"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு'
-வள்ளுவம்
யார் பொய் உரைப்பது? யார் அவதூறு பரப்புவது?
அட்லாண்டாவிலொரு தமிழ்ச் சங்கம், பொங்கல் நிகழ்ச்சிக்காக இந்தத் திங்கள் மூன்றாம் நாள் பட்டி மன்றம் நடத்தியிருக்கின்றனர். திரு ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இக்காலத்துப் பட்டிமன்ற தலைப்புகளுமே இல்லறத்தில் ஆண் சிறந்தவரா/பெண் சிறந்தவரா, மாமியார் பெரியவரா/ மருமகள் பெரியவரா, இப்படித்தானே. மனைவியைக் கணவனும், கணவனை மனைவியும் பொது தளத்தில் இழிந்து பேசுவதை நகைச்சுவைக்காக என்பார்கள். இதில் "குடும்ப மகிழ்ச்சி' என்று நகைச்சுவைக்கு எல்லோரும் கூடிச் சிரிப்பார்கள்.
தமிழ் வளர்க்கிறோம் என்று தமிழ்ச் சங்கம் வைப்பவர்கள் தமிழ் அறிஞர்களை அழைத்து வந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், தமிழ் மொழி தொன்மை/இளமை, சிற்றிலக்கியங்கள், வரலாறு, தொல்லியல் இன்னும் எத்தனையோ ஆழி போல இருக்கும் தமிழ் இலக்கியங்களிலிருந்து, வரலாற்றிலிருந்து தலைப்புகளை எடுத்துக் கொடுக்கலாம்தானே?
அதே போல சமூகத்தில் நடக்கும் சாதி வெறி, மத வெறி, ஆணவக் கொலைகள், மணல் திருட்டு, ஊழல், மலை உடைத்தல், இயற்கையை அழித்தல், வானிலை மாற்றம், பெண் வன்கொடுமை, தமிழ் வழியில் கல்வி
இது போன்றவற்றைப் பேச தலைப்புகள் கொடுக்கலாம்.
கொடுப்பார்களா? கொடுக்கவே மாட்டார்கள் தமிழைக் கற்றால் தமிழரிடம் சாதி, மதம் இருந்த தில்லை என்ற வரலாறு புரிந்துவிடாதா? அப்படியே கொடுத்தாலும் டிக்கட் விற்குமா?
எப்பேறு பெற்ற பெரும் புலவர்கள் வளர்த்த மொழி நம் மொழி. இன்று இப்படிச் சிலர் செல்வம் குவிப்பதற்காக அல்லற்படுகிறது என்று நினைத்தால் மனம் வலியுறுகிறது.
தமிழ்மொழி சார்ந்த தலைப்புகள் ஏன் கொடுக்க மாட்டார்கள்?
ஏனென்றால் தமிழ்ச் சங்கத்தை நடத்துபவர்களில் பெரும்பான்மையோருக்குத் தமிழ்க் கல்வியே இல்லை. வெகு சிலருக்கே தமிழ்க் கல்வி உண்டு.
அந்தச் சிலரையும் ஓரங் கட்டிவிடுவார்கள். ῾பழ்ர்ன்க்ஷப்ங் ம்ஹந்ங்ழ்ள்᾽ என்ற முத்திரையுடன்.
தமிழ் மக்கள் இருக்கிறார்களே, நம் மக்கள் அவர்கள் எங்குப் போனாலும் பிரபலங்களைத் தூக்கிப் பிடித்து அவர்கள் பின்னால் திரிவதை நிறுத்துவதில்லை. நம் மக்களுக்குப் பிரபலங்கள் மேலிருக்கும் அலாதி ஈர்ப்பைத்தான் அமெரிக்கத் தமிழ்ச் சங்க நிறுவனங் கள் தம் மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
ஒரு முறை இசைஞானிக்கு இட்லி கொடுக்க "நான் தான் கொடுப்பேன், நீ கொடுக்கக் கூடாது' என அடிதடி வரைக்கும் போனார்களாம் சிலர்.
பிரபலங்களுடன் கைகுலுக்கி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால், தாமும் பிரபலம் என்றாகிவிடும் என்ற ஓர் எண்ணம் நம் மக்களுக்கு. அமெரிக்காவில், என்ன படித்து எங்கு வாழ்ந்தாலும் இந்தச் சிறுமை நம்மைவிட்டுப் போகிறதா? அமெரிக்காவிலுமே ஒரு நடிகன் படம் வந்தால் அவன் கட் அவுட்டுக்குப் பாலூற்றும் அவலம் நிலவுகிறது.
இப்போது அட்லாண்டா தமிழ்ச் சங்க நிகழ்வுக்கு வருவோம்.
தோழர் கார்த்திகேயன் FASTURA-ன் பதிவையும், அவர் நேர்காணலையும் நுட்பமாக படித்தேன், பார்த்தேன். அதேபோல பட்டிமன்ற திரு. ராஜா அவர்களின் காணொளியும் கூர்ந்து கவனித்தேன். இதுகுறித்தான பல தரப்பட்ட பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பார்வையிட்டேன். சிலருடனும் பேசினேன்.
நான் அறுதியிட்டுக் கூறுகிறேன் அந்தச் சகோதரி அவதூறு பரப்பவில்லை, பொய் உரைக்கவில்லை. ஏனென்றால் எனக்கு இங்கு தமிழ்ச் சங்கம் நடத்துபவர்களின் செய்ற்பாடுகள் நன்கு தெரியும்.
தாம் செய்யும் செயல்கள் எதைச் சுட்டினாலும் "அவதூறு பரப்புகிறார்கள்' என அரசியல்வாதிகள்போல, பரப்புரை செய்வதில் இவர்கள் வல்லவர்கள். இல்லையேல் சுட்டுபவர்களைப் பலரை வைத்து இணைய தளத்தில் தாக்குவார்கள். அதே நேரம் சம்பந்தப்பட்டவரிடம் சமாதானம் பேச முனைவார்கள். முடியாது எனத் தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என மிரட்டவும் சிலரை நியமிப்பார்கள். வெவ்வேறு வழிகளிலில் அழுத்தம் கொடுப்பார்கள்.
பாலியல் வன்கொடுமைகளில் 'Victim blaming' எனக் கூறுகிறோமே- அது இங்கும் பொருந்தும். இது தமிழ்ச் சங்கங்களால் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. இன்னும் பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது வெவ்வேறு காரணங்களுக் காக. இதுதான் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பின் பற்றும் வாய்ப்பாடு.
திரு. ராஜா பட்டிமன்றங்களில் எப்படி பேசுவார் என எல்லோருக்கும் தெரியும்தானே. அப்படியானவர் தன் மீது வீண் பழியை ஒருவர் சுமத்தியிருந்தால் இப்படி அழுமூஞ்சியைக் காட்டி பரிதாபமா தேடுவார்?
சிங்கம்போல நிமிர்ந்து அப்பழியை எதிர்கொள்ளமாட்டாரா? அப்படியா அவர் செய்தார்? காணொளியில் பரிதாபமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு, கெஞ்சும் குரலில் சொல் விளையாட்டு விளையாடுகிறார். "செய்வேனா? கேட்பேனா?' என்று. இது ஒரு ῾ல்ள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ஜ்ர்ழ்க் ல்ப்ஹஹ்᾽அந்தச் சகோதரிக்குச் செவியிலோ, புரிதலிலோ குறைபாடு இல்லையே. இவர், தான் மாட்டிக்கொண்டவுடன் சொல் விளையாட்டு, அழுமூஞ்சி, முட்டுக்கொடுக்க ஒரு படை ஏற்படுத்திக் கொண்டார். இது தான் நிகழ்கிறது.
ஒரு பிரபலம் விளக்கிவிட்டால் அது தான் உண்மையென நம்புவது வெள்ளைத்தோல் கொண்டவர் பொய் சொல்லமாட்டார் என்பதாகாதா?
பல ஆண்டுகள் அவர் பட்டிமன்றம் பேசியதாலேயே சாதி பற்றி அவர் கேட்டிருக்க மாட்டார் என்கிறீர்கள்? என்ன வாதம் இது?
இவ்வளவு நாட்கள் திரு. ராஜா பற்றி இப்படி செய்தி வந்ததே இல்லையே - அதனால் அவர் குற்றமற்றவர் என்கிறீர்கள்? என்ன வாதம் இது?
திரு ராஜா, அவர் காணொளியில் எனக்கு இரண்டு இடங்கள் உதைக்கின்றன.
1. "செட்டிநாட்டுச் சமையலா ருசி' எனக் கேட்டதாகக் கூறியது. அதை வியந்தது. ஏன் செட்டிநாட்டுச் சமையல் ருசியிருக்காதா? இதில் என்ன வியக்க இருக்கிறது?
அந்த இடத்தை எல்லோரும் மீண்டும் போய் பாருங்கள்.
2. சம்பவம் நடந்த நாளுக்கும் அது குறித்த பதிவு வந்த நாளுக்கும் "நீண்ட கால இடைவெளி' என்பது.
ஏதோ திட்டமிட்டு இவரைச் சிக்க வைக்க செய்ததுபோல ஒரு பிரம்மையை உண்டாக்குவது.
சம்பந்தப்பட்ட சகோதரிக்கு மன உளைச்சல் இல்லா மல் இருந்திருந்தால் அவர் ஏன் தன் தாயிடம் கூறப் போகிறார்? இப்படிக் காயப்பட்ட எத்தனையோ பேர் வெளியில் சொல்லாமலே தமக்குள்ளேயே வலியுற்றிருப்பது நமக்குத் தெரியாதா என்ன?
இப்போது முகநூல் முழுவதும், "அப்படி திரு ராஜா கேட்கவே இல்லை' எனக் கூறவும், பிரபலத்திற்கு முட்டுக்கொடுக்கவும் ஆட்கள் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.
எப்போதும் போல "ஏழையின் சொல் அம்பலம் ஏறாது' இதுதான் இங்கு அரங்கேறுகிறது.
தமிழைப் படிப்பவர்கள், தமிழ்ப் பணியை உண்மையாக செய்ய முனைவோர், "அதிகாரம், செல்வம் இருப்பவர் வேறு, சாமானியர் வேறு' என நடப்பாரா? தமிழை வளர்க்கிறோம் என்கின்ற போர்வையில் தம்மை வளர்த்துக் கொள்பவர்களுக்குத்தான் பிரபலங்கள் வால் பிடிக்கும் தேவை இருக்கிறது.
அமெரிக்க வாழ் தமிழ் மக்களே! நீங்கள் உறுப்பினராக இருக்கும் தமிழ்ச் சங்கம் தமிழுக்கு என்ன செய்கிறது, தமிழ் மரபைக் காக்க என்ன செய்கிறது, தமிழ் மக்களுக்கு என்ன செய்கிறது, எனக் கவனித்து அதன் பின் பங்கு பெறுவது நல்லது தானே?
உங்கள் பணத்தில் யாரை இங்கு அழைத்து வருகிறார்கள்? அவர்கள்தமிழ் மொழிக்கு என்ன செய்திருக்கிறார்கள். தமிழ் மண்ணுக்கு என்னசெய்திருக்கிறார்கள்? தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் பிரபலங்களையும், திரைப்பட நடிகரையும், சின்னத்திரை பிரபலங்களையும், தமிழே பேசத் தெரியாத வெள்ளைக்காரர்களைத் தமிழ் அறிஞர் என்றும் அழைத்து வர தமிழ்ச் சங்கங் கள் எதற்கு? பொழுது போக்கு நிறுவனங்கள் போதாதா?
தமிழ்ப் பேராசிரியர்களை, ஆராய்ச்சி அறிஞர்களை, தமிழ் ஆசிரியர்களை, உண்மையாக தமிழில் புலமை பெற்றிருக்கும் கவிஞர்களை அழைத்து வந்தால் என்ன? எத்தனை அறிஞர்களைக் கொண்டது நம் நாடு? இங்கு அமெரிக்காவிலேயே எத்தனை அறிஞர்கள், கலைஞர்கள் இருக்கிறார்கள்! அவர்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுப்ப தில்லை?
தமிழர் நாம் திருந்த வேண்டும். எடுப்பார் கைப் பிள்ளை ஆகாமல் வாழ வேண்டும். தன்மானத்தை அடகு வைக்கக் கூடாது. அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்.
விருந்தோம்பல் நம் பண்பு என்றாலும் இனி தமிழ் நாட்டுப் பிரபலங்களுக்குச் சோறு உணவகத்தில் வாங்கிக் கொடுங்கள். இங்கு நம் சிறு தொழில்களும் கொஞ்சம் பயனடையட்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/caste-2026-03-07-16-12-12.jpg)