இன்று பலரும் திருமணத்திற்கு வரன்களைத் தேடித்தேடி செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம் என்கிறார்கள். ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் வரனின் ஜென்ம நட்சத் திரம் தவிர்த்து மீதியிருக்கும் 26 நட்சத்திரங்களில் 6, 8-க்கு டைய சஷ்டாஷ்டக ராசியிலுள்ள நட்சத்திரங்களைத் தவிர்த்தால் மீதி 21 நட்சத் திரங்கள் இருக்கும். திருமணப் பொருத்தத்தில் சுப சஷ்டாஷ்டகம், அசுப சஷ்டாஷ்டகம் இரண் டையும் தவிர்ப்பதே நல்லது. பொதுவாக, பெண்ணின் நட்சத்திரப்படிதான் ஆணின் நட்சத்திரப் பொருத்தம் பார்க்க வேண்டுமென்பது ஜோதிட விதி. இந்த நட்சத்திரப் பொருத்தத்தில் கிட்டத் தட்ட எல்லா ராசியினருக்கும் குறைந்தது பத்து முதல் 15 நட்சத்திரங்கள் பொருந்தும். அவற்றுள் எந்த நட்சத்திரம், ராசி திருமணத்தில் இறுதியாக அமையும் என்பது புதிராக அமையும். குழப்பம் உண்டாகும். அதைக் கண்டு பிடிக்க ஜோதிடத்தில் வழிமுறைகள் உள்ளன. அதன்படி நாம் ராசி, நட்சத்திரம் கண்டுபிடித்து விட்டால் சுலபமாக வரன்கள் அமைய வழிகிட்டும்.
பொதுவாக, ஜோதிடத்தில் ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன்; பெண்களுக்கு செவ்வாய். அதேபோல் இருவருக்கும் 7-ஆம் வீடு கணவன்- மனைவியைக் குறிக்கும். இந்த 7-ஆம் வீட்டு அதிபதி எந்த ராசியில் உள்ளதோ அதன்படி அந்த ராசியிலுள்ள நட்சத்திர வரன்கள் அமையும். 7-ஆம் வீட்டு அதிபதியோடு சேர்ந்த கிரகம், எத்தனை யானாலும், எந்த கிரகம் வலிமையாக உள்ளதோ அந்த கிரகம், ராசி, நட்சத்திரப் படியே வரன்கள் அமையும். அதேபோல 7-ஆம் வீட்டைப் பார்த்த கிரகங்களின்படி ராசி, நட்சத்திரம் அமையும். 7-ஆம் வீட்டு அதிபதி எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளதோ அந்த கிரகத்தின் ராசி, நட்சத்திர வரன்கள் அமையும்.
லக்னம் மற்றும் ராசிக்கு 7-ஆம் வீட்டு அதிபதி யின்படி கணக்கிட்டால் ஓரளவு ராசி, நட்சத்திரம் கண்டுபிடித்துவிடலாம்.
கடைசியில் ஒருவர் நட்சத்திரப்படி 15 நட்சத்திரங்கள் பொருந்தினால் மேற்கண்ட விதிப்படி எட்டுமுதல் பத்துவரைதான் நட்சத்திரங்கள் மிஞ்சும். இதுதான் கடைசியில் வரன்களின் ராசி, நட்சத்திரத்தை இறுதியாக்கி கால்கட்டு போடும்.
உதாரண ஜாதகம் 1-ன்படி கணவனுக்கு கன்னி லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத் திரம். 7-ஆம் இடத்தில் (மீனத்தில்) குரு, சந்திரன் சேர்ந்துள்ளார்கள். மனைவியின் ஜாதகப்படி மகர ராசி, தனுசு லக்னம், திருவோண நட்சத்திரம். 7-ஆம் வீட்டு அதிபதி புதன் லக்னத்தில் களத்திர காரகன் செவ்வாயுடன் சேர்ந்துள் ளார். கணவன் ஜாதகப்படி சந்திரன் வலிமையாக உள்ளதால், சந்திரனின் நட்சத்திரமான திருவோணம், மனைவி யின் மகர ராசியாக திருமணத்தில் அமைந்தது. அதேபோல் மனைவி யின் ஜாதகப்படி 7-ஆம் வீட்டு அதிபதி புதன், குருவின் வீடான தனுசு ராசியாக உள்ளதாலும், 7-ஆம் வீட்டு அதிபதி புதனின் நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் அமைந்து, மீன ராசி திருமணத் தில் இறுதியாக அமைந்தது. கணவர் ஜாதகப் படி குருவும் சந்திரனும் சேர்ந்து இருவரும் ரேவதி சாரத்தில் உள்ளனர். இந்த ரேவதி சாரம்தான் கணவனின் ஜென்ம நட்சத் திரமான ரேவதிக்கு அமைந்து, பெண்ணிற்குத் துல்லியமாக அமைந்தது.7-ஆம் வீட்டு அதிபதி குரு ரேவதி சாரம் பெற்று, ரேவதி நட்சத்திரம் புதனின் நட்சத்திரமாக உள்ளதால் கணவனுக்கு மனைவியின் 7-ஆம் வீட்டு அதிபதி புதனாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உதாரண ஜாதகம் 2-ன்படி கணவனுக்கு மிதுன லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத் திரம். மனைவிக்கு கடக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். கணவனின் ஜாதகப்படி லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதி குரு, கடக ராசிக்கு 7-ஆம் வீட்டு அதிபதி சனி இருவரும் சேர்ந்து ரிஷப ராசியான சுக்கிரன் வீட்டில் உள்ளார்கள். மனைவியின் ஜாதகப் படி கடக லக்னத்துக்கு ஏழாம் வீட்டு அதிபதி சனி, களத்திரகாரகன் செவ்வாயுடன் சேர்ந்துள்ளார். கணவனின் ஜாதகப்படி 7-ஆம் வீட்டு அதிபதி குரு, சுக்கிரன் ராசி யான ரிஷபத்தில் உள்ளதால் மனைவி யின் ஜாதகப்படி துலா ராசியாக சுக்கிரன் வீடாக ராசி அமைந்தது. மனைவி யின் 7-ஆம் அதிபதி சனி பத்தாம் பார்வையாக புதனைப் பார்ப்பதால் கணவனின் ஆயில்ய நட்சத்திரம் புதனின் நட்சத்திரமாக அமைந்து, கடக ராசியாக அமைந்தது. கடக லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதி சனி, துலா ராசிக்கு 7-ஆம் வீட்டு அதிபதி செவ்வாய் சேர்ந்துள் ளார்கள். கணவன்- மனைவி இருவர் ஜாதகப் படி, லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதி, ராசிக்கு 7-ஆம் வீட்டு அதிபதி இணைந்துள் ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரண ஜாதகம் 3-ன்படி கணவன் மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத் திரம். மனைவி கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். கணவனுக்கு 7-ஆம் வீட்டு அதிபதி குரு, களத்திர காரகன் சுக்கிரன், புதன், கேது சேர்ந்துள் ளார்கள். குரு 7-ஆம் பார்வையாக ராகுவைப் பார்க்கிறார். மனைவி ஜாதகப்படி கடக லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதி சனி சுவாதி நட்சத்திரமான ராகுவின் சாரத்தில் உள்ளார். இவரோடு புதன், சூரியன் சேர்ந்துள்ளார்கள். சனி ராகு சாரம் பெற்று சுவாதி நட்சத்திரத்தில் உள்ளதால், கணவனுக்கு மனைவியின் திருவாதிரை- ராகுவின் நட்சத்திரம் அமைந்தது. 7-ஆம் வீட்டு அதிபதி சனி புதனோடு சேர்ந்துள்ளதால், கணவனுக்கு மனைவியின் மிதுன ராசி- புதனின் ராசி அமைந்துள்ளது. கணவனின் ஜாதகப்படி, மிதுன ராசி, லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதி குரு புதனோடு சேர்ந்துள்ளதால், மனைவியின் ராசி மிதுனமாக அமைந் துள்ளது. புதன் வலிமையாக உள்ளதால் இருவருக்கும் ஏக ராசியான மிதுனம் அமைந்து கடைசிவரை பிரியாமல் ஒத்த சிந்தனையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைத்துவிட்டது. இருவரும் காதல்- கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் நட்சத்திரப் பொருத்தம் இல்லை யென்றாலும் ஏக ராசியாக ராசிப் பொருத்தம் அமைந்துள்ளது.
செல்: 98403 69513