நக்கீரன் இதழில் 2014 ஜனவரிமுதல் 2015 ஆகஸ்ட்வரை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக "சினிமா சீக்ரெட்' என்ற தொடரை எழுதியவர், இப்போதும் நக்கீரனில் "கேரக்டர்' என்ற தொடரை எழுதி வருபவர், தமிழ் சினிமாவின் கதைச் சுரங்கமான கலைஞானம். 75 ஆண்டுகளாக கலைத்துறையில் பயணித்துவரும் கலைஞானத்திற்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பில், கடந்த 14-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் நடந்த இந்த பாராட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு கலைஞானத்தைப் பாராட்டி சிறப்புரை ஆற்றினார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கலைஞானம் மேடையேறியதும், அவரின் இடது கையை ரஜினியும் வலது கையை பாரதிராஜாவும் பிடித்தபடி அழைத்துச்சென்று இருக்கையில் அமரவைத்தனர். கலைஞானத்தின் கதை ஞானத்தை வெகுவாகப் புகழ்ந்தார் பாரதிராஜா.
சூப்பர் ஸ்டார் ரஜினி மைக் முன் வந்ததுமே அரங்கமே ஆர்ப்பரித்தது. தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் மாறன், தூயவன், கலைஞானம் ஆகியோர் பணியாற்றியதை நினைவு கூர்ந்த ரஜினி, ""ஹீரோவாகும் ஆசையெல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஏதோ கொஞ்சம் சம்பளம், ஒரு ஸ்கூட்டர்- இதுதான் என்னோட அதிகபட்ச ஆசை. திடீர்னு ஒருநாள் கலைஞானம் சார் வந்து "பைரவி'-ன்னு ஒரு படம் எடுக்கப்போறேன், அதுல நீங்கதான் ஹீரோன்னாரு.
எனக்கு ஒண்ணும் புரியமா, என்ன சார் சொல்றீங்கன்னு கேட்டேன், அட ஆமாங்க- நீங்கதான் ஹீரோன்னு சொல்லிட்டு, கையில அட்வான்சையும் கொடுத்துட்டுப் போயிட்டார். அதுக்குப்பிறகுதான் என்னோட கேரியர் ஸ்டார்ட் ஆச்சு.
இப்பக்கூட அரசாங்கம் சார்பாக கலைஞானத்திற்கு வீடு கொடுக்கப் போவதாக அமைச்சர் சொன்னார். ஆனா கலைஞானத்தின் கடைசி காலம் என்னோட வீட்லதான்.
அதனால கலைஞானம் சார், நல்ல வீடு பாருங்க, நான் வாங்கித் தர்றேன்'' என இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி, மேடையில் கலைஞானத்திற்கு தங்கச் சங்கிலி அணிவித்தார்.
""நக்கீரனில் நான் "சினிமா சீக்ரெட்' தொடர் எழுதுவதப் பார்த்துட்டு, நிறையப் பேர், "நீங்க ஏன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்கக் கூடாது' என கேட்பார்கள். எனக் கிருக்கும் இயல்பான குணத்தால் நான் போகல'' என்றார் விழா நாயகரான கலைஞானம்.
-ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்