சென்ற இதழ் தொடர்ச்சி...

கேது- கன்னி

கன்னி ராசியில் கேது சஞ்சரிக்கும் காலங்களில், கல்வித்துறை, பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிரமம், தடைகள், வழக்குகள் உண்டாகும். எழுத்தாளர்கள் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள். நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகள் உண்டாகும். புதிய மாநிலம், மாவட்டங்கள் உதயமாகும். மனை, பிளாட், சொத்து சம்பந்தமான வழக்குகள் அதிகமாகும்.

கேது- விருச்சிகம்

Advertisment

விருச்சிக ராசியில் கேது சஞ்சாரம் செய்யும் வருடங்களில், தீவிரவாத இயக்கங்களுக்குத் தடை விதிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தடைகள், வழக்குகள் உண்டாகும். இராணுவம், காவல்துறை உயரதிகாரிகள் வழக்குகளில் சிக்குவார்கள். பிரபல ரவுடிகள், திருடர்கள், கடத்தல்காரர்கள் வழக்குகளில் சிக்குவார்கள்.

கேது- தனுசு

தனுசு ராசியில் கேது சஞ்சுôரம் செய்யும் காலங்களில் மதத்தலைவர்கள், மத குருமார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். அவர்களிடையே வழிபாடு சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள், வழக்குகள் உண்டாகும். கோவில், தர்மஸ்தாபனம், மடத்தின் சொத்துகள் சம்பந்தமான வழக்குகள் உண்டாகும். வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் தடைப்படும். கோவில்கள் பராமரிப்பின்றிப் போகும். இவர்கள் வருமானம் தடைப்படும்.

Advertisment

கேது- மகரம்

மகர ராசியில் கேது சஞ்சாரம் செய்யும் காலங்களில் தொழில்துறைகள் பாதிப்படையும். தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்குமிடையே பிரச்சினைகள், வழக்குகள் உண்டாகும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். நிலக்கரி, எரிவாயு, கனிமவளத் துறைகளில் பல வழக்குகள் உண்டாகும்.

கேது- கும்பம்

கும்ப ராசியில் கேது சஞ்சாரம் செய்யும் காலங்களில் விஞ்ஞானம், விண்வெளித்துறை செயல்களில் தடைகள் ஏற்படும். விண்வெளி ஆராய்ச்சி செயல்கள், பரிசோதனைகள் தோல்வியடையும். கடத்தல்காரர்கள், சூதாட்டக்காரர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருட்கள் வியாபாரம் செய்வோர், திருட்டு வி.சி.டி, ஆபாசப் படங்கள் தயாரிப்போர், விபச்சாரம் செய்வோர் என சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்வோர் சட்டத்தின்பிடியில் சிக்குவார்கள். இவர்களுக்கு உதவி செய்தவர்களும் வழக்குகளில் சிக்குவார்கள்.

கேது- மீனம்

மீன ராசியில் கோட்சார கேது சஞ்சாரம் செய்யும் வருடங்களில் மதம் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும். மதத்தலைவர்கள், மதகுரு மார்கள், மடாதிபதிகள் வழக்குகளில் சிக்குவார்கள். வெளிநாடு செல்வோர், புண்ணிய யாத்திரை, தீர்த்த யாத்திரை, சுற்றுலா செல்பவர்களுக்கு பிரச்சினைகள், தடைகள் உண்டாகும். ஆலயங்களில் பூஜை தடையாகும். கோவில்கள் பராமரிப்பின்றிப் போகும். தர்ம ஸ்தாபனங்களுக்கு நெருக்கடி, சிக்கல்கள் உண்டாகும்.

planets

2020-ஆம் ஆண்டு வான்வெளியில் கிரகங்களும், நட்சத்திரங்களும், பூமியும், இயற்கை நிர்ணயித்தபடி இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துவிட்டது. இதற்கு "கோவிட்- 19' என்ற வைரஸ் தொற்றுநோய்தான் காரணம்.

பலரும், "இந்த உலகில் வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளை ஆன்மிகம், விஞ்ஞானம், ஜோதிடம்மூலம் அறிந்து, வரும்முன்பே கூறமுடியும் என கூறுவார்கள். இந்த கொரோனா வைரஸ் நோய் மக்களை பலிவாங்கப் போகிறது என்று ஏன் கூறவில்லை என்று கேட்கிறார்கள்.

விஞ்ஞானத்தால் ஒரு நிகழ்வு உருவான பின்புதான் அதனை ஆராய்ச்சி செய்து, காரணத்தை அறிந்து கூறமுடியும். உதாரண மாக, புயல் வருவதற்கு முன்பே, புயல் வரும் என்று விங்ஞானத்தால் கூறமுடியாது. புயல் உருவான பின்தான் அதனை அறிந்து, அது செல்லும் பாதையையும் தன்மையையும் கூறமுடியும். அதேபோன்று ஆன்மிகத்திலும் பிரச்சினை வந்த பின்பு, பரிகாரம்தான் கூறுவார்கள்.

மனிதர்களின் எதிர்கால வாழ்வின் நிகழ்வுகளை தமிழ் சித்தர்கள், தங்களின் பிரபஞ்ச, வானியல் ஆய்வால், அனுபவ அறிவால் அறிந்து ஏற்கெனவே நமக்குத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இந்த பூமியைப் பற்றிய நுணுக்கமும், வானியல் ஆராய்ச்சியும், அதனைப் பற்றிய அனுபவ அறிவும் கொண்டவர்கள் அனைவராலும் இதனைக் கூறமுடியும்.

இந்த பூமியில் வருங்காலத்தில் நடைபெறப் போகும் இயற்கைப் பேரிடர்களைப் பற்றி அறிந்துகொள்ள உலகிலுள்ள நாடுகள், நகரங்கள், ஊர்களைக் குறிப்பிடும் ராசி, கிரகம், நட்சத்திரங்களை அறிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடும் எந்த ராசிக்குள் வரும் என்பதை, அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகள் எந்த தீர்க்கரேகைக்குள் வருகின்றன என்பதை அறிந்து, அந்த நாடு இருக்கும் ராசியை அறிந்துகொள்ளலாம்.

க்ரீன்விச் பாகையைக் கொண்டு, அந்த ராசியைக் கொண்டு எந்த திசையில் அந்த நாடு உள்ளது, ஊர்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடக்கப் போகும் நன்மை, தீமை, நிகழ்வுகள், அவரின் முற்பிறவி பாவ- புண்ணியப் பதிவுகளின் அடிப்படையில் இப்பிறவியில் நடக்கும் என்றும்; உலக அளவில் பொதுவாக நடக்கும் இயற்கைப் பேரிடர்கள் அந்தநாட்டு மன்னனும், அந்த நாட்டு மக்களும் செய்யும் பாவ- குற்றச் செயல்களால் அப்போதைக் கப்போதே நடக்கும் என்றும் தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர்கள் கூறியுள்ளார்கள். மக்கள் நல்ல மன்னனைத் தேர்ந்தெடுத் துக்கொள்வதால், இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளலாம். இதுவே பரிகாரம்.

கடந்த இதழ்களில் குரு, சனி, ராகு, கேது கிரகங்கள் தனித்த நிலையில் ராசிகளில் சஞ்சாரம் செய்யும்போது என்ன நிகழ்வுகள் உண்டாகும் என்பதை அறிந்தோம். இப்போது இந்தக் கிரகங்கள் கோட்சார நிலையில் இணைந்து சஞ்சாரம் செய்யும் காலங்களில் என்ன நிகழ்வுகள் உலகில் உண்டாகும் என்பதைச் சுருக்கமாக அறிவோம்

குரு + ராகு

கோட்சார குருவும் கோட்சார ராகுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளில் சஞ்சாரம் செய்யும்போது அந்த ராசியும், அதற்குத் திரிகோண ராசிகள் குறிக்கும் திசையில் உள்ள நாடு, நகரம், ஊர்களில் மதக்கலவரங்கள் உண்டாகும். தீவிரவாதம் அதிகமாகும். வெடிகுண்டு, தீ விபத்து, பூகம்பம், சுனாமி, புயல், வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால் மக்கள் பாதிப்படைவார்கள். அந்த நாட்டு அரசாங்கம் பொய், பித்தலாட்டங்களைச் செய்து மக்களை ஏமாற்றி கஷ்டப்பட வைக்கும். அரசன் சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சி செய்வான். மக்கள் நலன் மன்னனால் புறக்கணிக்கப்படும். மக்கள் மன்னனை எதிர்த்துப் போராடுவார்கள். நீதிமன்றங்கள் செயல் இழந்துவிடும். அநீதி தலைமையேற்கும். மக்களுக்கு நீதி கிடைக்காது. மக்கள் தங்கள் சொத்து, உரிமைகளை இழப்பார்கள். விபச்சாரம் தொழிலாகும். முறைதவறி குழந்தைகள் அதிகமாகப் பிறப்பார்கள். (செயற்கை கருத்தரித்தல்). பெற்ற குழந்தையை தாய் தூக்கியெறிவாள். ஊனமுற்ற குறைபாடுகளுடைய குழந்தைகள் அதிகம் பிறக்கும். அதிகமான பெண்கள் விதவையாவார்கள். கன்னிப்பெண்கள் கற்பிற்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். வழிபாட்டுத் தலங்களில் தீ விபத்து, இடி, மின்னல் தாக்கி சேதம் உண்டாகும். ஆலயங்கள் இடிபடும் அல்லது இடிந்து விழும். போலி மடாதிபதிகள், போலி ஆன்மிகவாதிகள் அதிகமாக உருவாகுவார்கள். ஆலயங்களில் அனாசார செயல்கள் அதிகம் நடக்கும். ஆலயங்களின் சொத்துகள், சிலைகள் களவு போகும். காவல் காக்கவேண்டிய அரசும், காவலர்களும் களவாடுவார்கள். மதத்தலைவர்களில் ஒருவர் மரணமடைவார். பங்குச்சந்தையில் பல மோசடிகள், ஏமாற்று வேலைகள் நடக்கும். ரிஷப ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும்வரையில் மக்கள் பணம் பறிபோகும். கவனமாக இருக்கவேண்டும். இப்போது, கோட்சார குரு மகரராசியிலும், கோட்சார ராகு ரிஷப ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார் கள். இது குரு, ராகு இணைவாகும். மகரம், ரிஷபம், கன்னி ராசிகள் குறிப்பிடும் நாடுகளில் இதுபோன்று நிகழ்வுகள் உண்டாகும்.

குரு, ராகு கிரகங்கள் கோட்சார நிலையில் நெருப்பு ராசிகளில் இணைந்து சஞ்சாரம் செய்யும்போது தீ விபத்து, உஷ்ணம் சம்பந்தமான நோய்களாலும் பாதிப்பு உண்டாகும்.

நீர் ராசியில் இணைந்து சஞ்சாரம் செய்யும்போது மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு, கப்பல் விபத்து, நீர் சம்பந்தமான நோய்களாலும் பாதிப்பு உண்டாகும்.

காற்று ராசியில் சஞ்சாரம் செய்யும்போது புயல், வெடிகுண்டு, ஏவுகணை, விமானத் தாக்குதல், விமான விபத்துகள், விஷவாயு, காற்றினால் பரவும் வைரஸ் தொற்று நோய்களால் மக்கள் பாதிப்படைவார்கள்.

நில ராசிகளில் சஞ்சாரம் செய்யும்போது நிலச்சரிவு, பூகம்பம், எரிமலை, வறட்சி, பஞ்சம் என நிலம் குறிப்பிடும் நிகழ்வுகளால் மக்கள் துன்பம், மரணமடைவார்கள். இயற்கைப் பேரிடர்களை ராசி, கிரகங்கள், நட்சத்திரங்கள், பஞ்சபூதங்கள் ஒரேநிலையில் ஒன்று சேரும் காலங்களில் உத்பாதங்கள் அதிகமாக நடக்கும்.

குரு + கேது

கோட்சார குருவும் கேதுவும் ஒரே ராசியில் இணைந்திருந்தாலும் அல்லது குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தாலும் அதனை குரு, கேது இணைவாகக் கொள்ள வேண்டும். குரு, கேது இணைவுக் காலத்தில் இந்த ராசிகள் குறிக்கும் நாடு, நகரம், ஊர்களில் என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை அறிவோம்.

மதம் சம்பந்தமான செயல்களில் தடை ஏற்படும். மதக் கலவரங்கள் உண்டாகும். மதத் தலைவர்கள் வழக்குகளில் சிக்குவார்கள். சிறை செல்ல நேரும். மதக்கொள்கைகள் சட்டச் சிக்கல்களை உருவாக்கும். மதவாதி களால் நாட்டில் அமைதி குலையும்.

வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள், உற்சவங்கள் தடைப்படும். புண்ணிய ஸ்தல யாத்ரீகர்கள் சிரமங்களை அடைவார்கள். கோவில் சொத்துகள் வழக்குகளில் சிக்கும். வருமானம் தடைப்படும். தர்மஸ்தாபனம், சமூகத் தொண்டு நிறுவனங்களின் அந்தரங்கங்கள் வெளிச்சத்திற்கு வரும். இவை தடை செய்யப்படும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 99441 13267