"உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது' என சிலர் தங்களின் அதிர்ஷ்டமின்மையை- இயலாமையைக் குறித்து நொந்துகொள்வர்.
"பருவநிலை தெரிந்து வியாபாரம் செய்ய வேண்டியதுதானே' என்றால், "எப்போது மழை பெய்யும்; எப்போது காற்றடிக்குமென்று எனக்கென்ன ஜோசியமா தெரியும்?' என பதிலுக்கு முறைப்பார்கள்.
அப்படியானால் ஜோதிடம் மழை, காற்று, வெயில், பனி, குளிர், பூகம்பம், ஊழி எனும் சுனாமி பற்றியெல்லாம் கூறுகிறதா எனில், இவை பற்றிய குறிப்புகள் ஜோதிடத்தில் மிகக்குறைவாகவே காணக் கிடைக்கின்றன. (பெண்களின் கற்பு பற்றி, வண்டி வண்டியாக எழுதித் தள்ளியிருக் கிறார்கள்). என்றாலும் இருக்கும் குறிப்பு களை வைத்து, பருவநிலை பற்றிச் சொல்லலாம்.
பருவநிலை அல்லது வானிலை என்பது பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, மண் ஆகிய ஐந்து நிலைகளைக் கொண்டது.
மழைக்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் ஆகியவை பருவகாலங் களாகும்.
ஜோதிடத்தில் ராசிகளை நெருப்பு, நிலம், காற்று, நீர் எனப் பிரித்துள்ளனர்.
நெருப்பு ராசிகள்: மேஷம், சிம்மம், தனுசு.
நில ராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம்.
காற்று ராசிகள்: மிதுனம், துலாம், கும்பம்.
நீர் ராசிகள்: கடகம், விருச்சிகம், மீனம்.
கிரகங்களையும் பருவ நிலைக்கேற்பப் பிரித்துள்ளனர்.
சூரியன் - நெருப்பு.
சந்திரன் - நீர்.
செவ்வாய் - நெருப்பு, நிலம்.
புதன் - காற்று.
குரு - ஆகாயம்.
சுக்கிரன் - நீர்.
சனி - காற்று.
ராகு - காற்று, நெருப்பு.
கேது - நெருப்பு, காற்று.
மேலும் ஆகாயத்தை, கண்டாந்த நட்சத்திரப் பாகைகள் குறிப்பதாகக் கூறப்பட்டுள்ளன.
கேதுவை காந்தப்புயல் கூட்டம் என்கின்றனர்; ராகுவை விண்கற்கூட்டம் என்கின்றனர்.
கிரக காலங்கள்
சூரியன் -வெய்யில் காலம்.
சந்திரன் -மழைக்காலம்.
செவ்வாய் - வெய்யில் காலம்.
புதன் -இலையுதிர்க்காலம்.
குரு -பனிக்காலம்.
சுக்கிரன் -வசந்த காலம்.
சனி -குளிர்காலம்.
நட்சத்திரங்களும் பஞ்சபூதத் தத்துவமும்
அக்னி மண்டல நட்சத்திரங்கள்: பரணி, கார்த்திகை, பூசம், மகம், பூரம், விசாகம், பூரட்டாதி.
வாயு மண்டல நட்சத்திரங்கள்: மிருகசிரீடம், புனர்பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி.
வருண மண்டல நட்சத்திரங்கள்: திருவாதிரை, ஆயில்யம், மூலம், பூராடம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.
மகேந்திர மண்டல நட்சத்திரங்கள்: ரோகிணி, அனுஷம், கேட்டை, உத்திராடம், அபிஜித், திருவோணம், அவிட்டம்.
மேற்கூறியவற்றில், அக்னி மண்டல நட்சத்திரங்கள் அக்னி சேதம் தரும்.
வாயு மண்டல நட்சத்திரங்கள் புயல், குறைவான மழை கொடுக்கும்.
வருண மண்டல நட்சத்திரங்கள் நல்ல மழை கொடுக்கும்.
மகேந்திர மண்டல நட்சத்திரங்கள் நன்மை தரும்.
நீர் தத்துவம்
மழை என்பது நீர்ப்பொழிவதைக் குறிப்பது. எனவே கிரகங்களும் ராசிகளும் நீர்த்தன்மையைக் குறித்து, அவை சேரும்போது மழை வருகிறது. சில குறிப்பிட்ட நட்சத்திரம், சில திதிகள், சூரியன் அமர்ந்திருக்கும் சில குறிப்பிட்ட ராசிகள் ஆகியவை ஒன்றுகூடும் நேரத்தை வைத்து மழையைப் பற்றிய விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
நீர் ராசிகளாக கடகம், விருச்சிகம், மீனம் கூறப் பட்டுள்ளன. அடுத்து நீர் கிரகங்களாக சந்திரன், சுக்கிரன் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஒரு நீர் கிரகம் நீர் ராசியில் சம்பந்தம் ஏற்படும்போது, அங்கு மழைபெய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.
இதனுடன் காற்று கிரகமான புதன் அல்லது சனி இணையும்போது காற்றுடன்கூடிய மழை ஏற்படுகிறது.
இதனுடன் பெரும்போக்கான ராகு நீர் ராசிகளிலும், நீர் கிரகங்களுடனும் சம்பந்தப் படும்போது அங்கு பெரும் காற்றுடன், சேதம் ஏற்படுத்தக்கூடிய மழை வெளுத்து வாங்கும். சிலசமயம் இந்த காற்றினால் மழை கலைந்தும் சென்றுவிடும்.
நீரற்ற ராசிகளாக மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் நீர் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும்போது மழை பெய்ய வாய்ப்பில்லை.
மீனம், கடகம், மகரம், கும்பம், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகியவை நீர் சம்பந்த ராசிகள் எனினும், இவற்றின் நீர்த்தன்மை அளவீடு வேறுபாடாக இருக்கும்.
மீனம்- அதிக மழையைக் குறிக்கும். அதற்கு அடுத்து மேலே குறிப்பிட்ட ராசிகளின்படி, மழையின் நீர்த்தன்மை அளவீடு குறைந்து கொண்டே போகும். விருச்சிகத்தின் நீர்த் தன்மை மிகவும் குறைந்த அளவு கொண்டது.
குருவும், புதனும் நீர் ராசிகளில் இருந்தால் நீர் கிரகங்களாகும்.
சந்திரன், சுக்கிரன், நீர் ராசிகளில் உள்ள குரு, புதனைப் பார்க்க நல்ல மழையுண்டு.
சந்திரன், சுக்கிரன் உச்சமானால் நல்ல மழையுண்டு.
சூரியன், புதன், சுக்கிரன் ஒரே ராசி, ஒரே அம்சமாக வந்து, அது நீர் ராசியாகவும் இருந்தால் நல்ல மழையுண்டு.
நீர் ராசியில் நீர்க்கோள் இருந்து, அந்த நீர் ராசி கடகம், மீனமானால் முழு ஆறும் நிரம்பும் என்றும்;
அந்த நீர் ராசி மகரம், கும்பம் எனில் முக்கால் ஆறு நிறையும் எனவும்;
அந்த நீர் ராசி துலாமானால் அரை ஆறு தண்ணீர் இருக்கும் என்றும்;
அந்த நீர் ராசி ரிஷபம், விருச்சிகம் என்றால் கால் ஆறு மட்டுமே நீர் நிறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிறைய கிரகங்கள் நீர் ராசியில் இருந்தால் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு.
சூரியன், மிதுனம், கடகம், சிம்மம், கன்னியில் சஞ்சரிக்கும்போது, அவரை செவ்வாய் கடக்கும்போது மழை ஆரம்பிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ராகு, சனி ஆகியவை நீர் ராசிகளில் இருந்து, அவர் களை நீர் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் பார்த்தால், நிறைய சேதத்துடன்கூடிய மழை பெய்யுமாம்.
சூரியன் நீர் ராசியான கடகத்தில் இருக்க, சந்திரன், ரோகிணி, சுவாதி, மிருகசிரீடத்தில் சஞ்சரிக்கும்போது மழைபெய்ய வாய்ப் புள்ளது.
சனி- காற்று, நெருப்பு ராசிகளில் சஞ்சரிக்கும்போது மழைக்குறைவு உண்டு.
மழை அளவைக் காண பிரசன்னம் போட்டுப் பார்க்கலாம்.
பஞ்சாங்கங்களில் அந்தந்த வருட மழை அளவு பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள்.
நிலத் தத்துவம்
பஞ்சபூதங்களில் நிலத் தத்துவமும் ஒன்று.
12 ராசிகளில் ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகளாக உள்ளன.
பொதுவாக செவ்வாயை பூமிகாரகன் என்று கூறுவோம்.
நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரத்துடன் நீர் கிரகங்களான சுக்கிரனும் சந்திரனும் சம்பந்தம் ஏற்படும்போது நல்ல மழை உண்டாகி, பூமி குளிரும்.
நில ராசிகளுடன், குருவும் ராகுவும் சம்பந்தம் ஏற்பட்டு, குரு சண்டாள யோகம் ஏற்படின் நிலச்சரிவு போன்றவை ஏற்படும்.
பூமிகாரனாகிய செவ்வாயும் ராகுவும் சேர்ந்தாலும் நில சம்பந்தமான பூகம்பம் போன்றவை உண்டாகும்.
சனி, செவ்வாய் இணைந்து, அவர்கள் ராகு அல்லது கேது சம்பந்தம் பெறின் அப்போதும் உலகில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். நில அதிர்வு போன்றவை ஏற்படும். இவ்விளைவு ஏதேனும் ஒருவகையில் நீர் ராசி சம்பந்தம் ஏற்பட்டால், கடலில் நீர் அதிர்வு உண்டாகும். அதனை சுனாமி அல்லது ஆழிப்பேரலை என்பர்.
நெருப்புத் தத்துவம்
பஞ்சபூதங்களில் நெருப்பு ராசியும் ஒன்று. மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசிகள். சூரியன், செவ்வாய், கேது ஆகியவை நெருப்பு கிரகங்கள்.
இதன்மூலம் நெருப்பு ராசிகளும், நெருப்பு கிரகங்களும் சம்பந்தம் ஏற்படும்போது, அவ்விடங்களில் நெருப்பு பற்றி எரிகிறது. இதில் அழிவுக்குரிய கிரகங்களான சனியும் கேதுவும் சம்பந்தப்படும்போது அழிவு அதிக மாகும். இவை சேரும், சம்பந்தப்படும் டிகிரிகள் குறிக்கும் இடங்கள் அதிக சேதத்தை சந்திக்கும்.
ஒவ்வொரு ராசியும், அதனுள் உள்ள டிகிரி களும் ஒவ்வொரு ஊரை, நாட்டைக் குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான்.
நெருப்பு ராசிகளில் நெருப்பு கிரகங்கள் சேரும்போது அதிக வெப்பம், அனல், உஷ்ணம் அதிகரிக்கும். மக்கள் வெப்பம் தாங்காமல் அவதியுறுவர்.
ஆகாயத் தத்துவம்
காற்று என்பதும் ஆகாயத் தத்து வத்தில் வந்துவிடும். காற்று ராசிகள் மிதுனம், துலாம், கும்பம் ஆகும். காற்று கிரகங்கள் புதன், சனி மற்றும் ராகு.
இதன்மூலம் காற்று ராசிகளுடன், காற்று கிரகங்கள் சேரும்போது காற்றின் வீச்சு அதிகமாக இருக்கும். இதனை சுபகிரங்கள் பார்த்தால் இதமான, சுகமான தென்றலாக வீசும். பாவர்கள் பார்வை- குறிப்பாக ராகுவின் சம்பந்தம் நேரிடையாக இருப்பின் பலத்த காற்று மட்டுமல்லாது, பெரும் அழிவு களும் உண்டாகும். ஆகாய சம்பந்தமான இடர்கள் ஏற்படும்.
காற்று ராசிகளில் நீர் கிரக சம்பந்தம் ஏற்பட்டால், ஈரத்தன்மை கொண்ட காற்று வீசும். நெருப்பு கிரக சம்பந்தம் ஏற்பட, அனல் காற்றடிக்கும். பூமிகாரகனான செவ்வாய் நிலத் தத்துவமாக சம்பந்தப்பட, பூமியில் காற்றின் வீச்சு அதிகரிக்கும். செவ் வாயுடன் சேர்ந்த கிரங்களைப் பொருத்து அது அனல் காற்றா, தென்றலா என தெரியக் கூடும்.
இனி, இந்த கோடைக்காலம் நம்மைக் கொளுத்துமா, சற்று குளிர்விக்குமா என்று, பங்குனி முதல் ஆடி மாதம் வரையிலான வானிலையைக் காண்போம்.
2019, பங்குனி மாதம்
(மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை)
இந்த மாத கோட்சாரப்படி நெருப்பு கிரகமான சூரியன் நீர் ராசியில் உள்ளார். மற்ற நீர் ராசிகளில் கிரகங்கள் இல்லை. பங்குனி 8-ஆம் தேதி நீர் கிரகமான சுக்கிரனும் நீர் ராசியைப் பார்ப்பதைவிட்டு, காற்று ராசிக்குள் அங்குள்ள வாயு கிரகம் புதனுடன் புகுகிறார். பங்குனி 6-ஆம் தேதிவரை நெருப்பு கிரகமான செவ்வாய் நெருப்பு ராசியில் இருப்பார். பின், செவ்வாய் நில ராசிக்கு மாறி நிற்பார். சனி, கேது, குரு என்ற வாயு, ஆகாய கிரகங்கள் நெருப்பு ராசியில் கூடியுள்ளனர்.
ராகு என்ற வாயு கிரகம் காற்று ராசியில் உள்ளது. சனி என்ற வாயு கிரகம், இன்னொரு வாயு கிரகத்தையும், ராகு என்ற வாயு கிரகத்தையும் நோக்குகிறார்.
மேற்கண்ட அமைப்பின்படி, நீர் ராசிகளில் நீர் கிரகப் பார்வை, சம்பந்தம் இல்லை. நெருப்பு கிரகமான சூரியன் நீர் ராசியில் அமர்ந்து, நீரை உறிஞ்சி விடுவார். செவ் வாயும் நில ராசிக்குப் பெயர்ந்து அமர் கிறார். நெருப்பு ராசியான தனுசில், மூன்று காற்று கிரகங்களே அமர்ந்துள்ளன. செவ்வாயும் தனது நான்காம் பார்வையால் சிம்ம நெருப்பு ராசியையும், எட்டாம் பார்வையால் இன்னொரு நெருப்பு ராசியையும் நோக்குகிறார்.
எனவே, பங்குனி மாதம் மிக உஷ்ணம் இருக்கும். காற்றில் அனல் பறக்கும். எங்கும் உஷ்ணக் காற்று அனலடிக்கும். பூமியில் நீர் வற்றும். நிலம் தகிக்கும். ராகு காற்று ராசியில் அமர்ந்து, ஆகாயத்தை சூடான காற்றால் நிரப்புவார்.
தனுசு ராசி தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியையும், கோவை மாவட்டத்தையும் குறிப்பதால், அங்கு கடுமையான அக்னிக் காற்று வீசும் வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், நாகை மாவட்டங்களும் உஷ்ணக் காற்றால் அவதியுறும் நிலை ஏற்படக் கூடும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94449 68145