பூர்வீகம், பூர்வபுண்ணிய பலம், குலதெய்வம், புத்தி, திறமை, புத்திர பாக்கியம், சாதிக்கும் எண்ணம், ஊக்கம், செயல்பாடு, புகழ், பதவி உயர்வு, பெரியவர்களின் நட்பு, மரியாதை இவையனைத்தையும் தெரிந்துகொள்ள ஜாதகத்தில் ஐந்தாமிடத்தைப் பார்க்கவேண்டும். ஐந்தாமிடத்தின் நிலையைப் பொருத்தே ஜாதகருக்கு மேற்கண்டவற்றில் நன்மை- தீமையான பலன்கள் ஏற்படும்.
ஐந்தாமிடம்
ஐந்தாமிடத்தில் நிற்கும் சுப கிரகங்கள் சுபத் தன்மையையும், பாவகிரகங்கள் பாவத் தன்மையையும் தரக்கூடியதாக இருக்கும். ஐந்தாமிடத்தைப் பார்க்கும் கிரகங்கள், இணையும் கிரகங்களின்அடிப்படையிலும், ஐந்தாமிட அதிபதி நிற்கும் இடத்தைப் பொருத்தும் ஐந்தாமிடத்தின் வலுத் தன்மையை அறியமுடியும். ஒருவருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம் பலம்பெற்றால் போதும்; அதிஷ்டம் தானாகக் கிடைக்கும்.
ஐந்தாமிடத்தின்மூலம் ஜாதகரின் புத்திர பாக்கியத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஐந்தாமிடம், ஐந்தாமிட சம்பந்தமாக ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி, ராகு வலுப்பெற்றால் ஆண் குழந்தையும், பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், புதன், கேது வலுப்பெற்றால் பெண் குழந்தையும் பிறப்பார்கள். மேலும் ஐந்தாமிடம் பெற்ற சாரத்தின் அடிப்படையில் குழந்தை பிறக்கும். எத்தனை குழந்தைகள் என்பதையறிய ஐந்தாமிட கிரகம், ஐந்தாமதிபதி நின்ற நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் பார்த்தால் தெரிந்துவிடும். சிலருக்கு சரியாகவும், பலருக்கு ஓரளவுக்கும் பொருந்தி வருகிறது.
ஐந்தாமிடம் கெட்டால் புத்திர தோஷம் உண்டாகிவிடும். ஜாதருக்கு புத்திர தோஷமிருந்தால் ஒரே குழந்தைகளைப் பெற்றெடுப்பது- அதாவது ஆண் பிள்ளைகள் அல்லது பெண் பிள்ளைகள் மட்டுமே பிறப் பது, குழந்தை பிறக்காமல் இருத்தல், குழந்தை இறந்து பிறத்தல், பிறந்து இறத் தல், நோயாளி குழந்தையாகப் பிறப்பது, மனநோயாளியாக, ஊதாரியாக இருத்தல், கடைசி காலங்களில் பெற்றோர்களுக்குப் பயன்படாதவராக இருத்தல் போன்றவை நிகழும். இவற்றில் ஏதாவதொரு பலனை சுய ஜாதகத்தின் வலுத் தன்மையைப் பொருத்து அனுபவிக்க நேரும்.
ஐந்தில் நிற்கும் கிரகங்கள்
சூரியன்
ஐந்தாமிடத்தில் சூரியன் பலம்பெற்று நின்று சுபகிரகப் பார்வை பெற்றால் பூர்வீகத்தால் லாபம் உண்டு. பூர்வபுண்ணிய அருளால், குலதெய்வ ஆசிர்வாதத்தால், புத்தி நல்ல முறையில் செயல்பட்டு, ஊக்கம் உண்டாகி, சாதிக்கும் எண்ணம் ஏற்பட்டு வெற்றிபெறச் செய்யும். பதவி, புகழை எளிதாக அடையும் வாய்ப்பு ஏற்படும். புத்திர ஸ்தானத்தில் சூரியன் இருப்பது புத்திர தோஷத்தைத் தரும்.
ஐந்தில் சூரியன், ஐந்தாம் அதிபதி சூரியன், ஐந்தாமதிபதி சூரிய சாரம் பெறுவது புத்திர தோஷத்தையே தரும். சூரியன் கெட்டு பாவகிரகச் சேர்க்கை, இணைவுபெறுவது அரசாங்க பாதிப்பு, வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடுத்தும். உஷ்ண நோய்கள், எதிரிகளால் பாதிப்பை உண்டாக்கும். சூரியன், புதன் சேர்ந்தால் புதாதித்திய யோகத்தால் நன்மை உண்டாகும்.
சந்திரன்
ஐந்தில் சந்திரன் இருந்தால் தாயாரால் நன்மை, பெண்களால் லாபம் பெறுவர். சுபகிரகப் பார்வை பெற்றால் பிரபல ராஜயோகம் தருவார். குருச்சந்திர யோகம், சந்திர மங்கள யோகமானது,
ஜாதகருக்கு அதன் தசையில் பணம், புகழை வாரிவழங்கும். வளர்பிறைச் சந்திரனால் நல்ல குழந்தைகள் கிடைக்கும்.
பாவகிரகங்களால் ஐந்தாமிடம் பார்வை, சேர்க்கை பெறுதல் புத்திர தோஷம், வீண் மனக் குழப்பம், தொடர்தோல்வி, கடமை தவறுதல், பொய்யான வாக்களித்தல் போன்ற கெடுபலனையே தரும். சந்திரன் பெண்கிரகம் என்பதால், பெரும்பாலும் பெண்குழந்தைகள் அதிகம் பிறக்கும்.
செவ்வாய்
ஐந்தில் செவ்வாய் இருப்பது ரத்த சம்பந்தமான நோயை பரம்பரை வியாதியாகக் கொடுக்கும். புத்திர சோகத்தை-பயம், பதட்டத்தைத் தரும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் எதிரியை உருவாக்கும். சனி, செவ்வாய் சேர்க்கை முறையற்ற வாழ்க்கை,முறையற்ற சிந்தனைகள், சமூகத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடுத்தும். ஏளனமான வாழ்க்கை வாழநேரும். சுபகிரகப் பார்வை, குருமங்கள யோகம் அரசாங்க நன்மையையும், சந்திரமங்கள யோகம் பணம், புகழ், அந்தஸ்தையும், சுக்கிர, புதன் சேர்க்கை கலையறிவையும் உண்டாக்கும். எதிர்காலத்திற்கேற்ற பலன்களைத் தானாகச் செயல்படுத்தும் ஆற்றல் தரும்.
புதன்
ஐந்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் மிகச் சிறந்த அறிவாளி. நினைத்ததை முடிக்கும் பேராற்றல் மிக்கவராக இருப்பார். தனித்துவமான பெயர், புகழ், அந்தஸ்து பெறுவார். அனைத் துத்துறை அறிவாற்றல், நுட்பம் பெற்றவர். ஆன்மிகத் துறையில் சிறந்து விளங்குவார். நல்ல எண்ணம் கொண்ட உத்தமராக இருப்பார். சுபகிரகப் பார்வை, சேர்க்கை, பூர்வபுண்ணிய பலத்தால் பூர்வீகத்தை பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக் கக்கூடியவராக இருப்பார். தன்மானம் மிக்கவர். சிறந்த படைப்பாளி. புதாதித்திய யோகத்தால் புகழ் பெறுவார். பாவகிரகப் பார்வை, சேர்க்கை முட்டாளாக மாற்றிவிடும். குடும்பத்திற்குத் தொல்லைதரக் கூடியவராக வாழ்வார். நல்லவழிகளில் செயல்படாமல் தீயவழிகளில் செயல்பட்டு மதிப்பை இழப்பார். புதன் கெட்டால் புத்தி கெட்டு பல இழி செயல்களால் துன்ப மடைவார்.
குரு
புத்திரகாரகன் குரு ஐந்தில் நின் றால் புத்திர தோஷத் தைத் தரும். தாமத மான குழந்தை பாக்கியமானது அறிவாளியான- உலகம் போற்றும் குழந்தையாகப் பிறக்கச் செய்யும். சுப கிரகப் பார்வை, இணைவு, சுப ஆதிபத்தியங்கள், ஐந்தாமதிபதி குரு சாரம் பெறுதல் வாரிசு யோகத்தைத் தரும். குரு, சூரிய சாரம்பெறுதல், மறைவிட அதிபதி சாரம்பெறுதல், பாவ கிரகங்கள் வலுப்பெற்று பார்வை, இணைவு பெறுதல் போன்றவை புத்திர சோகத்தைத் தரும். ஐந்தில் குரு நின்று ஒன்பதாமிடம், பதி னொன்றாமிடம் மற்றும் லக்னம் ஆகியவற்றைப் பார்வையிடுவார். இதனால் ஜாதருக்கு பூலோகத்தில் பிறந்து கிடைக்கவேண்டிய பாக்கியம், திடீர் அதிர்ஷ்டம், லாபம், கீர்த்தி, புகழ் போன்றவை தானாகக் கிடைத்துவிடும்.
சுக்கிரன்
ஐந்திலுள்ள சுக்கிரன் பெரும்பாலும் பெண்குழந்தை பாக்கியத்தை அதிகம் தருகிறது. பெண்குழந்தை பிறந்த பின் குடும்பத்திற்கே அதிர்ஷ்டம் உண்டாகும். தாயார், சகோதரி, மனைவி, மகள், பேத்திகளால் ஆதாயம் பெறுவர். உலகத்தின் அனைத்து சுகபோகங்களையும் பெறுவர். வெளி நாட்டு வாழ்க்கை, சொகுசான விஷயங் கள் அனைத்தையும் அனுபவிக்கக்கூடிய கட்டாயநிலை வரும். ஐந்தாமிட சுக்கிரனுக்கு சுப கிரகப் பார்வை கிடைத்தால் நினைத் ததை முடிக்கும் ஆற்றலையும், நினைத்ததை சாதிக்கும் திறனையும் தந்துவிடுகிறது. புதையல் யோகம், ஆடம்பர- அலங்கா ரப் பொருட்களால் லாபம் கிட்டும். சுபகிரக இணைவானது, திறமையால் கலைத்துறையில் சாதனைகள் பல புரிய வழிவகுக்கும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை, மட்டமான சிந்தனைகளைக் கொடுத்து, இழிவான தொழில்செய்து, அதிர்ஷ்டத்தால் சுகபோகியாக வலம்வருவார்.
சனி
ஐந்தில் சனி இருப்பது புத்திர தோஷத் தைத் தந்துவிடும். அடங்காத பிள்ளைகள், பெற்றோர் ஆசைப்படி நடக்காத பிள்ளை களைப் பெறுவார். அதேநேரம் சிலருக்கு அரசாங்க நன்மையைத் தரும். சனி சுபகிரகப் பார்வை பெற்றால் பிள்ளைகளும் அரசாங்கப் பதவிபெற்று, ஒழுக்கம், நேர்மையுடன் இருப்பார்கள். பூர்வீக இடம், அதன்மூலம் வருவாய், நன்மைகள் உண்டாகும். குலதெய்வ அருள் கிட்டும். காவல் தெய்வங்கள், அசுரனை வீழ்த்தும் ஆக்ரோஷமான தெய்வ வழிபாடுகள் வெற்றியைத் தரும். சனி முடவனாக இருப்பதால், ஏதாவது குறையுள்ள பிள்ளைகள் சிலருக்குப் பிறக் கும். சனி கர்மவினைகளைப் பிரதிபலிக்கும் என்பதால், நாம் செய்த பாவ- புண்ணிய அடிப்படையிலேயே வாழ்க்கை இருக்கும்.
ராகு
ஐந்திலுள்ள ராகு நாகதோஷத்தைத் தந்து அதனால் புத்திர தோஷம் தருவார். ராகு நின்ற அதிபதியின் தன்மை மற்றும் சுபகிரகப் பார்வை, சேர்க்கையைப் பொருத்துப் பதவிகள் அமையும்.கெட்டவர்கள் மத்தியில் வாழும் நல்லவராகவும், நல்லவர்கள் மத்தியில் வாழும் கெட்டவராகவும் வாழநேரும். நல்லது செய்வதற்கும், சில நேர்மையான விஷயங்களைக்கூட மறைமுகமாகச் செய்யவேண்டிய சூழல் வரும். அஞ்சாமல் தான் நினைத்த இலக்கை அடைவார். சுபத்தன்மை பெற்ற ராகு சொகுசான வாழ்க்கையையும், பாவ வலுப்பெற்ற ராகு வாழ்க்கையில் சோதனையும் வேதனையையுமே தரும். ஐந்தாமிட ராகுவின் தசையில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தந்து பெயர், புகழ், அந்தஸ்தை வாரிவழங்குவார். எதிர்பாராத பல திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படும். துர்க்கை, காளி வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
கேது
ஐந்தில் கேது இருப்பவர்கள், ""நம்ம வாழ்க்கை அவ்வளவுதான்'' என நினைக்கும் கடைசி நேரத்தில், பூர்வபுண்ணிய அருளால், குலதெய்வ ஆசியால், நெருங்கிவந்த தீமைகள் யாராவது ஒருவரால் தடுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுவிடுவார். ஞானகாரகரான கேது ஆரம்பகால வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைக் கொடுத்துப் பற்றற்றவராக மாற்றி, பிறருக்கு அறிவுரை, ஆலோசனை கொடுக்குமளவு புத்தி தெளிவைத் தருவார். சுபகிரகச் சேர்க்கை, பார்வை ஞானியாகவும், சுபயோக போகத்தை அனுபவிக்கும் பலமிக்கவராகவும் மாற்றிவிடும். கடுமையான நாகதோஷத்தால் புத்திர தோஷத்தைத் தருவார். இருந்தபோதும் அதற்கேற்ற மனநிலையையும் சேர்த்தே வழங்கிவிடுவார். தன் குற்றத்தைத் தானே ஒப்புக்கொள்ளும் தைரியம் கொண்டவர். யாரையும் எளிதில் அவமானப்படுத்த விரும்ப மாட்டார். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். கேது தன் தசையில் உடல் ரீதீயான பிரச்சினைகளைக் கொடுப்பார்.
பரிகாரம்
சில நூற்றாண்டுகளுக்குமுன்பு புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராகுவின் திருநாகேஸ்வரம், கேதுவின் கீழ்ப்பெரும்பள்ளம்சென்றுவரச் சொன்னதன் நோக்கம், அவை கோவிலாக மட்டுமின்றி மருத்துவமனையாகவும் இருந்தன. அங்கு அதற்கான மருத்துவம், மருத்துவ மூலிகை கள்இருந்தன.ஒரே பாதிப்பு கொண்டவர்களை ஒரே இடத்தில் சந்திக்க வைப்பதன்மூலம், உடல்நிலையையும் மனநிலையையும் சீராக வைத்துக்கொள்ளத் தேவையான மருத்துவ ஆலோசனைகள், நடைமுறை வாழ்க்கை யைப் பகிர்ந்துகொண்டு, துன்பத்தை மறந்து இன்பத்தைப்பெற வழிவகை செய்தது.
ஐந்தாமிடத்தில் இருக்கும் கிரகங்கள், ஐந்தாமிடத்தைப் பார்த்த கிரகங்கள், ஐந்தாமிடம் பெற்ற சாரம், கேது நின்ற ஐந்தாமதிபதி, நடக்கும் தசாபுக்தி ஆகியவற்றைக் கணக்கிட்டு, எந்த கிரகத்தால் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறதென கண்டறிந்து, அந்த கிரகத்தின் பாவத் தன்மையைக் குறைப்பதற்கான வழிபாடுகள், உணவுப் பழக்க வழக்கம், மந்திரங்களைப் பின்பற்றினால் எளிதாக பாதிப்பிலிருந்து மீண்டுவிடலாம்.
செல்: 96003 53748