மனித இனம் தோன்றியதிலிருந்தே பல்வேறு காரணங்களுக்காக பிரிவினைகள் தோன்றிவிட்டன. கருத்து வேறுபாடு ஏற்பட்ட மனிதர்கள் தனித்தனிக் கூட்டமாக பூமியில் இடம் பெயர்ந்து வாழத் தொடங்கினர். ஆறறிவுப் பேரினமாகச் சொல்லிக்கொள்ளும் மனிதன் மட்டுமே பூமியை நாடுகளாகப் பிரித்தான். இருக்கின்ற நிலப்பரப்பின் சூழ்நிலைக்கேற்ப உண்டான நிறம், உணவு, உடை, பழக்க வழக்கம்,மொழியைக் கொண்டு மனிதர்களுக்குள்ளே இனம், ஜாதி, மதம் என பல்வேறு பிரிவினைகளை உருவாக்கி பகை வளர்த்துக் கொண்டான்.
மனித இனத்தில் ஆண், பெண், திருநங்கை தவிர வேறு இனமில்லை என்பது தெரிந்தும், மனித இன ஒற்றுமையை மறைத்து சுயநலத்திற்காக உலகம் முழுவதும் பிரிவினைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆணைவிட பெண் வலிமையானவள்; பெண்ணைவிட ஆண் வலிமையானவன் என்று ஒருவரை யொருவர் அடிமைப்படுத்தும் போராட்டம் மறைமுகமாக இன்றும் நடைபெற்றாலும், ஆண்- பெண்ணிடையே இயற்கையாக ஏற்படும் இனக்கவர்ச்சி என்ற காதலால் தான் பூமியில் மனித இனம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சி காரணமாக எங்கெங்கோ பிறந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் சூழல் தற்போது நிலவுகிறது. மனித இனத்தை ஒன்றுபடுத்தும் சக்தியாக காதல் மட்டுமே இருக்கிறது.
தனக்குப் பிடித்தவர் தன்னைக் காதலிக்க வேண்டுமென்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. காதல் கிடைக்க பெரும் முயற்சி செய்து போராடுபவர்களையும், காதல் பற்றி யோசிக்காமல் இருந்தவரும் திடீரென்று காதலில் அகப்பட்டுக் கொள்வதை யும் பார்க்கிறோம். காதல் கிடைத்தால், காதலே உலகில் உன்னதமானது என்று புகழ்வதும், கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்பட்டால் இகழ்வதும் நடைமுறை. காதலால் உயர்ந்தவர்களையும், காதலால் வாழ்க்கையைத் தொலைத்தவர்களையும் காண்கி றோம். ஒவ்வொருவரும் தன் பருவ வயதில் காதலுக்காக ஏங்குகிறார்கள். அவர்களே பெற்றோரானவுடன் தன் பிள்ளைகளுக்கு காதல் வரக்கூடாது என்றும் எதிர்பார்க்கிறார்கள். காதல் வருவதற்குப் பல்வேறு சூழ்நிலைக் காரணங்களைச் சொன்னாலும், காதலில் வெற்றி- தோல்வி அடைவதற் கும் அவரவர் ஜாதக கிரக நிலைகளே காரணம். காதலுக்குரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் பலத்தைப் பொருத்தே காதலின் நிலை இருக்கும்.
காதல்
காதல் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிர்பாலினத்தின்மேல் இயற்கையாக ஏற்படும் சாதரணமான ஈர்ப்பு மட்டுமே. எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காது. சிலரைப் பார்த்ததும், யாரென்று கூட தெரியாத பெண்ணைப் பார்த்தவுடன் நட்புகொள்ள வேண்டும்; பேசவேண்டும்; தினம் ஒருமுறையாவது பார்க்கவேண்டு மென்ற எண்ணம் ஏற்படும். முதலில் உடலில் ஏற்படும் கவர்ச்சி, காலம் செல்லச் செல்ல 'அவரின்றி நானில்லை' என்ற நிலையை ஏற்படுத்தும். இதற்குக் காரணம் ராசிகளின் ஈர்ப்புத் தன்மையே. எந்த ராசிக்கும் 5, 9லிஆம் ராசியாக அமைபவருடன் தன்னையறியாமலேயே அன்பு ஏற்படும். அதேபோல் ராசிக்கு 7லிஆவது ராசிக்காரர்களுடன் உண்டாகும் நட்பு காதலாக மாறிவிடும். வசீகரிக்கும் ராசிகள் மேஷ ராசி அல்லது லக்னத்துக்கு 5-ஆவது ராசி சிம்மம்; 7-ஆவது ராசி துலாம்; 9-ஆவது ராசி தனுசு. இவர்களுடன் ஏற்படும் நட்பும் உறவும் பலமாக இருக்கும். ரிஷபத்திற்கு கன்னி, விருச்சிகம், மகரமும்; மிதுனத்திற்கு துலாம், தனுசு, கும்பமும்; கடகத்திற்கு விருச்சிகம், மகரம், மீனமும்; சிம்மத்திற்கு தனுசு, கும்பம், மேஷமும்; கன்னிக்கு மகரம், மீனம், ரிஷபமும்; துலாமிற்கு கும்பம், மேஷம், மிதுனமும்; விருச்சிகத்திற்கு மீனம், ரிஷபம், கடகமும்; தனுசிற்கு மேஷம், மிதுனம், சிம்மமும்; மகரத்திற்கு ரிஷபம், கடகம், கன்னியும்; கும்பத்திற்கு மிதுனம், சிம்மம், துலாமும்; மீனத்திற்கு கடகம், கன்னி, விருச்சிகமும் ஈர்ப்பு உண்டாக்கும் ராசிகளாகும். இவர்கள் இணைபிரியா நட்பு, உண்மையான அன்புடன் இணைவார்கள்.வசீகரிக்கும் ராசிகளுக்குள் காதல் எளிதாக ஏற்படும். லக்னம்,ராசிக்கு 1, 4, 5, 9, 10 ஆகிய ராசிக்காரர்களின் நட்பு, காதல் 7-ஆம் அதிபதியுடன் இணையும்போது இணைபிரியாத காதலை ஏற்படுத்திவிடும்.கௌரவம் ஒவ்வொருவரும் மனித இனத்திலும், 'நான் தனிப்பட்ட உயர்ந்த இனம்; வீரன், மேதாவி; தனக்குக் கீழ்தான் யாரும்; தனக்கே எல்லாம் தெரியுமென தற்பெருமை, பரம்பரை பெருமை பேசிக்கொண்டு, தன்னைத்தானே தனிமைப்படுத்தி, தனக் குள்ளே மகிழ்ச்சி, கர்வம் கொள்வது ஆதிகாலந்தொட்டு நடந்து வரும் மரபணுப் பிழைதான். இதுவே கௌரவம் என்பது. இதுவொரு வகையான மனவியாதி. காதல் செய்பவர்கள் குடும்ப கௌரவத்தைக் கெடுக்கப் பிறந்தவர்கள் என்று சொல்லி, சிலர் போலியான கௌரவத்திற்காக கொலையும் செய்கிறார்கள். சனி அல்லது ராகுவுக்கு 1, 4, 5, 7, 9, 10-ல் ஆறாம் அதிபதி அமைந்தால், காதலுக்காக காவல்நிலையம் செல்ல நேரிடும். ஆறாம் அதிபதி லக்னம் அல்லது ராசிக்கு கேந்திர கோணமாகவும்; மூன்றாமதிபதி, எட்டாமதிபதி தொடர்பும் ஏற்பட்டால் காதலில் பிரச்சினை ஏற்படும். குரு பார்வையில்லாமல் பாவகிரகச் சேர்க்கை ஏற்பட்டால் தற்கொலை அல்லது கௌரவத்திற்காக கொலை செய்யப் படுவார்கள். பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைத்தும் நம் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்பவர்களும்; பெற்றோர் களை எதிர்த்துக் காதல் திருமணம் செய்ததால்தான் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும் பலர் வேதனைப் படுகிறார்கள். உண்மையில் இதற்குக் காரணம் ஏழாமிடம் திருமண ஸ்தானம், நான்காமிடம் சுக ஸ்தானம் பாதிக்கப்பட்டிருப்பதுதான்.
ஒன்பதாமிடம் சமுதாயத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் நிலை, முன்னோர் களின் ஆச்சாரங்களை மீறும் நிலை,சமூக அந்தஸ்து, கௌரவம் பற்றி ஒன்பதாம் இடத்தைக் கொண்டு அறியலாம். 9 மிடம் ஆட்சி, உச்சம், சுபகிரகப் பார்வை, இணைவு ஏற்பட்டால் காதலினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படாது. 'என் பிள்ளை காதல் செய்தால் நடப்பதே வேறு' என கௌரவம் பேசும் பலர், அவர்கள் வீட்டில் காதல் திருமணம் நடந்துவிட்டால், 'காலம் மாறிப் போச்சு; எங்கதான் நடக்கல' என சில உதாரணங்களைத் தன்னடக்கத்துடன் சொல்லி தப்பித்துக் கொள்வர். ஒவ்வொரு விஷயத்திற்கும் பக்கத்து வீட்டுக்காரன் என்ன நினைப்பானோ என்று நினைத்தால், யாரும் நிம்மதியாக வாழ முடியாது.
ராகு மற்றும் ஏழாமதிபதியுடன் செவ்வாய் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க, அதை சுக்கிரன் பார்த்தாலும் சேர்ந்திருந்தாலும்ஒரே மதத்திற்குள் ஜாதி மாறி திருமணம் செய்வர். 2-ஆமிடம் கெட்டவர்கள் 2, 7-ஆமிட சூரியன்,7-ல் சந்திரன், சுக்கிரன், சனி அல்லது செவ்வாய், ராகுவால் பாதிக்கப்பட்ட சுக்கிரன் ஜாதி மாறி கலப்புத் திருமணம் செய்யவைக்கும்.
அல்லது ஜாதி மாறி காதல் திருமணம் செய்த தம்பதிகள் பெற்ற பிள்ளைகளை மணப்பர். சிலர் இரண்டாம் தார தாய்க்குப் பிறந்த பிள்ளைகளை திருமணம் செய்யநேரும்.
மதம் மாறி கலப்பு திருமணம்
மதப்பற்றைக் குறிக்கும் ஒன்பதாமிடம், ஐந்தாமிடம் கெட்டு, குருவும் கெட்டிருப்பின் மதம்மாறித் திருமணம் செய்வர். ஒன்பதாமதிபதி கெட்டு 7-ல் இருந்தாலும், 7, 9-ஆம் அதிபதிகள் கெட்டுச் சேர்ந்திருந்தாலும் மதம் மாறி கலப்புத் திருமணத்தைக் கொடுக்கும். 5, 9-ஆம் அதிபதிகள் கெட்டுச் சேர்ந்திருந்தாலும் மதம்மாறி கலப்புத் திருமணத்தைக் கொடுக்கும். 5, -ஆம் அதிபதிகளுடன் பாவகிரகப் சேர்க்கை, பார்வை, அதனுடன் 7-ஆம் அதிபதி சேர்க்கையும் இந்த வகைத் திருமணத்தை நடத்தும். 12-ஆம் அதிபதி கெட்டு இணைந்திருந்தாலும் அந்நிய நாடு சென்று மதக் கலப்புத் திருமணம் செய்துகொள்வார்.
காதல் திருமண தோஷம் முறை யாகத் திருமணம் நடக்காமல், திருமணம் நடப்பதற்குள் பல குழப்பத்தை ஏற்படுத்தி, ஜாதகர் விருப்பப்படி காதலால் மணம் முடிப்பதும் தோஷமே. ஏழாமிடம் கெட்டவர்கள், பாவகிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காதல் திருமணம் செய்வர். ஐந்தாமிடம் கெடுதல், ஏழாமிடம் கெட்டு, சனி பார்வை பெற்றால், சுக்கிர வலுத்தன்மையால் காதலைக் கொடுத்து பெற்றோரைக் கெடுக்கும். சொந்தமோ, அன்னியமோ- வேறு மதம், ஜாதி, வேற்று மொழியைச் சேர்ந்தவரோ, கண்டிப்பாக திருமணத்திற்கு முன்பே பார்த்துப் பழகியவரை மணம் முடிப்பார். அதாவது குடும்பத்திற்கு அறிமுகமானவராகவோ அல்லது ஜாதகருக்கு அறிமுகமானவராகவோ இருப்பார்.
ஐந்தாமிடம் ஐந்தாமிடத்தை புத்திர ஸ்தானம் என்று மட்டும் சொல்லமுடியாது. காதலை வெளிப்படுத்தும் இடமுமாகும். ஒருவர்மேல் ஏற்படும் விருப்பு- வெறுப்பு களையும், இரு மனமும் ஒன்றிப்போகும் நிலையையும், காதல் வசப்படுபவரா என்பதையும் ஐந்தாமிடத்தின் பலத்தைப் பொருத்தே நிர்ணயிக்க முடியும். காதல் வந்தவர்கள் அதை தைரியமாகச் சொல்லத் தயங்குவார்கள். ஐந்தாமிடம் கெடாமல் சுபர் பார்வை பெற்றிருந்தால் தைரியமாகக் காதலை வெளிப்படுத்துவர். ஐந்தாமிடம் பலம் பெற்றவர்களுக்கே காதல் கைகூடும். காதல் திருமணம் ஏழாமிட அதிபதி, சுக்கிரன், சனி இணைவு; 7-ஆம் அதிபதி, சுக்கிரன், கேது இணைவு; லக்னாதி பதி 7-ல்;லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி நவாம்சத்தில் லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெறுவது; சந்திரன் லக்னத்தில் அல்லது லக்னாதிபதியுடன் சம்பந்தம்; செவ்வாய், சந்திரன், சுக்கிரன், சனி ஆகியோர் 1, 5, 7-ஆம் வீட்டிற்கு சம்பந்தம்; லக்னம் அல்லது ராசிக்கு 5, 7-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை; 7, 9-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை; லக்னாதிபதியும், 7ம் அதிபதியும் பரிவர்த்தனை அல்லது பார்வை, சேர்க்கை போன்ற அமைப்புகளால் காதல் திருமணம் ஏற்படும்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் எந்த ராசியில் இருக்கிறதோ, ஆண்கள் ஜாதகத்தில் அதே ராசியில் சுக்கிரன் நின்றால் முதல் பார்வையிலேயே காதல் ஏற்படும். செவ்வாய், சுக்கிரன் இணைந்தாலும் காதல் ஏற்படும். சுக்கிரனை குரு பார்த்தால்தான் திருமணத்தில் முடியும். ஐந்தாமதிபதி 7-ல் இருந்து, 9-ஆம் அதிபதி சம்பந்தம் இருந்து குரு பாதிக்கப்பட்டால், காதல் கலப்புத் திருமணமாகும். 7-ஆம் அதிபதி நவாம்சத்தில் ராகு- கேதுவுடன் இணைவு; சுக்கிரன்,ராகு, கேதுவிற்கு நவாம்சத்தில் சம்பந்தம் பெற்றால் அயல்நாட்டுக்காரருடன், ஜாதி, மதம் கடந்து திருமணமாகும். 9-ஆம் அதிபதி அல்லது 9-ஆம் பாவத்திற்கு 2, 12-ல் பாவிகள் இருப்பது,மேலும் 7-ஆம் பாவத்தில் கேது இருந்தால் காதல் கலப்பு மணமாக, ஜாதி, மத வேறுபாடின்றி நடைபெறும். ராகு முஸ்லிம் மதத்தினரையும், கேது கிறிஸ்துவ மதத்தினரையும் குறிக்கும்.
கல்விச் சாலைகளைக் குறிக்கும் 4-ஆம் பாவம், லக்னம் அல்லது ராசிக்கு 5, 7-ஆம் அதிபதி சம்பந்தம்; செவ்வாய், சுக்கிரன் 4, 5, 7-ஆம் இடத்திற்குத் தொடர்பு பெறுமானால் கல்லூரிகளில் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடியும். 4, 5, 7-ஆம் அதிபதிகள் 9, 10-ஆம் வீட்டிற்கு சம்பந்தம் ஏற்பட்டால், பணியாற்றும் இடத்தில் காதல் வசப்பட்டு திருமணம் செய்யும் நிலையும்; செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து 1, 2, 6, 7, 8, 10, 12-ல் இருப்பது காதல் வசப்படும் நிலையையும் உருவாக்கும். 5-ஆம் அதிபதி புதன், குருஇவர்களில் ஒருவருடன் செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று, 4, 7, 10-ல் இருந்தால் பள்ளி, கல்லூரியில் காதல் ஏற்பட்டு திருமணமாகும் நிலை உண்டாகும்.
5, 7-ஆம் அதிபதிகளுடன் புதனும், 6-ஆம் அதிபதியும் சேர்க்கை; சுக்கிரன், செவ்வாய் 6-ஆம் இடத்தில் பலமாகி சந்திரன், புதனுடன் தொடர்பு ஆகிய அமைப்புகள் இருந்தால் தாய்மாமன், தாயின் உறவுக்காரர்களுடன் காதல் ஏற்படும். சந்திரனுக்கு 10-ல் சுக்கிரன், சுக்கிரனுக்கு 10-ல் சனி இருந்து 1, 5, 7-ஆம் அதிபதிகளின் சம்பந்தம் பெற்றால் வியாபாரம், கல்லூரி, பள்ளி ஆசிரியராக இருப்பர். தன்னுடன் பணியாற்றுபவர்களைக் காதலித்து மணம் செய்வர். சனி, சுக்கிரன் அல்லது சனி, புதன் இணைந்து சனி, சுக்கிரன், புதன் வீடுகளில் இருந்தாலும்; 1, 4 ,7, 9, 12-ஆம் இடத்தில் இருந்தாலும் பணக்காரரின் மகளைக் காதலிப்பார்.
2, 7, 10-ஆம் அதிபதிகள் இணைந்து 10-ஆம் இடத்தில் பலம்பெற்றிருந்தால் பிரபல தொழிலதிபரை காதல் திருமணம் செய்வர். சூரியன், சுக்கிரன் அல்லது சூரியன் சனி 3, 4, 9, 10, 1-ல் இருந்து, ஏதாவது ஒரு கிரகம் உச்சம் பெற்றால் அரசியல் பிரமுகர், அமைச்சர், அரசாங்க பெரிய பதவிகளில் இருப்பவரை காதல் திருமணம் செய்வர். இந்த அமைப்பிலிருந்து 2, 4, 7, 12-ஆம் இடங்களின் தொடர்புபெற்றால் பெற்றோரை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறி காதல் மணம் செய்வர். 1, 5, 7-ஆம் அதிபதிகள் தொடர்பு; சுக்கிரன், புதன் 7, 8,10-ஆம் இடத்தில் இணைந்திருந்து அந்த ராசிகள் சந்திரன், புதன், சுக்கிரனுக்குரிய வீடாக இருந்தால் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்லது நடிகர், நடிகையை காதல் திருமணம் செய்யும் யோகம் கிட்டும்.
குரு பார்வை பெற்றால் முறையான திருமணமாகவும், சனி, செவ்வாய் பார்வை பெற்றால் முறையற்ற திருமணமாகவும் நடக்கும். பாவகிரகங்கள் வலுப்பெற்று இரண்டு, எட்டாமிடம் கெட்டவர்கள் ஏற்கெனவே மணமானவரை திருமணம் செய்ய முயற்சிப்பர். சூரியன், செவ்வாய் வலுப்பெற்றால் துணைவரை இழந்த அல்லது பிரிந்தவரைத் திருமணம் செய்யத் தூண்டும். முறையற்ற காதல் தருவது ஒருவகை திருமண தோஷம். சிலருக்கு நான்கில் ராகு,கேதுக்கள் இருந்து, ஐந்தாமிடமும் கெட்டு பாவகிரகப் பார்வை இருந்தால்முறையற்ற காதலால், கரு உருவாகி, கருக் கலைப்பு ஏற்பட்டுவிடும்.
ஏழாமிடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை முறையற்ற வாழ்க்கையைத் தரும். காதல், கலப்பு திருமணத்தைக் கொடுத்தும், கெடுத்தும் விடுகிறார். காதல் கிரகங்கள் சுக்கிரன், செவ்வாய் இணைவது விதவையை மணம் செய்வது, விதவையின் தொடர்பை உண்டாக்குவர். பெண்களாயின் மனைவியை இழந்தவர் அல்லது மணமானவரைக் காதலிப்பது அல்லது தொடர்பை உண்டாக்கும். பாவகிரகச் சேர்க்கை, பார்வை குணக்கேட்டைத் தரும்.
காதலில் வெற்றி பெறாத நிலை லக்னம் அல்லது ராசிக்கு எட்டாம் அதிபதி ஐந்தாமிடத்தில்; ராகு, கேது ஐந்தில் இருப்பது; சந்திரன், செவ்வாய் இணைந்து ஐந்தில் இருப்பது; 5, 8-ஆம் அதிபதிகள் சம்பந்தம் போன்ற அமைப்புகள் ஒருதலைக் காதலாக இருக்கும். லக்னம், ராசிக்கு ஏழாமிடம், ஏழாமதிபதி, சுக்கிரன் இவர்களில் யாருடனா வது சனி, ராகு இருவரும் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணத்தில் முடியாது. ஐந்தாம் அதிபதி கெடுவது, பாதகாதிபதி இணைவு, காதல் திருமணத்தில் தோல்வியை ஏற்படுத்தும். நீசம்பெற்ற கிரகம் இரண்டாமிடத்தில் இருப்பது; இரண்டாமதிபதி நீசம்; செவ்வாய் 1, 7-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெற்று ராகு, கேது இணைவு; 5, 7-ஆம் அதிபதிகளுடன் 6-ஆம் அதிபதி சம்பந்தம் ஏற்பட்டால் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறும் நிலை ஏற்படும்.
பெண்கள் ஜாதகத்தில் சூரியன் ஏழில் இருந்தாலும், ஆட்சி பெற்றாலும் அந்த காதல் திருமணம் தோல்வியில் முடியும். புதன் எட்டில் பலமற்று இருப்பவர்கள்; சனி, ராகு ஏழாமிடத்துடன் சம்பந்தம் பெறுபவர்கள் காதலில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம். பாவகிரக வலுப்பெற்று சுக ஸ்தானத் தில் இருந்து ஏழாமிடம் கெட்டால், முறையற்ற காதல் உருவாகி குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். சுக்கிரன் கெட்டு செவ்வாய், சனியால் பாதிக்கப் பட்ட பெண்களுக்குத் திருமண வாழ்க்கை யால் மனபாதிப்பு ஏற்பட்டு, தேவை யற்ற எண்ணங்களால் அவமானத்தைப் பெறுவர்.
பரிகாரம் நம்முடைய குடும்ப பழக்க வழக்கங்களுக்கு எதிரானவர்களைத் திருமணம் செய்வதால், தன் பிள்ளைகளுக்குத் துன்பம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் ஏராளம். பிறந்த இடத்தில் இருந்ததைவிட திருமணம் முடிந்து சிறப்பாக சுகமாக வாழவேண்டுமென பெற்றோர்கள் நினைப்பார்கள். விவரம் தெரியாமல், விவரம் தெரிந்தவர்போல் அவசரமாக காதலைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் வருந்துவதால் எந்த பயனுமில்லை. 2, 5, 7, 8, 9-ஆமிடம் கெட்டிருப்பவர்களுக்கு காதலால் அவமானமும், தோல்வியும் ஏற்படுமென்பதால், காலதாமதத் திருமணம் செய்வது உத்தமம். திருமணத்திற்குத் தேவையான பொறுமை, விட்டுக்கொடுத்தல், பிடிவாதம் - எதிர்வாதம் புரிவதை நிறுத்திவிட்டு- குறிப்பாக தன் குடும்பப் பொருளாதார நிலையறிந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் காதல் திருமணம் சுகமானதாக இருக்கும்.
செல்: 96003 53748