"மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை'
-என்கிறார் வள்ளுவர்.
தன் நாட்டிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் கருணைகொண்டு, அவற்றைக் காப்பதைக் கடமையாகக் கொண்டவர்கள், தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படும் நிலை வராது என்பதே இதன் பொருளாகும்.
இதை, நாடாள்வோர் சிலர் எண்ணிப் பார்க்கத் தவறியதால்தான், மேற்கு ஆசியாவை போர்மேகம் சூழ்ந்து பதட்டத்தை உருவாக்கிவருகிறது. இஸ்ரேல் -ஹமாஸ் போராலும், இஸ்ரேல்-ஈரான் போராலும், லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளும், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடுமோ என்கிற அச்சம் உலகம் முழுக்க வியாபிக்க ஆரம்பித்திருக்கிறது.
=
இவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருப்பது அமெரிக்காவின் ஆதிக்கவெறி.
வல்லாண்மை வெறிகொண்ட அமெரிக்கா, உலக நாடுகளின் பிரச்சினைகளுக்குள் "பெரியண்ணன் மனோபாவத்தோடு; மூக்கு நுழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. போதாக்குறைக்கு தனது ஆயுத வியாபாரத்திற்காகவே நாடுகளுக்கிடையில் சண்டை மூளவேண்டும் என்று பலவகையிலும் முயன்றுவருகிறது. அதற்கு ஒரு சிஷ்யனாகக் கிடைத்த நாடுதான் இஸ்ரேல்.
பாலஸ்தீனப் பகுதியிலுள்ள காஸாவை ஆக்கிரமிக்கும் வெறியோடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா ஆதரவுக்கரம் கொடுத்துவருகிறது. அதன் அதி நவீன இராணுவக் கட்டமைப்புக்கும் அமெரிக்கா பெரிதும் உதவியிருக்கிறது.
இந்த நிலையில் 2023 அக்டோபரிலேயே ஆரம்பித்த இஸ்ரேல்-ஹமாஸ் போர், மேற்கு ஆசியாவின் நிம்மதியைக் குலைக்கத் தொடங்கியது.
உலகின் சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக இஸ்ரேலின் "மொசாட்' கருதப்படுகிறது. இதையே ஏமாற்றிவிட்டு, இஸ்ரேல் மீது காஸாவிலிருந்தே திடீர் தாக்குதலை நடத்தியது ஹமாஸ். அப்போது 5 நிமிடங்களுக்குள் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேலை அதிரச்செய்தது.
இதைத்தொடர்ந்து இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்த ஹம

இதைத்தொடர்ந்து இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்த ஹமாஸ் படையினர், கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தினர்.
ஏற்கனவே சின்னச் சின்னதாக இஸ்ரேல் மீது பல்வேறு தாக்குதலை ஹமாஸ் நடத்தியிருந்தாலும், அந்த அக்டோபர் 7-ல் நடத்தப்பட்ட தாக்குதல் மிகக் கொடூரமானது. குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து அப்பாவிப் பொதுமக்கள் பலரைக் கொன்றுகுவித்தனர். வீடுவீடாக நுழைந்து குழந்தைகளின் எதிரிலேயே பெற்றோர்களைக் கொன்றுவீசினர். சில இடங்களில் வயதானவர்களையும் குழந்தை களையும்கூட விட்டுவைக்காமல் கொலை பாதகத் தாக்குதலை நடத்தினர். மேலும் பிணைக்கைதிகளாக 150 இஸ்ரேலியரை சிறைப் பிடித்துச் சென்றனர்.
இந்தப் போரில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அப்போதே செய்திகள் தெறித்துவந்தன.
ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலியப் படைகள், களத்தில் இறங்கியபோது காஸாவில் வாழ்ந்து வந்த 46,899 அப்பாவி பாலஸ்தீன மக்கள் வான் வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். குடியிருப்புகள் நொறுக்கப்பட்டன. காஸா பெரிதும் சேதப்படுத்தப்பட்டது லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். காஸாவில் பசியும் பட்டினியும் தீவிரமானது. அதனால் அங்கே வெறிபிடித்து அலைந்த மரண ஓநாய், அப்பாவி மக்களின் உயிர்களைத் தின்ன ஆரம்பித்தது.
இந்த நிலையில் அமெரிக்கா-இஸ்ரேல்லிஹமாஸைச் சேர்ந்த பிரதிநிதிகள் கத்தார் நாட்டில் சந்தித்துப் பேசினர்.இதைத் தொடர்ந்து போர் நிறுத்த உடன்பாடு 2025, ஜனவரி 19-ல் அரங்கேறியது.இதைத் தொடர்ந்து சற்று அமைதி ஏற்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் ஆயுதங்களை இப்போது இருதரப்பும் கையில் எடுத்துவருகின்றன.
=
இந்த நிலையில்தான் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் மூண்டது.
அணு ஆயுதங்களை தயாரிக்கப் போவதாக ஈரான் அறிவித்த போதே, அதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்தன.
காஸாவிற்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருவதாக நம்புகிற இஸ்ரேல், ஈரான் தயாரிக்கும் அணு ஆயுதங்கள், தங்களின் எதிரிகளான ஹமாஸ் தரப்பின் கைகளுக்குச் சென்றுவிடும் என்று அஞ்சியது.
அமெரிக்காவும், ஈரானை நம்பமுடியாது என்று கூறி, அந்த நாடு அணு ஆயுதங்களை தயாரிக்கத் தடை விதித்தது. ஈரானுக்கு பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் ஈரானுக்கு, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவாக நின்றுகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான், ஈரான் உருவாக்கும் அணு ஆயுதங்களால் எங்களுக்கு ஆபத்து என்று குரல் கொடுத்த இஸ்ரேல். "இதைத் தடுக்க நீங்களும் உதவவேண்டும்' என்று அமரிக்காவின் கைகளைப் பிடித்துக்கொண்டது.
அமெரிக்காவின் சப்போர்ட் இருக்கும் தைரியத்தில் ஈரான்மீது கடந்த ஜூன் 13-ல் தனது தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல். ஈரானின் அணுசக்தித் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்.
இதைப்பார்த்து டென்சனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "மத்திய கிழக்கு நாடுகளின் கொடுமைக்காரன் ஈரான்' என்றார். சமாதானத்துக்கு வா இல்லை என்றால் விபரீதம் ஏற்படும் என்றும் அவர் ஈரானை மிரட்டினார்.
மிரட்டியதோடு நிற்காமல் தன்னுடைய பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை அமெரிக்கா அதிரடியாகத் தாக்கியது. ஈரானின் முக்கியமான அணு உலைத்தளமான போர்டோ அணுசக்தி தளம் பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்காவால் தகர்க்கப்பட்டது. இந்த வகை குண்டுகள் பூமிக்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் எது இருந்தாலும் அதனை உருத்தெரியாமல் ஆக்கிவிடும் என்கிறார்கள். எனினும். அதையும் ஏமாற்றி, தனது அணு ஆயுதங்களை இடம்மாற்றி வைத்து, ஈரான் பாதுகாத்துக்கொண்டதாக அறிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தது. அதன்படி கத்தாரிலுள்ள அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது ஈராக் அதிரடித் தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா வின் வான்பாதுகாப்பு அமைப்பு வானிலையே ஏவுகணை தாக்கி அழித்ததாகக் கூறப்படுகிறது. அதனை ட்ரம்பே உறுதி செய்தார்.
எனினும் இந்த தாக்குதல்களில் அமெரிக்கத் தரப்புக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் ஈரானின் அட்டாக்கில் அவர் மிரண்டு போய்விட்டார். "இரு நாடுகளும் சமாதானமாகப் போக வேண்டும். போர் நிறுத்தம் தேவை' என்று அவர் சமாதானக் கொடியை உயர்த்தினார்.
இருநாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக ட்ரம்பே அறிவித்தார். இந்த நிலையில் 12 நாளாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நடந்துவந்த போர் கடந்த 24 ஆம் தேதி முடிவுக்கும் வந்தது.
=
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவோ, காஸா மீது மீண்டும் தாக்குதலை நடத்திவருவதோடு, அங்கு செல்லும் உணவுப்பொருட் களையும் தடுத்து, காஸாவில் பட்டினிச் சாவுகளையும் ஏற்படுத்தி வருகிறார். அங்குள்ள மக்கள் குப்பையில்கூட உணவு ஏதேனும் கிடைக்குமா என்று தேடித் திரிகிற கொடூர காட்சிகளும் அரங்கேறி வருகின்றன. மருத்துவமனைகளின் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசித் தாக்குவதால் அங்கு காயம்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகூட கிட்டாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் காயம், கண்ணீர், பசி, அழுகை, மரணம் என காஸா துயரத்தின் தொட்டிலாக மாறியிருக்கிறது.
இஸ்ரேலின் இப்படிப்பட்ட கொடூர நடவடிக்கைகளைக் கண்டித்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டே, அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்டைப் பிறப்பித்தது. ஆனால் அதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீர்த்துப்போகச்செய்தார்.
இப்போது போர்மேகங்கள் சூழ்ந்திருப்பதால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஜூன் 16-ல் நடக்க இருந்த தன் மகன் திருமணத்தை தள்ளிவைத்துவிட்டு, தனது கைகளைத் தொடர்ந்து ரத்தத்தில் நனைத்துவருகிறார்.
2023 அக்டோபர் முதல் 2025 ஜூன் 13 வரையிலான 615 நாள்களில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 56,000-க்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 17,000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது பதறவைக்கும் புள்ளிவிபரம்.
காஸாவைத் தவிர, இந்தக் காலகட்டத்தில் ஏமன், லெபனான், ஈரான் மற்றும் சிரியா ஆகியவற்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐ.நா. சபையும் கண்டித்தபோதும் அவர், அமெரிக்காவின் ஆதரவால் தொடர்ந்து தப்பிக்க வைக்கப்படுகிறார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் மட்டும் 42,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும், பாலஸ்தீனத்தில் மட்டும் கிட்டத்தட்ட 25,000 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் போர் விபரங்கள் பகீரூட்டுகின்றன.
இஸ்ரேலுடன் அண்மையில் நடைபெற்ற போருக்குப் பிறகு, ஈரான் நாடு, எதிராளிகளுக்கு உளவு சொல்லியிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் 10-க்கும் மேற்பட்டோரைத் தூக்கிலிட்டுக் கொன்றிருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்களைக் கைதும் செய்திருக்கிறது.
இஸ்ரேல் -ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலிலும், இஸ்ரேலில் போர் விமானங்கள் மூலம் ஆயுதக் குவிப்பை செய்துவருகிறது. அதோடு, காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தன் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்துவருகிறது.
=
மொத்தத்தில், ஆதிக்கவெறி கொண்ட அமெரிக்காவின் தூண்டுதலால் ஏற்பட்ட இந்தப் போரில், எந்த நாடும் தனிப்பட்ட வெற்றியைப் பெறவில்லை. ஆனால் எல்லோரும் மனிதாபிமானத்தைக் காலில் போட்டு நசுக்கியிருக்கிறார்கள். வெறிக்கூத்தாடி ஆயுத நடனம் ஆடியிருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் யுத்தங்கள் மனித ரத்தத்தைக் குடித்து வருகின்றன. இந்தப் போர் வெறியர்களிடம் சிக்கிய அப்பாவி மக்கள்தான் அநியாயமாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மரணத்தோடு போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
-தீரா ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்