ஐந்தாமதிபதி என்னும் பஞ்சமாதிபதி ஒரு ஜாதகத்தில் சிறப்பாக அமைய வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பிறந்தபின் தானும் நன்றாக வாழ்ந்து, தன்னுடைய நகலான வாரிசுகளையும் பூமியில் நல்லமுறையில் வாழவைக்க வேண்டும். தான் வாழமுடியாத நல்ல வாழ்க் கையைத் தன் சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் என்னும் ஆசையுடன், சிந்தனையு டனே பலரும் வாழ்ந்து மறைகிறார்கள்.
ஒருவருக்கு ஐந்தாமதிபதி நன்றாக இருந்தால்தான் புத்திர பாக்கியம் கிடைக் கும். ஐந்தாமிடம் நன்கு அமைந்தால்தான் ஆண்வாரிசு கிடைக்கும். என்னதான் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமென பேசிக்கொண்டாலும், தனக்கென வரும்போது ஒரு ஆண்பிள்ளையாவது வேண்டுமென நினைக்காத மனிதர்கள் இல்லை.உண்மையில் புத்திர பாக்கிய மென்பது என்னவென்றால் ஆண்- பெண் என இரு குழந்தைகளையும் பெற்றெடுப்பது தான். 'எனக்கு இரண்டும் ஆண் குழந்தைகள்; எனக்கு புத்திர தோஷமில்லை' என சொல்வது தவறு. ஆண்- பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கான கடமையைச் செய்வதுதான் புத்திர பாக்கியம். புத்திர பாக்கியத்தைப் பற்றி ஐந்தாமிடத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஐந்தாமிடம்
ஐந்தாமிடத்தில் நிற்கும் கிரகங்கள், அதனுடன் சேர்ந்த கிரகங்கள், ஐந்தாமிடத்தைப் பார்த்த கிரகங்களின் அடிப்படை யிலும்; ஐந்தாமதிபதி நின்ற இடத்தைப் பொருத்தும் பூர்வபுண்ணிய பலம், புத்திர பாக்கியம் கிடைக்கும். ஐந்தாமதிபதி பன்னிரண்டு பாவங்களிலும் எந்தெந்த வீட்டில் நின்றால், என்ன பலன்களைத் தருமென்பதை அறிந்தால் ஜாதகரின் புத்திர பாக்கியப் பலனையும், பஞ்சமாதிபதியான ஐந்தாமிடத்தின்மூலம் வாழ்க்கைப் பலன்களையும் அறியலாம்.
ஐந்தாமதிபதி லக்னத்தில் நின்றால்...
பூர்வபுண்ணிய அருள் பெற்றவர். நல்ல எண்ணம், நல்ல அறிவு, ஆற்றல் மிக்கவராக, யாரையும் நோகடிக்க விரும்பாத வராக இருப்பார். பிறர் குறிப்பறிந்து செயல் படக்கூடியவர். நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல பழக்க வழக்கம், ஒழுக்கம் கொண்டவ ராக இருப்பார். நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்து பிள்ளைகளால் பெருமை யடைவார். வாரிசு யோகம் கிடைக்கும். புத்திரர்கள் நல்ல பதவி, அந்தஸ்து, பக்தி, பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஜாதகர் கடைசிவரை பெற்றோர்களை கவனித்துக்கொள்ளும் பிள்ளைகளை ஈன்றெடுப்பர். பிறருக்கு அறிவுரைசொல்லித் திருத்தும் ஆசானாகவும், மகானாகவும், அரசாங்க விருது பெறக்கூடிய தகுதி படைத்த வராகவும் இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். சுப கிரகங்களின் பார்வை, சேர்க்கையானது நற்பலனை அதிகப்படுத்தும். பாவகிரகப் பார்வை, சேர்க்கையானது நற்பலனை சேதப்படுத்தி நஷ்டத்தையும் கஷ்டத்தையுமே தரும்.
இரண்டு
பூர்வீக இடத்தால் லாபம் கிடைக்கும். பூர்வபுண்ணிய பலத்தால் தானும் தன் புத்திரர்களும் நல்ல வருமானம் பெறுவார் கள். குடும்பம் நல்ல முன்னேற்றமடையும். பிள்ளைகளால் நற்பெயர் கிட்டும். பிள்ளை கள் உழைப்பால் பூர்வீகநிலம் மீட்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். நல்ல கல்வி, அறிவான பேச்சுத்திறன் படைத்தவராக இருப்பார். குடும்பத்திற்கு ஏதாவதொரு வழியில் அரசாங்கப் பணம் கிடைக்கும். முன்னோர்கள் வழிபாடு, குலதெய்வக் கோவில் அமைத்து வழிபாடு செய்வர். கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள். பாவகிரகம் வலிமைபெற்றால் பொருளாதாரக் கஷ்டத்தை தானும் பிள்ளை களும் அடைவார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர் வாழுமிடத்தில் வாழநேரும்.
மூன்று
மூடநம்பிக்கை கொண்டவர். சோம்பல் நிறைந்தவர். கெட்ட எண்ணம்கொண்டு, கெட்டவழியில் பணம் சம்பாதித்து,கெட்ட பெயர் எடுப்பார்கள். புத்திர தோஷமும் புத்திர நஷ்டமும் புத்திரர்களால் தொல்லை யும் அனுபவிப்பர். பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். புராணம், சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவராகக் காட்டிக் கொள்வர். சுபகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் ஓரளவு நல்லவராகவும் சந்தான பாக்கியம் பெற்றவராகவும் இருப்பர். மூன்றாமிடத்தில் ஐந்துக் குடையவன் கெட்டால் உடன்பிறந்த வரால் தானும், தன் பிள்ளைகளும் தொல்லையை அனுபவிப்பர். பூர்வீக நஷ்டம் ஏற்படும். வாழ்க்கையில் போராடிக்கொண்டே இருக்க நேரும். தைரியமிக்கவராகக் காட்டிக்கொள்வர். உண்மையில் வேறுவழியின்றி அனுசரித்து வாழ்ந்துகொண்டிருப்பர்.
நான்கு
குடும்பத்தில் அனைவரையும் மகிழ்வித்து, தானும் மகிழ்வுடன் வாழ்வர். உறவினர் களிடம் பாசம், பண்புமிக்கவராக வாழ்ந்து அனைவரிடமும் நற்பெயர் பெறுவர். மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை, நல்ல குழந்தைகள் பெறுவர். அழகான- அன்பான- அறிவான குழந்தைகளைப் பெற்று, அனைவரையும் மதித்து ஊரோடு ஒத்துவாழ்வர். நிலபுலன்கள், வண்டி வாகனங்களுடன் சொகுசான வாழ்க்கை வாழ்வர். பெரிய மகான்களிடம் ஆசிபெற்று, நன்மைகளைச் செய்யும் நல்லவராகப் பிறப்பர். அரசாங்கப் பணி, அரசாங்க நன்மை கிட்டும். அரசிய லில் பிரபலமானவராக இருப்பர். நல்ல தசாபுக்தி வந்தால் திடீர் பணக்காரராகவும், திடீர் பண்பாளராகவும் மக்களால் புகழப் படுவர். பாவகிரக வலுப்பெற்றால் ஊரால் ஒதுக்கிவைக்கப்படுவர். அரசாங்கத்தால் தொல்லையும், பிள்ளைகளால் இம்சை களையும் அனுபவிப்பர்.
ஐந்து
ஐந்தாமதிபதி ஐந்தில் வலுவாக இருந் தால் பிரபலமானவராகவும், அரசாங்கத் தால் போற்றப்படுபவராகவும், மக்களுக்காக சேவை செய்பவராகவும் இருப்பர். பெரிய அரசாங்கப் பதவியிலும், அரசியல் தலைவராக வும்,நல்ல எண்ணம் கொண்ட மக்கள் சேவகராகவும் பிறப்பர். புத்திரர்களும் நல்ல முன்னேற்றமடைவர். தான் சேர்த்துவைத்த சொத்துகளை வீணாக்காமல் சேமித்து விரிவடையச் செய்யும் பிள்ளைகளைப் பெறுவர். புத்திர தோஷம் சிலருக்கு ஏற்பட்டாலும், சிலர் அறிவாளியான நல்ல குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவர். சுற்றுப்புறம் நல்லவர்களால் சூழப்பட்டு நல்ல வாழ்க்கை பெறுவர். கெட்ட எண்ணம் கொண்டவர்களால் பாதிப் படைய மாட்டார்கள். நல்ல அறிவாளிகள். பெற்றவர்களையும் பெரியவர் களையும் மதித்து நடப்பர். நிலபுலன், சொத்து, பூர்வீக நன்மைபெற்று பெருவாழ்வு பெறுவர். பலம்குறைந்து பாவர்கள் பார்வை, இணைவு பெற்றிருந்தால் மேற்கண்ட பலன்களில் பாதிப்பையே தரும்.
ஆறு
ஆறாமிடத்தில் அமர்ந்தால் ஜாதகர் பிறந்த திலிருந்தே நோயால் பாதிக்கப்படுவார். குடும்பத் தில் மருத்துவச் செலவு இருந்துகொண்டே இருக்கும். நல்ல எண்ணம் இல்லாத கோழை யாகவும், பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் கய வராகவும், பிறர் பொருளை அபகரிக்கும் அரக்கனாகவும் இருப்பார். தானும் நிம்மதி யின்றி, தன்னைச்சுற்றி இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டார். ஜாதகர் நோயால் பாதித்து, நோயுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பார். அதாவது புத்திர தோஷ மிக்கவராக இருப்பார். பிள்ளைகளும் அன்பு, நன்றி இல்லாதவராகப் பிறப்பர். பாவகிரக வலுப்பெற்றால் குடும்பத்திற்கு எதிரான செயல், அரசாங்கத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு அரசாங்க தண்டனை பெறுவர். எதற்கும் அஞ்சாத- மான ரோஷமற்றவராக இருப்பர். ஜாதகர் ஏதாவது ஒரு வழியில் நோய், எதிரி, கடனால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார். சுபகிரகப் பார்வை, சேர்க்கைபெற் றால், தன்னைவிட தன் பிள்ளைகள் நல்லவராக இருந்து குடும்பத்தை சிறப்படையச் செய்வார்.
ஏழு
ஐந்தாமதிபதி ஏழில் இருந்தால் மனைவி யால் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் லாபமடை வார். குலதெய்வ அருளால் நல்ல மனைவி கிடைப்பார். சுப வலுப்பெற்றால், நல்ல மனைவி, சொந்தத்தில் குணமுள்ள பெண்ணாகக் கிடைப்பார். உதவிகரமான துணைவி தோழி யாக அமைவார். நல்ல இல்லற வாழ்க்கை, புத்திர பாக்கியம், சந்தோஷம் உண்டாகும். எதிர் பாராத நன்மைகள் அடிக்கடி நிகழும். பாவகிரக வலு ஐந்தாமிடத்திற்கு ஏற்பட்டால் பூர்வீக நஷ்டம் தரும். வாழ்ந்துகெட்டவராக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கவிடாமல் செய்யும். தன்மானம் பேசி, தன் மானத்தை இழப்பர். அதிக சோதனைகள், துன்பங்கள் திருமணத் திற்குப்பிறகு ஏற்படும். மனைவிக்கு ஜாதகரால் தொல்லை உண்டாகும். புத்திரதோஷத்தைத் தரும். மனைவி குடும்பத்தினரால் மரியாதை இழக்கநேரும். சிலநேரங்களில் மனைவியால் அவமானப்படுவர்.
எட்டு
ஐந்தாமதிபதி எட்டில் இருந்தால் தந்தை வழி பூர்வீக சொத்துகளால் வீண் வில்லங்கம், நீதிமன்றப்படி ஏறுதல், உறவினர் பகை உண்டா கும். சொந்த பந்தங்களால் வெறுக்கப்படுவர். தன்மான இழப்பு, நஷ்டம், அவமானம், பண இழப்பு அடிக்கடி தரும். தீய தசையும் நடந்தால் வீண் அவமானம் ஏற்படும். குடும்பம் சிரமங்களை அனுபவிக்கும். கடுமையான புத்திரதோஷம் உண்டாகும். சுபகிரகப் பார்வை, சேர்க்கை இல்லையென்னாறால் குழந்தைப் பிறப்பு தாமதமாகும். குழந்தை பிறந் தாலும் ஏதாவதொரு பாதிப்புடன் இருக்கும். காலம் முழுவதும் பிள்ளைகளால் எதாவது தொல்லையை அனுபவித்துக்கொண்டே இருக்கநேரும். குடும்பம் நடத்த பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும். அதாவது நோய், எதிரி, கடனால் ஜாதகர் அவதிப்பட்டுக்கொண்டே இருப்பர். உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி வறுமையில் வாழநேரும். சுபகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் ஓரளவு அனுசரித்து காலத்தை ஓட்டலாம். சுபதசை நடந்தால் வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.
ஒன்பது
ஐந்தாமதிபதி ஒன்பதில் இருந்தால் பூர்வபுண்ணிய பலம்பெற்று, நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல எண்ணம் கொண்டவர்களாக வளர்ந்து, நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுப்பர். புத்திர தோஷமின்றி, புத்திரர்களால் நல்ல பெயரெடுப்பர். பிள்ளைகள் பெற்றோர் களை நல்லமுறையில் கவனித்துக்கொள்வர். அறிவாளி. நன்கு படித்து அரசாங்கத்தில் உயர்பதவி பெறுவர். பூர்வீகத்தால் யோகத் தையும், குலதெய்வ அருளால் முன்னேற்றத் தையும் அடைவர். முன்னோர்களின் ஆசைகளை நிறைவேற்றி, பிரிந்த குடும்பத்தை இணைத்துக் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்வர். நல்ல மனம் படைத்தவர். மக்களுக்கு தன்னார்வமாக சேவை செய்வர். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து பெற்று, நீதி, நேர்மைமிக்கவராக, பெரியவர் களின் ஆசிர்வாதம் பெற்றவராகத் திகழ்வர். பாவகிரகச் சேர்க்கை, பார்வை தொல்லை தரும்.
பத்து
ஐந்தாமதிபதி பத்தில் இருந்தால் பூர்வபுண்ணிய வலுவால், குலதெய்வ ஆசியால் குடும்பம் நல்ல முன்னேற்றமடையும். குணவான். தவறானவழியில் எதையும் வீணாக்காமல், யாரையும் கெடுக்காமல், எல்லாருக்கும் நல்லவராக இருப்பர். புத்திர தோஷமின்றி, புத்திரர்களால் பாதிப்பின்றி இருப்பர். கௌரவமான வாழ்க்கை பெறுவர். அரசாங்க நன்மை, அரசாங்கப் பதவி, அரசியல் வெற்றி என ஏதாவது ஒருவகையில் அரசு உதவி, நன்மை குடும்பத்திற்கு ஏற்படும். ஆன்மிக சேவை, மக்கள் சேவையில் ஆர்வமுடன் இருப்பர். புத்திரர்கள் நல்ல பதவி, புகழடைவர். சுபகிரக வலுத்தன்மை பெற்றால் அதிக நன்மை கிட்டும். பாவகிரக வலு நன்மைகளை பலவீனப்படுத்தும்.
பதினொன்று
ஐந்தாமதிபதி பதினொன்றில் இருந்தால் அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தியுண்டு என்பார்கள். ஏனென்றால் பூர்வபுண்ணிய பலமும், தெய்வ அருளும் பூரணமாக ஐந்தாமிடத்திற்குக் கிடைப்பதால்தான். புத்திர பாக்கியமும், புத்திரர்களால் லாபமும் அடைவர். ஜாதகரும் அவரது பிள்ளைகளும் நல்ல முன்னேற்றமடைவர். தலைமுறை தலைமுறைக்கு சொத்துசேர்த்து வைப்பர். நல்ல மனம் படைத்தவர்கள். சுயநலமின்றி இருக்கும் உத்தமர்கள். பூர்வீகத்தால் லாபம், பூர்வீக இடத்தைக் காப்பாற்றுவர். குலதெய்வக் கோவிலைப் புனரமைப்பு செய்வர். அரசாங்க உயர்பணி, அரசாங்க நன்மை பெறுவர். குடும்பம் அமைதியாகவும்,ஆனந்தமாகவும் வாழ விரும்புவர். பெரிய மனிதர்களின் அன்பு, ஆதரவுபெற்று பெரிய மனிதராக மாறுவர். சுபகிரகப் பார்வை, சேர்க்கை அதிர்ஷ்டத் தையும், பாவ வலு திடீர் நஷ்டத்தையே தரும்.
பன்னிரண்டு
ஐந்தாமதிபதி பன்னிரண்டில் இருந்தால், கடுமையான புத்திர தோஷத்தைத் தரும். அதாவது கருத் தங்காமல் விரயம் ஏற்படும். சிலருக்கு புத்திரர்களால் விரயத்தையும், தொல்லையையும் தரும். பிள்ளைகளை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடமுடியாது. அதாவது புதிய தொழில் ஆரம்பித்தால் நஷ்டத்தில்தான் முடியும். தீய தசைகள் வந்தால் அதிக நஷ்டத்தைத் தருமென்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. புதிய, வேற்று பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்களது சேர்க்கை பெரிய நஷ்டத்தையும், கஷ்டத்தையும் தந்துவிடும். உற்றார்- உறவினர் பகை, நண்பர்களால் அவமானம், நஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் நம்பி வாழக்கூடாது. சுபகிரகப் பார்வை, சேர்க்கை பெற்று வலுத்தால் நஷ்டம், கஷ்டம் குறைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
பரிகாரம்
புத்திர பாக்கியம் இல்லாதவர்களை இழிவாகப் பேசும் குணம் நம் நாட்டில்தான் அதிகமுண்டு. குழந்தை பெறமுடியாத ஆணை ஆண்மையற்றவராகவும், குழந்தை பெற இயலாத பெண்ணை மலடிஎனவும் பேசி ஏளனம் செய்யும் கூட்டமும், பிள்ளை இல்லாதவர்களிடம் தங்கள் பிள்ளைகளின் பெருமைபேசி நோகடிக்கும் கூட்டமும் நிறைய உண்டு. ஒரு மனிதன் பிறந்ததற்கான அடையாளம், பிள்ளைகள் பெற்று வாழ்வதுமட்டும்தான் என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். இருப்பவர்கள்,இல்லாதவர்களை அவமானப் படுத்துவதைப் பெருமையாக நினைக்கி றார்கள்.
ஐந்தாமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானம்.
அதாவது முன்ஜென்மத்தில் நாம்செய்த கர்மாவின் அடிப்படையில் இப்பிறவி எடுக்கிறோம். நம்முடைய நடவடிக்கை, செயல்பாடுகளில்தான் பூர்வபுண்ணியம் நமக்குக் கிடைக்கும். இப்பிறவியில் ஆணவத்துடன் அடுத்தவரை அவமானப் படுத்தினால், அடுத்த ஜென்மத்தில் நமக்கும் இதே நிலைதான். இந்த உலகத்தில் அடுத்தவர்களைஅவமானப்படுத்துவது, ஏளனப்படுத்துவது போன்ற பெரிய பாவச்செயல் வேறெதுவுமில்லை. முன்ஜென் மத்தில் செய்த பாவத்திற்குத் தற்போது அனுபவிக்கிறோம். அவர்கள் இன்று நம்மை ஏளனப்படுத்துகிறார்கள் என்பதற்காக நாமும் பழிவாங்க எண்ணினால் மீண்டும் மீண்டும் துன்பத்தில்தான் விழவைக்கும். யாரோ எப்படியோ நினைக்கட்டும். அதைபற்றிக் கவலைப்படாமல் இந்த ஜென்மத்தில் நல்லது செய்துவிடுங்கள். பிள்ளை இல்லையென வருந்துபவர்கள் தத்து எடுத்துக்கொள்வதே மிகச்சிறந்த பரிகாரம்.
செல்: 96003 53748