நசிகேதனுக்கு ஆன்மாவைப் பற்றிய 10
கோணங்களில் விளக்க மளிக்கையில் அங்குஷ்ட மாத்திர வித்யை பற்றி விவரிக்கிறார்..!
அங்குஷ்டம் என்றால் பெருவிரல். இறைவன் பெருவிரல் அளவில் தான் இதயக் குகையில் இருக்கிறார்.
எங்கும் நிறைந்த இறைவன் எல்லா காலங்களுக்கும் தலைவரும் ஆன அந்த இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில்தான் இருக்கிறார்.
அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே நசிகேதா..!
இறைவன் புகையில்லாத ஒளிபோல் பெருவிரல் அளவில் நம்மில் உள்ளார். எல்லா ஒளிக்கும் புகை உண்டு. அவை அளவில் சிறியதாக கூட இருக்கலாம். சில ஒளிகளில் புகை கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் புகை மூட்டம் உண்டு.
ஆன்மாவும் பெருவிரல் அளவில் இருப்பதாகக் கூறப் படுகிறது. இறைவனின் அம்சத்தை நம்முள் உணர்ந்தவன்தான் மரணத்தை வெல்லமுடியும்.
குடகு மலைகளின் சிகரங்களில் மழை பெய்கிறது. அது அங்கேயே இருப்பதில்லை. பல நீர் நிறைந்த வாய்க்காலாக மாறிபிறகு எல்லாம் ஒன்றாகக் கலந்து அகண்ட காவிரி ஆகிறது. அதுபோல் உயிரினங்களை வெவ்வேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்.
நசிகேதா... தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் அதுவாகவே மாறுகிறது ஏனெனில் இரண்டிலும் தெளிவு இருக்கிறது. அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவமாகவே மாறுகிறார். நான் ஆன்மா நான் ஆன்மா என்ற சிந்தனை எப்போதும் நம் மனதில் இருந்தால் அந்த ஆன்ம தரிசனம் கிடைக்கும்; உறுதியாக கிடைக்கும்
நம் உள்ளே இருவர் இருக்கிறார். ஒன்று ஜீவன் மற்றது ஆன்மா. ஜீவனுக்கு இன்ப- துன்பங்கள் கிடையாது. ஆனால் ஆன்மாவுக்கு ஏதும் கிடையாது.
உடம்பில் அது வெறும் சாட்சிதான் உடல் வீழ்ந்தபிறகு ஆன்மா பயணத்தைத் தொடங்குகிறது. செய்த பாவ- புண்ணியங்களுக்கேற்ப அதற்கு மறுபிறவி ஏற்படுகிறது. ஆன்மா..... எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. அதுவே நீ..! என்ற உயர்நிலை தியானம் இங்கே விளக்கப்படுகிறது.
நம் உடம்பில் 11, வாசல்கள் உள்ளன. அது ஒரு நகரம். எல்லாமே ஆன்மாவின் கருவியாகும். நசிகேதா.... நீ கேட்டது இந்த ஆன்மாவைப் பற்றியே. திருமூலர் திருமந்திரத்தில் ஒரு பாடலில் இதனை குறிப்பிடுகிறார்.
"உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினக்குள்ளே கோயில் கண்டேன்
உடம்பிலே உத்தமன் கொண்டான் என்று
உடம்பினையாளிருந்து ஓம்புகின்றேனே...!''
(திருமந்திரம்)
நாம் நம் உடம்பை ஒருபோதும் வெறுக்கவோ- ஒரு தடையாகவோ நினைக்கவே கூடாது. ஆன்மாவை உணர இறைவன் நமக்கு அளித்துள்ள கருவியே உடம்பு.
உடம்பு என்பது புரம் என்று கொள்ளலாம். புரம் என்றாலும் நகரம் என்றாலும் ஒன்றுதான். அதில் 11 வாசல்கள். இரண்டு கண்கள்- 2, இரண்டு காதுகள்- 2, இரண்டு நாசித்துவாரங்கள்- 2, வாய்- 1, தொப்புள்- 1, குறி- 1, குதம்- 1, உச்சந்தலையில் உள்ள பிரம்மரந்திரம்- 1. ஆக 11 (ஓட்டைகள்) வாசல்கள்.
பிரம்மரந்திரம் என்பது குழந்தை கருவிலிருந்து குழந்தையாக வெளியே வரும்பொழுது அதன் உச்சந்தலையிலுள்ள மென்மையான பகுதியான பாகத்தை காணலாம். அதில் ஒரு சிறு துவாரம் இருக்கிறது. அதன் வழியேதான் இறைவன் (ஆன்மா) உள்ளே வருகிறான்.
யோகி ஒருவன் முக்தி அடையும்போது அந்தத் துவாரம் வழியே ஜீவன் வெளியே போவதாகக் கூறப்படுகிறது.
ஒரு சமூகத்தின் எல்லா செயல்களும் உடம்பில் உள்ளன. விஞ்ஞானம் என்ற ஒன்று இல்லாத காலத்திலேயே நம் முனிவர்கள் இவற்றை கண்டுவிட்டனர்.
ஒருசில உபநிஷத்துக்களில் இந்த உடம்பை பிரம்மபுரம் அதாவது- இறைவன் வாழும் நகரம் என்றும் கூறுவர்.
உடம்பை பற்றி தியானிக்கும்பொழுது அதில் ஆன்மாவும் அடங்கி இருக்கிறது. மெல்ல ஆன்மா மற்றப் பகுதிகளின் நினைவுகளிலிருந்து தனித்தன்மை பெறும்பொழுது இறையுணர்வு வருகிறது.
அந்த ஆன்மா எங்கும் செல்கிறது. வானில் சூரியனாக, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. விண்வெளியில் காற்றாக, பூமியின் அக்னியாக, வீட்டில் விருந்தினராக இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, நீரில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது, இந்தப் பிரபஞ்ச நியதி மாறுவதில்லை. அதில் ஒரு ஒழுங்கு நிலவுகிறது.
இந்த ஒழுங்கிலும், நியதியிலும் ஆன்மாவே உள்ளது. தரையில் தானியங் களும், மரங்களும், பூச்செடிகளும், நீரில் சங்கு, சிப்பி, முத்து, மீன், திமிங்கலம் உயிர் கொல்லி சுறாமீன். மனிதர்களுடன் விளையாடும் டால்பின் ரக மீன்களும் வசிக்கின்றன.
இதிலும் ஒரு நியதி உள்ளது. இந்த இயக்கங்களை கண்ட மனிதன் வாழ்வின் நலத்திற்கும் வளத்திற்கும் தேவர்களின் உதவியை நாடினார்.
யாகங்கள்மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டான். அதனால் யாகம் என்பது தேவவசக்தி. இங்கேயும் ஆன்மா இருக்கிறது. அதுவே யாகத்தில் தோன்றுவதாக சொல்லப் படுகிறது.
-தொடர்ந்து பார்ப்போம்!
செல்: 96599 69723
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/vedajothidam-2025-12-26-16-17-52.jpg)