உலக உயிர்களைப் படைத்தது பிரம்மனாக இருக்கலாம். ஆனால் மனித மனதை ஆள்வது ஆசையாகவே இருந்துவருகிறது. ""ஆடி அடங்கும் வாழ்க்கையடா- ஆறடி நிலமே சொந்தமடா'' என்பவை கவிஞர் சுரதாவின் பாடல் வரிகள். ஆடி அடங்கும் மனித வாழ்க்கையில் கோடிகோடியாக சம்பாதித்தவர்கள் என்றாலும், கோடித் துணியையே பார்க்காதவர்கள் என்றா லும் வாழ்நாள் முடிவில் ஆறடி நிலம் மட்டுமே சொந்தம். அவ்வளவு ஏன்- எரித்து சாம்பலாக்கிவிட்டால் ஆறடிகூடத் தேவையில்லை. நிலையற்ற, நிரந்தரமற்ற மனித வாழ்வில் முடிவில் மனிதன் தன்னுடன் எடுத்துச்செல்வது, தான் சேர்த்துவைத்த பாவ- புண்ணியங்களை மட்டுமே. பிரபஞ்ச நியதி இவ்வாறிருக்க, அதைப்பற்றிய எந்த உணர்வும் சிந்தனையுமில்லாமல், சொத்து சேர்ப்பதென்பது மனித வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்துவருகிறது.

ஒரு மனிதர் தான் வாழ்ந்ததற்கு அடையாளமாக விட்டுச்செல்லும் பொருட்களை அவருடைய வாரிசுகள் பயன் படுத்துவது உலகியல் மரபு. ஒருவருடைய ஜாதகத்தில் விதிப்படி சொத்து சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு நான்குவிதமான நிலைகளில் சொத்து கிடைக்கும்.

hh

1. சுய உழைப்பால் உருவாக்கும் சொத்து.

2. பினாமி சொத்து.

3. பூர்வீகச் சொத்து.

4. வாரிசு இல்லாத சொத்து.

1. சுய உழைப்பால் உருவாக்கும் சொத்து

ஜனனகால ஜாதகத்தில் குரு, சனி சம்பந்தம் பெறுவதுடன், செவ்வாயுடன் நான்காம் பாவகம் வலிமைபெற்றவர்கள் தன் வாழ்நாளில் சுய உழைப்பால் சொத்தை உருவாக்குவார்கள்.

2. பினாமி சொத்து

ஜனனகால ஜாதகத்தில் 4, 8, 11-ஆம் பாவகங்களுக்கு செவ்வாய் சம்பந்தமிருந்தால் விபரீத ராஜயோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியமும் உண்டாகும். ஜனனகால ஜாதகத்தில் 4, 8, 12-ஆம் பாவகங்களுக்கு சம்பந்தம் இருந்தால் விபரீத ராஜயோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குப்பிறகு கைநழுவிப்போகும் அல்லது யாருக்கும் பயன்படாத, பயன்படுத்தமுடியாத சொத்தாகவே பல தலைமுறைகளுக்கு இருக்கும். மேற்கண்ட நிலைமாற கோட்சார குருவின் சம்பந்தம் 4, 8, 12-ஆம் இடங்களுக்குக் கிடைக்கும் காலங்களில், தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சந்நிதியில் சிவப்புத் திரிகொண்டு மண் அகலில் ஒன்பது இலுப்பையெண்ணெய் தீபமேற்றி மனமுருகி வேண்டிவர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கைமேல். இந்தப் பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும்.

3. பூர்வீகச் சொத்து

ஒருவருக்கு தாய்- தந்தை மற்றும் அவர்கள்வழி முன்னோர்களால் கிடைக்கும் சொத்தே பூர்வீகச் சொத்தாகும். ஜனனகால ஜாதகத்தில் 5, 9-ஆமிடங்களுடன் செவ்வாய் சுப வலிமை பெறுவதுடன் குரு, சனி சம்பந்தம் இருப்பவர்கள் வம்சாவளியாக பூர்வீகச் சொத்தைப் பயன்படுத்தும் பாக்கியம் பெற்றவர்களாவார்கள். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துகள் அதிகம் இருந்திருந்தாலும், அவர்கள் பிறந்தபின் பூர்வீக சொத்து முழுவதும் ஒவ்வொன்றாகக் கைவிட்டுப்போய்விடும். ஜனனகால ஜாதகத்தில் 5-ஆமதிபதி 6-ல் இருந்தால் பூர்வீகச் சொத்தை கடனுக்காக இழக்க நேரும். 5-ஆமதிபதி எட்டில் இருந்தால் பூர்வீகச் சொத்தால் அங் காளி, பங்காளி வம்பு, வழக்கு, அவமானம், சிறைதண்டனை கிடைக்கும். 8-ஆமிடத்திற்கு சுபகிரக சம்பந்தம் இருப்பவர்களுக்கு வழக்கில் வெற்றியுண்டாகும். ஆனால் பல வருடங்களாக வழக்கு நடத்தி சொத்தின் மதிப்பிற்குமேல் பணம் செலவுசெய்ய நேரும். 5-ஆமதிபதி 12-ல் நின்றால் பூர்வீக சொத்தை இழந்து, பூர்வீகத்தைவிட்டு வெளியேற நேரும். ஐந்தாமதிபதி அல்லது ஐந்தாமிடத்தில் நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்ற கிரகங்கள் நிற்பது, திதி சூன்யத்தால் பாதிப்பு, லக்னத்தில் சூரியன், ஒன்பதில் சூரியன், சனி, அல்லது சனி, ராகு- கேது அல்லது 9-ஆம் பாவகத்துடன் சம்பந்தம்பெறும் சூரியன், சனி, ராகு- கேதுக்கள், சூரியன், சந்திரனுடன் ராகு, கேது, சனி போன்ற கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் குடும்ப முன்னோர்களின் கர்மாவை சுமப்பவர்கள்; குடும்ப பாரத்தை அதிகம் சுமப்பவர்கள்; முன்னோர்களின் கர்மாவைக் கழிப்பதற்காகவே உருவான வாரிசுகளாகும். இவர்கள் பூர்வீக சொத்தால் அடையும் பயனைவிட துன்பமே அதிகம். மேலே கூறிய அமைப்பைப் பெற்றவர்கள் பூர்வீக சொத்து களை வைத்திருக்காமல் விற்றுப் புதிய சொத்துகளை வாங்கிக் கொள்ளவேண்டும். அல்லது பூர்வீகத்தில் வசிக்கக்கூடாது. 5-ஆமிடத்திற்கு ராகு- கேது சம்பந்தமிருந்தால் தொடர்ந்து துர்க்கையை அல்லது காளியம்மனை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் நலமுண்டாகும். சொத்துகளை இழந்தோரும், ஏமாற்றிப் பிடுங்கப்பெற்றோரும், வரவேண்டிய நியாயமான பூர்வீகச்சொத்துகள் வராமல் தவிப்போரும், இழந்த செல்வம், புகழ், கௌரவம் அனைத்தையும் திரும்பப்பெற, வாராஹி அம்மனுக்கு எட்டு சனிக்கிழமை கள் காலை 6.00-7.00 அல்லது இரவு 8.00-9.00 மணியளவில் மண் அகலில் கருநீலத் துணியில் சிறிது வெண்கடுகை முடிந்து, நல்லெண்ணெய் தீபமேற்றி வழி பட்டால் இழந்த அனைத்தையும் பெறலாம். கோவிலுக்குச் செல்லமுடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தீபமேற்றி வழிபடலாம்.

4. வாரிசு இல்லாத சொத்து

பொதுவாக நூறு வருடங்களுக்குமுன்பு ஒவ்வொருவரும் தம் குடும்பத்திற்கு பத்துமுதல் இருபது வாரிசுகளை உருவாக்கினார்கள் என்பதால், 21 தலைமுறைக்கு வாரிசுகள் வாழ்ந்தார்கள். 60 வருடங்களுக்கு முன்புவரை ஒரு குடும்பத்தில் 5 முதல் 10 வாரிசுகள் இருந்ததால் 13 தலைமுறைக்குப் பின்பே வாரிசில்லாத நிலை இருந்தது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டிற்கு ஓரிரன்டு குழந்தைகளே இருப்பதால் ஏழு தலைமுறை உருவாகுவதே பெரிதாகிவிட்டது. திருமணத்தடையும் குழந்தைப் பேறின்மையும் மிகுதியாகிவிட்டமையால், மனிதகுலம் தனது தலைமுறையை, வாரிசுகளை உருவாக்குவது கேள்விக்குறியாகி வருகிறது. இனி திரைப்படங்களில் காண்பிப்பதுபோல் ரத்த பந்தம், பாச உணர்வுகளுக்குக் கட்டுப் படாத, "குளோனிங்' குழந்தைகள் பிறப் பதை யாரும் தடுக்கமுடியாதென்று மட்டும் புரிகிறது. இருப்பவர்- இல்லாதவர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அதிர்ஷ்டத்தை எல்லாரும் விரும்பலாம். ஆனால் அதிர்ஷ்டம் எல்லாரையும் விரும்புவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. உழைக்காமல் கிடைக்கும் அனைத்தும் அதிர்ஷ்டத்தில் அடங்கும். அனைவரும் விரும்பும் அதிர்ஷ்டம் பணமாகவோ பொருளாகவோ இருக்கலாம். ஜாதகம் பார்க்க வருபவர்களில் பலர் அதிர்ஷ்டப் பணம் அல்லது சொத்து கிடைக்குமா என்று எதிர்பார்கிறார்கள். வெகுசிலர் புதையல் பற்றிப் பேசுவார்கள். ஜனன கோட்சாரரீதியாக அல்லது தசாபுக்திரீதியாக ஒருவருக்கு எட்டாமிடம் இயங்கும்போது அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை மிகைப்படுத்தலாக இருப்பதால் உழைக்கும் எண்ணம் குறையும். அதிர்ஷ்டத் தைத் துரத்திச்செல்ல ஆரம் பிப்பார்கள். எட்டாமிடத்திற்கு புதன், ராகு சம்பந்தம் இருப்ப வர்களுக்கும் உயில் சொத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.

வாரிசு இருக்கும் எவரும் தமது உடைமைகளைப் பிறருக்கு எளிதில் வழங்க முன்வருவதில்லை. வாரிசு இல்லாத வர்களுடைய உடைமைகளே பிறரைச் சென்ற டையும். வாரிசில்லாத ஒருவர் தன் சுய விரும்பத்தினால் தனது சொத்து சுகங்களை உயில்மூலம் தான் விரும்பும் நபருக்கு மாற்றித் தரலாம் அல்லது நிர்பந்தத்தால் எழுதிக் கொடுக்கலாம் அல்லது ஏமாற்றி எழுதி வாங்கலாம். ஜனனகால ஜாதகத்தில் 3, 5, 8-ஆம் பாவகங்கள் சம்பந்தம் பெறுபவர்களுக்கு மட்டுமே பிள்ளையில்லா சொத்து கிடைக்கும். இதுபோல் வாரிசு இல்லாதவர்களின் சொத்து எல்லாருக்கும் பயன்படுவதில்லை. மிகச்சிலருக்கு மட்டும் பயன் தருகிறது. ஏன் பலருக்கு பயன்படுவதில்லை? வாரிசு இல்லாதவர்களின் சொத்தை பயன்படுத்த லாமா போன்றவற்றைப் பார்கலாம்.

சுமார் மூன்று மாதங்களுக்குமுன்பு தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் சோழிப் பிரசன்னம் பார்க்க அனுமதி பெற்றிருந்தார். சார்வரி வருடம், தை மாதம், 12-ஆம் நாள், திங்கட்கிழமை 25-1-2021 அன்று, மிருகசீரிட நட்சத்திரம், துவாதசி திதியில் காலை 9.50-க்கு பிரசன்ன கர்த்தா வந்தார். உதய லக்னம் மீனம். செவ்வாய் ஓரை. செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம் என்பதால், அன்றைய கிரக நிலவரம் சொத்தை மையப்படுத்திய பிரசன்னம் என்பதை உணர்த்தியது.

கர்த்தா கொண்டுவந்த பூஜைப் பொருட் களில் குற்றம், குறை இருந்ததால் குலதெய்வ அனுக்கிரகம் இல்லையென்பது புரிந்தது. பிரசன்ன கர்த்தாக்கள் கொண்டுவரும் பூஜைப் பொருட்கள் பிரசன்னத்திற்கு மிக முக்கியம். பிரசன்னத்தை குல, இஷ்டதெய்வம் மற்றும் முன்னோர்களின் ஆசிபெற்றுப் பார்க்கப்பட வேண்டும். பிரசன்ன கர்த்தா பிரசன்னத்திற்கு நேரில் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வது போல் பூஜைப் பொருட்களைக் கொண்டு வந்தால் குலதெய்வம் சோழியில் நின்றுபேசும்.

மேற்படி நபருக்கு பார்க்கப்பட்ட பிரசன்னத்தில் சோழி லக்னம் ரிஷபம். சோழிப் பிரசன்னத்தைப் பொருத்தவரை சோழி லக்னத்தில் நின்ற கிரகத்தையும், பிரசன்னத்தின் கதாநாயகன் மாந்தியையும் வைத்து, அஷ்டம பாதக ஸ்தானங்களையும் கொண்டு ஜாதகரின் பிரச்சினைகளை எளிதில் அறியமுடியும்.

சோழி லக்னமும் உதய லக்னமும் 3, 11-ஆக இருந்தால் பிரசன்ன வேதை இல்லை. மாந்தியைத் தவிர அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவின் பிடியில் நிற்பது, கர்த்தா பலவித மான கடும் நெருக்கடிகளிலிருந்து மீளமுடியா மல் இக்கட்டான நிலையில் இருப்பதைக் கூறியது.

சோழி லக்னம் அடுத்து தொடப்போவது மாந்தி என்பதால், கர்த்தா கண்டம், அவமானத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தியது.

சோழி லக்னத்தில் மூன்றாமதிபதி சந்திரன் ராகுவுடன் நின்றதால், குடும்பத்தில் எந்தவித மாற்றமும், முன்னேற்றமும், வளர்ச்சியுமில் லாமல் கடன் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையையும், எதிர்காலம் பற்றிய பய உணர்வையும் காட்டியது.

சோழி லக்னத்தை- பாதக ஸ்தானத்தில் சூரியன், சனி, புதனுடன் இணைந்த குருவும், ஏழில் நின்ற கேதுவும் பார்ப்பதால், கர்த்தா பூர்வீகம், கர்மா, தொழில், பொருளாதாரம் தொடர்பான கேள்வியைப் பிரதானப்படுத்த விரும்புகிறார் என்று புலனானது.

பாதக ஸ்தானத்தில் நின்ற சூரியன், சனி, புதன், குரு போன்ற கூட்டணி கிரகங்களுக்கு திரிகோணத்தில் சந்திரன், ராகு சேர்க்கை இருப்பது பித்ரு தோஷம். குடும்பத்தில் ஒற்றுமையின்மை, நிரந்தரத் தொழிலில்லாத நிலை, சுபகாரியத் தடை போன்றவற்றைத் தெளிவுபடுத்தியது. கர்த்தா தன்னுடைய கேள்விகள் இவைதான் என்பதையும் உறுதிப்படுத்தினர்.

பலன்

பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகக் கூட்டணிகள் பூர்வீகம் தொடர்பான பிரச்சினை கள் என்பதை உணர்த்தியது. அதன்படி ஒன்பதில் குரு, சனி, சூரியன், புதன் நிற்பதால், "பல வருடங்களாகத் தீர்க்கமுடியாத, தீராத ஒரு உயில் சொத்துப் பிரச்சினை உள்ளதா?' என்று கேட்டேன். "ஆமாம்' என்றார். கர்த்தாவின் தந்தை பிறந்த மூன்று வருடங்களில் அவருடைய தாய் இறந்துவிட்டதால் தந்தை மறுமணம் செய்துகொண்டார். வாரிசில்லாத தந்தையின் தாய்மாமா தனது தங்கையின் ஆண் குழந்தை கள் இருவரையும் தத்தெடுத்து வளர்த்து திருமணம் முடித்து, தனது சொத்தை இருவருக் கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட கர்த்தாவின் தந்தைக்கு 85 வருடங்களுக்குமுன்பு கிடைத்த அதிர்ஷ்ட- வாரிசில்லாத சொத்தால் இதுவரை தனக்கும் தன்னுடன் பிறந்த ஆறு உடன்பிறந்தவர்களுக்கும் எந்த பயனுமில்லை என்று கூறினார்.

பல கோடி மதிப்புள்ள அந்த சொத்துகள் ஏன் பயன்படவில்லை? வாரிசில்லா சொத்தாக இருந்தாலும் சொத்தின் உரிமையாளர் இஷ்டப்பட்டுதானே தங்கையின் பிள்ளை களுக்கு எழுதிக் கொடுத்தார்? வாரிசில்லாத சொத்து யாரையும் வாழ விடாதா? வாரிசில் லாத சொத்தைப் பயன்படுத்தலாமா?

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406