குடும்பத்தில் எந்தவொரு சுபகாரியம் நடந்தாலும் உடன்பிறந்தவர்களின் துணை அவசியம் தேவை. சகோதரர்களைத் தவிர்த்து செய்யப்படும் காரியங்கள் தற்சமயம் சாதனைபோல் தெரிந்தாலும், பின்னர் அதனால் பெரும் நஷ்டத்தைத் தந்து, கஷ்டத்தை யாரிடமும் சொல்ல முடியாத நிலையே வரும். எவரொருவர் தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் சகோதரரை ஏமாற்று கிறாரோ அவர் எண்ணி லடங்கா துன்பத்தையே பெறுவார். மூத்த சகோதரர்கள் பெரும்பாலும் கடமைகளிலிருந்து தப்பித்துக் கொள்வர். ஏனென்றால் முன்னதாகத் திருமணம் நடப்பதால் மனைவி, குழந்தைகள்மீது பற்றுக்கொண்டு, தாய்- தந்தையை ஒதுக்கிவைப்பர். மறைமுகமாக ஒதுங்கி, உடன்பிறந்தவரிடம் அன்பாகப் பேசி, அவர் களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்வர். மூத்தவருக்குதான் அதிகப் பொறுப்பென சாதாரணமாகச் சொல்வது வழக்கம். ஆனால் உண்மையில் இளைய சகோதரர்கள்தான் பல குடும்பங்களின் பாரத்தைச் சுமக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
இளைய சகோதர, சகோதரியால் யாருக்கெல்லாம் நன்மை, தீமை என்பதை மூன்றாம திபதி நின்ற இடத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். தைரியம், நண்பர்களால் ஏற்படும் நன்மை- தீமைகள், கலைகளால் ஏற்படும் வளர்ச்சி, அந்தஸ்து, புகழ், வெற்றியைத் தீர்மானிக்கக்கூடியதாக மூன்றாமிடம் இருக்கும். சுபப் பார்வை பெற்றால் நன்மையும், பாவ வலுக்கூடினால் தீமையும் நடைபெறும். இனி, மூன்றாமதிபதி பன்னிரண்டு இடங்களிலும் நிற்பதால் உண்டாகும் பலனைப் பார்ப்போம்.
லக்னம்
மூன்றாமதிபதி லக்னத்தில் இருந்தால் உடன்பிறந்த சகோதரத்துடன் நல்ல பற்று, பாசத்துடன் இருப்பர். நல்ல நிலையிலிருந்தால் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காதவர்களாக வாழ்வார்கள். இளைய சகோதர உறவுண்டு. எதையும் தைரியமாகத் துணிந்து செய்வர். கலைத்துறையில் ஈடுபாடு, வெற்றி, புகழ் கிடைக்கும். சுபவலுப் பெற்றால் சங்கீத வல்லமை பெறுவார். உடற்பயிற்சி, உடல்மேன்மைக்கேற்ற வழிகளைப் பின்பற்றுவார். ஆடம்பர, அலங்காரப் பொருள்கள்மீது நாட்டம் கொண்டவராக இருப்பார். பிறரை வேலைவாங்குவதில் வல்லவர். கெட்ட சிந்தனை கொண்டவர். நன்றிகெட்டவராக இருப்பார். நண்பர்களால் நன்மையுண்டு.
இரண்டு
உடன்பிறந்தவரின் வருவாயில் குடும்பம் நடத்தவேண்டிய நிலை அல்லது சகோதரவகையில் வருவாய் கிடைக்கும். எதற்காகவும் கவலைப்படாமல் மனம் போன போக்கில் வாழக்கூடியவராகவும், சகோதர- சகோதரிகள்மீது எவ்வித அக்கறை காட்டாத சுயநலவாதியாகவும் இருப்பார்.
ஆனால் உடன்பிறந்தவர்கள் உதவக் கூடிய நல்ல நிலையில் இருப்பர். நன்றி கெட்டவராகவும் இருப்பார். பாவகிரகப் பார்வை, சேர்க்கையானது சகோதரத்துடன் அடிக்கடி மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். சுபகிரகத் தொடர்பிருந்தால் குடும்பத்தினருடன் இணைந்து சம்பாதித்து ஒற்றுமை யுடன் வாழ்வார். நண்பர்கள் குடும்பத்தைக் கெடுப்பர்.
மூன்று
மூன்றாமதிபதி மூன்றில் இருந்தால், இளைய சகோதரத்துடன் ஒற்றுமை, அன்பு, உதவிகள் பெற்றும், கொடுத்தும் வாழ்வர். மூன்றில் சகோதர காரகன் செவ்வாய் இருத்தல் ஒருவித பலவீனமே. ஆண் சகோதரத்தைத் தராது அல்லது இளைய சகோதரத்தால் நன்மையில்லை. நன்றாகப் பேசிக்கொண்டாலும் இளைய சகோதரரின் முன்னேற்றத்தை விரும்பாதவராக இருப்பார். பாவ கிரகங்கள் சேர்க்கை, பார்வையானது இளைய சகோதர உறவைக் கெடுக்கும். மூன்றாமிடம் சுபவலுப் பெற்றால் தைரியமானவராகவும், பலசாலியாக வும் இருப்பார். தெய்வ நம்பிக்கை, தெய்வ அனுகூலம் உண்டு. சொகுசான வாழ்க்கை, ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை, போகசுகம் கிடைக்கும். கலைத்துறையில் ஈடுபட்டுப் புகழ்பெறுவார். அதிகாரம்மிக்க பதவி கிடைக்கும்.எதிரியே நண்பனாக இருந்தால், எதிர்பாராத நன்மையால் வென்றுவிடுவார்.
நான்கு
உறவினர்களால் போற்றப்படும் யோகம் கிடைக்கும். தாயாரால் பாதுகாக்கப்படுபவராக இருப்பார். சுபத்தன்மை பெற்றால் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை, தாயார் ஆதரவு, பாசம், செல்வம், செல்வாக்கு கிடைக்கும். உடன் பிறந்த சகோதரர்கள் வாழ்க்கை வளம் பெறும். ஊரார் மெச்ச குடும்ப முன்னேற்றம் கிடைக்கும். பாவகிரகச் சேர்க்கை, பார்வையானது குடும்ப மகிழ்ச்சியைக் கெடுக்கும். தாயாரை நோயாளியாக்கி குடும்பத்திற்கு இழப்பு, கஷ்டத்தைத் தரும். மனதுக்குப் பிடிக்காத வீடு, மனை பாக்கியத்தைத் தரும். வில்லங்கத்தால் மனம் வெறுக்கும். ஆறாமதிபதி தொடர்பானது உறவினர்களை எதிரியாக்கும். வீடு, மனை, வாகனத்தால் கடனைத் தரும். எட்டு, பன்னிரண்டுக்குரியவர்கள் சேர்க்கை மன உளைச்சலைத் தரும். நண்பர்களால் மகிழ்ச்சி வந்து, நண்பர்களால் உறவினர் களைப் பகைத்துக்கொள்வர்.
ஐந்து
மூன்றாமதிபதி ஐந்தில் இருப்பது சகோதர, சந்தான பாக்கியத்தைத் தரும். பூர்வபுண்ணிய பலத்தால் முன்னோர்கள் ஆசிர்வாதம், முன்னோர்கள் சொத்துகளால் லாபம் ஏற்படும். சுபவலுப் பெற்றால் ஊர்போற்றும் மனிதராக வலம்வருவார். காதலால் லாபம் பெறுவர். முன்னோர்களின் சாஸ்திர, சம்பிரதாயத்தை மதித்து வாழ்வர். குலதெய்வ அருளால் நல்ல முன்னேற் றம் உண்டு. குலதெய்வக் கோவில் திருப்பணி செய்யும் அதிர்ஷ்டம் ஏற்படும். பாவகிரகத் தொடர்பிருந்தால் பங்காளிகளால் தீங்கு, புத்திரர்களால் மனக் கஷ்டத்தைத் தரும். முரட்டு தைரியத்தால் வீண் வம்பு வழக்குகளையே தரும். நம்பவைத்து ஏமாற்றும் நண்பர்கள் வருவர். சுபர் பார்வையானது நண்பர்களால் நன்மை தரும்.
ஆறு
மூன்றாமதிபதி ஆறில் மறைவது விபரீத ராஜயோகத்தைத் தரும். தைரியமான முடிவுகள் கோடீஸ்வரராக மாற்றும். எதிரிகளை துவம்சம் செய்துவிடும் ஆற்றல் கிடைக்கும். எதிர்பாராத திடீர் திருப்பத்தால் வாழ்க்கை சிறப்பாகும். பாவகிரகச் சேர்க்கையானது தைரியத்தைக் குறைத்து எதையும் செய்யமுடியாத மனப்பாங்கைத் தரும். தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மௌனமானவராக்கிவிடும். உடன்பிறந்தவர்களே எதிரியாக மாறுவர். நோயால் பாதிப்பு, தேகக் குறை, கடனால் அவதி, எதிரியால் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். நண்பனே எதிரியாவான்.
ஏழு
மூன்றாமதிபதி ஏழில் நின்றால் எதிர் பாலினத்தவர்மீது அதிக ஈடுபாடிருக்கும். தன்னுடைய சுகத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருப்பார். அதிக விரயத்தைத் தரும். தவறுகளை தைரியமாகச் செய்து, மனசாட்சியின்றி நடந்துகொள்வார். நம்பியவர்களை ஏமாற்றும் தந்திரசாலி. தொழில் செய்யாமலேயே சுகவாசியாக வாழ விரும்புவார். சுபத்தன்மை இல்லையென்றால் திருமண வாழ்க்கையைக் கெடுக்கும். இளவயது திருமணம் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தந்து, இழப்புகளை அதிகம் தரும். குணக்கேடு துணைவரின் பிரிவைத் தரும். நண்பர்களை ஏமாற்றும் எண்ணம் இருப்பதால், நம்பி ஏமாந்தவர்கள் மறுபடியும் ஏமாறத் தயாராக இருக்கமாட்டார்கள்.
எட்டு
மூன்றாமதிபதி எட்டில் இருந்தால் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமைக் குறை வாக இருப்பார்கள். உண்மையான பாசமிருக் காது. எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத தைரியம் மிக்கவர். கோழைபோல் காட்டிக் கொண்டாலும் வீரமாக- விவேகமாக செயல்படுவார். தன் காரியம் முடிந்ததும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கழற்றி விடுவார். அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்படும். சிலருக்கு நிரந்தர நோய் அல்லது ஊனம் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாதவராகவும், குடும்பத்தை செயல்படுத்தத் தெரியாதவராகவும் இருப்பார். குறுக்குவழியில் சந்தோஷம் பெறுவார். கடனால் அவமானம் ஏற்படும். பாதகாதிபதி, மாரகாதிபதி இணைவிருந்தால் துணைவரை இழப்பார். பாவகிரகங்கள் வலுப்பெற்றால் விபரீத ராஜயோகத்தால் நன்மையடைவார். நண்பர்களுடன் இணைந்து தொழில் செய்தால் நஷ்டமே ஏற்படும்.
ஒன்பது
இயற்கையாகவே தைரியம் மிக்கவராக இருப்பார். எதையும் யோசித்து செயல்படக் கூடியவர். நிரந்தர வெற்றிக்கு தைரியமாகப் போராடுவார். நேர்வழியில் சுகம்பெற விரும்புவார். பூர்வீகத்தால் லாபம், தந்தை, தந்தைவழி உறவுகளால் நன்மை உண்டாகும்.
சொந்தபந்தம்மீது பற்று, பாசம் கொண்டவர். குலதெய்வ அனுகூலமுண்டு. தீவிர ஆன்மிக சிந்தனை, பக்தி நிறைந்த வர். பாவகிரகப் பார்வை, சேர்க்கை அதிக கெடுதலைச் செய்யும். ஆறாமதிபதி சேர்க்கை பங்காளிப்பகை, மனக்கஷ்டம், மன உளைச்சலால் கோழையாக்கிவிடும். எதிலும் போராடி வெற்றிபெற வேண்டிய கட்டாயமுண்டு. நண்பர்கள் தைரியம் தந்து வெற்றியடையச் செய்வர்.
பத்து
மூன்றாமதிபதி பத்தில் இருந்தால், சகோதர- சகோதரிகளால் ஆதரவு இல்லாததால் தொழில் பாதிப்பு ஏற்படும். ஜாதகரை முன்னேறவிடாமல் தடுப்பதில் உடன்பிறந்தவர்கள் ஆர்வமாக இருப்பர். தடைகளை உருவாக்கிக் கெடுப்பர். சுப பலமின்றி செவ்வாய் பலம்குறைந் தால் அடிமையாக நடத்துவர். தனக்கு நல்ல வேலைக்காரனாக கடைசிவரை வைத்துக்கொள்வர். தாராள மனம், அன்பு, இரக்கம் இருப்பதால் ஏமாளியாக வாழவேண்டிவரும். தனக்காக வாழாமல் குடும்பத்திற்காக வாழ நினைப்பர். ஏமாளி என்றானபின் கடும் உழைப்பால் உயர்ந்து நிற்பர். தசாபுக்திகள் சரியாக இல்லையென் றால் அதிக துன்பத்தையடைவர். உழைப் பிற்கேற்ற ஊதியமோ தகுதிக்கேற்ற வேலையோ அமையாது. சாதாரணமான வேலை, தொழில் அமையும். நிரந்தர வேலையின்றி அவதிப்படுவர். நல்ல தசை வந்ததும் பெரிய அந்தஸ்து, அதிகாரம் மிக்கவராக மாறுவர். கூட்டுத்தொழில் சகோதர- நண்பர்வழியில் நஷ்டத்தைத் தரும். விலகியிருப்பதே உத்தமம்.
பதினொன்று
மூன்றாமதிபதி பதினொன்றில் இருப்பது மூத்த சகோதரத்திற்கு நன்மையைத் தரும். தன்னுடைய சொத்துகளையும் மூத்தவருக்கு விட்டுக்கொடுப்பார். பாசம் அதிகம் கொண்டவர். சுபகிரக வலுப்பெற்றால் மூத்த சகோதரர்களால் நன்மையடைவார். தைரியத்தால் லாபம் பெறுவார். கஷ்ட காலங்களில் யாருடைய உபதேசமுமின்றித் தானே தன்னைத் தேற்றிக்கொள்வார். உடன்பிறந்தவருக்கு லாபம் கிடைக்கும். ஆனால் உடன்பிறந்த வர்களால் லாபமில்லை. பாவகிரக வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை கெடும். இளைய தாரத்தைக் கொடுத்துக் கெடுக்கும். காரணமின்றி அடிக்கடி பிரிந்து வாழ்வர். ஆறுக்குரியவர் தொடர்பானது எவ்வளவு சம்பாதித்தாலும் சேர்த்துவைக்க முடியாது. லாபம் வீண்வழியில் விரயமாகும். நண்பர்களால் நன்மையுண்டு.
பன்னிரண்டு
எப்போதும் சண்டை, சச்சரவு உடன் பிறந்தவர்களால் ஏற்படும். நிம்மதியற்ற தன்மையை உடன்பிறந்தவர்கள் தருவர். குடும்ப வாழ்க்கையைக் கெடுப்பர். சொந்த ஊரைவிட்டு, நாட்டைவிட்டு சென்றுவாழ நேரும். எதற்கெடுத்தாலும் விரயம் ஏற்படும். சொத்துகள் வீண்வழியில் விரயமாகும். எந்தவொரு விஷயமும் உடனே நடைபெறா மல் இழுத்தடித்து மனம் நோகச்செய்யும். கஷ்டங்களும் நஷ்டங்களும் மன அமைதி யைக் கெடுத்து நிம்மதியிழக்கச் செய்யும். சந்தோஷமான இல்வாழ்க்கை கெடும். அடுத்தவரை நம்பியே பிழைப்பு நடத்த வேண்டியிருக்கும். அதேவேளையில் சுபத் தன்மை பெற்று விபரீத ராஜயோகத்தால் நினைத்துப்பாராத சந்தோஷம், வெற்றி, அயன சயன சுகம் பெற்று இன்பமயமான வாழ்க்கை கிடைத்துவிடும். ஆனால் நண்பர்களால் அவமானம், நஷ்டம் ஏற்படும்.
பரிகாரம்
மூன்றுக்குடையவர் கெட்டால், முன்கோபத்தைவிட்டு எதையும் நன்கு ஆலோசித்து செயல்படவேண்டும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் பெருமுயற்சியெடுத்து உழைத்தால் பேரும் புகழும் அடையலாம். நல்ல எண்ணத்தை மாற்றாமல், ஒரே சிந்தனையையாய் நல்லதே நினைத்து நடந்தால் வெற்றியே கிடைக்கும்.
செல்: 96003 53748