பிப்ரவரி மாதத்தின் குளிர்ந்த, பனி படர்ந்திருந்த காலை வேளையில் மலையின் அடிவாரத்திற்கு கர்னல் வில்கியும் நானும் புறப்பட்டோம். சிவாலிக்ஸ் அப்போதும் பனியில் மூடியிருந்தது. ஒரு பழைய ராணுவ புஷ் சட்டையையும் காக்கி ட்ரவுசரையும் கர்னல் அணிந்திருந்தார். தன் 12 குண்டுகள் இருக்கக்கூடிய துப்பாக்கியையும் அவர் வைத்திருந்தார். நான் அவரின் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டேன். நடப்பது சிரமமாக இருக்கும் தருணத்தில் நான் அதை அவரிடம் கொடுப்பேன். எங்களுக்கு முன்னால் அல்லது சில நேரங்களில் எங்களுக்குப் பின்னால்.... அவனின் மன நிலைக்கு ஏற்ப... கர்னலின் பிரியத்திற்குரிய நாயான ஃப்ளாஷ் ஓடி வருவான். தன் எஜமானருக்கு உதவும் வகையில் பறவைகளைக் கொண்டு வரும் வண்ணம் அந்த இளம் ஸ்பெயின் நாய் பயிற்சி தரப்பட்டிருந்தான்.
கர்னல் தன் அறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தார். பென்சன் பணத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். தன் இளமையான நாட்களில் அவர் ஒரு சிறந்த வேட்டையாளராக இருந்திருக்க வேண்டும். அவர் வீட்டின் வராந்தா சுவர்களை "காஸெல்லாஸ்' என்று அழைக்கப்படும் சிறிய வகை மான், "ஆன்டிலோப்' என்று அழைக்கப்படும் மான், அடர்ந்த வனங்களில் இருக்கும் காட்டெருமை, பனிச்சிறுத்தை ஆகியவற்றின் தலைகள்
அலங்கரித்துக் கொண்டிருந்தன.
அனைத்தும் பல்வேறு காலங்களிலும் இடங்களிலும் அவர் நீண்ட காலமாக இந்தியாவில் வசித்தபோது சுடப்பட்டவை.
வருடங்கள் கடந்தோட, வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கை, உயர்தர விஸ்கியின் அதிக விலை.... அனைத்தும் சேர்ந்து கர்னலின் இலக்கைக் கெடுத்துவிட்டன. ஒரு வார காலம் விருந்தாளியாக தன் வீட்டிற்கு என்னை அழைத்தபோது, அவர் ஒரு கவுதாரியைச் சுட்டுத் தருவதாக எனக்கு வாக்களித்தார். தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மனிதர்களில் ஒருவர் அல்ல அவர். நான் சந்தோஷமாக வேட்டைக்குச் செல்வதைத் தவிர்த்தாலும் (சீக்கிரம் கண் விழிப்பது எனக்குப் பிடிக்காது), முந்தைய நாளின் இரவிற்கு முன்பே தன் துப்பாக்கியை எண்ணெய் இட்டு கர்னல் சுத்தம் செய்வதை நான் நினைத்துப் பார்த்தேன். நான் அவரை ஏமாற்ற விரும்பவில்லை.
"கவுதாரிக்கு இதுதான் சரியான நாடு''- ஒரு உயரமான மேட்டில் ஏறுவதற்காக தன் வாக்கிங் ஸ்டிக்கிற்குப் பதிலாக தன்னுடைய துப்பாக்கியை மாற்றும்போது அவர் கூறினார்:
"ஏராளமான செடிகள்... வயல்கள் அதிக தூரத்தில் இல்லை. அவற்றிற்கு அது வசதியாக இருக்கும். ஆனால், அவை அதிகமாக இல்லை என்பதை நினைத்து அதிர்ச்சிக்கு ஆளாகிறேன். வருடங்களுக்கு முன்பு மான்கள் சுடப்பட்டு விட்டன.''
நாங்கள் அதிக தூரம் சென்றிருக்க மாட்டோம். ஃப்ளாஷ் தன் தலையை உயர்த்தி காற்றில் வாசனை பிடித்தான்.
"அவன் அவற்றை வாசனை பிடித்துவிட்டான்''- கர்னல் கூறினார்: "போ... அவற்றை வெளியே அனுப்பு, பையா!''
ஃப்ளாஷ் தன் நாசியைத் தரையில் வைத்தவாறு முன்னோக்கி ஓடினான். பின்னர் அடர்த்தியாக வளர்ந்திருந்த உண்ணிச் செடிகளின் புதருக்குள் மறைந்துவிட்டான். அவன் அப்படிச் செய்தபோது, புதருக்குள்ளிருந்து கூட்டமாக கவுதாரிகள் ஓசை உண்டாக்கியவாறு வெளியே வந்தன. கர்னல் தன் வாக்கிங் ஸ்டிக்கைக் கீழே போட்டுவிட்டு, துப்பாக்கியை இறுக பிடித்து, தன் தோள்பட்டைக்கு உயர்த்தி, சுட்டார்.
ஒரு கவுதாரிகூட விழவில்லை. அவை புதருக்கு மேலே தாழ்வாக பறந்து, மலையின் விளிம்பைச் சுற்றி, ஒரு ஃபர்லாங்க் தூரத்தில் கீழே இறங்கின.
"அதிர்ஷ்டம் இல்லை...''- நான் கூறினேன்.
"மிகவும் தூரத்திற்குச் சென்றுவிட்டன...'' - கர்னல் கூறினார்.
"எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டன. நல்ல பையன்.... ஃப்ளாஷ். எனினும், நாம் அவற்றைப் பிடிப்போம்.'' -நாய் உற்சாகத்துடன் திரும்பி வந்த போது, அவர் கூறினார்.
தன் வாக்கிங் ஸ்டிக்கை மறந்துவிட்டு, கர்னல் வில்கி கடுகு வயலுக்குள் நடந்தார். எப்போதெல்லாம் மிகவும் தூரத்தில் செல்வதற்கு முயற்சிக்கிறானோ, அப்போது ஃப்ளாஷை அவர் நிற்கும்படி கூறினார். நாங்கள் முழுமையாக வயலுக்குள் சென்றுவிட்ட பிறகு, கர்னல் நாயை ஓடுவதற்கு அனுமதித்தார்.
தன்னுடைய பணியை நன்கு அறிந்தவனாக ஃப்ளாஷ் இருந்தான். பறவைகள் மீண்டும் காற்றில் பறந்து வர, கர்னல் இன்னொரு குண்டை வெடிக்கச் செய்தார்.
அவரின் தூரம் தவறியது. கவுதாரிகள் வயலுக்கு மேலே வேகமாக தாழ்ந்த நிலையில் பறந்து நூறு அடிகளுக்கும் குறைவான தூரத்தில் இறங்கின. முந்தைய சந்தர்ப்பங்களில் கர்னலால் அவை சுடப்பட்டிருக்கலாம். அவர் நிச்சயம் குறியைத் தவறவிடுவார் என்ற அறிவு அவற்றிற்கு உறுதியாக இருந்தது.
ஃப்ளாஷ் திரும்பி வந்தான். அவனின் குட்டையான வால் சந்தோஷத்தால் அசைந்து கொண்டிருந்தது. கர்னலிடமிருந்து எந்தவித அதிசயத்தையும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தனக்குள் அவன் மகிழ்ச்சியாக இருந்தான்.
"நாசமாய் போன கவுதாரிகள்....'' -கர்னல் வில்கி முணுமுணுத்தார். அவரின் முகம் இப்போது சிவந்து காணப்பட்டது. "சுட்டது உண்மையிலேயே சரியாக வரவில்லை. சுட்டது பறவைகளைக் கலைந்து போகுமாறு செய்து விட்டது.'' - அவர் கூறினார்.
"பரவாயில்லை.....'' -நான் கூறினேன்:
"இன்னொரு முறை முயற்சி செய்து பாருங்கள். அவை மிகவும் தூரத்தில் இல்லை.''
கடுகு வயலுக்குள் நாங்கள் மேலும் முன்னோக்கி நடந்தோம். எங்களின் பூட்ஸ்களும் ட்ரவுசர்களும் சேறு படிந்து காணப்பட்டன. ஃப்ளாஷ் மஞ்சள் நிற கடுகு மலர்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருந்தான். பறவைகள் மேலே எழுந்தன. கர்னல் வில்கியின் துப்பாக்கி செயலில் இறங்கியது. இரண்டு குண்டுகள் ஒன்றிற்குப் பின்னால் இன்னொன்று என்ற வகையில் பாய்ந்து சென்றன.
அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்... கர்னல் வில்கி, ஃப்ளாஷ், கவுதாரிகள், நான்... பறவைகளில் ஒன்று தரையில் சரிந்து விழுந்தது.
"அருமையாக சுட்டீர்கள், சார்....'' - நான் சத்தமாக கூறினேன்.
"ஃப்ளாஷ்... போய் அதை எடுத்துக் கொண்டு வா'' - கர்னல் சந்தோஷத்துடன் கூறினார். என்னைப் பார்த்து அவர் கூறினார்: "இரவு உணவுக்கு கவுதாரியை வறுங்க.. வயதான பையா!''
முதல் முறையாக கவுதாரியைத் தான் சுட்டதைப் போன்ற சந்தோஷத்தில் அவர் இருந்தார். அவரின் ஆனந்தத்தில் பங்குபெறுவதைத் தவிர, எனக்கு வேறு வழி இல்லை.
ஃப்ளாஷ் முன்னோக்கிச் சென்றான். பறவைகளை வெளியே கொண்டு வருவதில் அவனுக்கு நிறைய அனுபவங்கள் இருந்தன. ஆனால், சாஹரான்பூர் கென்னல் க்ளப்பில் பட்டம் பெற்ற பிறகு, இப்படிப் பட்ட செயலில் அவன் ஈடுபடுவது இதுவே முதல் முறை. அதனால், அவனுடைய அடுத்த செயல்படும் முறை வெறுமனே துப்பாக்கி குண்டு பாய்வதற்காக பாடுபடும் நாயின் நிலையிலிருந்து விலகிச் செல்வது...
அவன் தன் வாயால் பறவையை மேலே தூக்கினான். தொடர்ந்து எங்களிடம் அதைக் கொண்டு வந்து தருவதற்குப் பதிலாக மதிப்புமிக்க பரிசைத்தானே வைத்துக்கொண்டான்.
"ஃப்ளாஷ்.... உடனடியாக திரும்பி வா!'' - கர்னல் வில்கி கத்தினார்: "நாசமா போன நாய், பறவை தனக்குத்தான்னு நினைச்சிக்கிட்டு இருக்கு!''
"நல்லது... அதற்குத் தகுதியானது அது'' - நான் கூறினேன்.
"எனக்கு அந்த தகுதி இருக்கு'' - கர்னல் உடனடியாக கூறினார். அத்துடன் வெளிப்படையாக அவர் கூறினார்: "பல வருடங்களுக்குப் பிறகு நான் முதல் தடவையாக சுட்ட கவுதாரி.... இந்த கை எனக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்த காலத்திலிருந்து.....''
நாங்கள் வயலின் வழியாக தடுமாறியவாறு வீட்டை நோக்கி நடந்தோம். இப்போதும் ஃப்ளாஷ் பறவையுடன் எங்களுக்காகக் காத்திருக்கும் என்ற இலேசான எதிர்பார்ப்புடன்.... ஆனால், எங்களுக்கு ஏமாற்றம் உண்டாகி விட்டது. இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு நாய் வீட்டிற்கு வந்தான். மிகுந்த குற்ற உணர்வுடன் அவன் இருப்பதைப்போல தோன்றியது.
அவனுடைய வாயின் ஓரங்களில் கவுதாரியின் சில இறகுகள் ஒட்டியிருந்தன.
"ம்... அவன் எதையும் வீணாக்கவில்லை.''- நான் கவனித்தேன்.
அவனுக்குத் தண்டனை தரவேண்டும் என்ற சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும், தன் நாயின் மீது அளவற்ற பாசத்தை கர்னல் வைத்திருந்தார்.
அதனால், சில நிமிடங்களில் சாதாரண மனித சிந்தனை, பழைய... நல்ல... ராணுவ அத்துமீறல்களுக்கு வழி விட்டுக்கொடுத்தது. அதன்மூலம் பல புதிய வார்த்தைகள் என் அகராதியில் வந்துசேர்ந்தன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/ss-2025-12-13-12-31-55.jpg)