கல்வி என்பது கவர்ந்து செல்லவோ, அழிக்கவோமுடியாத சொத்தாகும். ஒரு குடும்பத்தில் கணவன் மட்டும் படித்தவனாக இருந்தால் போதாது. வரக்கூடிய மனைவியும் படித்தவளாக இருப்பது அவசியம். ஒரு குடும்பத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்லவும், பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தைப் பெறவும் கல்வி அவசியமான ஒன்றாகும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப வாழ்க்கைத்தரமும் உயர்வாக அமையும். அதன்மூலம் சந்ததியினருக்கும் நல்ல அறிவாற்றலைத் தரமுடியும். கல்வியறிவு உள்ளவர்களுக்கு தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமிருக்கும். அதிலும் குடும்பத் தலைவி படித்தவளாக அமைந்தால் ஆணின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். ஜோதிடரீதியாக, ஒரு ஆணுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை படித்தவளாக இருப்பாளா என்பதை ஜாதகத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீட்டைக் கொண்டு அடிப்படைக் கல்வி, பேச்சுத்திறன், எழுத்துத்திறன் பற்றியும்; 4-ஆம் வீட்டைக் கொண்டு இளமைக் கல்வி மற்றும் பொது அறிவைப் பற்றியும்; 5-ஆம் வீட்டைக் கொண்டு உயர்கல்வி, புத்திசாலித்தனம், அறிவுக் கூர்மை, ஞாபகசக்தி போன்றவற்றைப் பற்றியும்; 10-ஆம் வீட்டைக் கொண்டு தொழில், உத்தியோக நிலை பற்றியும்; இத்துடன் குரு, புதனைக்கொண்டு கல்வி ஆற்றலைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு ஆணுக்கு அமையும் மனைவி படித்தவளாக இருப்பாளா என்பதை களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு 2, 4, 5-ஆம் அதிபதிகள் மற்றும் குரு, புதன் பலத்தைக் கொண்டு அறிந்துகொள்ள முடியும். 7-ஆம் வீட்டிற்கு 4, 5-க்கு அதிபதிகள் (ஜென்ம லக்னத்திற்கு 10, 11-க்கு அதிபதிகள்) சுபர் சேர்க்கைப் பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும் படித்த மனைவி அமைவாள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மேற்படி கிரகநிலை இருந்தால் நன்கு படித்த கணவன் அமைவார்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் 7-க்கு 4-ஆம் அதிபதி பலமிழந்து, 7-க்கு 5-ஆம் அதிபதி பலம்பெற்றிருந்தால் வரக்கூடிய மனைவி கல்வித் தகுதியில் சற்று குறைந்தவளாக இருந்தாலும், நல்ல அறிவாற்றலும் குடும்பத்தை நிர்வாகிக்கும் ஆற்றலும், கணவருக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருக்கும் பண்பும் கொண்ட பெண்ணாக இருப்பாள். 7-க்கு 2-ஆம் இடமான 8-ஆம் வீடு பலம்பெற்றிருந்தால் வாழ்க்கைத் துணைக்கு நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல், குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தும் ஆற்றல் போன்றவை இருக்கும்.
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டிற்கு 4, 5-க்கு அதிபதிகள் கல்வி காரகனான புதன் சேர்க்கைப் பெற்றோ, சுபகிரகச் சேர்க்கைப் பெற்றோ, ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றோ இருந்தாலும்; பெண் கிரகங்களான சந்திரனும் சுக்கிரனும் பலம்பெற்று, பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் அழகான, படித்த, பண்புள்ள, நாகரிகமான பெண் மனைவியாக அமைவாள்.
ஆக, 7-க்கு 4, 5-ஆம் அதிபதிகள் பலம்பெற்றிருப்பதன் மூலமாக நல்ல படித்த வாழ்க்கைத்துணையானது அமையும். அதுமட்டுமின்றி 7-க்கு 10-ஆம் அதிபதி 7-ஆம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ அமைந்திருந்தால் நன்கு படித்த மனைவி அமைவது மட்டுமின்றி, உயர்ந்த பதவி வகிக்கக்கூடியவளாகவும், கணவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக விளங்கக்கூடியவளாகவும் இருப்பாள்.
செல்: 72001 63001