவேண்டும் என்பது கவிஞரின் உள்ளத்து ஆசை.
தை மாதத்தின் இன்னுமொரு சிறப்பு - ஏறு தழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு போட்டிகளே. மஞ்சுவிரட்டு என்றும் சொல்லப்படும் இந்தப் போட்டி, தமிழர்களின் முக்கியமான வீர விளையாட்டு. பழைய காலத்தில் மாடுகளை மேய்க்கும் காட்டுப் பகுதியில் வாழும் மக்கள் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பதற் கான முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வந்தனர். பெண்கள் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளை அடக்கி வெற்றிபெறுவது ஒரு சாதனை. அந்தச் சாதனைக்குப் பரிசாக அந்த வீட்டுப் பெண்ணை மணம் முடித்துத் தருவது வழக்கம்.
"எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர்'
என்ற கலித்தொகைப் பாடல் ஏறு தழுவுதல் குறித்த செய்திகளை விளக்குகின்றன. வீர விளையாட்டில் ஈடுபட்டு வெற்றிபெற்ற வீரனையே இளம்பெண்கள் தங்கள் கணவன்களாக ஏற்க விரும்புவர் என்ற செய்தி யையும் தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் போட்டியின்போது சல்லிக்காசு என்னும் நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்தது. மாட்டை அடக்கி வெற்றிபெறும் வீரனுக்கு இந்தப் பண முடிப்பு சொந்தமாகும். இது காலப்போக்கில் சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு என்று மாறியது. தில்லியில் உள்ள தேசியக் கண்காட்சியில் சிந்து சமவெளி சார்ந்த காட்சி பொருள் ஒன்று உள்ளது. சிந்து சமவெளி சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளையின் உருவமும், அதை அடக்க முயலும் வீரரையும், அந்த வீரரை காளை தூக்கி எறிவது போன்ற காட்சியும் பொறிக்கப்பட் டுள்ளது. எனவே பழங்காலந்தொட்டு இந்த வீர விளையாட்டுகள் தமிழ் மண்ணின் மகத்துவத்தைப் பேசி வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு விழாவுக்குப் பின்னால் இருக்கும் வரலாறு வெறுமனே சடங்கு முறைகளைச் சொல்லும் வாதம் அல்ல! மாறாக அந்த விழாவின் அடிப்படையாக அமைந்திருக்கும் பண்பாட்டுக் கூறுகளை, மரபார்ந்த பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்ள முன்னோர்கள் செய்து வைத்திருக்கும் உறுதிப் பத்திரம் என்றே விளங்கிக்கொள்ளலாம். பொதுவாக, எல்லா பண்டிகைகளுக்குள்ளும் கடவுள் சார்ந்த கொள்கை இழையோடிக் கிடக்கும். தை விழாவில் இயற்கையே கடவுளாக மாறி பேருருக் கொண்டு பரிணமிக்கிறது. இங்கே சாதி - சமயம் என்ற எந்தச் சிக்கலும் எழுவதில்லை.
சகோதர நேசத்துடன், எல்லா உயிர்களையும் அரவணைத்துச் செல்லும் திருவிழாவாகவே பொங்கல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/pongal-2026-01-07-16-20-38.jpg)