ஜெ.எஸ். அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்து, மதுராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "தொட்ரா' படத்தில் வில்லனாக அறிமுகமாகி இருப்பவர் எம்.எஸ். குமார்.
ஒரு சீன் பத்தி எம்.எஸ். குமார் என்ன சொல்ல வர்றாருன்னா.
""இந்தப்படத்தில் எனக்கு மனைவியாக நடித்த "மைனா' சூசன், எனது தங்கையாக நடித்த வீணா பற்றித் தவறாகப் பேசுவதுபோலவும், உடனே நான் கோபத்துடன் அவரை கைநீட்டி அடிப்பது போலவும் ஒரு காட்சி. என்னதான் வில்லனாக நடித்தாலும், பெண்களை கைநீட்டி அடிப்பது என்பது எனக்குப் பழக்கமும் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஆரம்பத்தில் இருந்து என்னை கவனித்துவந்த "மைனா' சூசன் இந்தக் காட்சியில் நான் இயல்பாக நடிக்கமாட்டேனோ என்கிற முடிவிற்கே வந்துவிட்டார்.
அதனால் அந்தக் காட்சியை எடுப்பதற்கு முதல் நாள் இரவு இயக்குநர் மதுராஜிடம் போனில் தொடர்புகொண்டு "எம்.எஸ். குமாரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். நாளை எடுக்கப்பட இருக்கும் கன்னத்தில் அறையும் காட்சியை இப்போதே ஒத்திகை பார்த்துவிடுவோம்' என கூறினார்.
அதனால் இரவு பத்து மணிக்குமேல் ஆன நிலையில் நானும் மதுராஜூம் அவரது அறைக்குச் சென்றோம். அவரது கன்னத்தில் அறையும்படி "மைனா' சூசன் கூறினார். ஆனால் பத்து, பன்னிரண்டு முறை அறைவதுபோல நடித்தும் அது இயல்பாக வரவில்லை.
"எத்தனை மணி ஆனாலும் நீங்கள் தத்ரூபமாக என்னை அறைந்தால் தான் இங்கிருந்தே போகமுடியும்' என்றார். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்து உடனே பளாரென ஒரு அறை விட்டேன்.
மறுநாள் படப்பிடிப்புத் தளத்திலும் அந்த கோபத்துடனேயே மீண்டும் வேகமாக அறைந்தேன்.. அந்தக் காட்சி ஓகே ஆனது.. ஆனால் பாவம், "மைனா' சூசனின் ஒரு பக்கத்தோடு அறுத்து விழுந்ததோடு கன்னமும் வீங்கிவிட்டது'' என்றார்.
சூசன் நடித்த "மைனா' படத்திலும் அவரது கணவராக நடித்த புதுமுகம் சேது, சூசனை கைநீட்டி அறையவேண்டிய காட்சியில் தயங்கினாராம்.
அவருக்கும் இப்படி கிளாஸ் எடுத்தாராம் சூசன்.