எப்பொழுது திருமணம் நடை பெறும் என்று கூறுங்கள்?-ருத்ரா, விழுப்புரம்.

சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு 9-ல் இருப்பதும் சுக்கிரன் 7-ல் இருப்பதும் நல்ல அமைப்பாகும். செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. துலா ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ராகு புக்தி 3-11-2027 முடிய நடக்கிறது. ராகு 3-ல் இருந்தாலும் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று பாவகரீதியாக 2-ல் இருப்பதால் தடைகள் உண்டாகிறது. தற்போது ராகு புக்தி நடப்பதால் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. அப்படியே திருமணம் நடைபெற்றாலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

துலா ராசியில் பிறந்த உங்களுக்கு 9-ல் குரு சஞ்சரிப்பதால் தற்போது திருமணத்திற் கான வாய்ப்புகள் இருந்தாலும் திருமணத்துக்குபிறகு இந்த ராகு புக்தி முடியும்வரை சின்ன சின்ன ஒற்றுமை குறைவுகள் இருக்க வாய்ப்பு உண்டு. அம்மன் வழிபாடு மேற்கொள்வது, வாழ்வில் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. அப்படி திருமணம் நடைபெற்றாலும் சூழ்நிலை காரணமாகவோ அல்லது பணி நிமித்தமாகவோ வெவ்வேறு இடங்களில் கணவன்- மனைவி இருக்கக்கூடிய ஒரு அமைப்புகூட உண்டாகலாம். ராகு முடிந்தால் தான் ஒற்றுமை என்பது சிறப்பாக இருக்கும்.

Advertisment

இந்த ஜாதகருக்கு உடல்நல ஆரோக்கியம் எப்படியிருக்கும்?-மணி, பெத்தநாயக்கன்பாளையம்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சனி உச்சம் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்றாலும் தற்போது புதன் தசையில் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற குரு புக்தி 11-9-2026 முடிய நடக்கிறது. குரு கட்டத்தில் 9-ல் இருந்தாலும் பாவகரீதியாக 8-ல் இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என கூறமுடியாது. அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படலாம். 8-ல் இருக்கக்கூடிய குரு புக்தி முடிந்து அடுத்து வரக்கூடிய சனி புக்தி காலத்தில்தான் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மணவாழ்வு மலர்வது எப்போது? -அசோகன், தஞ்சாவூர்.

Advertisment

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் சுக்கிரன், கேதுவுக்கு மிக அருகில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். அடுத்து ஜாதகத்தில் 2-ல் ராகு அமையப்பெற்று பாவகரீதியாக சனியும் 2-ல் அமையப் பெற்று தற்போது ராகு தசை 5-11-2026 முடிய நடைபெறுவது சாதகமற்ற அமைப்பாகும். சுக்கிரன்- கேது சேர்க்கைபெற்றிருப்பது திருமண வாழ்வில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு என்றாலும் சுக்கிரனும், சந்திரனும் பரிவர்த்தனை பெற்றிருப்பது சற்று சாதகமான அமைப்பாகும். 30 வயது கடந்து விட்டதால் பரிவர்த்தனை பெற்றது போல் அதாவது சுக்கிரன் 6-லும் சந்திரன் 8-லும் இருப்பதுபோல் வேலை செய்யும். ஜாதகரீதியாக உங்களுக்கு தற்போது நடக்கக்கூடிய ராகு தசை முடியும்வரை திருமணத் திற்கான வாய்ப்புகள் குறைவு. 2026 நவம்பருக்குபிறகு குரு தசை தொடங்குகின்றபொழுது திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.