திருமணத்திற்குப்பின் முதலில் எதிர்பார்ப்பது குழந்தைச் செல்வமே. சிலருக்கு மணமுடித்தபின் உடனடியாகக் குழந்தைச் செல்வம் கிடைக்கிறது. சிலருக்கு ஆண்டுகள் சில சென்றபின் குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் அமைகிறது. சிலரோ இளமை கடந்தபின் பல வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்வதைக் காணமுடிகிறது.

Advertisment

இப்போது சுவாரஸ்யமான ஜோதிட நிகழ்வொன்று என் நினைவுக்கு வருகிறது. குமரி மாவட்டத்தில் திருவட்டாறு திவ்ய தேசத்திற்கு அருகில் அமைந்த ஊர் குலசேகரம். அந்த ஊரில் வாழ்ந்த பிரபல ஜோதிடர் பாச்சன் ஆசான் ஒருமுறை முகூர்த்தம் குறிப்பதற்காக செல்வந்தர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது முகூர்த்தம் குறிப்பதற்கு முன்பாக தம்பதிகளின் ஜாதகங்களை ஆய்வுசெய்த அவர், "இந்த இரு ஜாதகங்களில் ஆண் ஜாதகர் ஒரு கால் ஊனமுற்றவராக இருக்கவேண்டுமே?'' எனக் கூறியதும், அதுவரையில் தனது ஊனமுற்ற ஒரு காலை மடக்கிவைத்து, வேட்டியால் மறைத்து அமர்ந்திருந்த மணமகன், "ஆம் ஐயா. நான் கால் ஊனமுற்றவன்தான்'' என கூறினாராம்.

Advertisment

cc

அடுத்ததாக ஜோதிடர் கூறிய அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், "இந்த இரு ஜாதகங்களையும் தம்பதிகளாக இணைத்தால் பத்தாண்டுகளுக்குப் பின்தான் குழந்தைச் செல்வம் கிடைக் கும்' என்பதாகும். அப்போது அந்த மணமகன், "ஐயா ஜோதிடரே, இது ஜோதிடர் சொல்லவேண்டியதல்ல; தம்பதிகளின் சாமர்த்தியம் அல்லவா?'' என கூற, சபையின் நகைப்பொலி அடங்குவதற்கு சில நிமிடங்களாகின. பாச்சன் ஆசான் என்னும் ஜோதிட சிம்மம் சற்று தலை கவிழ்த்தது.

திருமணம் முடிந்தது. ஆண்டுகள் ஒன்பது சென்றும் குழந்தையில்லாத நிலை. ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு அதே ஜோதிடரைக் காணச் சென்றனர் இந்தத் தம்பதியினர். "இந்த ஜாத கத்தை நான் பார்த்திருக்கிறேனே'' என்றார் அவர். "ஆம் ஐயா. நீங்கள் தான் முகூர்த்தம் குறித்தீர்கள். பத்தாண்டுகளுக்குப் பின்தான் குழந்தைச் செல்வம் கிடைக்கும் எனவும் கூறினீர்கள். அந்த ஜாதகம்தான் இது'' என கூறியதும், ஜோதிடருக்கு நினைவுவந்துவிட்டது.

"ஓ... அந்த திறமைசாலியா நீங்கள்? எங்கே சென்றது உங்கள் திறமை?'' எனக்கூறிவிட்டு, "அடுத்த வருடம் குழந்தையின் ஜாதகம் குறிக்க வாருங்கள். அப்போது நீங்கள் குழந்தைச் செல்வம் பெற்ற தம்பதிகளாக இருப்பீர்கள்'' என கூறி அனுப்பிவைத்தாராம். அதே போன்று மறுவருடம் குழந்தை பிறக்க, ஜாதகம் குறிக்க அந்த ஜோதிடரை அந்த தம்பதியர் அணுகியபோது, அந்த ஜோதிடர் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்ததாம்.

பாருங்கள்; முகூர்த்தம் குறிக்கும்போதே பத்தாண்டுகள் சென்றுதான் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்று மிகத் துல்லியமாகப் பலனைச் சொல்லியிருக்கிறார். இவை யெல்லாம் ஜோதிடரின் ஜோதிடப் புலமையா? அல்லது தெய்வீக ஞானமா? வியப்பே.

இனி வயோதிக காலத்தில்- அதாவது இளமை சென்றபின் யாருக்கு குழந்தைச் செல்வம் அமையும் என்பதனை ஜோதிட நூல்களிலிருந்து காண்போம். "ஜாதகா தேசம்' என்னும் நூல் இதனைக் குறித்த தகவல் களை நமக்குக் கூறுகிறது.

"லக்னாயுர்விய கா: சனீட்யரு திர:

ஸ்வல்பாத்மஜ பஞ்சமம் லக்னே

பூமிஸுதாஷ்டமே ரவி ஸுதா

ஸ்வல்பாத்மஜர்ஷரவி லாபே

சீதகரோ: கிரகாச்ச தனுகா

பாபஞ்சஜீவால்ஸுதேயோகேஷ்வே

ஷுஸமுத்பவஸ்ய பவிதா

காலந்தரே ஸந்ததி.'

* லக்னத்தில் சனி இருக்க, எட்டில் குரு, பன்னிரண்டில் செவ்வாய் அமர, லக்னத்திற்கு ஐந்தாம் வீடு அல்ப புத்திர ராசிகள் என்னும் ரிஷபம், கன்னி, சிம்மம், விருச்சிகமாக அமைவது.

* லக்னத்தில் செவ்வாய் அமர, எட்டில் சனி அமர்ந்து, அல்ப புத்திர ராசி என்னும் ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசிகளில் சூரியன் அமர்ந்திருப்பது.

* 11-ல் சந்திரன் அமர, லக்னத்தில் இரண்டிற்கு அதிகமான கிரகங்கள் இருக்க, குரு அமர்ந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இரண்டு பாவ கிரகங்கள் அமர்வது.

இவ்விதமாக அமைப்பைக்கொண்ட ஜாதகர் தனது வாழ்நாளில் இளமை கடந்து முதுமையைத் தொடுகின்ற ஆரம்பத்தில் தான் குழந்தைச் செல்வத்தை அடையும் யோகத்தைப் பெற்றவராக விளங்குவர் என்று உணரவேண்டும்.

எனவே குழந்தைச் செல்வம் கிடைக்க தாமதமாவதால் வருந்திக்கொண்டிருக்கும் தம்பதிகளின் ஜாதகங்களை ஆய்வு செய்து, இத்தகைய அமைப்பு அவர்கள் ஜாதகத்தில் காணப்பட்டால், அவருக்கு இப்படி வயோதிய காலத்தில் குழந்தை பெறுகின்ற யோகம் காணப்படுகிறது என ஆறுதல் கூறலாம்.

செல்: 97913 67954