அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் வாயிலாக பேரின்ப நிலையை அடைவதுதான் மனித வாழ்வின் நோக்கம். மனித வாழ்வின் நோக்கத்தை எட்டிப் பிடிப்பதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது. மனிதனைத்தவிர, பிற உயிரினங்களின் வாழ்வில் எந்த குறிக்கோளும் இல்லை.
மனிதர்கள் மட்டுமே பிறவிப்பயனை அடைய விரும்புகிறார்கள். மனநிறைவான திருமண வாழ்வே மனிதனை பிறவிப்பயனை அடையச்செய்கிறது. ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்க வருபவர்கள், திருமணத்திற்குப் பிறகு வளர்ச்சி எப்படி இருக்கும் என்னும் கேள்வியைக் கேட்காமல் போவதில்லை. திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் வளர்ச்சி மனநிறைவான- சுவையுடைய திருமண வாழ்வைத் தரும்.
‘"இன்னாருக்கு இன்னார்'’ என்ற தீர்ப்பு, கர்மக்கணக்குப்படி எழுதிவைத்திருந்தாலும்கூட, தவறான திருமணப்பொருத்தம் பலரின் வாழ்வை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. எந்த வினையை யும் பரிகாரம் செய்தால் தீர்த்துவிடலாம் என்பது பலரின் நம்பிக்கை. திருமணத்தைப் பொருத்தவரை, ஒரு ஜாதகத்திலுள்ள குறையை சரிசெய்யக்கூடிய மற்றொரு ஜாதகத்தை இணைப்பதே தகுந்த பரிகாரமாகும்.
‘"உத்தியோகம் புருஷ லட்சணம்'’ என்பார்கள். ஒரு மனிதனுக்கு மதிப்பும், மரியாதையும் வருவது அவன் சுயமாக உழைத்து சம்பாதிக்கத் தொடங்கும்போது தான். சமுதாய மேன்மை, சென்ற இடங்களில் புகழ், அந்தஸ்து கிடைக்க பொருளாதாரம் மிக முக்கியமானது. பொருளாதாரம் சிறக்க ஆணின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடம் மற்றும் கர்மகாரகன் சனி பலம்பெற்றால் தொழில் நன்றாக இருக்கும். உத்தியோகம் பார்த்தாலும் நற்பலன்கள் மிகும்.
ஒருவர் உத்தியோகம் பார்ப்பதாக இருந்தாலும், சொந்தமாகத் தொழில் செய்வதாக இருந்தாலும் பத்தாம் அதிபதி பலம்பெற்றிருக்க வேண்டும். பத்தாம் இடத்தை குரு போன்ற சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது பத்தாம் அதிபதியை குரு பார்க்க வேண்டும். தீயகிரகங்கள் பார்க்காமல் இருக்க வேண்டும். பத்தாம் அதிபதி பலம்குறையாமல் 3, 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங் களின் சம்பந்தம் இல்லாமல் இருந்தால், தொழில் முன்னேற்றம் உண்டு.
பத்தாம் அதிபதி உச்சம்பெற்றாலும், உச்சம்பெற்ற சுபகிரகம் பத்தாம் இடத்தைப் பார்த்தாலும், 10-ஆம் இடத்தில் உச்சம்பெற்ற சுபகிரகங்கள் இருந்தாலும் நல்ல பலன்கள் நடக்கும். பத்தாம் அதிபதி கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலும் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும், தொழிலில் முன்னேற்றத்தை அடையலாம்.
லக்னாதிபதி பாவகிரகங்களுடன் சேர்ந்து மறைவு ஸ்தானத்தில் இருந்தால், தொழிலில் முன்னேற்றத்தைக் காணமுடியாது.
லக்னாதிபதி 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் இணைந்து 11-ல்நின்றாலும் தொழிலில் சிறப்புப் பெறமுடியாது.
லக்னாதிபதி பத்தில் இருந்தால், சுயமாகத் தொழில் செய்வார். அவருடன் பலம்பெற்று குரு இருந்தால், எந்தத் தொழில் செய்தாலும் சிறப்பாக அமையும்.
பத்தாம் அதிபதி பலம்பெற்றிருந்து, 9, 11-ஆம் ஸ்தானங்களில் சுபகிரகங்கள் பலம்பெற்றிருந்தால் ஜாதகர் தொழிலில் தலைசிறந்தவராகவும், புகமுடையவராகவும் சிறந்து விளங்குவார்.
பத்தாம் அதிபதியுடன் குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை பலமிழக்காமல் இருந்தால், அரசாளும் யோகங்கூட உண்டு. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, சில குறிப்பிட்ட சூட்சும கட்டப் பொருத்தத்தைக் கடைப்பிடித்தால் பொருளாதார வளர்ச்சி அபரி மிதமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்க சில கிரகச்சேர்க்கை மிக முக்கியம். பல ஆண்கள், ‘"மனைவி வந்த நேரம் என் வாழ்க்கையில் தொழில்முன்னேற்றம் ஏற்பட்டது'’ என்று கூறுவதையும்,‘ "திருமணத் திற்குப் பிறகு என் தொழில் முடங் கியது' என்று கூறுவதையும் கேள் விப்பட்டிருக்கிறோம்.
அதேபோல் பெண்கள் பிறந்த வீட்டில் ராஜவாழ்க்கை என்றும், புகுந்தவீட்டில் கஷ்ட ஜீவனம் என்று புலம்புவதையும் பார்க்கி றோம். மனித வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் முன் ஜென்ம கர்மவினைத் தொடர்ச்சியே என்றாலும், முறையான திருமணப் பொருத்தமானது, விதியை மதியால் வெல்லச் செய்யும்.
திருமணத்திற்குப் பின், ஒருசிலர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகிறார்கள். அத்தகையவர்களின் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
ஆணுடைய ஜாதகத்தில் மனைவி யைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன். கர்மகாரகன், தொழில்காரகன், உத்தியோகத்தைக் குறிக்கும் கிரகம் சனி.
ஆணின் ஜாதகத்தில்-
1. சுக்கிரன், சனி சேர்க்கை மற்றும் சமசப்தமப் பார்வை முதல்தர இணைவு. இந்த கிரகச் சேர்க்கை இருப்பவர்களின் மனைவி வேலைக்குச் செல்வார் மற்றும் தான் பிறந்த வீட்டிலிருந்து பலவிதமானசீதனம், சொத்து கொண்டுவருவார். மனைவி வந்தபிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருந்துகொண்டே இருக்கும்.
2. அத்துடன் சுக்கிரனுக்கு 1, 5, 9-ல் அல்லது 2-ல் ராகு இருந்தால் பொருளாதாரம் பன்மடங்காக உயரும்.
3. உச்சம்பெற்ற சுக்கிரன் சனியைப் பார்த்தாலும், சுக்கிரன் தன் சொந்த வீட்டிலும், நட்பு வீட்டிலும் அமர்ந்து சனியைப் பார்த்தாலும் பெரிய முன்னேற்றம் உண்டு
4. செவ்வாய்க்கு 4, 7, 10-ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், மனைவிமூலம் சொத்துகள் சேரும்.
5. சுக்கிரனும் குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரமாகவோ, திரிகோணமாகவோ இருந்தால், மனைவியால் செல்வமும், தங்கமும், வெள்ளியும், உயர் ரக ஆடைகளும் சேரும்.
6. சனிக்கு 1, 5, 9- 3, 7, 11- 2, 12-ல் சுக்கிரன் இருந்தால், மனைவி வந்தபிறகு யோகம் வரும்.
7. வக்ரம்பெற்ற சனிக்கு 12-ல் சுக்கிரன் அல்லது வக்ரம்பெற்ற சுக்கிரனுக்கு 12-ல் சனி இருக்க வேண்டும்.
8. பரிவர்த்தனைபெற்ற சனிக்கு 1, 5, 9- 3, 7, 11- 2, 12-ல் சுக்கிரன் இருந்தால் அல்லது பரிவர்த்தனைபெற்ற சுக்கிரனுக்கு 1, 5, 9- 3, 7, 11- 2, 12-ல் சனி இருந்தால் சிறப்பு.
9. சனிக்கு 1, 5, 9- 3, 7, 11- 2, 12-ல் சுக்கிரன் அமர்ந்து, அந்த சுக்கிரனுக்கு 1, 5, 9- 3, 7, 11- 2, 12-ல் குருவோ அல்லது புதனோ இருந்தால் ஜாதகர் மிகப்பெரிய செல்வந்தராவார்.
மேலேகூறிய கிரக இணைவில், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9-ல் அல்லது 2-ல் கேது இருந்தால், மனைவி கொண்டு வந்த சொத்து, பணம் எல்லாம் விரய மாகும்.
சனிக்கு 1, 5, 9- 3, 7, 11- 2, 12-ல் செவ்வாய் இருந்தால், மனைவியால் வந்த செல்வம் ஜாதகரின் கடனைத் தீர்ப்பதற்கே சென்றுவிடும்.
இவை எல்லாவற்றுக்கும்மேல்-
உதாரண ஜாதகம்-1
ஆண் ஜாதகத்திலுள்ள சனிக்கும், பெண் ஜாதகத்திலுள்ள சுக்கிரனுக்கும் கேந்திர திரிகோண சம்பந்தம் இருந்தால், தொழில், உத்தியோகத்தில் மேன்மை இருந்துகொண்டே இருக்கும்.
உதாரண ஜாதகம்-2
ஆண் ஜாதகத்தில் சனி நிற்கும் இடத்தில், பெண் ஜாதகத்தில் ராகு- கேது நின்றால், ஆணின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவிற்கு உத்தியோகமோ தொழிலோ இருக்காது.
முறையான திருமணப் பொருத்தமே மனநிறைவான திருமண வாழ்க்கை தரும் என்பதை நான்கு நிலைப்பாடுகள் தீர்மானிக் கின்றன.
1. தம்பதிகளிடைய கருத்தொற்றுமை.
2. சந்ததி விருத்தி.
3. சமுதாய மேன்மை.
4. தொழில், பொருளாதார வளர்ச்சி.
ஆண், பெண் ஜாதங்களை இணைக் கும்போது, தம்பதிகளுடைய 7-ஆம் அதிபதியுடன் பொருந்தும் நட்சத்திரங் களை இணைக்கும்போது, தம்பதிகளி டையே கருத்தொற்றுமை, சந்தான விருத்தி சிறப்பாக இருக்கும்.
10-ஆம் இடமான தொழில் ஸ்தானம் மற்றும் கர்மகாரகன் சனிக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப் பொருத்தம் பார்த்தால், சமுதாய மேன்மை, தொழில், பொருளாதார வளர்ச்சியை அடையமுடியும்.
12 பாவங்களில் ஒரு மனிதனின் வாழ்வில் திருப்புமுனையைத் தருவது 7-ஆம் பாவம் எனும் களத்திரபாவமே. மனைவி வந்தநேரம் (மனைவியின் ஜாதகமே) ஒரு ஆணின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறது. அதேபோல் தொழில் கூட்டாளியைப் பற்றிக்கூறும் பாவம் 7-ஆம் பாவம். ஆக, 7-ஆம் பாவம் கூறும் உறவான இல்வாழ்க் கைக் கூட்டாளியும், தொழில்கூட்டாளியும் சிறப்பாக அமைந்தால், வாழ்நாள் முழுவதும் நற்பலன்கள் தொடரும்.
திருமணத்தின்மூலம் புதிய உறவால் தனக்கு நன்மை ஏற்படுவதையே அனைவரும் விரும்புவர் என்பதால், மற்ற பொருத்தத்துடன் தொழில் ஸ்தானம், சனிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பொருத்தம் பார்த்தால், வளமான வாழ்வு ஏற்படும். முறையான திருமணப் பொருத்தமே, சரியில்லாத ஜாதகத்தை சரிசெய்ய பிரபஞ்சம் வழங்கிய கொடை, பரிகாரம். எத்தனை கோவிலுக்குச் சென்றாலும் தீர்க்கமுடியாத பிரச்சினையை, முறையான திருமணப் பொருத்தம் சரிசெய்யும்.
செல்: 98652 20406