"கடந்த ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ தெரிய வில்லையே? அதற்காகத்தான் இப்போது இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்' என்று புலம்பாத நபர்களே கிடையாது. ஏதாவதொரு இடத்தில் நிச்சயம் இதுபோல ஒரு வார்த்தையை நாம் கூறியிருப்போம். நம்முடைய முன்ஜென்ம பாவவினைதான் இந்த ஜென்மத்தில் தொடர்கிறது என்னும் நம்பிக்கை நம்மில் பலருக்கும் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட முன்ஜென்ம பாவவினை என்னவெல்லாம் செய்யும்?

தவறு செய்யாத மனிதர்களே கிடையாது.

எல்லாரும் ஏதோவொரு தவறை செய்து கொண்டேதான் இருப்போம். அதற்கான தண்டனைகள் மறுஜென்மத்திலும் தொடரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Advertisment

siva

அதற்காகத்தான் மறுபடியும் பிறந்து கொண்டிருக்கிறோம். அந்த பாவவினைகளால் நிகழ்காலத்தில் நமக்கு எண்ணற்ற கெடுபலன்கள் உண்டாகும். காரியத்தடை உண்டாகலாம். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் தோல்விகளைத் தழுவ நேரிடும். வேலையில் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் திடீரென சிக்கல்கள் உண்டாவது, வேலை பறிபோவது, தொழில் தொடங்கலாம் என்றால் அதிலும் இடைஞ்சல், பிரச்சினைகள் ஏற்படுவது என்று தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். கடன் தொல்லை இருக்கும். என்னதான் ஓடி உழைத்து சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகி கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்கெல்லாம் காரணம் முன்ஜென்ம பாவவினையாக இருக்கலாம்.

அப்படி இருக்கும்பட்சத்தில் அதனை எப்படி நிவர்த்தி செய்வது? என்ன பரிகாரம் செய்யலாம்? எப்படி வெற்றிபெறலாம் என்பவற்றைக் காணலாம்.

குலதெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். நம்மில் பலரும் குலதெய்வம் என்னவென்று தெரியாமல் இருந்துகொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்பட்சத்தில் நம்முடைய குறைகளை யார் வந்து தீர்த்துவைப்பார்கள்? நம்முடைய குலதெய்வம் என்றும் நம்முடன் இருந்து கர்மவினையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். எனவே குலதெய்வத்தைக் கண்டுபிடித்து பரிகாரத்தைச் செய்து, அவர்களின் அருளை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள். இதனால் கர்மவினை குறையும்.

முன்னோர் வழிபாடு

முன்னோர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை சரியாகச் செய்துவருகிறோமா என்று கேட்டால், இல்லையென்றுதான் கூறுவோம். நம்மால் முடிந்த அளவுக்கு நம்முடைய முன்னோர்களுக்கு அமாவாசை யன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்குரிய பிரத்தியேகமான முக்கிய நாட்களிலாவது எள், தண்ணீர் இறைத்து முன்னோர் ஆசி பெற்றுக்கொள்ளவேண்டும். இதன்மூலம் நம்முடைய கர்மவினை குறையும். பசுவுக்கு வெல்லம், வாழைப்பழம், அகத்திக்கீரை ஆகியவற்றை தொடர்ந்து 21 நாட்கள் கொடுக்கவேண்டும். தினமும் காகத்திற்கு மதிய உணவில் சிறிது வைக்கவேண்டும். இவையும் கர்மவினையைக் குறைக்கக்கூடிய பரிகாரங்களாகும்.

பரிகாரம்

இந்தப் பரிகாரத்தை முறையாக மேற்கொள்வதன்மூலம் கர்மவினையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். அமாவாசை தினத்தன்றுதான் இதைச் செய்யவேண்டும். அமாவாசையன்று முன்னோர்களுக்குத் திதி கொடுத்துவிட்டு, ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு முன்ஜென்ம பாவ வினையிலிருந்து காக்கவேண்டி பிரார்த்தனை செய்துகொள் ளுங்கள். பின்னர் வீட்டிற்கு வந்து பூஜையறையில் உட்காரவேண்டும். குல தெய்வத்தை மனதார நினைத்துக்கொண்டு, "என்னுடைய கர்மவினைப் பாவங்களிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக' என்று வேண்டிக்கொண்டு, ஒன்பது அரசமர இலைகளை மூன்று மூன்றாக, மூன்று அடுக்காக விரித்துக்கொள்ளுங்கள். அதன்மீது கல் உப்பைப் பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உதிரிப் பூக்களை, இலைகளைச் சுற்றிப் போட்டுக்கொள்ளுங்கள். அந்த உப்பின்மேல் அகல்விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றுங்கள். ஒவ்வொரு இலையிலும் இதேபோல் செய்து ஒன்பது அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். இதனை ஒன்பது அமாவாசையன்று செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் நம்முடைய பாவ வினைகளிலிருந்து விடுபட்டு நாம் மோட்சம் பெறலாம்.

நாம் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் பொழுது அங்கிருக்கும் சண்டிகேஸ்வரரை கட்டாயம் வணங்கவேண்டும். அவர்முன், "என்னுடைய முன்ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்ந்து மோட்சம் பெறவேண்டும்' என்று மனதார வேண்டிக்கொண்டு, இருபது பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். நாம் எதைப்பற்றி வேண்டுகிறோமோ இல்லையோ- நம்முடைய பாவங்கள் நீங்கவேண்டும் என்று கட்டாயம் வேண்டிக்கொள்ளவேண்டும். இவ்வாறு வேண்டுவதனால் கர்மவினை நீங்கி வாழ்வில் நிம்மதியடையலாம். இந்த ஜென்மத்தில் நல்லதையே நினைத்து நல்லதையே செய்து நற்பிறவி அல்லது பிறவாநிலை பெறலாம்.

செல்: 94443 93717