சுழல்கின்ற இந்த பூமியில் நன்மையும் சில இடையூறுகளும் நவகோள்களது அசைவுகளால் நடந்துகொண்டே இருக்கும். அதற்காக நாளுக்குரிய சிறப்புகள், வாரத்திற்கான விசேடங்கள், மாதத்திற்கான பண்டிகைகளை நாம் கொண்டாடுவதும் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமானது. அந்த வரிசையில் வாஸ்து பகவான் விழித்தெழும் நாள் முக்கிய அங்கம் வகிக்கிறது.

Advertisment

எத்தனையோ பஞ்சாங்கக் குறிப்புகளும், கம்ப்யூட்டரில் ஏற்றிவைத்த நாட்குறிப்புகளும் வந்துவிட்டாலும், நமக்குள் ஒரு பழைய பஞ்சாங்க முறையை நாமே தயாரித்து வைத்துக்கொண்டு. சில சுபநாட்களைச் செய்யாமல் விட்டுவிடுகிறோம்.

உதாரணமாக, கடந்த ஹேவிளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி வாஸ்து பகவான் விழித்தெழும் காலம் காலை சில நாழிகைகள் என்றும்; காலை 6.55 முதல் 8.25 மணிவரை என்ற வாக்கியப் பஞ்சாங்கக் குறிப்பும் இருந்தது.

அந்த நாளை பெரும்பாலோர் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர். காரணம், அஷ்டமிதிதி காலை 19.36 நாழிகை இருந்தது. ஸ்திர வாரமான சனியும் அஷ்டமியும் சேர்வதால் வாஸ்து பூஜைசெய்து வீடு கட்டத் தொடங்குதல் கூடாது என்றும், அப்படிச் செய்தால் வீடு கட்டத் தடை உண்டாகும் என்றும் விஷயம் அறிந்தவர்களால் ஆலோசனை கூறப்பட்டது. இந்தத் தகவலை மையமாக வைத்தே வாஸ்துவைப் பற்றிய உண்மை விதிகளை இங்கே ஆய்வுரையாகக் கூறுகிறோம்.

Advertisment

laskhmi

விளம்பியில் விளங்கிடும் வாஸ்து தினங்கள்

ஒரு ஆண்டில் வாஸ்து பகவான் எட்டுமுறை விழித்துக் கொள்வார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். கடந்து சென்ற வாஸ்து நாட்களைக் கழித்துச் சொல்லுகிறபோது, வருகிற ஆடி மாதம் 11-ஆம் நாள் வெள்ளிக்கிழமை (27-7-2018) வாஸ்து பகவான் விழித்தெழும் நாளாக வருகிறது.

அன்றைய பஞ்சாங்க சாஸ்திரப்படி பௌர்ணமி 50-57 நாழிகை, உத்திராட நட்சத்திரம் 49.16 நாழிகை, விஷ்கம்ப யோகம் பத்திரை கரணமாக இருக்க, காலை 6.48 மணிமுதல் 8.22 மணிவரை வாஸ்து புருஷன் நித்திரை விடுகிறார். அதே நாளில் முழு நிலவு நாளை முன்னிட்டு சந்திர கிரகணம் இரவு 11.54 மணி தொடங்கி மத்தியம காலம் நள்ளிரவு 01.52 எனவும், முடிவு பின்னிரவு 2.43, பூரண நிறைவடைவது அதிகாலை 3.49 எனவும் பஞ்சாங்க விதி கூறுகிறது. கேது கிரகஸ்த சந்திர கிரகணம் என்ற சோமோபராக புண்ணியகாலம் என்ற இந்த நாளில், வாஸ்து பூஜைசெய்து வீடுகட்ட அடிமனை கோலும் விதிகளைச் செய்யலாமா? வேண்டாமா என்று சிலர் குழப்பம் அடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வரும் எட்டு வாஸ்து தினங்களுக்குள் சக்தி வாய்ந்ததாகவும், பலன்களை விரைவில் தருவதாகவும், லட்சணம் உடைய நாளாகவும் ஆடி மாத வாஸ்து நாள் வந்து செல்கிறது. விளம்பி வருடத்தில் ஆகஸ்ட் 22 (ஆவணி 6-ஆம் நாள்) புதன்கிழமை மதியம் 2.24 முதல் 3.54 வரை; அக்டோபர் 24 (கார்த்திகை- 8) சனிக்கிழமை 10.00 மணிமுதல் 10.30 வரை காலை ராகு காலத்தில்; ஜனவரி 1-2019 (தை 12-ஆம் நாள்) சனிக்கிழமை காலை 9.12 மணிமுதல் 10.42 மணிவரை ராகு நேரத்தை இணைத்துக்கொண்டு வருவது, மார்ச் 6-2019 (மாசி 22-ஆம் நாள்) புதன்கிழமை அமாவாசை பித்ரு பூஜை நாளில் காலை 9.12 மணி முதல் 10.42 மணிவரை வருவது. இதில் வாஸ்து புருஷன் நித்திரை விடும் காலமும், சில நாட்குறிப்புகளும் அதிருப்தியைத் தந்துகொண்டிருக்கின்றன.

பொதுமக்களோ, பஞ்சாங்கப் படனங்களில் நாட்டம் உள்ளவர்களோ ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். வாஸ்து பகவான் சுபநாள், அசுபநாள், ராகு காலம், கிரகண காலம் எதையும் கணக்கில் கொள்ளாமல் விழிப்பார் என்பது புராணங்களிலும் வேத ஜோதிட கிரந்தங்களிலும் உள்ள உயர்ந்த தத்துவமாகும்.

"அமாவாசையில் பிறந்தால் திருடன்', "சித்திரையில் பிறந்தால் அப்பன் தெருவிலே', "திருவாதிரை புத்திரன் தில்லுமுல்லு', "மகத்தின் மகள் அடங்காதவள்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அழகான வீடு அமைக்கப் பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு, வாஸ்து புருஷன் விழிக்கும் பொன்னான தருணங்களை விட்டுவிடாதீர்கள். கடிகாரத்தில் நகர்ந்துகொண்டிருப்பது முள்மட்டுமல்ல; கடந்து கொண்டிருப்பது நேரம் மட்டுமல்ல! நம் வாழ்க்கை என்பதை உணர வேண்டும்.

நாம் நினைத்தபடி வீடு கட்டுவதற்குக் காலம் நன்றாக இருக்க வேண்டும். உரிய காலத்தில் பூமி பூஜையைச் செய்துவிடல் முக்கிய செயல்களில் ஒன்று. இல்லையெனில் கையில் சேர்த்து வைத்திருக்கின்ற பணம் வேறுவகையில் செலவாகி, வீடு வாய்க்கால் வெட்டியது போன்று நின்றுவிடும்.

27-7-2018 அன்று காலை 6.48 மணிமுதல் 8.22 வரை வாஸ்துபகவான் விழித்திருப்பார். சந்திர கிரகணமோ இரவு 11.54-க்குதான் தொடங்குகிறது. எனவே மகரச் சந்திரன் இருக்கும் வாஸ்துப்பூஜை நேரத்தை மனத்திருப்தியோடு பயன்படுத்தலாம்.

நேரத்தில் செய்யும் வாஸ்து விதி

இரண்டு பேர் நீண்ட நாட்கள் நண்பர்களாகப் பழகி வந்தார்கள். இருவரும் நகரத்தைவிட்டு சற்றுத்தள்ளி "ஒரு கிரவுண்டு பத்தாயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறதே' என்று ஆளுக்கு நான்கு கிரவுண்டுகள் வாங்கிப்போட்டனர். 15 ஆண்டுகள் கடந்து இருவருமே வீடு கட்ட கிருஹாரம்ப விதியைச் செயல்படுத்தத் தொடங்கினர். முதல் நண்பர் மகாவிஷ்ணு பக்தர். பெருமாள் கோவிலுக்குச் சென்று தனது டாகுமென்டை வைத்துப் பூஜைகள்செய்து, ஏகாதசி திதியும் வாஸ்து புருஷன் விழிக்கும் நாளும் வந்தபோது சனிக்கிழமையன்று பூஜை செய்வதற்காக நண்பர்கள், உறவினர்கள் ஐம்பதுபேருக்குச் சொல்லி, காலை டிபன், காபி, இனிப்புகள் ஏற்பாடு செய்து வைத்தார். "கல்யாண அவசரத்தில் தாலி கட்ட மறந்தானாம் மாப்பிள்ளை' என்பார்கள் பெரியோர். அதுபோல தன் நண்பருக்குச் சொல்லாமல் விட்டுவிட்டார். வாஸ்துப் பூஜையை நடத்திவைக்கும் சாஸ்திரி வாஸ்து நேரம் 9.40 மணி முதல் 10.20 வரை இருக்க, 10 மணி 5 நிமிடங்களுக்கு வந்து அவசரகதியில் செயல்பட்டு 11 மணிக்குமேல் நிறைவுசெய்து அடுத்த வேலைக்குப் புறப்பட்டார்.

பூசணிக்காயில் அரை கிலோ குங்குமத்தைக் கொட்டி, எலுமிச்சம் பழத்தைச் சுற்றிலும் நறுக்கி, குங்குமம் தடவி காவு கொடுப்பதுபோல இறைத்து, ஒரு போர்க்களம்போல காட்சி தந்தது அந்த பூமிபூஜை போடப்பட்ட இடம். அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே எச்சில் இலைகள் குவிய, அனைவரும் காரில் பறந்துவிட்டனர். இதுவா வாஸ்துப் பூஜை?

நமது சம்க்ஷேப தர்மசாஸ்திரத்தின்படி நம் பூமியில் நம் எச்சில் பட்டால் தோஷங்கள் உண்டாகும். இந்த பூமிபூஜை போட்டு ஆறு ஆண்டுகள் ஆன பிறகும் அவர் வீடு கட்டிய பாடில்லை. இந்த வருடம் அந்த பூமியை விற்றுவிட லாபலட்சுமி பூஜையைச் செய்துகொண்டிருக்கிறார்.

பக்கத்தில் நிலம் வாங்கிய நண்பர் அதுபோன்று வந்த வாஸ்து நாளில் எளியமுறையில் சாஸ்திரிகளை அழைத்து எளிமையாக வாஸ்து வழிபாட்டைச் செய்து வீடுகட்டத் தொடங்கினார். இவர் சிவபக்தி கொண்டவர். இருவருக்கும் தங்களுக்குள் வாஸ்துப் பூஜைக்கு அழைப்பதில் மனச்சங்கடம் ஏற்பட, இவரும் நண்பரைக் கூப்பிடவில்லை. இவர் விரைவாக வீடு கட்டிமுடித்து மாதம் இருபதாயிரம் வாடகை வரும்படி செய்துகொண்டார். இங்கே எந்த பேதமும் சொல்லவில்லை. வாஸ்து புருஷன் விழிக்கும் நாள் தொடர்பாக எல்லா ஆச்சார்யர்களிடமும் யோசனை கேட்காதீர்கள். ஒன்றைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள். பஞ்சாங்கங்கள் பலவற்றின் விதிப்படி நாட்கள் சொல்லப்பட்டாலும், வாஸ்து பகவான் விழிக்கும் மங்கள நாள் சமகாலத்தில்தான் வரும்.

ஒருமுறை தட்டினால் மும்முறை தட்டுமா?

பெண்ணுக்குத் திருமணம் நடத்த மாப்பிள்ளை பார்க்கச் செல்லும்போது, ஒருவர் "ஆண்மகனின் வீடு வடக்கே இருக்கிறது; இன்று வடக்கே சூலம்; போகக்கூடாது' என்பார். "இல்லை. நாம் கிழக்கே போய் தெற்கில் நுழைந்து கிழக்காக உள்ள பையன் வீட்டுக்குத்தான் போகிறோம்' என்று மேப் போட்டுத் தருவார். மற்றவர்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் பெண்ணின் அப்பா குழம்பிப் போய், "வேன் புக் பண்ணிட்டேன். வாசலுக்கு வண்டி வந்தாச்சு; புறப்படலாமே!' என்று அன்பான வேண்டுகோள் விடுப்பார்.

சூலம் பார்த்து, குலதெய்வப் பிரார்த்தனை செய்து புறப்படும்போது, தடை ஏற்படாமல் அந்தச் செயல் நடைபெற அந்தக் காலத்திலிருந்து யாத்ரா தானம் செய்வார்கள். ஒருமுறை தட்டினால் மூன்றுமுறை அச்செயல் எப்படியாவது தட்டிவிடும்; தள்ளிப்போய்விடும். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருக்கலாம். ஆனால் அனைத்துச் செயல்களிலும் ஒரு நாளில் எல்லா அம்சங்களையும் ஆராய்ச்சி செய்யாமல் எளிய பரிகாரங்களைச் செய்துவிடுவதே நல்லது.

யாத்ரா தானம்

பூமி பூஜை போடுதல், பெண் பார்க்க, மாப்பிள்ளை பார்க்கச் செல்வதற்கு சூலம், சூரிய அஸ்தமன காலத்திற்குள் வரும் மரணயோகம், அசுப திதிகள், சகுனங்கள் திருப்தியின்றி வந்தால் அதற்கான எளிய ஒரு பரிகார முறையே யாத்ரா தானம். இது எல்லாவற்றையும் சுபமாக மாற்றிவிடும். ஊரிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று தும்பைப்பூவும் அறுகம்புல்லும் வைத்து, தேங்காய் எண்ணெய்யில் தீபமேற்றி வைத்து, "ஓம் கம் கணபதயே சர்வ விக்ந ஹராய சர்வாய சர்வகுரவே லம்போதராயஹ்ரீம் கம் நம:'

என்று 11 முறை சொல்லி, மும்முறை சுற்றி வந்து பிரார்த்தனை செய்து வீட்டுக்கு வந்து, முழு மட்டைத் தேங்காய், தாம்பூலம், சில காசுகளை வைத்து யாருக்காவது தானமாகக் கொடுத்துவிட வேண்டும். இதன்பலனாக தெய்வ அனுகூலம் ஏற்பட்டு தடைகள் அகன்றுவிடும்.

வாஸ்துப் பூஜையில் வளம்காண வழிகள் வீடு கட்டுவதற்கு ஒருவரது ஜனன ஜாதகத்தில் சில யோகங்கள் இருக்க வேண்டும் என்று "ஜாதக பலதீபிகை' மற்றும் "வாஸ்து கிருஹ சாரக்கோவை' சொல்கின்றன.

பர்வத யோகம்: இது சுக சயன லாபங்களைத் தருவது. சுபகிரகங்கள் கேந்திரம் அல்லது 7, 8-ல் இருப்பது அல்லது 9, 10-ல் சேர்வது.

தைன்ய யோகம்: 6, 8, 12-க்கு உடையவர்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை கொள்வது. சுகபோக வீடு அமைந்தாலும் அது கைவிட்டுப் போகலாம்; பரிகாரம் தேடுதல் வேண்டும்.

மகாபாக்கிய யோகம்: சூரியன், சந்திரன் ஆண் ராசிகளில் இருக்க, பகலில் பிறந்த ஆண் ஜாதகர் இந்த யோகத்தைப் பெற்று அழகான வீடு கட்டிக் குடியேறுவார்.

சனி, குரு, செவ்வாய், சூரியன் உச்ச ராசியில் இருக்க, அந்த ராசிகளில் ஒன்று லக்னமாக அமைந்துவிட்டால் ராஜயோகம் ஏற்பட்டு அழகான வீடு கட்டி செழிப்புடன் வாழ்வார். இந்த யோகங்கள் இருந்தாலே நிலம் வாங்கி வாஸ்துப் பூஜை செய்யமுடியும். வீடு அமைவதற்கு செவ்வாயும் குருவும் இருந்தால் மட்டுமே போதும் என்று சொல்லி வருகிறார்கள். ஜாதகத்தில் இந்த யோகங்கள் பங்கமாகி இருக்கக்கூடாது என்பதை கிரக நிலையை ஆராய்ச்சிசெய்து உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.

செல்வ யோகமான வீட்டில் வசிக்க...

முதலில் வீட்டில் நம்மோடு வசித்துவரும் கிரகலட்சுமி, "நமக்குத்தான் வீடு கட்டப்போகிறோம்' என்று பொறுப்போடு பணம் சேமிக்க வேண்டும். "சுக்கிர பலம், கிரக லக்ஷ்மி யோகம், தாரா யோகம்' என ஜோதிடச் சுவடிகள் சுட்டிக்காட்டுகின்றன. புலிப்பாணி மகரிஷி தனது பாடலில் "மனைவிக்குப் பொறுப்பில்லையேல் மனை ஏது' என்கிறார். அங்காரகனின் ஆதிக்க பலம் உடையவர்கள் எளிதில் வீடு அமைப்பார்கள் என்பது ஜோதிட விதிகள் கூறும் உண்மை.

முதலில் வாஸ்து லட்சணம் சரியாக இருக்கிறதா என பரிசோதித்து நிலத்தை அளக்க வேண்டும். சல்லிய தோஷம், நீரோட்டம், பக்ஷி தோஷம் அறிய நுணா மரத்தின் குச்சியால் வில்செய்து ஆராய வேண்டும். பூமி பூஜையை ஐந்து பாகங்களாகக் கூறிட்டு துல்லியத்தரமுடன் செய்தல் வேண்டும். வாஸ்துப் பூஜை நடத்தும் நேரத்தில் பூமி கிழங்குடன் ஹோம திரவியமிட்டு சிறு வேள்வி செய்து, வாஸ்து தியானம், காயத்ரி சொல்லி மூல மந்திரத்துடன் வழிபடவேண்டும். வாஸ்து கிருஹலக்ஷ்மி, வாஸ்து பகவான் படம் கலசத்துடன் வைத்து வழிபடல் அவசியம். எட்டுத் திக்குகளில் பூசணித்துண்டு, வாழைப்பழம் பலிதானம் போட வேண்டும். அட்டமங்களங்கள், கண்ணாடி உட்பட செய்வது நலம். இந்த நேரத்தில் பூமி தேவியின் அருள்பெற "பூமிர் பூம்நா' என்று தொடங்கும் பூசூக்தம் ஜெபிக்க வேண்டும். வீடு வேலை தொடங்கியதும் சங்குஸ்தாபனம் செய்க. பிறகென்ன? யோகமான வீடு குடிபுக நாள் வந்துவிடும்.

செல்: 91765 39026