இந்த உலகில் பிறந்துள்ள அனைத்து மக்களையும், 27 நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டு 12 பிரிவுகளாகப் பிரித்து, 12 ராசிகளில் பிரிவினை செய்துள்ளார்கள். பாரம்பரிய கணித ஜோதிட முறையில், குரு கிரகம் கோட்சார ராசி மாற்றம் அடையும்போது ராசிக்கு முக்கியத்துவம் தந்து, 12 ராசியில் பிறந்த அனைவருக்கும் பொதுவான நிலையில் குருப்பெயர்ச்சிப் பலன்களை காலம், காலமாக எழுதியும், கூறியும் வருகின்றார்கள். இந்த பொதுவான பலன்முறை. எல்லாருக்கும் சரியாக உள்ளதா என்று பார்த்தால், சரியாக இல்லை என்பதே உண்மை.
சப்தரிஷி நாடி முறையில் கோட்சார நிலையில் குருபெயர்ச்சியாகி ஒரு தனி மனிதனுக்கு குரு தரும் பலன்களை அவரவர் பலனறிந்து கொள்ளும் முறையில் ரிஷிகள் கூறியுள்ளார்கள்.
உங்கள் பிறப்பு ஜாதக ராசிக் கட்டத்தி லுள்ள கிரகங்களை அறிந்து கொள்ளுங்கள். தற்போது கோட்சார நிலையில் குருப் பெயர்ச்சி அடைந்து மிதுன ராசிக்கு வந்துள்ளார். உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளில் எந்த ராசியிலும் இருக்கலாம். மிதுன ராசியிலுள்ள குரு தான் இருக்கும் ராசியிலிருந்து 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளிலுள்ள கிரகங்களுடன் சம்பந்தம் அடைந்து பலன்களைத் தருவார்.
உங்கள் பிறப்பு ஜாதகத்தில் மிதுன ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் ஒன்பது கிரகங்களில் எந்த கிரகம் உள்ளதோ, அதற்குரிய பலன்களைத் தனித்தனியே எழுதியுள்ளேன். இந்த குருப்பெயர்ச்சிப் பலன்களை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
குரு+சூரியன்
கோட்சார "குரு' உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும்போது குரு தரும் பலன்கள்.
ஒருவர் ஆணி மாதம் பிறந்தவர். ஆனால் அவருக்கு சூரியன் என்ற கிரகம் மிதுன ராசியில் அமைந்திருக்கும். தற்போது கோட்சார நிலை யில் ராசி மாற்றம் அடைந்த குருபகவான் இவர் பிறந்த போது சூரியன் உள்ள ராசிக்கு வந்து சூரியனுடன் இணைந்து என்ன விதமான பலன்களைத் தரப்போகின் றார் என்பதை அறிவோம்.
நீங்கள் ஈடுபட்டுள்ள காரியம், செயல்களில் வெற்றியை அடைவீர்கள். சரீரத்தில் சுறுசுறுப்பும், மனதில் தைரியமும் ஏற்பட்டு எவ்வளவு பெரிய காரியத்தையும் தன்னால் வெற்றியாக செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் துணிவுடன் செயலில் இறங்கி செயல்படுவீர்கள். புத்தியால் எதையும் செய்து புகழையும், பொருளையும் அடைவீர்கள். தொழிலில் புதுமையை புகுத்தி, பேரும் புகழும் பெறுவீர்கள். கௌரவமான மனிதராக காட்சி தருவீர்கள். சமுதாயத்தில் உங்களால் உங்கள் குடும்பத்திற்கே கௌரவம் உண்டாகும். அந்த கிரக சேர்க்கையினால் பகுத்தறிவு பிரகாசிக்கும். பிறர் சொல்வதைக் கேட்டு எதனையும் செய்யாமல், சுய அறிவால் ஆராய்ந்து அனைத்தையும் செய்து வெற்றியை அடைவீர்கள்.
அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல் வாதிகளுக்கு நன்மைகள் உண்டாகும். இதுவரை தன் உழைப்பிற்கேற்ற, தகுதியான பதவி, பொறுப்பு கிடைக்காதவர்கள் காட்சி பதவியோ அல்லது ஆட்சியில் பதவியோ கிடைக்கும். தலைமை பொறுப்பிலுள்ள தலைவர்களின் ஆதரவும், அன்பும் உங்களுக்கு கிடைக்கும். அவர்களின் மதிப்பான பார்வை உங்கள்மீது பாயும். குருவும், சூரியனும் இணைந்து உங்கள் மனக் குறைகளை தினித்து வைத்துவிடுவார்கள். தொண்டன் தலைவனாகும் நேரம் வந்துவிட்டது.
அரசு துறையில் பெரிய தனியார் கம்பெனிகளில் உத்தியோகம் செய்பவர் களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். உங்கள் உழைப்பு, திறமை, அறிவு, தகுதிக்கேற்ற நிலை இதுவரை இல்லாமல் இருந்தால் உங்கள் தகுதி வெளிப்பட்டு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு குருவருளால் இப்போது அடைந்துவிடுவீர்கள். இதுவரை உயர்வுக்கு இருந்த தடை, தாமதங்கள் விலகும். உத்தியோகம் சம்பந்தமான வழக்குகள் இருந்தால் அந்த வழக்குகளில் வெற்றி கிட்டும். அரசு சம்பந்தமான காரியங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி காரியம் மனம்போல் வெற்றியாக முடியும். அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அவர்கள் உங்கள் காரிய வெற்றிக்கும் வாழ்க்கை உயர்வுக்கும் துணையாக இருப்பார்கள். உயர்ந்த அந்தஸ்திலுள்ள கௌரவமான மனிதர் களின் நட்பும், தொடர்பும் கிடைக்கும்.
உங்கள் புத்திரர்களின் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும். உத்தியோகம், தொழில் எதிர்பார்த்து இருக்கும் புத்திரர்களுக்கு நல்ல உத்தியோகம், தொழில் அமையும். தந்தை- மகன் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்பும், பாசமும், மரியாதையும் உண்டாகும். மாமனார்- மருமகன் இடையே அன்யோன்யம் உண்டாகும். மாமனார் வீட்டு உதவியும் கிடைக்கும்.
உங்கள் தந்தையின் தொழில் மேன்மை அடையும். தந்தை செய்யும் தொழிலில் லாபமும் நன்மையும் உயர்வும் உண்டாகும். பெரிய மனிதர்கள் ஆதரவு தந்தைக்கு கிடைக்கும். உங்கள் புத்திரர்களின் கல்லி சிறப்படையும். அவர்கள் விரும்பிய படிப்பு படிக்க வழி திறக்கும். விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் சூழ்நிலை அமையும்.
உங்களுக்கு கண் சம்பந்தமான, இதய சம்பந்தமான நோய்கள் குணமாகும். உங்கள் அறிவு, புத்தி, மந்த தன்மை நீங்கி பிரகாசம் அடையும். இதுவரை பிறர் சொல்லி அதைக்கேட்டு எதையும் செய்துவந்த நீங்கள் இனி எந்த காரியம் செயலையும் சுயமாக சிந்தித்து அறிவுப்பூர்வமாக அறிந்து செயல்படுவீர்கள். இதனால் வாழ்வில் உயர்வும், கௌரவமும் உங்களை தேடிவரும். இதுவரை இருந்த மூடத்தனம், மூடநம்பிக்கைகள் விலகி உங்கள் எதிர்கால வாழ்வை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள புத்தி, யுத்தியுடன், அறிவுப்பூர்வமான ஆக்க சக்தியுடன் செயல்பட்டு வாழத் தொடங்குவீர்கள்.
இதுவரை புத்திரபாக்கியம் இல்லாமல் மனம் வருந்திக்கொண்டு இருந்தவர்களுக்கு உங்கள் முன்னோர்களில் ஒருவர் மனைவி வயிற்றில் கருவாக வந்து உருவாகுவார். புத்திரனாக பிறப்பார். உங்கள் முற்பிறவிகளில் உங்கள் தந்தைக்கும், தந்தைவழி முன்னோர்க்களுக்கும் செய்த நன்மைகள், புண்ணியங்களை இப்போது உங்கள் வம்ச முன்னோர்கள் அருள் ஆசிதந்து அனுகிரகம் செய்வார்கள். அருகில் இருந்து காப்பாற்றுவார்கள். வாழ்வில் துணையாக இருப்பார்கள்.
மனிதன் நம்பிக்கை என்பது பிற சக்திகளை நம்பிக்கொண்டு வாழ்வது, தன்னம்பிக்கை என்பது உங்கள் அறிவு, புத்தி, திறமை, உழைப்பை நம்பி செயல்பட்டு உழைத்து வாழ்வது. இனி நீங்கள் பிற சக்திகளை நம்பி வாழும் மூடநம்பிக்கைகளை கைவிட்டு, உங்கள் தன்னம்பிக்கை துணையுடன் செயல்பட்டு வாழுங்கள். உங்கள் வருமானம், புகழ், கௌரவம் உயரும். வாழ்க்கை தரமும் உயரும். துலா ராசியிலுள்ள குருவின் அருளை (குறையாமல் அடைந்துகொள்வது உங்கள் பொறுப்பு. அறிவு, புத்தி, உழைப்பு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வாழ்வில் வெற்றியும் செல்வமும் அடைந்துகொள்ளுங்கள்.
பரிகார நிவர்த்தி
உங்கள் தந்தை- மகன் இவர்களை பசியும் பட்டினியுமான நிலையில் இராமல் காப்பாற்றி மனம் சந்தோஷமாக வைத்துக்கொண்டால் பித்ரு சாபம், புத்திர சாபம் நீங்கும். சிவபெருமானை வழிபட்டு வணங்கி வந்தால் அனைத்து வரங்களும் வழிபாட்டு நன்மைகளும் கிடைக்கும் என்பது சித்தர்கள் வாக்கு ஆகும்.
குரு+சந்திரன்
கோட்சார குரு உங்கள் பிறப்பு ஜாதகத்தில், சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் கோட்சார நிலையில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் பொதுவாக ஒருவரின் பிறப்பு நிலையிலோ அல்லது குருவின் கோட்சார நிலையிலோ குருவும் சந்திரனும் இணைவது அவ்வளவு நன்மைகளைத் தராது. ஆண்களானால் வாழ்வில் இராமனைப் போன்ற கஷ்டமான வாழ்க்கையையும் பெண்களானால் சீதை அனுபவித்த சிரமங்களையும் அடைய நேரிடும்.
இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு குடியிருப்பு, வீடு மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோகம் செய்யும் அலுவலக மாற்றம் இவற்றில் ஏதாவது ஒன்றை அனுபவிக்கச் செய்துவிடும். உத்தியோகம், தொழில் காரணமாக நீங்கள் ஓரிடம், குடும்பம் ஓரிடம் என பிரித்துகூட வசிக்க நேரலாம். சிலர் தாய்- தந்தையை பிரிந்து வேறிடம் சென்று வசிக்க நேரிட்டு விடும். தாய், மனைவி, சகோதரி, உறவுப் பெண்கள், அந்நியப் பெண்கள் என யாராவது ஒரு பெண்ணால் சிரமம், அவப்பெயர் உண்டாக நேரிட்டுவிடலாம். பண விரையம், இழப்பு, கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனநிம்மதி கெடும்.
நீங்கள் ஈடுபட்டு செய்யும் காரியம் செயல்களில் தடை, தாமதம் உண்டாகி விடும். அதிக பயணங்கள், தேவையற்ற அலைச்சல்கள், அதனால் சிரமங்கள் உண்டாகும். நேரத்திற்கு பசிக்கு உணவு உண்ண முடியாமல் செய்துவிடும்.
அலைச்சல்கள், திரிச்சல், அகால போஜனம் என்ற நிலைதான். காலையில் மனம் நிம்மதி சந்தோஷமாக இருந்தால், மாலையில் மனக்குழப்பம், மனதில் துயரம் என்ற நிலையாகிவிடும். வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கு சம்பந்தமே இல்லாத வர்களால்கூட தொல்லைகள் வந்து சேர்ந்துவிடும். வேலை சுமை அதிகமாகும். இதனால் மனதில் தேவையற்ற எரிச்சல் உண்டாகும். குடும்பத்தினர்மீது அது கோபம்கொள்ள செய்யும். இதனால் கடுமையான வார்த்தைகள் வெளிப்படும். இதனால் குடும்ப உறவுகள் இடையே கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் உண்டாகி வருந்தும்படி செய்துவிடும். நீங்கள் எண்ணுவது போன்று காரியம், செயல்களில் முடிவு அமையாது.
எதிர்மாறான முடிவுகள்தான் அமையும். ஒவ்வொரு காரியம் செயலும் நீங்கள் நினைத்ததுபோல் நடந்து முடிவில் வெற்றி மாறிவிடும்.
இந்த கால கட்டத்தில் உங்கள் குடும்பத்தாரால், உறவுகளால், நண்பர்களால், உங்கள் இனத்து மக்களால் எந்த உதவியும் கிடைக்காது. நீங்கள் எதிர்பார்த்து நம்பியிருக்க வேண்டாம். இராமருக்கு அனுமன் வானரங்கள் உதவி கிடைத்தது போன்று, மாற்று இனம், சாதிமக்களால், உங்களைவிட கீழான நிலையில் உள்ள மக்களால் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும்.
இராமருக்கும், சீதைக்கும், கைகேயி, கூனி, சூர்ப்பனகை, தாடகை என பெண்களால் சிரமம் ஏற்பட்டதுபோல ஜாதகர் ஆண்கள்- பெண்கள் என யாராக இருந்தாலும் இரு பாலரையும் இந்த குரு சந்திரன் இணைவு துன்பத்தை தந்து அனுபவிக்கச் செய்துவிடும்.
பரிகார நிவர்த்தி
குடும்பத்தில் இப்போது நீங்கள் மனைவி, மகள், தாய், சகோதரிகள், மனம் சந்தோஷம் அடையும்படி எதனையும் செய்து வாழுங்கள். அவர்களின் சிரமம் கஷ்டங்களைத் தீர்த்து வையுங்கள். குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து வாழுங்கள்.
பெண்கள் புகுந்த வீட்டில் மாமியார். நாத்தி, நங்கையார் இவர்களை அனுசரித்து பொறுமையாக- பொறுப்புடன் வாழுங்கள்.
எதற்கும் பொங்கி எழுந்தால் குடும்பம் பிரியும்; கவனம்.
(தொடரும்)
செல்: 93847 66742