சுமார் 35 வயதுடைய இளைஞர் ஒருவர், நாடியில் பலன் கேட்கவந்தார். அவரை அமர வைத்து "என்ன விஷயமாகப் பலனறிய வேண்டும்' என்றேன்.
ஐயா, "நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன், பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன். வேலை கிடைத்தாலும், எந்த வேலையிலும் நிலையாக இருக்க முடியவில்லை. கொஞ்ச நாட்களிலேயே, அந்த வேலையை விட்டு விலகிவிடுகின்றேன். இதுநாள்வரை நிலையான வேலையோ, தொழிலோ அமையவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு ஜோதிடரிடம் சென்று, எனது ஜாதகத்தைக் கொடுத்து பலன் கேட்டேன். அவர்
உனக்கு எந்த தொழிலும் சரியாக அமையாது. ஜோதிடம் கற்றுக்கொண்டு, பிறருக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல். ஜோதிட தொழில், இந்த பிறவியில் உனக்கு வருமானம் தரும் என்றார். அவர் கூறியதைக் கேட்டு நானும் ஜோதிடம் கற்றுத்தரும் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து ஜோதிடம் படித்து, சான்றிதழ் வாங்கி, கடந்த மூன்று வருடங்களாக பிறருக்கு ஜோதிட பலன் கூறிவருகின்றேன்.
ஜோதிட தொழிலிலும் எனக்கு சரியான வருமானம் இல்லை. தினமும் என்னிடம் ஜோதிடம் பார்க்க யாரும் வருவது இல்லை. மாதத்தில் இரண்டு அல்லது மூன்று பேர்தான் வருகின்றார்கள். சரியான தொழிலும், வருமானமும் இல்லாததால் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை. சரியான தொழிலும், பிழைப்பும் இல்லை. ஒரு குடும்பமும் அமையவில்லை. இந்த பிறவியில் என் தலைவிதிதான் என்ன? பிழைக்க வழி என்ன? திருமணம் உண்டா? மனைவி எப்படி அமைவாள்? இதுபோன்ற கேள்விகள் என் மனதில் தோன்றி பயம் தந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு விடையறிந்து கொள்ளவே அகத்தியரை நாடிவந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன், அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் தன்னை ஒரு ஜோதிடன் என்கிறான். ஜோதிடம் படித்து பட்டம் வாங்கியுள்ளேன் என்கிறான். அதைக்கொண்டு, பிறர் ஜாதகம் பார்த்து பலன் கூறும் இவன், இந்த பிறவியில் தன் விதிப்பலன் , தலையெழுத்து, எப்படி அமைந்துள்ளது என்று இவன் படித்த ஜோதிடத்தின்மூலம் தன்னைப்பற்றி அறிந்துகொள்ள முடியாமல் என்னைத்தேடி வந்துள்ளான்.
ஒரு ஜோதிடன் முதலில் தன் ஜாதகத்தை பரிசீலித்து இப்பிறவியில் தன் வாழ்வின் விதியையும், தலையெழுத்தையும், முற்பிறவியில் பாவ- சாப- புண்ணிய கர்ம வினையையும் தெளிவாக அறிந்து நடைமுறை வாழ்வில் வாழ்ந்து, தன் வாழ்க்கையை மேன்மையானதாக அமைத்துக் கொள்ளவேண்டும். தன் விதி தெரியாதவன், தன் வாழ்வின் கஷ்டம், தடைகளை நீக்கத் தெரியாதவன், ஜோதிடன் என்று கூறிக் கொண்டு பிறருக்கு விதி பலன் கூறக்கூடாது. "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது'' என்பது ஒரு பழமையான வாக்கியம்.
இதுபோல் இவன் படித்த ஜோதிட பாடம் ஏட்டு சுரைக்காய்தான். இந்த பட்டயப் படிப்பினால் இவன் ஜோதிடன் அல்ல.
"ஆயிரம் பேர் நோயைக் கொன்றவன் அரை வைத்தியன்'' என்பது மூத்தோர் மொழி. ஆயிரம் மனிதர்களுக்கு நோய் சிகிச்சை செய்து அவர்களை காப்பாற்றியவன்கூட அரை வைத்தியன் என்ற தகுதியைத்தான் பெறுவான். அதேபோன்று, ஒரு ஜோதிடன் முதலில் தன் விதியறிந்து அதன்பிறகு நிறைய பேரின் ஜாதகம் பார்த்து ஆய்வுசெய்து கிரக நிலைகளை, செயல்களை சரியாக அனுபவத்தால் அறிந்து பலன் சொல்பவன்தான் நல்ல ஜோதிடனின், தகுதியாகும் என்பதை இவன் புரிந்து கொள்ள வேண்டும். பாவ- சாபம், தீர்வதற்கு வாழ்வில் பிரச்னைகள் தீர பரிகாரம் சொல்பவன் ஜோதிடன் அல்ல; சரியான வழியைக் காட்டுபவனே நல்ல ஜோதிடம், ஜோதிடன்.
ஜோதிடம் ஒரு தொழில் அல்ல, அது ஒவ்வொரு மனிதனின் முன் பிறவி ஊழ் வினையை அறிந்து, இப்பிறவி விதியை அறியச் செய்யும் சூட்சுமமான ரகசியத்தைக் கூறுவது. கர்ம வினையை சரியாக அறிந்து பலன் கூறுபவனே உண்மையான ஜோதிடன்.
கிரகங்களின் கதையைக் கூறுபவன், பரிகாரங் கள் கூறுபவன் ஜோதிடன் அல்ல.
ஒரு மனிதன் வாழ்வில் இருள் நீக்கி ஒளி இருக்கும் இடத்தைக் காட்டுவதுதான் ஜோதிடம். (ஜோதி+இடம்). அதேபோன்று வாக்கு பலிதமும் இருக்கவேண்டும். வாக்கு பலித சக்தி பிறப்பிலேயே அமைந்து இருக்க வேண்டும். பூஜை, யாகம், மந்திர ஜெபத்தால் வாக்கு பலிதம் வராது. ஜோதிடம் மனிதன் எழுதி வைத்த சாஸ்திரம், கோவில் பரிகாரம் அல்ல. மனிதன் வாழ்க்கையை, விதியைக் கூறும் சரித்திரம் என்பதை இவன் புரிந்துகொள்ளட்டும். சரியான தொழிலைக் கூறுகின்றேன். அந்த தொழிலை நான் கூறுவது போல் தொடங்கிச் செய்யட்டும்.
இந்த பிறவியில் இவனுக்கு ஜோதிடம் தொழில் அல்ல. இவன் ஜோதிடம் பார்த்து பலன் கூறி பணம் சம்பாதித்து வாழ முடியாது.
இவன் விதிப்படி, பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கை அமைய மனிதர்கள், விலங்குகள் இவற்றுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும், அதனுடன் கடவுள் வழிபாடு, பூஜை, யாக ஹோம் பொருட்களை வியாபாரம் செய்யச் சொல். இந்தப் பொருட்கள் வியாபாரம் இவனுக்கு நல்ல வருமானம் தரும்.
இவன் விதிப்படி அமைந்த தொழிலை எப்படி செய்யவேண்டும் என்பதையும் கூறுகின்றேன். இவன் தொழில் தொடங்கும் போது, பெரும் பணம் முதலீடு செய்து பெரிய அளவில் தொழிலை ஆரம்பிக்கக்கூடாது.
அதேபோல் பிறரிடம் கடன் வாங்கி வியாபாரம் ஆரம்பிக்கக்கூடாது. கடன் வாங்கி பெரிய அளவில் தொழிலைத் தொடங்கினால், வெகுவிரைவில் நஷ்டம் ஏற்பட்டு, தொழில் முடங்கிவிடும், கடை மூடப்படும். அதேபோல், நண்பர்கள், உறவினர்கள் என மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டாக தொழில் செய்தால், கூட்டாளிகள் வியாபாரத்தில் நஷ்ட கணக்கு காட்டி ஏமாற்றி விடுவார்கள். முதலீடு செய்ய கடன் வாங்கிப்போட்ட பணத்தையும் இழந்து, வியாபாரத்தையும் இழந்துவிடுவான்; கடன் தான் மிஞ்சும்.
இவன் கையிலுள்ள சொந்தப் பணத்தில் ஆரம்பத்தில் ஒரு சிறிய இடத்தில் சிறிய அளவில் சின்னதாக கடையை ஆரம்பிக்க வேண்டும். இதுபோன்று சிறியதாக ஆரம்பித்து செய்தால், அந்த வியாபாரம் படிப்படியாக பெரிய அளவில் வளர்ந்து விடும். ஆயுள்வரை நல்ல பலனையும், செல்வாக்கையும் தரும். சிறுக கட்டி பெருக வாழவேண்டும் என்பதுதான் இவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொழில்விதி புரிந்து, விதியறிந்து வாழ வேண்டும். இவன் திருமணம் மனைவி, குடும்பம் பற்றிக் கேட்டான். இவன் முதலில் சிறிய கடையை ஆரம்பித்து செய்தால், இரண்டு வருடங்களில் நல்ல நிலையை அடைந்துவிடுவான். இவனுக்கு உறவிலேயே பெண் கொடுக்க வருவார்கள் என்றவர் பெண்ணைப் பற்றிய விவரங்களைக் கூறி அவளையே, திருமணம் செய்துகொள்ளட்டும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
இதுநாள்வரை, பல தொழில்களை செய்து பல சிரமங்களை அடைந்தேன். ஒன்றும் புரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருளில் வாழ்ந்துகொண்டு இருந்தேன். எனக்கு அகத்தியர், ஜீவ நாடிமூலம் நல்ல வழி காட்டினார். அவர் கூறிய தொழிலை அவர் கூறியபடியே செய்கின்றேன் என்று கூறிவிட்டு என்னிடம் விடை பெற்றுச் சென்றார்.
மனிதர்கள் வாழ்வில், முன் பிறவி பாவ- சாபம் வலியைத் தரும். ஆனால் ஜோதிடம் அந்த வலியைப் போக்க வழிகாட்டும். ஒரு மனிதன் வாழ்வில் இருள் நீக்கி ஒளி இருக்கும் இடத்தைக் காட்டுவது ஜோதிடம். வலி நீங்க சரியான வழியைக் கூறுபவர் தான் நல்ல ஜோதிடன் என்பதை நானும் அறிந்து கொண்டேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/20/agathiyar-2026-02-20-16-30-37.jpg)