"கல்லூரி', "தென்மேற்கு பருவக்காற்று', "பரதேசி', "ஜோக்கர்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களைக் கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை.

தமிழகத்தில் குறிப்பாக, சென்னை யில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை "டூலெட்' படத்தில் யதார்த்தமாகக் காட்சிப் படுத்தியுள்ளார் செழியன். இந்தப் படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர்.

tolet

சர்வதேச திரைப்பட விழாக்களில் "டூலெட்' அனுபவங்களை பரவசத்துடன் விவரிக்கிறார் செழியன்- ""இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்காதி இந்தப் படத்தை பார்த்து விட்டு, "எனக்கு படம் பார்த்த உணர்வே இல்லை; ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக கூடவே இருந்து பார்த்தது போன்று இருந்தது' எனப் பாராட்டினார்.

ஈரானிய படங்களைப் பார்த்துவிட்டு நாம் ஆஹா ஓஹோவென புகழ்கிறோம்.

ஆனால் எப்போது ஈரான் நாட்டுக்காரன் நம் தமிழ்ப்படத்தைப் பார்த்து வாய்பிளக்கப் போகிறான் என்கிற ஆதங்கம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நிறையவே உண்டு. இப்போது அவர் இருந்திருந்தால் இதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்திருப்பார்.

சர்வதேச விழாக்களில் படத்தைப் பார்த்த பல நாட்டு இயக்குநர்கள், "தமிழில் இப்படி ஒரு கலாச்சாரம் இருக்கிறதா? வீடு மாறுவது என்பது இவ்வளவு கஷ்டமானதா' என ஆச்சர்யப்பட்டார்கள்.

கடந்த வருடம் நவ-17-ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில்தான் முதன்முதலாகக் கலந்துகொண்டது "டூலெட்'படம். அந்த விழாதான் இந்தப்படம் இன்னும் பல விழாக்களில் கலந்துகொள்வதற்கான வாசலை அகலமாகத் திறந்து விட்டது.

தற்போது நடைபெற்றுவரும் கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் "டூலெட்' கலந்துகொண்டது. இந்தியப் படங்களுக்கான போட்டி பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டி பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்துகொள்கிறது. கடந்த 49 வருட கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டி பிரிவில் கலந்துகொள்ளும் முதல் தமிழ்ப் படம் "டூலெட்'தான்'' என்றார் பெருமிதமாக.

Advertisment