சென்னை வேப்பேரியில் உள்ள சால்வேசன் ஆர்மி சென்டரில் அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் மற்றும் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து நடத்திய 7 ஆவது உலக முத்தமிழ் மாநாடு, அக்டோபர் 25, 26 தேதிகளில் வெகுசிறப்பாக நடந்தேறியது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் பார்வையாளர்களை கைத்தட்டலுடன் ரசிக்க வைத்தன.
உலக முத்தமிழ்க் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் அரங்கில் உள்ள அனைவரையும் வரவேற்கையில் அமெரிக்க இலக்கியப் பேரவைக் குழுமங்களின் தலைவர் தாழை இரா.உதயநேசன் மிகப்பெரிய விபத்தினை அமெரிக்க நாட்டில் சந்தித்து பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று நம்மோடு இந்த மாபெரும் முத்தமிழ் மாநாட்டை நடத்திக்கொண்டு இருக்கிறார் என்றால் தமிழ்மீது அவர் கொண்ட பற்றும் உலகளாவிய தமிழ் ஆர்வலர்களின் நட்பும்தான் அதற்குக் காரணம் எனக் கூறினார்.
நிகழ்வுக்கு அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலை வேந்தரும் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான தாழை இரா.உதயநேசன் தலைமை தாங்கினார். அப்போது, பேரவைக் குழுமங்களின் செயல்பாடு மற்றும் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் குறித்தும் பல்கலைக் கழகத்தின் பட்டய வகுப்புகள் விவரங்கள் , இதுவரை பட்டயம் பெற்றவர்கள் எண்ணிக்கை, ஆற்றிவருகின்ற தமிழ்ப்பணிகள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துக்கூறினார். தொடர்ந்து விழாவில் ஆய்வுக் கோவை வெளியிடப்பட அதை திருமதி.கலையரசி உதயநேசன் பெற்றுக்கொண்டார்.
அடுத்து ..... இயக்குநர் பிருந்தா சாரதி அவர்களின் வாழ்த்துக் கவிதை மேடையில் பெரும் கைத்தட்டலைப் பெற்றது.
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் பொதுச் செயலர் எழுத்தாளர் ஜெயபாஸ்கரன்தமது உற்சாக உரையில், “ குடங்களையும் கூடைகளையம் சுமந்த இடுப்பில் கைத்துப்பாக்கிகள் கவனம் ஈர்த்தன " எனச் சொல்லி பெண்களின் முன்னேற்றத்தைப் பாராட்டினார். மேலும் ஊர்ப்பெயர்களை மீட்கும் பொருட்டு பெயர் மீட்பு மாநாட்டையும் நடத்த கோரிக்கை வைத்தார்.
மாநாட்டின் தொடக்கநாள் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மருத்துவத்துறை ஓய்வுபெற்ற தலைவர்மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி தமிழ் இலக்கியத்தின் மேன்மை குறித்தும் குறிப்பாக மனிதநேய வள்ளல் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா பாடல்களில் மனிதநேயம், சிலப்பதிகாரத்தின் மேன்மை குறித்தும் விரிவாகப் பேசினார். அரங்கம் மெய்மறந்து அவரது இலக்கியப்பொழிவை கேட்டு ரசித்தது.
இயக்குனர் என்.லிங்குசாமி பேசியபோது தற்கால கவிதை வடிவமான ஹைக்கூ கவிதைகள் குறித்து விளக்கமளித்தார். ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்களையும் பாடி கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார். அடுத்து நடைபெறும் உலக முத்தமிழ் மாநாடு ஹைக்கூ மாநாடாக இருந்தால் அதில் கலந்துகொண்டு சிறப்பிக்க தமக்கு விருப்பம் என அறிவித்தார்.
சிறப்புரைகளுக்குப் பின் முனைவர் ஆதிரா முல்லை தலைமையில் “ எண்ணமே ஏற்றம் தரும் " தலைப்பில் மகளிர் கவியரங்கம் நடை பெற்றது. கவியரங்கில் பிரித்தானியா நாட்டிலிருந்து வருகைதந்த பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் திருமகள் சிறீ பத்மநாதனும் ஆலோசகர் கவிஞர் அமுதா தமிழ்நாடனும் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கலை , அறிவியல் கல்லூரி தமிழ்துறைத் தலைவர் முனைவர் கவிதா இராஜசேகர் வாழ்த்துரை வழங்கினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/13/tamilconference1-2025-12-13-13-11-46.jpg)
முப்பதுக்கும் மேற்பட்ட மகளிர் கவிதைகளை மேடையில் வாசித்தார்கள். உணவு இடைவேளைக்குப்பின் கவித்திலகம் வெற்றிப் பேரொளி தலைமையில் “ அறிவென்று கொட்டு முரசே" என்ற தலைப்பில் பொதுக் கவியரங்கம் நடைபெற்றது. சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்த பன்னாட்டு இணை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் இரதி கமலநாதன் , கவிஞர் சிவரூபி சிவசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிபாட கவிதைச்சாரல் குழுமத்தின் தலைவர் முனைவர் பேச்சியம்மாள் பிரியா வாழ்த்துரை வழங்கினார்.
அடுத்த நிகழ்வாக இயக்குனர் யார் கண்ணன் அவர்களது “ காட்சி ஊடகக் கனவுகள்" நூலினை இயக்குனர் இராஜகுமாரன் வெளியிட நடிகை தேவயானி இராஜகுமாரன் பெற்றுக்கொண்டு உரையாற்றி னார். விழாவில் பெண்கள் , பெண் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பலரும் ஆண்களை விட அதிகளவில் கலந்து கொண்டிருப்பது ஒரு திருமண விழாவைக் காண்பதுபோல் இருக்கிறது எனச் சொல்லி மகிழ்ந்தார்.
இயக்குனர் இராஜகுமாரன் திரையுலகில் கடந்துவந்த பாதை குறித்து உரையாற்றி னார். நூலாசிரியர் இயக்குனர் யார் கண்ணன் ஏற்புரை வழங்கினார்.
விழாவில் தொடர்ந்து பேரவைக் குழுமங் களின் தலைவர் இரா.உதயநேசனின் தன்முனைக் கவிதை நூல் “காற்றில் ஆடும் ஊஞ்சல் ", "வானம் தொடும் சிட்டுக்குருவி" ஆகிய நூல்களை மக்கள் இயக்குனர் சீனு இராமசாமி வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். தன்முனைக் கவிதைகள் பலவற்றை எடுத்துக்கூறி நூலாசிரியரின் பன்முகத் திறனைப் பாராட்டினார்.
ஒரு படைப்பாளியின் படைப்பு என்பது உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டு இயக்குனர் சீனு இராமசாமி பேசியது அரங்கத்தில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நூல்களை கவிஞர் தங்க துரை பாண்டியன் ,பாரதியாரின் கொள்ளுப்பெயர்த்தி கவிஞர் உமாபாரதி ஆகியோர் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பல்கலையின் ஆலோசகர் முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் “ உயிர்த்தெழும் சிந்தனைகள் " என்ற ஹைக்கூ கவிதை நூலினை பல்கலைவேந்தர் முனைவர் வெளியிட நூலினை முனைவர் ஜெ.ஹாஜாகனி, ஓவியக்கவிஞர் அமுதபாரதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல்களை வெளியிட்டு உரையாற்றிய பேராசிரியர் ஹாஜாகனி பேசுகையில் பேரவைக் கவிஞர்கள் பலரது எழுத்தாற்றலைப் புகழ்ந்து பேசினார்.
ஓவியக் கவிஞர் அமுதபாரதி பேசுகையில்…. "கவிஞர்கள் கவிதையின் கருப்பொருள் கிடைத்ததும் உடனே கவிதை படைக்கத் துடிக்காதீர்கள்…சிந்தித்து படிப்போர்கள் ரசிக்கும்படியாகவும் பாராட்டும்படியும் இருக்கவேண்டும்" எனக் கூறினார் .
விழாவில் இறுதியாக அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலையில் படிக்கும் மாணவர்களது நூல்கள் வெளியிடப்பட்டன…
விழாவில் இலங்கையிலிருந்து வருகைதந்த கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமார் எழுதிய அர்ப்பணா மற்றும் தூரிகா என்கிற நூல்களும் பிரித்தானியாவிலிருந்து வருகைதந்த கவிஞர் திருமகள் சிறீபத்மநாதன் அவர்களின் எப்போது முளைக்கும் சிறகுகள் என்கிற நூலும், பிரான்சு நாட்டிலிருந்து வருகைதந்த கவிஞர் சுமதி றஞ்சநாதனின் நிறம் மாறாக் காதல் மற்றும் மரபு மொட்டுப் பூக்கள் மரபுக் கவிதைகள் என்கிற நூலும் , நார்வேயிலிருந்து வருகை தந்த கவிஞர் வனஜா உதயகுமாரனின் " அந்திவானத்து மனச்சிறகுகள் " நூலும் வெளியிடப்பட்டன . சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த கவிஞர் இரதி கமலநாதன் அவர்களின் "தொடுவானம் தூரமில்லை" என்கிற நூலும், சுவிஸ் நாட்டில் வசிக்கும் கவிஞர் அப்புத்துரை ஜெகன் அவர்களின் "ஒரு குடைக்குள்" என்கிற நூலும் மேடையில் வெளியிடப்பட்டன.
இவை அனைத்தும் தன்முனைக் கவிதைகள் நூல்கள் ஆகும். விருந்தினர்களுக்கு அவ்வப்போது பயனாடை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாநாட்டின் இரண்டாம் நாள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் செல்வி தா.ரா.காஷ்வியின் பரதநாட்டியமுடன் தொடங்கியது. சிறப்பு நிகழ்வாக செல்வி த.மம்தாவின் கண்கட்டி அசத்தும் நிகழ்வு நடைபெற்றது. கண்களை கட்டியபடி காண்பிக்கப்படும் பொருள்களின் நிறம், வடிவம் என சொல்லி அசத்தினார். தொடர் நிகழ்வாக கவிஞர் ஓசூர் மணிமேகலை தலைமையில் சிறுவர் கவியரங்கம், சொல்லரங்கம், பாட்டரங்கம் நடைபெற்றன.
விழாவில் உதவிப் பேராசிரியை ஞா.விஜயகுமாரி முன்னிலை வகித்து சிறுவர்களை வழிநடத்தினார். நார்வே நாட்டிலிருந்து வருகைதந்த பன்னாட்டு இணை ஒருங்கிணைப்பாளர் வனஜா உதயகுமாரன் வாழ்த்துரை வழங்கினார்.
அடுத்ததாக முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் தலைமையில் தன்முனைக் கவிதைகள் கவியரங்கம் நடைபெற்றது. பிரான்சு நாட்டிலிருந்து வருகைதந்த கவிஞர் சுமதி றஞ்சநாதன் முன்னிலைக் கவிதைகள் வழங்கி பேசினார். பொற்காலச் சூழலில் கலைந்த கூடுகளாய் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு உலக நாடுகளில் உறவுகளைப்பிரிந்து வாழும் சூழலை தமது கவிதையால் விளக்கினார். இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசிக்க நூலேணி பதிப்பக உரிமையாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா வாழ்த்துரை வழங்கினார்.
உணவு இடைவேளைக்குப்பின் ஹைக்கூ கவியரங்கம் கவிஞர் கவிநிலா மோகன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் இலங்கையிலிருந்து வருகைதந்த கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஹைக்கூ கவிதைகளை வாசிக்க கவிஞர் மு.முருகேஷ், கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இரண்டாம் நாளின் மகுடமாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலை மாணாக்கர்களுக்கு தன்முனைக் கவிதைகள் , ஹைக்கூ கவிதைகள் , தமிழ் இலக்கியம் , மரபுக் கவிதைகள் என தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டன . வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் செவாலியர் டாக்டர் வி . ஜி . சந்தோசம் பட்டங்களை வழங்கினார் . பல்கலையின் வேந்தர் தலைமையில் நடைபெற்றது .
முன்னதாக அனைவரையும் வரவேற்று கல்வித்தலைவர் ஜோ . சம்பத்குமார் அனைவரையும் வரவேற்றார். பதிவாளர் முதற்பாவலர் அவர்கள் பட்டமளிப்பு அறிவிப்பினை மேடையில் தெரிவித்தார் . தலைமை வகித்த வேந்தர் பேசுகையில் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலையின் வளர்ச்சி , கடந்துவந்த பாதை , இதன் சாதனைகள் குறித்து விரிவாகப் பேசினார் . ..மேலும் உண்மையாகத் தமிழுக்காக உழைத்த பேராளுமைகளை கண்டறிந்து எந்தவித பிரதிபலனும் நோக்காமல் மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கி வருவதாகவும் , முறைப்படி பல்கலை நிர்வாகிகளால் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் ஆளுமைகளை மதிப்புறு முனைவர் பட்டங்கள் அளித்து வருகிறோம் என்றார் . விழாவில் பட்டமளித்து டாக்டர் வி . ஜி . சந்தோசம் பேசுகையில் உலகெங்கிலும் இருந்து பட்டயப் படிப்பில் இணைந்து படித்தவர்களுக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்ந்து சிறந்த கல்விப்பணியாற்றி வருகிறது எனப் பேசினார் .
உலகெங்கிலும் தாம் திருவள்ளுவர் சிலைகள் நிறுவி பல்லாண்டுகளாக தமிழ்த் தொண்டாற்றி வருவதையும் குறிப்பிட்டார் . பட்டமளிப்பு விழாவில் கவிஞர்கள் இலங்கை சிவரூபி , ரதி கமலநாதன் , பிரான்சு சுமதி றஞ்சனாதான் , இலங்கை ரட்ணம் விஜயகுமாரி , இலங்கை டாக்டர் ரேணுகா பிரதீப்குமார் , இலங்கை எம் . பி . எஸ் . பாலா , புதுகை ஆதீரா ,பிரித்தானியா திருமகள் சிறீபத்மநாதன் , மலேசியா சரஸ்வதி நடராசன் , சென்னை வேலாயுதம் . ந ., நோர்வே வனஜா உதயகுமாரன், குணபாலசிங்கம் ஜெயகிருஷ்ணவி , சி . டெனிஷ் ராஜ் ஆகியோருக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டன . மேலும் தமிழுக்காக உழைத்த பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் 12 பேராளர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார் .
மக்கள் கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் சீனு செந்தாமரை ,பாவலர் வங்கனூர் மோகனன், மகாகவி இதழாசிரியர் கவிஞர் வதிலை பிரபா ,கவிஞர் இரா.வெங்கடகிருஷ்ணன், கவிஞர் கெங்காதேவி ஸ்டான்லி, லண்டன் கவிஞர் திருமகள் ஸ்ரீ பத்மநாதன், புலவர் கோவிந்தம்மாள் சோதி நடராசன் , புகைப்படக் கலைஞர் ’ஸ்டில்ஸ்’ ரவி , பாவையர் மலர் ஆசிரியர் கவிஞர் வான்மதி, கல்வியாளர் லி கவிஞர் அமுதா பொற்கொடி ,பதிப்புச் செம்மல் கவிஞர் தேவகி ராமலிங்கம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன . பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர்கள் . கா . ந . கல்யாணசுந்தரம் ,முதற்பாவலர், ஜோ . சம்பத்குமார், விஜய குமாரி , ரூபா ஆகியோர் கலந்துகொண்டனர் . இவர்களுடன் இயக்குனர் யார் . கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .
மாநாட்டின் இறுதியில் திரை நட்சத்திரம் முனைவர் ரேகா பல்கலை மாணவர்களின் மூன்று தொகுப்பு நூல்களை பல்கலை வேந்தர் தா தொகுப்பாசிரியர் முனைவர் கா வெளியிட்டார். உலாவரும் தன்முனைத் தேர், ஓ….இது வசந்தகாலம், கூடைக்குள் கொழுந்து என்கிற நூல்களில் பங்குபெற்ற கவிஞர்கள் அயலகக் கவிஞர்கள் உங்கள் ரேகா, இரதி கமலநாதன், திருமகள் சிறீபத்மநாதன், வனஜா உதயகுமாரன், சிவரூபி, ரட்ணம் விஜயகுமாரி, எம்பிஎஸ் பாலா, மலேசியா சரஸ்வதி , சுமதி றஞ்சநாதன், புதுகை ஆதீரா, ந.வேலாயுதம் உடன் இருந்தனர். விழாவில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி நடிகை ரேகா சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஆய்வறிஞர் பிரேமா கிருஸ்டி உள்பட பல தமிழ் ஆளுமைகள் கலந்துகொண்டனர்.
இரண்டு நாள் விழா நிகழ்வுகளை அற்புதமாக நேரலையில் ஒளிபரப்பினர். நிகழ்வுகளை தொழில்நுட்பத்துடன் தயாரிக்கும் திருமதி. மேரி நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.
விழா நிகழ்வுகளை முனைவர் ஞா.விஜயகுமாரி, முனைவர் பொ.வனிதா, முனைவர் ஜோ.சம்பத்குமார், கவிஞர் இலக்கியன், கவிஞர் ந.வேலாயுதம் ஆகியோர் தொகுத்தளித்தனர்.
விழாவின் இறுதியில் அனைவருக்கும் கவிஞர் ரமணி மாடசாமி அவர்களால் நன்றி கூறப் பட்டது . தமிழ் மழையால் அனைவரையும் நனைத்தது இம்மாநாடு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/tamilconference-2025-12-13-13-11-22.jpg)