புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மேற்கண்டவை குரு சார நட்சத்திரங்கள். எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருப் புக்காலமாக குரு தசை அமையும். குரு தசை 16 வருடங்கள் கொண்டது.
மேற்கண்ட நட்சத்திரங்களின் ஆரம்பத்தில் பிறந்திருந்தால் தசை இருப்பு 16 வருடங்களும்; இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்தால் 12 வருடங்களும்; மூன்றாம் பாதத்தில் பிறந்திருந்தால் எட்டு வருடங்களும்; நான்காம் பாதத்தில் பிறந்திருந்தால் நான்கு வருடங்களும் என சற்று முன்பின்னாக அமையும்.
அடுத்து, இவர்களுக்கு சனி தசை 19 வருடங்களும், புதன் தசை 17 வருடங்களும் கடந்தபின் கேது தசை ஆரம்பிக்கும். இது இவர்களின் விருப்ப ஓய்வுக்கான காலமாக இருக்கும். எனவே, கேது தசையே இவர்களின் ஓய்வுக் காலத்துக்குரிய தசையாகும்.
ராகு- கேதுக்கள் சொந்த வீடு இல்லாதவர்கள். கேதுவுக்கான பலனை, அவர் எந்த வீட்டில் இருக்கிறாரோ அவரது சாரப் பலன் என்னவென்பதையும் ஒப்புநோக்கி ஓய்வுக்காலப் பலனைக் கணிக்க வேண்டும்.
பொதுவாகவே, கேது தசை சந்நியாச மனப்பான்மையைத் தரும். அதிலும், வயதான காலத்தில் வரும் கேது தசை கண்டிப்பாக பற்றற்ற தன்மையைத் தரும். இந்த விட்டேத்தியான மனப்பான்மை தெய்வ ஈடுபாட்டாலும் வரும்; குடும்ப குதர்க்கங்களாலும் வரும்; நம்பிக்கை துரோகத்தாலும் வரும்; நோயாலும் வரும்; வஞ்சம், சூது போன்றவற்றாலும் வரும். ஏதேனும் ஒரு காரணம் இவர்களை உலக வாழ்விலிருந்து தள்ளிவைக்கும். சிலர் அவ்வாறில்லாமல், சமூகத்திற்குப் புறம்பான எதிர்மறை விஷயங்களில் ஈடுபடுவர். அதனாலும் உலகம் இவர்களைக் கண்டு விலகும் நிலை உருவாகும்.
எது எப்படியாயினும், கேது தசை ஒரு மனிதரை- அதுவும் ஓய்வுக்காலத்தில் இருப்பவரை நிம்மதியாக இருக்கவிடாது. அது எந்த லக்னமாயினும் சரி.
கேது நன்மை தர அல்லது தீமை குறைய விநாயகர் வழிபாடு அவசியம். எவராயினும் ஒரு சித்தரை- ராகவேந்திரர், சீரடி சாய்பாபா, காஞ்சிப் பெரியவர் என யாருடைய பாதங்களையாவது இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில் முட்செடிகள் இருப்பின் அவற்றை அகற்ற முயலுங்கள். ஐந்தறிவு மிருகங்களிடம் அன்புடன் ஆதரவு காட்டுவது நன்று.
(தொடரும்)
செல்: 94449 61845