ரு காலத்தில் பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது, பையன் நல்லவனா, ஒழுக்கமானவனா, கை சுத்தம் உண்டா, வாக்கு நாணயம் உண்டா, சரியான நடத்தை உள்ளவனா, உள்ளதைக் கொண்டு நன்றாக வாழும் பண்புடையவனா என இவ்வாறெல்லாம் விசாரித்து பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தனர்.

Advertisment

நடப்பு காலத்தில் ட்ரெண்ட் மாறிவிட்டது. பையனுக்கு மேல் வருமானம் வருமா, இரண்டாவது பிஸினஸ் இருக்கிறதா, எட்டுத் திக்கும் சிதறடிக்கும் சாமர்த்தியம் உள்ளதா, பார்த்து வா என்றால் கொண்டே வரக்கூடிய திறமை இருக்கிறதா என இவ்வாறான கேள்விகள் கேட்டுதான் பையனைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நல்ல அமைதியான, குணமுள்ள பையன்களை பெண்கள் "பழம்' என முத்திரை குத்தி "நோ' சொல்லிவிடுகிறார்கள்.

இதன்மூலம் லஞ்சம் வாங்காத பையன்களை வாழவே தகுதியில்லாத ஜீவன்கள் என்ற லிஸ்டில் சேர்த்துவிட்டார்கள். நேர்மையானவர்களை, எதற்கும் உதவாதவர்கள் என்று சொல்லும் நிலை பரவலாகக் காணப்படுகிறது. நேர்மறை சிந்தனை வாழ்வியலுக்கு மதிப்பில்லாமல், எதிர்மறை சிந்தனை வாழ்வுமுறை கொண்டாடப்படுவதற்குக் காரணம் யார்? என்ன?

Advertisment

இதற்கெல்லாம் காரணம் சாட்சாத் ராகு பகவான்தான். இவர் சம்பந்தமான நிகழ்வுகள் அனைத்துமே எதிர்மறையாகத்தான் நடக்கும்.

ராகுவின் தன்மை

ராகு ஒரு நிழல் கிரகம். இருட்டு கிரகம். எதிர்மறை சிந்தனைகளை உருவாக்குபவர். கபட கிரகம். சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்யத் தூண்டும் கிரகம். மாயை கிரகம். வஞ்சக- சூதுடைய கிரகம். லஞ்சம் வாங்கத் தூண்டும் கிரகம்.

"கரப்ஷன்' என்பதன் அர்த்தம் லஞ்சம். மற்ற அர்த்தங்கள் கையூட்டு, கைக்கூலி, நேர்மையற்ற தன்மை, கெடுக்கும்- களங்கப்படுத்தும் தன்மை, இழிவான நிலை, கலப்புள்ள தன்மை, கலப்படமான செயல்கள், அசுத்தப்படுத்துவது என லஞ்சத்திற்கு இத்தனைப் பொருள் உள்ளன.

Advertisment

எல்லாராலும் லஞ்சம் வாங்க முடியுமா? முடியாது. அதற்கென ஜாதக அமைப்பு வேண்டும்.

லஞ்சம் வாங்கும் தன்மையுடையோர் தனாதிபதியான 2-ஆம்அதிபதி, எவ்வகையிலேனும் ராகுவுடன் சம்பந்தம் பெறவேண்டும்.

லாபாதிபதி எனும் 11-ஆம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெறுதல்.

5-ஆம் அதிபதி ராகுவுடன் சேரும்போது மானாவாரி யோசனைகள் உண்டாகும். மற்றவர்கள், "இப்படியெல்லாம்கூட லஞ்சம் கேட்பார்களா? இவ்வழியிலெல்லாம் லஞ்சம் வாங்க முடியுமா!' என வெலவெலத்துப் போகவைத்துவிடுவார்.

மேற்கண்ட ஏதாவது ஒரு அமைப்புடன் லக்னாதிபதி சம்பந்தமும் வேண்டும்.

vishnu

12-ல் சனி, ராகு இருந்து, 12-ஆம் அதிபதி 11-ல் இருந்து, 11-ஆம் அதிபதி 9-ல் நீசமாகி இருக்கும் ஜாதகர்களும் லஞ்ச லாவண்யத்தில் திளைப்பார்களாம்.

யார்மூலம் லஞ்சம் பெறுவர்?

லஞ்சப் பணம் என்பதே மறைமுக வருமானம்தான்.

எனவே நேரிடையாக வாங்க இயலாது. ராகு சம்பந்த பாவாதிபதிகள்மூலம் லஞ்சம் வசூலிக்கப்படும்.

ராகு- லக்னாதிபதி சம்பந்தம் உள்ளோர் யாரையும் நம்பாமல், அவர்களே நேரிடையாக யாருக்கும் தெரியாமல் லஞ்சம் வசூலித்துவிடுவர்.

ராகு- 2-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் பிற நாட்டில் பணத்தைப் பதுக்கச் சொல்லிவிடுவர். நகைகள், பணப்பத்திரங்கள், விலைமதிப்புள்ள ரத்தினக்கற்கள் என லஞ்சம் பெறுவர். குடும்பத்தினர் லஞ்சப்பணத்தை வசூலிப்பர்.

ராகு- 3-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சம் வாங்க தனது இளைய சகோதரர் அல்லது வேலையாட்களைப் பயன்படுத்துவர். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை லஞ்சமாகப் பெறுவர்.

ராகு- 4-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சத்தை வீடுகள், தோட்டம், பண்ணை, கட்டடம், சுரங்கம், பள்ளி, கல்லூரி, வாகனம், நிலம் என வசூலித்துவிடுவர்.

ராகு- 5-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோரின் லஞ்சப்பணம் "காதல்' விஷயத்திற்குப் போகும். சிலர் கலை, சினிமா நோக்கில் லஞ்சம் பெறுவர். சிலருக்கு இவர்களது மகனே லஞ்சம் வசூலிக்க உதவுவார்.

ராகு- 6-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சம் வசூலிப்பதில் இவர்களது தாய்மாமனின் பங்கு அதிகமிருக்கும். சிலர் லஞ்சப் பணத்தை மருத்துவமனையாக மாற்றித் தரச் சொல்வர்.

ராகு- 7-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோரின் கையூட்டுப் பணத்திற்கு கல்யாணமான வாழ்க்கைத்துணை பெரும்பங்கு எடுத்துக்கொள்வார். சிலர் களங்கமான பணத்தை கல்யாண மண்டபமாகக் கொடுக்கச் சொல்வர். வேறு நாடுகளில் பணத்தைப் பதுக்கச் சொல்வர். கொடுக்கல்- வாங்கலில் கூட்டாளிகளையும் சேர்த்துக்கொள்வர்.

சிலர் சில வர்த்தக ஸ்தாபனங்களை லஞ்சமாக வாங்கிக்கொள்வர்.

ராகு- 8-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோருக்கு கையூட்டு சம்பந்தமாக கைகலப்பே ஏற்படும். லஞ்சம் சம்பந்தமாக கொலைகூட நடக்கும். இதற்குமேல் சொல்ல என்ன இருக்கிறது?

ராகு- 9-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோருக்கு கைக்கூலி வாங்க தந்தையே உதவி செய்வார். சிலர் விமானம், கப்பல் போன்றவற்றில் லஞ்சப் பணத்தை முதலீடு செய்வர். அல்லது அதனைவாங்குவர். சிலர் பல்கலைக்கழகங்களை வாங்குவர். சிலர் லஞ்சப் பணத்தை செய்திப் பரிமாற்ற இனங்களில் பங்கு கேட்டு வாங்குவர். அல்லது ஒரு டி.வி. சேனலையே லஞ்சமாகப் பெற்றுவிடுவர்.

ராகு- 10-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் பற்றிச் சொல்லவே வேண்டாம். வேலைக்குச் சேர்ந்ததே லஞ்சம் வாங்கத்தான் என்று உறுதியாக நம்புவார்கள். இவர்கள் வேலை செய்கிறார்களோ இல்லையோ, லஞ்சம் வாங்குவதை மட்டும் கர்மசிரத்தையாக- ஒழுங்காகச் செய்துவிடுவார்கள். இவர்களைப் பார்த்தால் லஞ்சம் வாங்கவே பிறந்தவர்கள் மாதிரி இருக்கும்.

ராகு- 11-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோருக்கு லஞ்சப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். பணம் எண்ணும் மிஷின் மூலமாகக்கூட எண்ணமுடியாத அளவில் லஞ்சப் பணத்தின் வருகை அளவிட முடியாத அளவில் இருக்கும்.

ராகு- 12-ஆம் வீடு சம்பந்தம் உள்ளோர் லஞ்சப் பணத்தை விநோதமாக செலவழிப்பர். ரகசியமாக செலவழிப்பர். செய்யக்கூடாத காரியங்களுக்கு செலவிடுவர். அதனால் லஞ்சப் பணம் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது. கையில் ஒன்றும் நிற்காது.

கிரகங்களின் தன்மையும் லஞ்சமும்

பணவரவு அமைப்புகளுடன் ராகு சம்பந்தம் ஏற்படும்போது லஞ்சப் பணம் கிடைக்கிறது. இவ்வகை அமைப்புள்ள ராகு சம்பந்தம் ஏற்படும் கிரகம்- அதாவது உடனிருக்கும் கிரகம், ராகு இருந்த ராசிநாதர், சாரம் வாங்கிய சார நாதர் இவர்களின் வழியே லஞ்சப்பண இயல்புகள் அமையும்.

ராகு- சூரியன் வீட்டில் அல்லது சூரியன் சாரத்தில்ராகு லஞ்சம் வாங்கத்தூண்டும் கிரகம். சூரியன் அரசு கிரகம். புரிந்திருக்குமே. அரசு சம்பந்தமான லஞ்சம் வாங்குவர். இவர்கள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், தமிழ்நாட்டை இலங்கை அல்லது பாகிஸ்தானுக்கு விற்றுவிடுவார்கள். அதில் நல்ல லஞ்சம் சம்பாதித்துவிடுவர். அவ்வளவு ஹைலெவலில் லஞ்சம் வசூலிப்பர். இவர்களின் லஞ்சம் கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும். இவர்களின் லஞ்ச கொடுக்கல்- வாங்கல் மிகப்பெரிய அந்தஸ்தான வழிகளிலியே அமையும். சில்லரைத்தனமான லஞ்சம் பிடிக்கவே பிடிக்காது.

வாங்கினால் கோடிகளில்தான். இவ்வமைப்புள்ளவர்கள் அரசின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் ஒவ்வொரு விஷயத்திற்கும் லஞ்சம் எதிர்பார்ப்பார்கள். லஞ்ச விஷயத்தில் மிகக் கண்டிப்புடன் இருப்பர். அவர்கள் நாட்டு மலை, மண், நதி, நீர், அணை என அனைத்து அதிமுக்கியமான விஷயங்களையும் பக்கத்து மாநிலம் அல்லது பக்கத்து நாட்டிற்கு விற்றுவிடுவர்.

அதற்கேற்றாற்போல் லஞ்சம் வசூலித்துவிடுவர். சில நேரங்களில் லஞ்ச விஷயமாக இடர் ஏற்படின் பிறர் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

ராகு- சந்திரன் வீட்டில் அல்லது சந்திரன் சாரத்தில்புத்தி சாதுர்யத்தால் லஞ்சம் வாங்குவர். இவர்கள் பெரிய அதிகாரி அல்லது அமைச்சராக எல்லாம் இருக்கத் தேவையில்லை. எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அதற்குத்தக்க லஞ்சம் வாங்கிவிடுவர். லஞ்சம் கொடுக்கல்- வாங்கல் மிக அமைதியாக நடக்கும். ஆர்ப்பாட்டம் இராது. இவர்கள் சற்று முயற்சித்தால், கடலைக்கூட லஞ்சமாக வாங்கிவிடலாம். இவர்களுடைய லஞ்சப் பட்டியலில் மீன் சார்ந்த நல்ல உணவுகள், பழங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். சந்திரன் ஒரு விரைவுக் கிரகம். அதனால் லஞ்சத் தொகை கூடவோ, குறைவோ- அது உடனடியாகக் கைக்கு வரவேண்டுமென விரும்புவர். நேர்மையற்ற சிந்தனைகள் நிறைந்திருக்கும். பெண்கள் வேலைபார்க்கும் நிலையிருந்து, அவரின் ஜாதகம் லஞ்சம் வாங்கும் அமைப்பிலிருந்தால் அவர்களும் எந்தவித மனத்தயக்கமின்றி லஞ்சம் வாங்குவர். லஞ்சத்தொகை குறைவாக இருப்பின், அதனை வெளிக்காட்ட மாட்டார்கள். மனசுக்குள் ரோஷம் பொங்கும். இவர்களில் சிலர் கடல் கடந்தும் லஞ்சப்பணத்தை நிலமாக, வீடாக, மனை அல்லது ஓட்டலாக வாங்கிவிடுவர். சந்திரனின் காரகமான அரிசி, மீன், பூக்கள், பால், மது, உணவுப்பொருள் என இவற்றையும் கிடைத்த மட்டும் லாபமென லஞ்சமாகப் பெற்றுவிடுவர். முத்துக்கள், வெள்ளி, வைரம் போன்றவற்றையும் தகுதிக்கேற்ப கேட்டு வாங்கிவிடுவர். லஞ்ச விஷயத்தில் முட்டுக்கட்டை, தொல்லை ஏற்படின் உடனடியாக எந்த எதிர்ப்பையும் காட்டமாட்டார்கள். தகுந்த சந்தர்ப்பம் வரும்போது வஞ்சம் வைத்துப் பழிதீர்ப்பர்.

ராகு- செவ்வாய் வீட்டில் அல்லது செவ்வாய் சாரத்தில் செவ்வாய் என்றாலே சீருடைப்பணிகள்தான். எனவே பாதுகாப்புப் பணியில் உள்ளோர், நெருப்பு சம்பந்த தொழிலில் உள்ளோர் லஞ்சம் வாங்க முற்படுவர். செவ்வாய் என்றாலே அடிதடிதான். இவர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுக்க மறுத்தால் அடி பின்னி எடுத்துவிடுவர். கேட்ட தொகை கேட்ட நேரத்தில் வந்துவிட வேண்டும். கொஞ்சம் அதிகமாக முயற்சித்தால், மலை, பாறை, சுரங்கம் இவற்றையெல்லாம் லஞ்சமாகப் பெற்றுவிடுவர். ஆயுதங்களை லஞ்சமாகப் பெற பெரு விருப்பமுடையவர்கள். அசைவ உணவுகள், மது போன்றவை லஞ்சப் பட்டியலில் கொசுறாக இடம் பிடித்திருக்கும். மேலும் இவர்கள் கல் உடைக்கும் இடங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றையும் லஞ்சமாக சுட்டிக்காட்டுவர். செவ்வாய்- ராகு எனும்போது அது விபத்தைக் குறிக்கும்.

எனவே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபர்களின் சொந்தங்களிடமும், கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி லஞ்சம் கேட்பர். இதில் வார்டுபாய் முதல் டாக்டர் வரை இந்த மனோபாவம் இருக்கும். (லஞ்ச அமைப்புள்ள ஜாதகர்களுக்கு மட்டும்). இவர்களுக்கு லஞ்சப் பணம் கொடுக்காவிடில் அல்லது தடை செய்தால் ரத்தம் வர அடித்துவிடுவர். லஞ்சப் பணத்தில் அவ்வளவு கறார் பேர்வழிகள் இவர்கள்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 94449 61845