ஒரு ஜாதகத்தின் பலன்களை நிர்ணயிப்பதில் கிரக சேர்க்கைக்கு அதிக பங்கு உள்ளது. அந்தவகையில் ஜோதிட உலகமே மிரளக் கூடிய ஒரு வகையான கிரகச் சேர்க்கை சனி, செவ்வாய் சம்மந்தம். இது பலருடைய வாழ்வாதாரத்தை- வாழ்க்கையை இழக்க செய்யக்கூடிய கிரக சேர்க்கை ஆகும். வாழ்க்கையில் ஒருவர் மீள முடியாத பிரச் சினையில் உள்ளார் என்றால் அங்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருக்கும். அவயோகம் என்று சொல்லக்கூடிய இந்த கிரகச் சேர்க்கை சிலருக்கு வாழ்வியல் மாற்றத்தையும் தந்துள்ளது. ஏன் இந்த கிரகச் சேர்க்கைக்கு அனைவரும் பயப்படுகிறார்கள் என்று பார்க்கலாம்.
பொதுவாக சனிபகவான் மந்தத்தன்மை, சோம்பேறித்தனம் உள்ள கிரகம். ஒருவரின் ஆயுள், ஆரோக்கியம், வறுமை, கடன், பலவீனம், அடிமைத் தன்மை, தொழில், பொதுஜனம் ஆகியவற்றிக்கு காரக கிரகம்.
பொதுவாக சனிபகவான் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டு காலங்கள் எடுத்துக்கொள்வார்.
அதனால் சனிபகவானால் கிடைக்கக்கூடிய நன்மையோ- தீமையோ நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்கும். ஒருவரின் பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ப அவரவரின் ஜாதகத்திலுள்ள சனி பகவான் நின்ற நிலைக்கு ஏற்ப கோட்சாரத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் பலன் கிடைக்கும்.
அல்லது சனி தசை புக்தி அந்தர காலங்களில் சுப- அசுபப் பலன்கள் நடக்கும். ஒரு ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் பொதுஜன தொடர்பு நிலையான- நிரந்தரமான, உத்தியோகம், முன்னோர்களின் நல்லாசிகள், குலதெய்வ அனுக்கிரகம் போன்றவை உண்டு. இவர் பலம் குறைந்தால் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். தொழில், உத்தியோகத்தில் ஸ்திரத்தன்மை இருக்காது. எலும்பு, நரம்பு, கை- கால் மூட்டுவலி சார்ந்த பாதிப்புகள் இருக்கும். கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. சனி பார்த்த இடம் பால்.தான் பார்த்த பாவங்கள் தன்னுடன் சேர்ந்த கிரகங்களை பலன்களை தடை செய்யும் தன்மை கொண்டவர்.
அதேபோல் செவ்வாய் பகவானை பொறுத்தவரை வேகமான கிரகம். விவேகம் அற்ற கிரகம். பிடிவாதம், அகம்பாவம், துணிச்சல், கர்வம், மூர்க்கம், சுயநலம், கோபப்படுதல், சண்டையிடுதல், அதீத காமம், அவசரம், உடலிலுள்ள ரத்தம், உடன்பிறந்த சகோதரம் ஆகியவற்றிற்கு காரக கிரகம். ஒரு மனிதனின் அனைத்து ஆற்றல்களும் செவ்வாய் கிரகத்தில்தான் பதிவாகி இருக்கும்.
செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன. இவர் ஒரு ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12-ஆமிடங்களில் நிற்பது செவ்வாய் தோஷமாகக் கருதப்படுகிறது. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவர்களுக்கு ஆண் தன்மை அதிகம் இருக்கும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவர் மூர்க்கத்தனம் நிறைந்தவராகவும், இல்லற இன்பத்தில் அதிகம் நாட்டம் உள்ளவராகவும் இருப்பார். ஆண்- பெண் இருவரின் ஜாதகத்திலும் 7, 8-ஆமிடங்களில் செவ்வாய் நின்றால் திருமண வாழ்க்கை சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
செவ்வாய் ஆளுமை தன்மை நிறைந்த கிரகம் என்பதால் செவ்வாய் வலுப்பெற்றவர்கள் தைரியம், தலைமைப் பண்பு நிறைந்த வர்களாக இருப்பார்கள். செவ்வாய் உடன்பிறப்புகளைக் குறிக்கும் கிரகம் என்பதால் லக்னத்திற்கு 6, 8, 12-ஆமிடங்களில் செவ்வாய் மறைந்தால் உடன்பிறந்தவர்களால் அனுக்கிரகம் இருக்காது. சதாசர்வ காலமும் உடன்பிறந்தவர்கள் கருத்து வேறுபாட்டுடன் வாழ்வார்கள்.
ஒருவரின் சொத்து சுகத்தை குறிக்கும் கிரகம் செவ்வாய் என்பதால் செவ்வாய் பலம் பெற்றால் வீடு, வாகனம், அசையும் அசையா சொத்து சேர்க்கை மிகைப்படுத்தலாக இருக்கும். உடல் பலம், மன உறுதி, துணிச்சல், வீரதீர சாகசச் செயல்புரிவதில் வல்லவர்களாகவும் நினைத்ததை. நினைத்தபடி முடிக்கும் ஆற்றலும் உண்டு. செவ்வாய் பலம் குறைந்தால் நிலையான சொத்து அமையாது. மேலும் உஷ்ணம், காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் ஆபத்து அங்ககீனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், தீ விபத்து, அறுவை சிகிச்சை போன்றவை ஏற்படும்.
ஆண் ஜாதகத்தில் உடன்பிறந்த சகோதரர்களையும் பெண் ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையையும் குறிக்கும் கிரகமான செவ்வாய் தன்னுடன் சேர்ந்த இணைந்த கிரகங்களுக்கு ஏற்ற பலனை வழங்குவார்.
இப்படி எதிரும் புதிருமான தன்மைகொண்ட இந்த கிரகங்கள் இயற்கை பாவிகள் மற்றும் பகை கிரகங்கள். செவ்வாய் காலபுருஷ அஷ்டமாதிபதி சனிபகவான் காலபுருஷ பாதகாதிபதி. இந்த இரு கிரகங்களின் சேர்க்கை பலருக்கு அசௌகரியத்தையும் சிலருக்கு நன்மைகளையும் கொடுக் கிறது. இந்த ஏழு கிரக கூட்டணிகள் ஒரு ஜாதகத்தில் ஏற்படும் பொதுவான பலன்களை முதலில் பார்க்கலாம். அதன்பிறகு 12 லக்னங்களுக்கும் இந்த செவ்வாய் சனி சேர்க்கையால் ஏற்படக்கூடிய சுப- அசுப விளைவுகளையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.
அதிக சொத்து சேரும், அதிர்ஷ்ட சொத்துகள் கிடைக்கலாம். இராணுவம், காவல்துறை, அரசியல், அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன் நடக்கும்.
பூர்வீக சொத்தால் மன உளைச்சல் அல்லது பூர்வீக சொத்து பயனற்று போவது, வாஸ்து குறைபாடுகள் உள்ள சொத்து, உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு, கடின உடல் உழைப்பு, அடிக்கடி விபத்து ஏற்படல், உடல் உறுப்புகளில் பாதிப்பு, ரகசிய வாழ்க்கை, வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகள், ரகசிய வியாதி, அறுவை சிகிச்சை, எலும்பு, நரம்பு சார்ந்த பிரச்சினைகள், வறுமை, கடன், திருமணத்தடை, காதல் திருமணம், செய்வினை, ஏவல், கண் திருஷ்டி பாதிப்புகள், பொருத்தம் இல்லாத வாழ்க்கைத் துணை, இருதார யோகம், தம்பதிகள் ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவது, பெண்கள் மாங்கல்யத்தை கழற்றி வீசுவது, கடன் சுமை தாளாமல் மாங்கல்யத்தை விற்பது, அடமானம் வைப்பது, மாங்கல்யம் அணியாமல் வாழ்வது, கட்டிய கணவருக்காகவும் பெற்ற பிள்ளைகளுக்காகவும் அனைத்தையும் இழந்து தியாகியாக வாழும் பெண்கள் அனைவருக்கும் சனி, செவ்வாய் சம்பந்தம் இருக்கும். விவாகரத்துப் பெறாமல் பிரிந்து வாழும் தம்பதிகள், ஒரே வீட்டில் பல வருடமாக பேசாமல் வாழும் தம்பதிகள், தொழில், உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் வேறு வேறு ஊரில் அல்லது வேறு நாட்டில் வாழ்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேசுதல் இது போன்ற முன்னுக்குப் பின் முரணான பலன்கள் இந்த கிரக சேர்க்கையில் நடக்கும்.
இனி அடுத்த வாரம் 12 லக்னத்திற்கும் சனி செவ்வாய் சம்மந்தத்தால் ஏற்படும் பலன்களையும் பரிகாரத்தையும் பார்க்கலாம்.