27 நட்சத்திரப் பலன்கள்!
ஆர். மகாலட்சுமி
5
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
மேற்கண்ட மூன்று நட்சத்திரங்களும் சந்திர சார நட்சத்திரங்கள். இதில் பிறந்தவர்களுக்கு முதலில் சந்திரதசை ஆரம்பிக்கும். இந்த தசையின் ஆரம்பத்தில் முதல் பாதத்தில் பிறந்திருந்தால் பத்து வருட சந்திர தசையும், இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்தால் ஏழரை வருட சந்திர தசையும், மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருடமும், கடைசி பாதத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டரை வருட சந்திர தசையும் தசா இருப்பாக ஏறக்குறைய அமையும்.
அடுத்து, செவ்வாய் தசை ஏழாண்டுகள், ராகு திசை 18 வருடங்கள் என ஓடி விருப்ப ஓய்வுக் கால வயதான 50 வயதில் குரு தசை ஆரம்பித்துவிடும். ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியும், அஸ்த நட்சத்திரம் கன்னி ராசியும், திருவோணம் மகர ராசியும் கொண்டவை. எனினும், இந்த நட்சத்திர ராசியில் பிறந்த அனைவருக்கும் ஒரே லக்னமாக இருக்க வாய்ப்பில்லை. இந்த மூன்று நட்சத்திரத்தாரும் 12 லக்னங்களில் ஏதோ ஒரு லக்னம் கொண்டவராக இருப்பார்கள். விருப்ப ஓய்வுக் கால தசாநாதன் குரு நீசமானால், குரு தசை ஆரம்பித்தவுடன் ஏதோ ஒரு விரும்பத்தகாத காரணத்தால் வேலையைவிட்டு நீக்கப்படுவார்கள்.
குரு 6, 8, 12ல் மறைந்தாலும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பில்லை. குரு உச்சமானால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும். இதனைப் பொருத்து அதாவது நீசம், மறைவடையாத குரு தசை நடந்தால் 12 லக்னத்தாரின் விருப்ப ஓய்வுக் காலம் எப்படி இருக்கும் என இனிக் காண்போம்.
மேஷம்: இவர்களது விருப்ப ஓய்வுக் காலமானது தெய்வ தரிசனம், வெளிநாட்டுப் பயணம், நல்ல முதலீடுகள் என நிம்மதியாக அமையும்.
ரிஷபம்: இவர்களின் தசாநாதன் குரு 8,11ன் அதிபதி. எனவே, குருவின் சாரநாதர் நன்றாக இருந்தால் மட்டுமே விருப்ப ஓய்வு பெறவேண்டும். அவசரப்பட்டு விருப்ப ஓய்வு வாங்கக் கூடாது.
மிதுனம்: விருப்ப ஓய்வு வாங்கியவுடன் வேறு சொந்தத் தொழில் அல்லது ஏற்கெனவே செய்துகொண்டிருந்த வேலை தொடர்பான தொழில் ஆரம்பித்துவிடுவார்கள். உடல்நிலையில் கவனம் தேவைப்படும்.
கடகம்: விருப்ப ஓய்வு பெற்றவுடன் உடனே அடுத்த வேலையில் சேர்ந்துவிடுவார்கள். சிலர் திருப்பணிகள், உழவாரப் பணிகள், மக்கள் சேவை என ஈடுபடுவார்கள். மிகச் சிலருக்கு உடல் உபாதைகள் வரும்.
சிம்மம்: இவர்கள் விருப்ப ஓய்வு வாங்குவது அவ்வளவு நல்லதல்ல. தசாநாதன் குரு 5ஆம் அதிபதி. உடல்நலன் கெடவும், அவமானப்படவும், ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. எனவே விருப்ப ஓய்வு பெறுவது நல்லதல்ல. செய்து கொண்டிருக்கும் வேலையைத் தொடரவும்.
கன்னி: விருப்ப ஓய்வில் வியாபாரம் ஆரம்பித்தலும்,புதிய வாகனம், வீடு, தோட்டம் வாங்குதலும் என ஆர்ப்பாட்டமாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து கடை அல்லது சிறிதாகத் தொழில் தொடங்குவார்கள். அவ்வப்போது மருத்துவ சோதனை அவசியம்.
துலாம்: இவர்கள் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளில் வேறு வேலையில் சேர்ந்துவிடுவார்கள். சிலர் இளைய சகோதரத்துடன் சேர்ந்து சேவை அடிப்படையிலான நிறுவனம் ஆரம்பித்து விடுவார்கள். சிலர் குழந்தைகள் நலன் சார்ந்து இலவசப் பணிபுரிவார்கள். சிலர் இளைய சகோதரருக்கு அனைத் தையும் கொடுத்துவிட்டு இவர்கள் கடன் வாங்க நேரிடும். துலா லக்னத்தார் தங்கள் தசாநாதரின் சாரபலனை நன்கு ஆராய்ந்த பிறகு விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கவும்.
விருச்சிகம்: இவர்களின் விருப்ப ஓய்வுக் காலமும் பணமும் குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், புதிய பழக்க வழக்கம் என்பதிலேயே சரியாகப் போய்விடும். எனவே, ஓய்வுப் பணம் வந்தவுடன் சிக்கனமாக செலவு செய்யவும்.
தனுசு: உங்கள் விருப்ப ஓய்வுப் பணத்தில் புது வீடு, வாகனம், தோட்டம், வயல் என வாங்குவீர்கள். சிலர் பிறந்த இடத்திற்குச் சென்று அங்கு தோட்டம் துரவைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாகக் காலம் கழிப்பார்கள்.
மகரம்: இவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க மிகத் தீர்க்கமாக யோசிக்க வேண்டும். ஏனெனில், அவர்களின் விருப்ப ஓய்வுக் கால தசாநாதன் 12, 3ன் அதிபதி. இந்தக் கையில் பணம் வந்தவுடன் அந்தக் கையில் உங்கள் இளைய சகோதரர் வந்து அனைத் தையும் வாங்கிக் கொண்டு போய்விடுவார். அல்லது வீடு விஷயமாக அனைத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, விருப்ப ஓய்வு அவசியமற்றது. இருக்கிற வேலையில் தொடரவும். (வெகுசிலர் தொலைத்தொடர்புத் துறையில் முதலீடு செய்வர்.)
கும்பம்: எல்லா லக்னத்திற்கும் விருப்ப ஓய்வுப் பணம் இவ்வாறு செலவாகும் என்று சொன்னால், கும்ப லக்னத்திற்கு மட்டும் அந்தப் பணம் அதுவாகவே தன்னைப் பெருக்கிக்கொள்ளும். ஓய்வுக்கால தசாநாதன் 11, 2ன் அதிபதி. எனவே, பணம் குட்டி போடும். வெகுசிலர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மேன்மேலும் விருத்தியடைவர். சிலர் ஓட்டல் ஆரம்பிப்பர்.
மீனம்: விருப்ப ஓய்வுக்கு விண்ணப் பிக்கும்போதே ஒரு தொழில் தொடங் குவதற்குரிய ஆவணங்களையும் சேகரித்து விண்ணப்பித்து விடுவார்கள். அது அவர்களின் தனிப்பட்ட முழு முயற்சியாக அமையும். இதன்மூலம் இவர்களுக்கு வெகு கௌரவம் கிடைக்கும்.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர் களின் விருப்ப ஓய்வுக் கால தசாநாதன் குரு என்பதால் 12 லக்னத்தாரும் வியாழக்கிழமைதோறும் சிவனை வணங்கவும். மேலும், ஏதேனும் ஒரு சித்தரின் பாதங்களைப் பற்றிக் கொள்ளவும். இந்த ஓய்வுக்காலத்தில் கூடியமட்டும் கோவில்களைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளுங்கள். குழந்தைகள் நலனைப் பேணுங்கள். உங்கள் தசாநாதன் குரு என்பதால் குழந்தைகளுக்கு இலவச டியூஷன் வகுப்பு ஆரம்பியுங்கள். உங்கள் இருப்பிடத்தைச் சுற்றி மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நீங்களும் முடிந்த அளவு மரம் வளர்க்கவும். இது உங்கள் ஓய்வுக் காலத்தை இனிமையாக நடத்த உதவும் பரிகாரங்களாகும்.
(தொடரும்)
செல்: 94449 61845