ஜோதிடத்தில் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், பாவருடன் சேராத புதன் ஆகியவை சுப கிரகங்கள் என்றும்; சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன், பாவருடன் சேர்ந்த புதன் அசுப கிரகங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக மக்களிடம் சுப கிரகங்கள் மட்டுமே நன்மை செய்யும்; அசுப கிரகங்கள் நன்மை செய்யாது என்னும் நம்பிக்கை உள்ளது.
உதாரணமாக, ஒரு ஜாத கருக்கு சுக்கிர தசை வந்தால் "சக்கைப் போடு! உனக்கு என்னப்பா! சுக்கிர தசை... இனிமேல் உனக்கு யோகம் அடிக்கப்போகிறது' என்னும் சொல்வழக்கு நடைமுறையில் உள்ளது. இந்த கருத்து சரியா என்பதை சற்று ஆராய்வோம்.
மேஷ ராசி, மேஷ லக்னம், விருச்சிக ராசி, விருச்சிக லக்ன ஜாதகர்களுக்கு செவ்வாய், குரு, சூரியன், சுக்கிரன் யோகத்தைச் செய்பவர்கள். மேஷ ராசி, மேஷ லக்னத்திற்கு சனி பாதகாதிபதி. இரண்டு ராசி, இரண்டு லக்னத் திற்கும் புதன் எதிரி என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப ராசி, ரிஷப லக்னம், துலா ராசி, துலா லக்ன ஜாதகர்களுக்கு சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் யோகத்தைச் செய்யும் கிரகங்களாகும். துலா லக்னம், துலா ராசி ஜாதகர்களுக்கு சூரியன் பாதகாதிபதி. ரிஷப ராசி, ரிஷப லக்ன ஜாதகர்களுக்கு சனி யோகாதிபதியாக இருந்தாலும், பாதகாதிபதியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிதுன ராசி, மிதுன லக்னம், கன்னி ராசி, கன்னி லக்ன ஜாதகர்களுக்கு புதன், சந்திரன், சூரியன், சுக்கிரன் யோகத்தைச் செய்யும் கிரகங்களாகும். சனி பாதி நல்லவர்; பாதி கெட்டவர். இரண்டு ராசி, இரண்டு லக்னத் திற்கும் செவ்வாய் எதிரி மற்றும் சுபகிரகம் குரு பாதகாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
கடக ராசி, கடக லக்னக்காரர்களுக்கு சந்திரன், சூரியன், செவ்வாய், குரு யோகத்தைச் செய்யும் கிரகங்கள். சுபகிரகம் சுக்கிரன் பாதகாதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்ம ராசி, சிம்ம லக்னத்திற்கு சூரியன், புதன், குரு, சந்திரன் யோகத்தைச் செய்யும் கிரகங்கள். அசுப கிரகம் செவ்வாய் யோகாதிபதி. அதேநேரத்தில் பாதகாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனுசு ராசி, தனுசு லக்னம், மீன ராசி, மீன லக்னத் திற்கு குரு, சனி, செவ்வாய் யோகத்தைச் செய்யும் கிரகங்கள்.
தனுசு ராசி, தனுசு லக்னத்திற்கு சந்திரன் எட்டுக்குடையவர். மீன ராசி, மீன லக்னத்திற்கு சூரியன் ஆறுக்குடையவர். இரண்டு ராசி, இரண்டு லக்னத்திற்கும் சுக்கிரன் எதிரி என்பது குறிப்பிடத்தக்கது. புதன் பாதகாதிபதியாக உள்ளார்.
மகர ராசி, மகர லக்னம், கும்பராசி, கும்ப லக்னத் திற்கு சனி, புதன் யோகத்தைச் செய்யும் கிரகங் கள். மகர ராசி, மகர லக்னத்திற்கு சுக்கிரன் யோகாதிபதி. அதேநேரத்தில் கும்ப ராசி, கும்ப லக்னத்திற்கு சுபகிரகம் சுக்கிரன் யோகாதிபதி யாக இருந்தாலும் பாதகாதிபதியாகிறார்.
மகர ராசி, மகர லக்னத்திற்கு குரு பாவி.
அதேநேரத்தில் கும்ப ராசி, கும்ப லக்னத்திற்கு குரு முழுசுபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகர ராசி, மகர லக்னத்திற்கு சூரியன் அஷ்டமாதிபதியாகிறார். அதேநேரத்தில் கும்ப ராசி, கும்ப லக்னத்திற்கு சூரியன் ஏழுக்குடையவராகிறார்.
ராகு- கேதுவுக்கு சொந்தவீடு இல்லை யென்பதால் அது இருக்கும் இடத்தைப் பொருத்து நன்மை- தீமை செய்வார்கள்.
மேற்கண்ட ராசி, லக்னத்திற்கு ராசியாதிபதி, லக்னாதிபதியாக வரும் கிரகம் சுபரானாலும் அசுபரானாலும் நன்மையே செய்வார்கள் என ஜோதிடத் தில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக ஜோதிடத்தில் ஐந்து, ஒன்பதாம் இடமான திரிகோணத்தில் சுபர்- அசுபர் இருந்தா லும் நன்மையே செய்வார்கள் என சொல்லப் பட்டுள்ளது.
மேற்கண்ட ராசி, லக்னத்திற்கு மேலே கூறப்பட்ட பலன்கள் பொதுவானவை. இதில் ஆட்சி, உச்சம், மறைவு, நீசம், வக்ரம், அஸ்தமனம், கிரகயுத்தம், சுப ஆதிபத்யம், அசுப ஆதிபத்யம் போன்றவற்றைப் பொருத்து ஜாதகப் பலன்கள் நன்மையா? தீமையா என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.
துலா லக்னத்திற்கு சனி 4, 5-க்குடையவர். அசுப கிரகமாக இருந்தாலும் சனி முழு யோகாதிபதி என்ற அடிப்படையில் நன்மையே செய்ய கடமைப்பட்டுள்ளார். கடக லக்னத்திற்கு அசுப கிரகமான செவ்வாய் 5, 10-க்குடையவர். முழு யோகாதி பதி என்ற அடிப்படையில் நன்மைசெய்ய தகுதிபடைத்தவர்.
மிதுனம் மற்றும் கன்னி லக்னத் திற்கு சுபகிரகமான குரு பாதகாதிபதி, மாரகாதிபதி, கேந்திராதிபதி என்ற அடிப் படையில் நன்மை செய்ய தகுதியில்லாதவர் என்னும் அடிப்படையில் உள்ளார்.
மேற்கண்ட உதாரண விளக்கங்கள்படி யோகப் பலன்களை அள்ளித் தருபவர்கள் சுப கிரகங்களா? அசுப கிரகங்களா என்றால், இரண்டுமே யோகப் பலன்களைத் தருபவர்களே. எந்த கிரகம் நன்மை செய்யுமென்பது அவரவர் பூர்வ பாவ- புண்ணியத்திற்கேற்ப நடக்கும். நவகிரகங்கள் எந்த பாகுபாடுமில்லாமல் கெடுப்பதிலும் கொடுப்பதிலும் வல்லவர்கள்.
செல்: 98403 69513