ஜனன ஜாதகக் கிரக நிலையே ஒருவரது அன்றாட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் வலுப்பெறுவது மிகவும் அவசியம். ஜாதகம் என்பது பிறக்கின்ற நேரத்திலுள்ள கிரக சஞ்சாரத்தை விளங்கும் கிரகச் சக்கரமாகும். கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறுவதும், கேந்திர- திரிகோணத்தில் இருப்பதும் மிகவும் நல்ல அமைப்பாகும். குறிப்பாக, ஒருவர் பிறக்கிற நேரத்தில் சில கிரகங்கள் பின்னோக்கிச் செல்லும். அதனைத்தான் வக்ரம் என்கிறோம். பின்னோக்கிச் செல்கிற கிரகங்கள் அவர்கள் இயல்பாக தரக்கூடியவற்றைத் தராமல் எதிர்மறையான பலனைத் தரும் நவகிரகங்களுள் ராகு- கேது இருவரும் எப்போதும் பின் னோக்கிதான் செல்கிறார்கள். குரு, சனி, செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனுக்கு 9-ல் வரும்போது வக்ரம்பெற ஆரம்பித்து, சூரியனுக்கு 5-ல் வரும்போது வக்ரநிவர்த்தியடைகின்றனர். புதனும் சுக்கிரனும் சூரியனுக்கு நெருங்கியே சஞ்சாரம் செய்வார்கள். சூரியனைவிட்டு வெகுதூரம் செல்லும் புதன், சுக்கிரன் வக்ரம் பெறுவார்கள்.
வக்ரம் பெறும் கிரகங்கள் எதிர்மறையான பலன்களைத் தருவார்கள். உதாரணமாக, செவ்வாய் வக்ரம் பெற்றால், சகோதரரிடம் கருத்து வேறுபாடு, வயது குறைவான ஆண்கள்மூலம் பிரச்சினை ஏற்படும். பெண்களுக்கு செவ்வாய் வக்ரம் பெற்றால் வயிற்றுப் பிரச்சினை, மாதவிடாய்க் கோளாறு, உடல் பலவீனம், இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு உண்டாகும்.
சுக்கிரன் வக்ரம் பெற்றால், சகோதரிடம் கருத்து வேறுபாடு, வயது குறைவான பெண்கள்மூலம் பிரச்சினை ஏற்படும். ஆண்களுக்கு சுக்கிரன் வக்ரம் பெற்றால் திருமணத்தடை, மணவாழ்வில் பிரச்சினை, சுகவாழ்வு பாதிப்பு, சர்க்கரை நோய், இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு உண்டாகும்.
புதன் வக்ரம் பெற்றால், தாய்மாமனிடம் கருத்து வேறுபாடு, மூட்டு வலி, படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத துறையில் பணிபுரியும் நிலை உண்டாகும்.
குரு வக்ரம் பெற்றால், வயிற்றுப் பிரச்சினை, குழந்தை பாக்கியம் ஏற்படத் தடை, கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்க இடையூறு, எதிர்பார்க்கும் கௌரவம் கிடைக்க இடையூறு உண்டாகும்.
சனி வக்ரம் பெற்றால், உடல் பலவீனம், வாங்கிய கடனை அடைக்க இடையூறு, வேலையாட்களால் பிரச்சினை ஏற்படும்.
இதுபோல எந்த பாவாதிபதி வக்ரம் பெறுகிறதோ, அந்த பாவகப் பலனை அடைய இடையூறுண்டாகும். உதாரணமாக, 4-ஆம் அதிபதி வக்ரம் பெற்றால், தாயிடம் கருத்து வேறுபாடு, படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத துறையில் பணிபுரியும் நிலை, சொந்த வீடு வாங்க இடையூறு ஏற்படும்.
7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றால், திருமணத்தடை, மணவாழ்வில் பிரச்சினை, இல்லற வாழ்வில் மகிழ்ச்சிக்குறைவு, வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்.
3-ஆம் அதிபதி ஆண்கள் ஜாதகத்தில் வக்ரம் பெற்றால், ஆண்மைக் குறைபாடு, இல்லற வாழ்வில் மகிழ்ச்சிக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிலையில் குரு, சூரியன் பலமாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கிறது. அதுவே, குரு, சூரியன் பலவீனமாக இருந்தால், அந்த ஆணுக்கு தாம்பத்திய வாழ்வில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோல ஒவ்வொரு பாவகப்பலன் பார்க்கிறபோதும் கவனமாகப் பலன்களைச் சொல்லவேண்டும்.
கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றாலும் வக்ரம் பெறும்போது சில எதிர்மறையான பலன்களே உண்டாகின்றன.
-முனைவர் முருகு பாலமுருகன்
(செல்: 72001 63001)