முன்னோர்கள் கூட்டுக்குடும்பத்தில் ஆளுக்கொரு வேலை செய்துகொண்டு, வீட்டில் இருப்பதை சாப்பிட்டு, பணம், சொத்து, சேமிப்புப் பற்றி யாரும் யோசிக்காமல், எதார்த்தமாக வீட்டில் இருக்கும் எல்லாரும் நிம்மதியாக, தன் பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள் என பாகுபாடு பார்க்காமல் எல்லா குழந்தைகளையும் ஒரேமாதிரி வளர்த்து ஆளாக்கினார்கள். யாரையாவது இழந்துவிட்டாலும் அந்தந்த வயதில் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைக் கணக்கு வழக்குப் பார்க்காமல் மனதாரச் செய்தார்கள்.

bro

குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக்கொடுத்து, மன்னித்து, அனுசரித்து ஒருவரையொருவர் கண்டித்து, பணிந்து சரியாக நடந்துகொள்வர். வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழ்ந்து, பேரன்,பேத்திகளுடன் சந்தோஷமாக சொந்தபந்தத்துடன் உண்மையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து, வாழ்க்கையை நிறைவு செய்தார்கள்.

அடுத்த தலைமுறையினர் கல்வியறிவு பெற்றபின்னர், வெளியூர் கலாச்சார ஈர்ப்பால், சுய சந்தோஷங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு, தடையாக இருக்கும் கூட்டுக் குடும்பக் கலாச்சாரத்தை வெறுக்கத் தொடங்கினர். சொந்தத்திற்குள் திருமணம் செய்வதைத் தவிர்த்து, அந்நிய சம்பந்தம் செய்ய ஆரம்பித்தனர். புதிதாக வந்தவர்களுக்கு அந்தக் குடும்ப முன்னேற்றதிற்காக பாடுபட்டு, விட்டுக்கொடுத்து, உழைத்து ஆளாக்கியவர்களைப் பற்றிய எதுவும் தெரியாததால், யாருக்கும் முக்கியத்துவம் தராமல் தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்கிற சுயநலத்தை செயல்படுத்த ஆரம்பித்தர். பெரியவர்களுக்கு மரியாதை தருவதை கௌரவக்குறைவாக எண்ணத் தொடங்கியதும் குடும்பப் பிரிவு தவிர்க்கமுடியாததாகிவிட்டது. கூட்டுக்குடும்ப முறை முடிவுக்கு வந்ததும், சொத்துரிமை போராட்டம் தொடங்கியது.

Advertisment

எதார்த்தமானவர்களை ஏமாற்றி, வல்லான் வகுத்ததே வரப்பு என சொத்தை அபகரித்தார்கள். இதனால், வாரிசுகள் நியாயமான, முறையான பங்கு கேட்கத் தொடங்கியதும், சுயநல வாதிகள் சின்னச்சின்ன பிரச் சினைகளைப் பெரிதாக்கிக் குடும்பத்திற்குள் வாரிசுகளைப் பரம்பரை எதிரியாக்கி விட்டார்கள். சொந்தபந்தம் என்கிற பற்று, பாசம் அழியத் தொடங்கிவிட்டது.

இதனால், ஒவ்வொரு குடும் பத்திலும் சொத்துப் பிரச்சினை காலங்காலமாக நடந்து வருகிறது. முன்பு, பாட்டன்வழி சொத்திலும், இன்று பெற்றோர் சுய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்திலும் வில்லங்கம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.குடும் பத்தில் யாராவது ஒருவரின் சுயநலம், பேராசை குடும்ப உறவு களையும், குடும்ப முன்னேற்றத்தை யும் தடுத்துவிடுகிறது. இன்று, ஒன்றிரண்டு குழந்தைகள்தான் இருந்தாலும், தானும் தன் பிள்ளைகளும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்கிற சுயநலத்தால், இருக்கும் உறவை யும் தொலைக்கிறார்கள்.

செவ்வாய் கிரகம் சகோதரத்தைக் குறிக்கும். உடன்பிறந்தவர் களில், மூன்றாமிடம் இளைய சகோதரத்தையும், மூத்த சகோத ரத்தை பதினோறாம் இடத்தைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம். மூன்று, பதினோரம் இடத்தின் நிலையைப் பொருத்து உடன்பிறந்த வர்களின் அன்பு, உதவி, ஒத்துழைப்பு, லாபம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். பங்காளி, பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள்மீதான பாசம், பற்று குறைந்து, உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து, ஒரு நபராக வாழவேண்டிய சூழல் வந்து விட்டது. இன்று நண்பர்கள்தான் உடன்பிறந்த வர்கள் என்கிற நிலையில், அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள செவ்வாயின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும்.சகோதர கிரகமாகிய செவ்வாயின் வலுத்தன்மையைப் பொருத்து நல்ல, கெட்ட நண்பர்கள் அமைவர்.

Advertisment

சகோதர தோஷம்: சகோதர கிரகமான செவ்வாய் மூன்றாமிடத்தில் இருந்தால், "கார கோபாவ நாஸ்தி' ஏற்பட்டு சகோதர ஸ்தானம் பாதிக்கப்படும். 3-ஆமிடத்தில் செவ்வாய் இருந்தால் உடன்பிறப்புகள் குறைவு. 11-ஆமிடத்து செவ்வாய் மூத்த உடன்பிறப்புகளை அதிகப் படுத்தும். 3-ஆம் அதிபதி 6, 8, 12-ஆமிடங்களில் மறைந்தாலோ, நீசம் பெற்றாலோ, செவ்வாய் நீசம், பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றுப் பலமிழந்தாலோ உடன்பிறப்புகள் இல்லாமலோ, பிரிந்தோ, இறந்தோ இருக்கநேரும். சூரியன் 3-ஆம் அதிபதியுடன் சேர்ந்து 8-ல் இருக்க, சனிக்கு 7- ஆமிடத்தில் செவ்வாய் அல்லது ராகு இருக்க, சந்திரன் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருக்க, 6- ஆம் அதிபதி 3-ஆமிடத்தில் இருந்தால், உடன்பிறந்தவர் இன்றி தனித்தே வாழ்வர். இதுபோன்ற அமைப்பு பொதுவாக இருந்தால் நல்ல நண்பர்கள் அமைய மாட்டார்கள்.

சகோதரர்களால் நன்மை: நான்கு, ஒன்பதாமிடங்கள் கெட்டு, மூன்றாமிடம் வலுப் பெற்றவர்கள் உடன்பிறந்தவர்களால் பராமரிக் கப்பட்டு, கல்வி, திருமணம், தொழில்வரை உதவி பெறுவர்.

3-ல் சந்திரன் இருப்பவர்கள் நண்பர்களாலும், 3-ல் குரு இருப்பவர்கள் இளைய சகோதரர்களாலும் ஆதரவு பெறுவர். 3-ல் புதன் இருப்பவர்கள் சகோதரர்களுக்குள் பரஸ்பரம் உதவிக்கொள்வர். 3-ஆம் அதிபதி 4-ல் இருந்தால், இளைய சகோதரரால் வீடு, மனை, வாகனம் அமையும். 3-ஆம் அதிபதி 11-ல் இருந்தால், சகோதரர்கள் ஒற்றுமையாகத் தொழில்புரிந்து லாபம்பெறுவர்.

3, 4-ஆம் அதிபதி, செவ்வாய் பலம்பெற்றால், உடன்பிறந்தவரால் ஆதாயம், சொத்து கிடைக்கும். 4, 10-ஆம் அதிபதி, செவ்வாய் பலத்துடன் இருந்தால் பூர்வீக சொத்து கிடைக்கும். 11-ஆம் அதிபதி 2, 4-ல் இருந்தால், மூத்த சகோதரரால் கல்வி, வீடு, வாகனம் கிடைக்கும். 10, 11-ஆம் பாவகத் தொடர்பு ஏற்பட்டால் தொழில், லாபம் பெறுவர். குரு, சனி பார்வை இருப்பவர்கள் சகோதரர்கள் கூட்டுத்தொழில் செய்து லாபமுடன், ஒற்றுமையுடன் கடைசிவரை இருப்பர். இதே அமைப்பு இருந்தால் நண்பர்களால் நன்மை தரும்.

சகோதரர்களால் தீமை: உடன்பிறந்த வர்களுள் சிலருக்கு, தனக்கு மட்டுமே பெற் றோர் அன்பு, உயர்ந்த கல்வி, நல்ல- அழகான, படித்த, பதவியில் இருக்கும் பணக்கார வரன், ஆடம்பரத் திருமணம், தன் துணை, தன் பிள்ளைகள் மட்டும் முன்னேறி, மதிப்பு, மரியாதையுடன் வாழவேண்டும். தனக்கு மட்டும் சொத்து அதிகம் தரவேண்டும், உடன்பிறந்தவர்களுக்குரிய பங்கோ, உதவியோ செய்யக்கூடாது, பெற்றோர் உடல்நிலை பாதிக்கப்பட்டால் தன்னுடன் இருக்கக்கூடாது, சகோதரர்களுடன் இருந்து தனக்குத் தொல்லை தராமல் காலத்தை முடிக்கவேண்டும், உடன்பிறந்தோர் தன்னைவிட கல்வி, பணம், புகழ் பெறக்கூடாது என்கிற ஈகோ இருக்கும். இப்படிப்பட்ட வர்களால்தான் குடும்ப முன்னேற்றம், ஒற்றுமை, உறவு கெட்டுப்போகிறது.

ஜனன ஜாதகத்தில் 3-ல் ராகு இருப்பது சகோதரத்தை விரோதியாக்கும். 3-ல் சனி இருப்பது இளைய சகோதரத்தைக் கெடுக்கும்.

4-ஆம் அதிபதி 3-ல் இருந்தால், ஜாதகருக்கு வரவேண்டிய சொத்து, வீடு, வாகனத்தைத் தடுத்து அபகரித்துக்கொள்வர். 3, 11-க்குடைய வர்கள் 6-ல் இருந்தால் எதிரியாகவும், 8, 12-ல் இருந்தால் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். 4-ஆம் அதிபதி, 10-ஆம் அதிபதி, செவ்வாய் இணைந்து 12-ல் இருந்து, நீசமும் பெற்றால், முன்னோர் சொத்தில் பிரச்சினை தந்து, பங்கு கிடைக்காமல் பகை வளர்க்கும்.

4-ஆமிடம் வீடு, வாகனம், சொத்து, உறவினர் ஸ்தானம் என்பதால், 3, 11-ஆம் அதிபதி இணைந்து 6, 8, 12-ல் நின்று பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால், பங்காளிச் சண்டையால் காவல்நிலையம், நீதிமன்றம் செல்லநேரும். ஏழரைச்சனி, அஷ்டமச்சனிக் காலமாக இருந்தால் கொலைவரை செல்லும். 3-ஆம் அதிபதி 4-ல் நீசம்பெற்றால், உடன்பிறந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், செய்தது போல பேசுவர். உரிய பங்கு தராமல் தியாகிபோல பேசுவர். 3-ஆம் ஆதிபதி 4-ல் இருந்தால், சகோதரர் சொத்தை ஜாதகர் அபகரிப்பார். இதே அமைப்பு கொண்டவர்கள் நண்பர்களாலும் ஏமாற்றப் படுவர்.

துரோகம் தரும் பலன்கள்: பெற்றோர், உடன் பிறந்தவர்களைப் பாசமாகப் பேசியோ, மிரட்டியோ சொத்தை அபகரித்து, ஏமாற்றித் துரோகம் செய்தால் வாழ்க்கையில் திடீர் நஷ்டம், கண்டம் ஏற்பட்டு, வாரிசுகள் முன்னேறாமல், பரம்பரையே சொந்த பந்தமின்றி அநாதையாகிவிடுவர். சிவன் சொத்து குலநாசமாவதுபோல பங்காளிச் சொத்தைத் தின்றால் பரம்பரை பாதிக்கும். மேலும், குலதெய்வ சாபம் பெறுவர். வாரிசுகளுக்கு செவ்வாய் தோஷம், நாகதோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், பிதுர் தோஷம், காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டு "ஏன்டா பொறந்தோம்' என நொந்து வாழவேண்டியதாகிவிடும்.

பரிகாரம்

உடன்பிறந்தவர்களின் கஷ்டநேரத்தில் உதவாமல், வறுமையைக் கேலி செய்வது மிகப் பெரிய பாவம். கஷ்டபடுகிறார்கள் எனத் தெரிந்த பின்பும் ""உங்களுக்கென்னங்க? சந்தோஷமா இருக்கீங்க''ன்னு குத்திக்காட்டிப் பேசுவதற்கு பெரிய தண்டனை கிடைக்கும். சொத்தை விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள்.

சொத்தை மட்டுமே வைத்துக் கெட்டவர்கள் நெடுநாள் வாழ்ந்திட முடியாது என்பதறிந்து, துரோகம் செய்யாமல் இருக்கிற சொத்துகளை முறையாகப் பிரித்து, சொந்தங்களை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ""நான் யாருக்கும் எந்தத் துரோகமும் செய்ய வில்லை. எனக்கேன் இவ்வளவு கஷ்டம்?'' என புலம்புபவர்களுள் பாதிபேர் அவர்களின் முன்னோர்கள், பங்காளிகளை ஏமாற்றித் துரோகம் செய்திருப்பார்கள். "முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்' என்பதுதான் நியதி. ஆதலால், மகாசிவராத்திரி பூஜையைக் குலதெய்வத்திற்குச் செய்து, வழிபட்டு சாப விமோசனம் பெறவேண்டும். முதலில், உடன் பிறந்தவர்களுக்கு உதவுங்கள். தானாக உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

செல்: 96003 53748

_______________

சந்திராஷ்டம தினங்கள்

விருச்சிகம்: 18-7-2020 காலை 9.15 மணிமுதல் 20-7-2020 மாலை 4.30 மணிவரை சந்திராஷ்டமம். நோய், வைத்தியச்செலவு, பீடை, போட்டி, பொறாமை ஆகியவற்றை சந்திக்கநேரும். பொருளாதாரப் பற்றாக்குறை இருக்காது. சில விஷயங்களில் தேவையில்லாத விமர்சனங்களை எதிர்கொள்ளநேரும். திடீர்ப் பயணம் ஏற்படலாம். அது அலைச்சலைத் தரும். விநாயகர் வழிபாடு உத்தமம்.

தனுசு: 20-7-2020 மாலை 4.30 மணிமுதல் 22-7-2020 இரவு 9.15 மணிவரை சந்திராஷ்டமம். ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்படலாம். குடும்பத் தேவைக்காகக் கடன் வாங்கநேரிடும். தொழில் துறையில் டென்ஷன், கவலை ஏற்படலாம். சிலர் கௌரவப் போராட்டத்தை சந்திக்கநேரலாம். சிலருக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடிவரும்; நன்மையும் தரும். விநாயகர், தன்வந்திரி வழிபாடு உத்தமம்.

மகரம்: 22-7-2020 இரவு 9.15 மணிமுதல் 24-7-2020 இரவு 12.30 மணிவரை சந்திராஷ்டமம். மனதில் புதிய திட்டங்கள் உதயமாகலாம். கணவர்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சில விஷயங்களில் தர்மசங்கடத்தை சந்திக்கநேரும். காலபைரவ வழிபாடு சிறப்பு.

கும்பம்: 24-7-2020 இரவு 12.30 மணிமுதல் 26-7-2020 இரவு 2.55 மணிவரை சந்திராஷ்டமம். குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும். என்றாலும், தாயார்வழியில் சில பிரச்சினைகள் தோன்றி மறையும். சிலருக்கு எதிர்பாராத வீழ்ச்சி, கஷ்டம் வரலாம். பூமி, வீடு, வாகனவகையில் நன்மைகள் உண்டாகும். உடன்பிறந்தோர்வழியில் அனுசரித்துச்செல்வது நன்மை தரும். கற்பனை பயம் தோன்றலாம். தன்வந்திரி மந்திரத்தைப் பாராயணம் செய்யவும்.