இப்புவியில் பிறப்பெடுத்த, ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் வளர்ச்சிப் பாதைகளான, கல்வி, பணி ஆகியவற் றைக் கடந்து, அத்தியாவசிய மாக கருதப்படுவது, திருமணம் என்னும் பெருமைக்குரிய இல்வாழ்க்கையே ஆகும்.
இந்த திருமண வாழ்க்கை என்பது இரு மாடுகள் பூட்டிய வண்டியில், இன்பம் என்னும் பாதையில், அன்பு, பாசம், அறம் என்னும், இலக்கை அடையும் பயணமாகும்.
இதில் பலருடைய வாழ்க்கை தென்றலையும், சிலருடைய வாழ்வில் சூறாவளி யையும் வீசி, நிலைபெறுதலையும், நிலை குலைதலையும் நிகழ்த்துகிறது.
ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கும் துணையின் குண நலன்களைப் பொருத்தே, திருமணம் வரமாகவும், சாபமாகவும், அமைகிறது.
அப்படி யாருக்கு திருமண வாழ்க்கை வரம், யாருக்கு சாபம், என்றும், திருமணம் நிகழும் காலம் எதுவென் பதைப் பற்றியும், இந்தத் திருமணத்தால் ஏற்படக்கூடிய சாதக- பாதகங்களையும், திருமணம் முடிந்துவிட்ட சூழ்நிலையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் நெருடல்களும், திருமணத் தடைக்கான காரணங்களையும் வரிசையாக ஆராயலாம்.
ஒரு பெண்ணுக்கும் சரி; ஆணுக்கும் சரி- திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்பதனைச் சொல்லும் பாவகம் ஏழாம் பாவகமாகும்.
ஆணுக்கும், பெண்ணுக்கும், வரவிருக்கும் கணவனை அல்லது மனைவியைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஏழாம் பாவகம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேலும் ஆணுக்கு களத்திர காரகனாகிய சுக்கிரனை யும், பெண்ணுக்கு களத்திரகாரனாகிய செவ்வாயின் நிலையையும், கருத்தில் கொள்ளவேண்டும்.
பொதுவாக வாழ்க்கைத் துணையை பற்றிய எதிர்பார்ப்பும் ஆர்வமும், தனக்கு அமைவிருக்கும் துணையின் கல்வித் தகுதி, வேலை, வரன் வரும் திசை, சொந்தத்தில் அமையுமா அல்லது அசலில் அமையுமா? காதல் திருமணமா அல்லது கலப்புத் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்குமா அல்லது பிரிவினையை ஏற்படுத்துமா என்ற அனைத்து நியாயமான கேள்விகளுக்கும், இந்த ஏழாம் பாவகத்தில் பதில் பொதிந்துள்ளது.
திருமணத்திற்குப்பின் இரு பாலினத்தாருக்கும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், குணரீதியாகவும், நிச்சயமாக மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
இரண்டு ஜாதகங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் மோதல்களும், இணைவுமே, அவர்களின் திருமண வாழ்க்கையினைத் தீர்மானிக்கிறது.
ஒரு ஜாதகத்தில் அவர்களுக்கான திருமண காலம் என்பது அவர்களின் ஏழாம் அதிபதியின் தசை, புக்தி, அந்தர, காலங்களாகவும். சுக்கிரனின், தசை, புக்தி, அந்தர, காலங்களாகவும் வரும். மேலும் கோட்சாரரீதியாக குருவின் பார்வை இரண்டு, நான்கு, ஏழு ஆகிய இடங்களில் பதியும்பொழுதும் திருமணத்திற்கான காலம் என்று எடுத்துக்கொள்ளமுடியும்.
ஏழாம் பாவாதிபதி, ஏழில் நிற்கும் கிரகம், ஏழாம் அதிபதியோடு சேர்ந்த கிரகம், சப்தாம்சதில் ஏழாம் அதிபதியின் நிலை, ஷட்பலத்தில் ஏழாம் அதிபதியின் நிலை, அஷ்டவர்க்கப் பரலின் நிலை என்பது போன்ற அனைத்து ஆய்வுகளுக்கும் இந்த ஏழாம் பாவகத்தை உட்படுத்தும்பொழுது, இவர்களின் திருமண வாழ்க்கை என்பது எவ்வாறு இருக்கும் என்பதனை மிக அருமையாக கணிக்கமுடியும்.
எப்பொழுதுமே உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம், ஆகிய லக்னங்களுக்கு ஏழாமிடம் பாதகமாக வருவதனால், இவர்களுக்கு பெரும்பாலும் திருமண வாழ்வு சிறப்பாக அமைவதில்லை என்று ஜோதிடரீதியாக ஒரு கருத்துள்ளது. மேலும் மற்ற கிரகங்களின் நிலையும் இதில் கையில் எடுக்கப்பட வேண்டும்.
அதேபோன்று ஒற்றை ஆதிபத்தியம்கொண்ட கடகம் மற்றும் சிம்மத்திற்கும், பகை கிரகமான சனியின் வீடு ஏழாம் பாவகமாக வருவதனால் இவர் களுக்கும், திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருப்பதில்ல. என்ற பொதுக் கருத்துள்ளது. இதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் அமையப்பெற்ற மற்ற யோகங்களும், பார்வைகளும், பலனில் சற்று மாறுபாடை அளிக்கும்.
பொதுவாக ஏழாம் பாவகம் என்னும் கலத்திர ஸ்தானம் சுத்தமாக, இருப்பது சிறப்பு. முக்கியமாக இயற்கை பாவர்களோ லக்ன பாவர்களோ ஏழில் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தாலும், சுபகிரகங்களின் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். அதே போல் சுப கிரகங்கள் அமர்ந்தாலும், பாவ கிரகங்களின் தொடர்பில்லாமல் இருக்கவேண்டும்.
மேற்கூறிய சுபமான நிலையில் ஒரு ஜாதகம் இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை பூந்தோட்டமாக அமையும்.
குறிப்பாக ஏழாமதிபதி 6, 8, 12-ல் அமரக்கூடாது. ஏழாமதிபதி ஆறில் அமையும்பொழுது வாழ்க்கைத் துணையினால் மருத்துவச் செலவு, கடன், சண்டை, சச்சரவு போன்றவற்றை ஏற்படுத்தி, பிரிவினைக்கு வழிவகுக்கும்.
அதேபோன்று எட்டாம் அதிபதியோடு, ஏழாம் அதிபதியின் தொடர்பானது, வம்பு, சண்டை, வழக்கு, அவமானம் போன்றவற்றைத் தந்து செல்லும். இதுவும் ஒரு திருப்தியற்ற திருமண வாழ்வினை அளிக்கும்.
அதேபோன்று ஏழு, பன்னிரண்டாம் தொடர்புகளும், வாழ்க்கைத் துணையின்மூலம் பொருள் இழப்பு, பணவிரயம், சொத்து இழப்பு போன்றவற்றினை அளித்து விவாகரத்துவரை கொண்டுசெல்லும்.
ஏழாமதிபதி நீசம், அஸ்தங்கம், வக்ரம் போன்ற அமைப்பு பெற்றிருந்தால் திருமணத் தடையினை ஏற்படுத்தி திருமணத் தினை தாமதமாக்கி திருப்தியற்ற மண வாழ்வினைத் தந்துவிடும்.
அதேபோன்று செவ்வாய், சனி, சூரியன், ராகு மற்றும் கேதுக்கள் லக்னத்திலோ அல்லது ஏழிலோ அமர்ந்தால், திருமணத்தைத் தாமதப்படுத்தி, தடையினை உண்டாக்கும்.
குறிப்பாக செவ்வாய், மற்றும் சனி, இணைந்து லக்னத்தில் அல்லது ஏழில், அமர்வது நிச்சயமாக திருமண வாழ்வில் திருப்தியற்ற நிலையினை ஏற்படுத்தும். இந்த செவ்வாய் அல்லது சனி இருவரும் இணைந்து பார்க்கும் பாவகம் கெடும் என்கிறது ஜோதிட நிகண்டுகள்.
இவர்களில் யாராவது ஒருவராவது லக்ன யோகாதிபதியாக இருந்தால் ,இந்த பலனிற்கு விதி விலக்குண்டு.
ஏழாம்திபதி அல்லது சுக்கிரனோடு சுபம் பெறாத சனி தொடர்பானது, காதல் அல்லது கலப்புத் திருமணத்தினைத் தந்துவிடும். அதுமட்டுமல்லாமல் திருமணம் கைகூடி, பொருத்தங்கள் அமைந்திருந்தாலும், திருமணத்திற்கான நாளையும், நேரத்தையும் மிக கவனமாகக் கையாளவேண்டும்.
8 17 26 ஆகிய தேதிகளில் அமையப்பெற்ற திருமணங்கள் எனக்குத் தெரிந்து சுபிக்ஷமான நிலையில் இல்லை. பல இன்னல்களையும், இடைஞ்சல்களையும், இவர்கள் சந்திக்கின்றார்கள். இவர்களின் ஜாதகத்தை ஆய்வுசெய்யும்பொழுது மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தும்கூட அமையப்பெற்ற திருமணத் தேதியின்மூலம் சில பிரச்சினைகளுக்கு உள்ளாகி றார்கள்.
திரயோதசி திதியும், எந்த திதியாக இருந்தாலும் திதி சந்தியில் அமைக்கப்படும் முகூர்த்தத்தினால் ஏற்பட்ட திருமணங்களும், பல பிரச்சினைகளுக்கு, ஆளாவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது, எனவே இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் ஒரு மாதத்தில் வருகின்ற அனைத்து முகூர்த்தங்களும் அனைவருக்கும் பொருந்துவது கிடையாது. அவர்களின் தாராபலனைக்கொண்டு முகூர்த்தினை கணிதம் செய்யவேண்டும்.
திருமணத்தடையில் உள்ளவர்கள் ஏழாமதிபதி சுட்டிக்காட்டும் வழிபாட்டினையும், பழமையான சிவன் கோவில் கோபுர நிழலில் ராகு காலத்தில் ஒரு நாழிகை அமர்வதன் மூலமாகவும் திருமணத்தடை நீங்கும்.
செல்: 80563 79988