சென்ற இதழ் தொடர்ச்சி...

சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

குரு மழைப்பலன்

"ஆக்கும் துலையும் மழை பெரிதாம்

அப்பம் மலியும் நிறை குன்றும்!'

14-4-2017 முதல் 4-10-2018 வரை குரு கோட்சாரநிலையில் துலா ராசியில் சஞ்சாரம் செய்யும் வருடத்தை சித்திரை ஆண்டு என்று தமிழில் குறிப்பிடுகின்றனர். குரு துலா ராசியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில், தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், உட்பகுதிகளிலும் மழை பெய்யும். கடலில் காற்றழுத்தம் உருவாகி மழை பெய்யும். திருநெல்வேலிலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலும், தென்மேற்கு சார்ந்த தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டப் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்யும்.

Advertisment

துலா ராசியில் குரு சஞ்சாரம் செய்யும் காலத்தில், விவசாயம், தானியப் பயிர்கள் செழிக்கும். படியில் அளந்து வியாபாரம் செய்யும் நெல், சோளம், உளுந்து, எள், துவரை போன்ற இன்னும் பல தானியப் பயிர்கள் எல்லாம் நன்கு விளைந்து, உற்பத்தி அதிகமாகி விலை குறைவாகும்.

எடை போட்டு வியாபாரம் செய்யும் பொருட்களான இரும்பு, வெள்ளி, தங்கம் போன்றவை குறைவாக உற்பத்தியாகி, தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகமாகும்.

"வீக்கும் தேளில் பசி மிடிநோய்.'

4-10-2018 முதல் குருபகவான் கோட்சாரநிலையில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியடைந்து சஞ்சாரம் செய்வார். இந்த ஓராண்டு காலத்தை வைகாசி ஆண்டு என்பர்.

Advertisment

விருச்சிக ராசியில் குரு சஞ்சாரம் செய்யும் காலத்தில் மழை குறைவாகப் பெய்யும். இதனால் விவசாயம் குறையும்; உற்பத்தி குறையும்... மக்கள் புதுவிதமான நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

இக்காலங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும், அதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலும் மழை அதிகமாகப் பெய்து மக்களை சிரமப்படச் செய்துவிடும்.

அல்லது நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, குடிநீருக்குக்கூட பஞ்சமாகி மக்கள் கஷ்டப்படுவார்கள். பொதுவாக நீரால் சிரமம் உண்டாகும்.

சனி மழைப்பலன்

"காரி கேட்டை முதலைந்தும்

சுருதிப் பசிநோய் மழையரிதாம்.'

Advertisment

சனி கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் மழை பெய்யாது.

மழைநீர் இல்லாமல், நிலத்தடிநீர் குறைந்து வறட்சி நிலையாகி பயிர்கள் காய்ந்துபோகும். நாட்டில் ஆட்சியாளர்களுக்கிடையேயும், மக்களுக்குள்ளும் பகை அதிகமாகும். போர் சூழும் அபாயம் உண்டாகி, நாட்டில் அமைதி கெடும்.

அரசியலில் போலியான தலைவர்கள், ஆன்மிகத்தில் போலிலியான குருமார்கள், ஏமாற்றிப் பிழைக்கும் நபர்கள் தண்டிக்கப்படுவார்கள். மதம், இனக் கலவரங்கள் உண்டாகி அமைதி கெடும். ஆளும் அரசியல் கட்சிகளில் பிளவுகள் உண்டாகும்.

கிரகண மழைப்பலன்

rain

விளம்பி வருடத்தில் மூன்று சூரிய கிரகணங்கள், இரண்டு சந்திர கிரகணங்கள் உண்டாகும். இதில் மூன்று சூரிய கிரகணங்களும் இந்தியாவில் தெரியாது. ஒரு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.

27-7-2018 ஆடி மாதம் 11-ஆம் தேதி பௌர்ணமி திதி, வெள்ளிக்கிழமை, உத்திராட நட்சத்திரத்தில் உண்டாகும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். இந்த கிரகணத்தால் தேசத்தில் உண்டாகும் பலனை அறிவோம்.

"எழிற் பார் ஆடிப்பனை கேட்டை

மறுவில் புனர்தம் அபிசித்து

மண்ணும் வோணம் மகேந்திரமாம்

விறள்கோள் பாம்புமிகத் தீண்டில்

வெள்ளம் பெரித்து விளையும் பார்.'

ரோகிணி, உத்திராடம், அனுஷம், கேட்டை, புனர்பூசம், திருவோண நட்சத்திரங்களில் சூரியன், சந்திர கிரகணம் உண்டானால் இதற்கு மகேந்திர மண்டலம் என்று பெயர். உத்திராட நட்சத்திர நாளில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு மாவட்டங்களிலும், நாடுகளிலும் நல்லமழை பெய்யும். நதிகளில் வெள்ளம் காணும்.

"செப்பு முலையாய் ஊடறுக்கில்

திண்ணம் உலகம் சிதைத் திடுமே.'

சூரிய, சந்திர கிரகணங்கள் காலை சூரிய உதய நேரத்தில் உண்டானால் அந்த வருடம் மழை குறைவு. நடுப்பகலில் கிரகணம் பிடித்தால் நல்ல மழை பெய்து பூமி, பயிர்கள் செழிக்கும். மாலை நேரத்தில் கிரகணம் பிடித்தால் அரசர்களுக்கும், நாட்டை ஆள்வோருக்கும் மரணம் உண்டாகும். நள்ளிரவில் கிரகணம் பிடித்தால் பூமியில் இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம், வெள்ளம், தீயில் சேதம், போர் விபத்துகளால்- பஞ்சபூதங்களால் பாதிப்பு உண்டாகும் என்பது பாடல் பலனாகும்.

இந்த விளம்பி வருடம், சந்திர கிரகணம் உத்திராட நட்சத்திரத்தில் நள்ளிரவு 12.00 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 3.50 மணிக்கு முடிகிறது. நள்ளிரவு கிரகணம் பிடிப்பதால் பூமி சேதமாகும். உத்திராடம் வடக்கு திசை நட்சத்திரமாகும். இதனால் வடக்கு, வடமேற்கு மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களிலும் நிலநடுக்கம், பெருமழையால் சேதம், காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் தேசத்திற்கு பாதிப்பு, மதம், இனக் கலவரங்களால் மக்கள் பாதிப்பு அடைவார்கள்.

மகர ராசியில் கிரகணம் தீண்டுவதால் தேசத்தின் தெற்குப் பகுதியிலும் பாதிப்புகள் உண்டாகும். போலிலி ஆன்மிக சாமியார்கள், போலிலி மதவாதிகள், போலிலி குருமார்கள், மதவாத அரசியல்வாதிகள் கண்டம், கஷ்டம் அடைவார்கள். பொதுவாக வடக்கு, தெற்கு மாநிலங்களில் உள்ள போலிலியானவர்கள் நோயால் கஷ்டம், மரணபாதிப்பு அடையலாம். இந்தியாவில் பிரபலமான ஒருசிலர் பாதிப்பினை அடைவார்கள்.

"துளங்கும் அரசர் செங்கோல்கள்

சோமன் தனையும் அருக்கனையும்

தளங்கொல் அரவம் பதினைந்தில்

சாரில் பசிநோய் தப்பாதே.'

சந்திர கிரகணம் ஏற்பட்டு பதினைந்து நாளில் சூரிய கிரகணம் உண்டானால், தேசத்தை ஆள்வோர்க்கும், அரசர்களுக்கும் கண்டங்கள், கஷ்டங்கள் ஏற்படும். செங்கோல் வீழ்ந்து ஆட்சி, அதிகாரம் பறிபோகும். அரசியல் மாற்றங்கள் உண்டாகும்.

மக்கள் புதுவிதமான நோய்களாலும், பசியினாலும் பாதிக்கப்பட்டு கஷ்டம் அடைவார்கள் என்பது பாடல் பலனாகும்.

இந்த விளம்பி வருடம் 27-7-2018 ஆடி மாதம், 11-ஆம் தேதி பௌர்ணமி திதியில் சந்திர கிரகணம் உண்டாகின்றது.

சந்திர கிரகணம் முடிந்த பதினைந்தாவது நாளில், விளம்பி வருடம் 11-8-2018 ஆடி மாதம் 26-ஆம் தேதி அமாவாசை திதியில் சூரிய கிரகணம் உண்டாகிறது.

சித்தர்கள் பாடல்படி சந்திர கிரகணம் முடிந்த அடுத்த பதினைந்தாவது நாளில் தொடர்ந்து சூரிய கிரகணம் உண்டாவதால், தேசத்தை ஆள்வோர்க்கும், அரசர்களுக்கும், பெரும்பதவியில் இருப்பவர்களுக்கும் கண்டம், நோய், சிரமங்கள் உண்டாகும். பிரபலமானவர்களுக்கும் சிரமம்தான்.

ஆடி மாதம் உண்டாகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றபோதும், கிரகணப்பலன் பாதிப்பை உண்டாக்கும். இப்போது தேசத்தை ஆள்வோர் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், அரசனாக இருப்பவர்கள் அந்தப் பதவியை அனுபவிக்க முடியாது. ஆட்சி மாற்றமோ அரசன் மாற்றமோ நடைபெறும்.

திதி, மழை, புயல்

பூமியில் மழை பெய்வதற்கு வான்மேகம் துணை. வான்மேகத்தை, கடலில் ஒன்றுபடுத்தி பூமியில் கொண்டுவந்து மழையாகப் பெய்யச் செய்வது புயல்காற்று ஆகும். கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை (புயல்) எந்த நாட்களில் உருவாகும் என்பதை அறிவோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி, தேய்பிறை பிரதமை, அஷ்டமி, நவமி, அமாவாசை, வளர்பிறை பிரதமை, அஷ்டமி, நவமி என வரும் இந்த திதி நாட்களில் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல்நிலை பெரும்பாலும் உருவாகும். காற்று வீசும் திசையில் மேகம் நகர்ந்து, தரைப்பகுதியில் மழை பெய்யும் நாட்களை அறிவோம்.

29-5-2018, 30-5-2018 ஆகிய நாட்களில் நாட்டின் தென்மேற்கு, மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி, காற்று வலுவடைந்து, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை, தெற்கு கேரளப் பகுதிகளில் பருவமழை பெய்யும்.

வாசகர்கள் இந்த வருடப் பஞ்சாங்கத்தில் இத்திதிகள் வரும் நாட்களை அறிந்து, மழை உருவாகும் நிலையைத் தெரிந்து கொள்ளவும்.

23-9-2018, 24-9-2018 ஆகிய நாட்களில் நாட்டின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தம், புயல்சின்னம் உருவாகி, சென்னை, செங்கல்பட்டு, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, வடகிழக்குப் பகுதிகளிலும், வடக்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் காற்றுடன் மழை உண்டாகும்.

7-10-2018, 8-10-2018 ஆகிய நாட்களில் வங்கக் கடலில் காற்றழுத்த நிலை உருவாகி, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசை மாவட்டங்களில் புயல்காற்றுடன் மழை பெய்யும், கடற்கரைப் பகுதிகளில் பாதிப்பு தரும்.

புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்த திதிகள் வரும் நாட்களில் வங்கக்கடலிலில் வடகிழக்குப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி, சென்னை, கடலூர், புதுச்சேரி, ஆந்திர வடமேற்குப் பகுதியில் வீசும் இந்த காற்றின் வேகத்தைப் பொருத்தும், திசைப்போக்கைப் பொருத்தும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

1-11-2018 முதல் மழை கிரகமான சுக்கிரனுக்கு முன் ராசிகளில் வெப்ப கிரகமான சூரியன் சஞ்சாரம் செய்வதால், வானில் உள்ள நீர் சத்தினை தன் வெப்பசக்தியால் கொஞ்சம் குறையச் செய்யும். இதனால் மழைப்பலன் குறைவாகக் கூடும். ஆனால், விருச்சிகத்திலுள்ள குருவின் பலனால், இக்காலங்களில் எதிர்பாராதவிதமாக புயல்மழை உண்டாகும்.

பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் பூமியில் மழையின்றி, வறட்சி ஏற்பட்ட சமயத்தில், சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி கிரகங்களை தன் சித்த சக்தியால் இடம்மாற்றி வானில் சஞ்சாரம் செய்ய வைத்து பூமியில் மழை பெய்யச் செய்தார் என்று ஒரு கதை கூறப்படுவதுண்டு.

"மகப்பேறும் மழைப்பேறும் மகாதேவனுக்குக்கூட தெரியாது' என்று மக்கள் பழமொழி கூறுவார்கள். மழைப்பேறு, மகாசக்தி வாய்ந்த சித்தர்களுக்குத் தெரியும்.

செல்: 99441 13267