* கண்ணையன், சென்னை.
என் நண்பரின் மகன் ஜாதகம். திருமண வாழ்வு நீதிமன்றத்தில் அல்லாடுகிறது. ஒரு குழந்தை உள்ளது. அது யாரிடம் இருக்கும்? எதிர்காலம் பற்றிக் கூறவும்.
ராஜ்குமார் 13-11-1987-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் குரு, ராகு, 8-ல் செவ்வாய், கேது. நாகதோஷமும், செவ்வாய் தோஷமும் வலுவாக உள்ளது. மேலும் 7-ஆம் அதிபதி சூரியன் நீசம். நடப்பு சூரிய தசையில் செவ்வாய் புக்தி. அடுத்துவரும் ராகு புக்தியில் விவாகரத்து கிடைத்துவிடும். குழந்தை, அதன் தாயிடம்தான் வளரும். இவர் அவ்வப்போது பார்த்துக்கொள்ளலாம். அடுத்து 2024, ஆகஸ்ட் மாதம் வரும் சூரிய தசை குரு புக்தியில் இரண்டாம் திருமணம் நடக்கும். இதுபோல சூரியன் நீசமாகி, அவரின் தசை நடப்பவர்கள். மயிலாடுதுறை, திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை, சமேத ஸ்ரீமேகநாத சுவாமி திருக்கோவில் சென்று வணங்கவும். சூரிய பகவானின் சாபம் போக்கிய திருத்தலமாகும். ஞாயிறுதோறும் சூரிய பகவானை வணங்கவேண்டும்.
* ராஜன், செஞ்சி.
என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? நாகதோஷம் களஸ்திர தோஷம் உள்ளதா?
மகன் அப்பாண்டை ராஜன் 11-1-2000-ல் பிறந்த வர். தனுசு லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். செவ்வாய், சனி பரிவர்த்தனை. குருவுடன் சேர்ந்ததால் சனி நீசபங்கம் அடைந்துள்ளார். லக்னத் தில் தர்ம கர்மாதிபதி அதிகாரம் பெற்ற சூரியன், புதன் சேர்க்கை உள்ளது. எனவே, அரசுப்பணி கண்டிப்பாகக் கிடைக்கும். நடப்பு ஏழரைச்சனி. தற்போது குரு தசையில் ராகு புக்தி 2024 பிப்ரவரி வரை. அதுவரையில் இவருக்கு சற்று ஆரோக்கியக் குறைவும், மன சஞ்சலமும் இருக்கும். அடுத்துவரும் சனி தசையில் (2024-ப்பிறகு) இவருக்கு இடமாற்றமும், அரசுப்பணியும் கிடைக்கும். தற்போது மஞ்சள் கிழங்கு தானம் நல்லது. லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. எனவே நாகதோஷம் உள்ளது.
* ஆஷா, சென்னை.
நானும் கணவரும் வேலை பார்த்தும், எங்களுக்கு பணம் தங்கவில்லை. தற்போது ட்ரான்ஸ்பர் வந்துள்ளது. எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்கும்?
11-1-1992-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். மகர லக்னத்துக்கு 12-ல் செவ்வாய், புதன், சூரியன், ராகு. நல்ல வேளையாக இந்த கிரகங்கள் குரு பார்வையைப் பெறுகின்றன. உங்கள் ஜாதகப்படி வீடு, மனை வாங்கினால் அது விரயமாகிவிடும்; கவனம் தேவை. நடப்பு புதன் தசை. இதில் ராகு புக்தி 2022 நவம்பர் வரை. எனவே, இதற்குள் வேலை சம்பந்தமான இடமாற்றம் உண்டு. அடுத்துவரும் குரு புக்தி எதிர்பாராத நன்மைகளைத் தரும். உங்கள் தேவாலாயத்திற்கு குடிநீர் சம்பந்த உதவிகளை செய்யவும். வேளாங்கண்ணி சென்று வணங்குவது நன்று. கணவர் ராஜ், 4-8-1990-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். குரு, சந்திரன் பரிவர்த்தனை. இவருடைய ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி குரு 12-ல் உச்சம். உடன் லக்னாதிபதி சூரியனுடன் கேது. இவ்விதம் 5-ஆம் அதிபதி 12-ல் உச்ச விரயத்தில் இருப்பவர்கள் விளையாட்டு, சினிமா, பங்கு வர்த்தகம் இவற்றில் ஈடுபட்டால் உயர தூக்கிக்கொண்டு போய், படாரென்று கீழே தள்ளிவிடும். இவருக்கு செவ்வாய் தசையில் குரு புக்தி 2022, மார்ச்சில் முடிந்துள்ளது. இவர் ஏதோ ஒருவகை இழப்பைச் சந்தித்திருப்பார். நடப்பு சனி புக்தி, இடமாற்றம் கொடுக்கும். மிகுந்த அலைச்சலை சந்திப்பார். பண விஷயத்தில் வீடு, மனை நிலைத்து நிற்கும். இவர் தேவாலயத்திற்கு மின்சார செலவை ஏற்றுக்கொள்வது நல்லது. மகள் கிரேஸ்லின் 17-10-2018-ல் பிறந்தவள். மேஷ லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய் உச்சம். இவர் பெயருக்கு நிறைய வீடு, மனை அமையும். நடப்பு சந்திர தசையில் குரு புக்தி 2022 மே மாதம் முதல். எனவே இவள் பெற்றோர் அதிக அலைச்சலுக்கு உள்ளாவார்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும். 2029, ஜூன் வரையுள்ள சந்திர புக்தி, படிப்பில் சற்று கவனத் தடுமாற்றம் தரும். யாருக்காவது புத்தகங்கள் வாங்கிக்கொடுக்கவும். கேட்லின் 4-9-2020-ல் பிறந்தவள். மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். புதன் உச்சம். எனவே மேற்படிப்பு நன்றாக அமையும். சனி தசை. நடப்பு. இதில் தந்தைக்கு சற்று அலைச்சல் இருக்கும்.
* தியாகராஜன், கோயம்புத்தூர்.
என் தம்பி மகன் தனபால் குப்தாவுக்கு எப்போது திருமணமாகும்?
தனபால் குப்தா 17-11-1981-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். இவர் ஜாதகத்தில் செவ்வாய், சூரியன் பரிவர்த்தனை. மற்றும் குரு, சுக்கிரன் பரிவர்த்தனை. அம்சத்தில் களஸ்திராதிபதி சுக்கிரன் மற்றும் புதன் நீசம். நடப்பு சுக்கிர தசையில் குரு புக்தி 2024, அக்டோபர் வரை உள்ளது. அதற்குள் மணவாழ்வு பாதிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் நடக்கும். இவ்விதம் குரு, சுக்கிரன் சம்பந்தம் களஸ்திர தோஷம் ஏற்படுத்தும் ஜாதகர்கள் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் வில்லியனூருக்கு அடுத்த திருப்புவனை வரதராஜர் பெருமாள் கோவில்சென்று வழிபடவும். இது குருபகவானும் சுக்கிர பகவானும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். ஒரு வெள்ளிக்கிழமை இளம்பெண்ணுக்கு தாம்பூலமும், புது ஆடையும் வாங்கிக் கொடுக்கவும்.
செல்: 94449 61845