பொதுவெளியில் ஒருவரை வசீகரமாக காட்டுவது அவர்களது முக அமைப்பு. ஒருவரது முக அமைப்பு சிறப்பாக இருப்பதற்கு பற்கள் மிகவும் அவசியமாகும். பற்கள் சிறப்பாக இருந்தால் அவர்களது முக அமைப்பு சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் பேச்சு மூலமாகவும் சில காரியங்களை சாதித்துக்கொள்ள வசதியாக இருக்கும். பற்கள் பலமாக இருப்பதற்குகூட ஒருவரின் ஜாதகத்தில் சில அமைப்புகள் சிறப்பாக இருப்பது அவசியம்.
ஒருவரது ஜாதகரீதியாக ராசிக் கட்டத்தில் குறிப்பாக ஜென்ம லக்னம் மற்றும் காலபுருஷப்படி முதல் ராசி யான மேஷ ராசி மேல் தாடை பற்களையும், ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடு மற்றும் கால புருஷப்படி 2-வது ராசியான ரிஷப ராசி கீழ் தாடை பற்களையும், 4-ஆம் வீடு மறைமுகமாக பற்களை பற்றி அறிவதற்கு உதவுகின்ற பாவமாக இருக்கிறது.
நவகிரகங்களில் சனிபகவான் உடலிலுள்ள எல்லா எலும்புகளுக்கும் காரகனாக விளங்குவது மட்டுமில்லாமல் ஒருவருடைய பற்களுக்கு காரகனாக விளங்குகிறார். எந்த ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களது பல் அமைப்பானது சிறப்பாக இருக்கிறது. சனி ஒரு ஜாதகத்தில் பலவீனமாக இருந்தாலும் அல்லது வக்ரகதியில் இருந்தாலும் அவர்களுக்கு பற்கள் சார்ந்த பகுதிகளில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகிறது.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னம், 2-ஆம் வீடு, 4-ஆம் வீடு, சனி ஆகியவை பலமாக இருப்பது மிகவும் அவசியம். அப்படி இருந்துவிட்டால் அவர்களது பற்களின் அமைப்பு சிறப்பாக இருக்கும். 1, 2, 4-ல் சனி பலவீனமாக இருந்து பாவ கிரக தொடர்போடு இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பற்களில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல் எனாமல் பாதிப்பு, வரைமுறையற்ற பற்கள் அமையும் சூழ்நிலை அதன்காரணமாக முக அழகு பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகிறது. மேற்கூறிய வீடுகளில் சனி பலவீனமாக இருந்து அதன் தசை புக்தி நடைபெறுகின்றபொழுது பற்களில் பாதிப்பு உண்டாகிறது. அதுபோல குருபகவானும் பலமாக இருப்பது மிகவும் அவசியம்.
சனி ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் போன்ற பாவ கிரக தொடர்போடு இருந்து பலவீனமாக இருந்தால் பற்களில் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சைகள் எடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜல ராசி என வர்ணிக்கக்கூடிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் அமையப்பெற்று கேது தொடர்போடு இருந்து சனிக்கு பாவ கிரக தொடர்பு இருந்தால் பற்கள் பாதிக்கக்கூடிய அமைப்பு, பற்கள் கரு நிறமாக இருக்க கூடிய அமைப்புகள் ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 1, 2-ஆகிய ஸ்தானங்களில் சனி பலவீனமாக இருந்து அதனை செவ்வாய் பார்க்கின்றபொழுது ஒருவர் மற்றவரிடம் சண்டை போடும்பொழுது ஒருசிலருக்கு பற்களை இழக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகிறது. பொதுவாக 1, 2, 4 ஆகிய பாவங்களும் சனியும் பலவீனமாக இருப்பவர்களுக்கு அதன் தசை புக்தி காலத்தில் அவர்களுடைய பற்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையும் அதற்காக சிகிச்சைகள் மேற்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பும் உண்டாகும். குரு போன்ற சுப கிரக பார்வை இருந்தால் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுவே பாவ கிரகத் தொடர்பு அதிகப்படியாக இருந்தால் பாதிப்புகள் சற்று அதிகப்படியாக இருக்கும். சனி பலவீனமாக இருப்ப வர்கள் முடிந்தவரை அவர்களுடைய பற்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது நல்லது.
செல்: 7200163001