ஜோதிடத்தில் இளைய உடன்பிறப்பு பற்றிக் கூறும் 3-ஆம் பாவகத்தின் மூலம் விடாமுயற்சி, வெற்றி, கண்ணியம், கட்டுப்பாடு, கலையார்வம், சகோதர பாசம், இளைய சகோதரம், தைரியமான பேச்சு, தைரியம், கீர்த்தி, சகாயம், காது, அணிகலன்கள், காது தொடர்பான நோய்கள், வேலையாட்கள், போகம், உணவுப் பாத்திரம், தொழிலின் அபிவிருத்தி, முதலாளித்தன்மை, பூமி லாபம், உணவுக்கு கஷ்டமாகும் நிலை, சிறுதூரப் பயணங்கள் இவற்றையெல்லாம் அறியலாம்.
ஜாதகம் பார்க்க வருபவர்களில் பலர் "இந்தக் குழந்தைக்கு உடன்பிறப்பு இருக்கா' என்றும், "சகோதரர்கள் கருத்து ஒற்றுமையுடன் இருப்பார்களா?' என்றும் உடன்பிறப்பைப் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்காமல் போவதே கிடையாது.
இளைய உடன்பிறப்பைப் பற்றி 3-ஆம் பாவத்தின் மூலமும், மூத்த உடன் பிறப்பைப் பற்றி 11-ஆம் பாவகத்தின் மூலமும் அறிய முடியும். உபஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11-ஆம் பாவகங்கள் வலிமை பெற்ற சகோதரர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி தங்களுக்கென்று தனி முத்திரை படைத்து வருகிறார்கள்.
ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதியும், மூன்றாமிடத்து அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் அல்லது லக்னாதிபதி நின்ற வீட்டு அதிபதி சுபப் பலம் பெற்றிருந்தாலும் ஜாதகர் தன் வாழ்நாளில் தைரியசாலியாக வலம் வருவார்.
இந்த அமைப்புடன் செவ்வாய் இணைந்தால் ஜாதகருக்கு அந்தஸ்து மேலும் உயரும். பிடிவாத குணமும் ஏற்படும். ஜனன ஜாதகத்தில், மூன்றாமிடம் சுபப் பலம் பெற்றிருந்து, செவ்வாய், மூன்றாமிடத்ததிபதி மற்றும் மூன்றாமிடத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்து, இவையனைத்தும் சுபப் பலம் பெற்று மிக்க வலிமையுடன் இருந்தால் ஜாதகர் தம் வாழ்வில் நடக்கும் எத்தகைய நிலைகளையும், சம்பவங்களையும் மிகவும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வார். திறமையான அணுகுமுறையுடைய பெருமைக்குரிய சாமர்த்தியசாலியாகத் திகழ்வார்.
லக்னாதிபதி எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ அந்த வீட்டை வாழவைப்பார். லக்னாதிபதி மூன்றுக்குச் சென்றால் இளைய உடன்பிறப்புக்கு நன்மையளிப்பதோடு, தன்னுடைய சுய உழைப்பால் முன்னேற்றத்தை அடைவார்.
"தன் கையே தனக்குதவி' என்ற பழமொழிக்கேற்ப, "உழைப்பே உயர்வு தரும்' என்ற வாக்கிற்கு இணங்க தன் சுயமுயற்சியால் கடுமையாக உழைத்து முன்னேறுவார்.
இந்த மூன்றாம் பாவம் முக்கியமாக இளைய சகோதரனைப் பற்றிக் குறிப்பிடுவதால் இந்த பாவகம் நன்றாகவும், சகோதர காரகன் செவ்வாயும் சுபத்தன்மை பெற்று, நல்ல ஸ்தானங்களில் அமைய, மேஷம், விருச்சிக ராசிகளில் பாவர்கள் அமராமல் சுபர்கள் அமர்ந்து அல்லது சுபர் பார்வையோடு இருக்க நல்ல சகோதரர்கள் அமைவார்கள். அவர்களின் உதவியும் அன்பும் பாசமும் ஜாதகருக்குக் கிடைக்கும். சகோதரர்களும் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.
மூன்றாம் இடத்தில் நீசம், பகை பெற்ற கிரகம் இருக்க, மூன்றாம் இடத்து அதிபதி 6, 8, 12-ல் மறைய, மூன்றாம் இடத்து அதிபதி ராகு- கேதுவுடன் எட்டரை டிகிரிக்குள் இணைய, செவ்வாயின் வீடுகளான மேஷ, விருச்சிகத்தில் பாவர்கள் அமரப்பெற அல்லது சனியின் பார்வையை அந்த ராசிகள் பெற, மூன்றில் வக்கிர சனி அமைய சகோதர இழப்பு, சகோதரர்கள் ஒற்றுமைக் குறைவு, சகோதரப் பகை போன்றவை ஏற்படும். செல்வநிலையும் சீராக இருக்காது.
மூன்றாம் இடத்தில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சமாக இருந்து, அந்த வீட்டதிபதியும் கேந்திர திரிகோணங்களில் அமைந்து, செவ்வாயும் பலம் பெற்று சுபத்தன்மை பெற்றவர்களுக்கு காரிய வெற்றியும், சகாயங்களும், தைரியமும் நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று சகோதர ஒற்றுமையோடு நல்ல ஆயுள்பலத்தோடு ஜாதகர் வாழ்வார்.
மூன்றாம் இடத்ததிபதி ஸ்திர ராசி, ஸ்திர நவாம்சம் அமையப்பெற்று, அவர் இருக்கும் வீட்டின் அதிபதியும் பலம்பெற, செவ்வாயும் ஆட்சி, உச்சம் பெற்று சுபத்தன்மை பெற்று லக்னம் மற்றும் பத்தாமிடத்தோடு தொடர்புகொள்ள, காவல்துறை, ராணுவம் போன்ற சீருடைப்பணிகளில் பணியாற்ற முடியும்.
இந்த இடம் வீரத்தையும், ஆண்மையையும் குறிப்பிடுவதால், இந்த பாவகம் பாதிக்கப்பட்டால் ஆண்மைக்குறைவு, சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு, ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்.
இந்த இடம் பலம்பெற, தொலைத்தொடர்பு, போன் மற்றும் தபால் மூலம் ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும். இந்த இடத்ததிபதி, சனியும் சுபத்தன்மை பெற்று பத்தாமிடம் வலுத்தால், நிறைய வேலையாட்களைக் கொண்டு ஜாதகர் தொழில்மூலம் நன்கு சம்பாதிப்பார். ஆனால் இந்த இடம் கடுமையாக பாதிக்கப்பட்டால் ஜாதகரே அடிமைத்தொழில் செய்வார்.
ஜாதகருக்கு சகாய ஸ்தானாதிபதி பலம் பெற்று தசையை நடத்தும்போது சகோதரர்களுக்கு நன்மையும், ஜாதகருக்கு சகோதரர்களால் நன்மையும், தைரியத்தோடு ஆற்றலும், மனவலிமையும், அந்த தசையில் போன்மூலம் நல்ல தகவல்களும் வந்துசேரும். பயணங்கள் வெற்றிகரமாக அமையும். பலம் குறைந்தால் மேலே சொன்ன பலன்கள் சிறக்காது.
சகோதர பலம் மற்றும் 3, 11-ஆம் பாவகம் பற்றி தீர்மானம் செய்வதில் செவ்வாய் பெரும் பங்கு வகிக்கிறது. செவ்வாயே ரத்த காரகன். பூமிகாரகன். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட மண்ணாசை, பொன்னாசை, பணம் இந்த மூன்றுமே பிரதானமான காரணம்.
இந்த கலியுகத்தில் பெற்றோரின் அன்புக்காகவும், வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காகவும் சண்டை போடும் உடன்பிறப்புகளைவிட, பெற்றோரின் உடமைகளுக்கு உரிமை கொண்டாடும் உடன்பிறப்புகளே அதிகம் என்பதே நிதர்சனமான உண்மை.
முன்வினைக் கர்மாவின் தொடர்ச்சியே இப்பிறவி. 3-ல் செவ்வாய் இளைய சகோதரத்தாலும், 11-ல் செவ்வாய் மூத்த சகோதரத்தாலும் ஏற்படும் கருத்து வேற்றுமையைக் கூறும். 3, 11-ல் செவ்வாய் காரகோ பாவக நாஸ்தி. 3, 11-ல் செவ்வாய் இருக்கும் சகோதரர்களே பெற்றோரின் உடைமைகளைப் பங்கிட கோர்ட் வாசல் ஏறவும், ஒருவருக்கொருவர் மாந்திரீகம் செய்தல், இடு மருந்து கொடுத்தல் போன்றவற்றில் காலம் கடத்தி, தாமும் அனுபவிக்காமல், உடன்பிறந்தவர்களையும் அனுபவிக்க விடாமல் மூன்று தலைமுறை சொத்தை வைத்து வேடிக்கை பார்ப்பவர்கள் பல்லாயிரம் பேர்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையே இந்தப் பிறவியில் உடன்பிறந்தவர்களின் நிலை, கருத்து ஒற்றுமை, உடன்பிறந்தவர்கள்மூலம் அனுபவிக்க இருக்கும் இன்ப- துன்பங்களைத் தெளிவுபடுத்தும். 6, 8, 12-ல் மறையும் செவ்வாய் முன்ஜென்மத் தொடர்ச்சியே... மிகத்தெளிவாகக் கூற வேண்டும் என்றால் சென்ற பிறவியில் பூமி தொடர்பாக உடன்பிறந்தவர்களின் பங்கை ஏமாற்றியவர்கள், இந்தப் பிறவியில் அந்த சொத்து தொடர்பான கணக்கை நேர்செய்ய எடுத்த பிறப்பாகும். செவ்வாய், ராகுவுடன் சம்பந்தம் பெறும் ஜாதகர் நிலம், வீடு, கட்டடம், வாகனங்கள் என லௌகீக சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்கச்செய்து திடீரென கையை விட்டுப்போகும் நிலையையோ அல்லது ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கான முதலீடு செய்ய வைத்து எதிர்பாராத இழப்பையோ, பங்குச்சந்தை முதலீட்டை இழக்கச் செய்தல் போன்றவற்றையோ ஏற்படுத்தி உருத்தெரியாமல் மனிதனை தற்கொலை செய்யத் தூண்டும் படியான மனவேதனையை உருவாக்கும்.
இன்னும் சிலருக்கு மூன்று தலைமுறைக்கு மேல் விற்கவோ அனுபவிக்கவோ முடியாமல் இருக்கும் சொத்துகளை வைத்து உருட்டிக்கொண்டிருப்பார்கள். நான்காவது தலைமுறையில் திடீரென அந்த சொத்து தொடர்பாக ஒரு நல்ல முடிவு வரும். இது எப்படி சாத்தியமாகியது என்று ஆய்வு செய்தால், மூலப்பத்திரத்தில் சொத்துக்கு பாத்தியப்பட்ட முதல் தலைமுறையின் பெயரும் தற்போது சொத்துப் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வந்தவர் பெயரும் ஒன்றாக இருக்கும். தான் விட்டுப்போன சொத்தை அடைய தானே மறுபிறவி எடுத்து வந்திருக்க வேண்டும். அதனால்தான் நமது முன்னோர்கள் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் பெயர்களை தம் வாரிசுகளுக்கு வைத்து மகிழ்ந்திருந்திருக்கிறார்கள்.
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மறுபிறவி. ராகு என்பது பாட்டன், முப்பாட்டன். ஜோதிடத்திலும் மறுபிறப்பிலும் நம்பிக்கையுள்ள யாரும் இந்த கருத்தை மறுக்க முடியாது. இதை பல குடும்பத்தினர் உணர்ந்தும் இருப்பார். கலியுகத்திற்கு ஏற்ப பலன் சொல்ல வேண்டுமானால், பெரும் பணத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற குழந்தை உருவாக கால பகவான் எடுத்துக்கொண்ட கால அளவு.
செவ்வாய், கேது சம்பந்தம் பெறுபவர்களுக்கு இடம், வீடு, கட்டடங்களில் தோஷம் உண்டு. இந்த சம்பந்தம் பெற்றவருக்கு பூமி யோகம் அரிது. அப்படியே உருவானாலும் வாஸ்துக் குறைபாடு உள்ள சொத்து, பாகம் பிரிக்க முடியாத சொத்து, வில்லங்க சொத்து, புறம்போக்கு சொத்துதான் கிடைக்கும். மேலும் கோர்ட், வம்பு, வழக்கு என்று அலைந்து சொத்தே வேண்டாம் என்ற அளவுக்கு வேதனை தரும்.
செவ்வாய், ராகு- கேது சேர்க்கை ஏற்படக் காரணம்- முறையற்ற சொத்து பங்கீடு, வட்டிக்கு வட்டி வாங்குதல், அதிகமாகத் தன் பங்கை இழந்த ஒருவரின் மனக்குமுறலால் எழுந்த சாபமே தோஷமாக மாறுகிறது. இங்கே சொத்து என்று குறிப்பிடுவது மண், பொன், பணம். சில குடும்பங்களில் பெற்றோரே முறையற்ற பங்கீட்டை அனுமதிக்கிறார்கள். இவ்வாறு செய்யும் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சாபத்தை வாங்கி பாவச்சுமையை ஏற்றுகிறார்கள். அறியாமையால் நேர்ந்த சாபம் தலைமுறையினரின் வாழ்வில் நிம்மதியின்மையை உருவாக்கிவிடும் என்பதை உணர்ந்து பங்கீடு செய்தல் நல்லது. பங்கீட்டின்போது பிடித்த பெண் குழந்தை, பிடித்த ஆண் குழந்தை, மூத்த வாரிசு, கடைக்குட்டி என்ற எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது.
இதேபோல் வாரிசு இல்லாதவர்களின் சொத்தை அனுபவிப்பவரின் நிலை மிகவும் கொடூரமாக உள்ளது.
அரசாங்கம் நாட்டு மக்களின் சீர்திருத்தப் பணிக்காக கையகப்படுத்தும் நிலங்களின் உரிமையாளர்களின் ஜாதகத்தில் எல்லாம் செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் நிச்சயம் இருக்கும்.
சர்ப்பங்களைத் துன்புறுத்துவதால்தான் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது என்பது தவறான கருத்து. 3 மற்றும் 9-ஆம் பாவகங்களில் அமரும் ராகு- கேதுக்கள் உடன்பிறந்தவர்களின் மனக்குமுறல்கள்.
இந்த கட்டுரையை படித்தவர்கள் இனி உடன்பிறந்தவர்களை ஏமாற்ற மாட்டார்கள். எந்தப் பிறவியிலோ நடந்த தவறுக்கும் பாட்டன், முப்பாட்டான் செய்த தவறுக்கும் நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று வருந்துபவர்களுக்கு விமோசனம் வேண்டும்.
எந்த தோஷமோ, சாபமோ, நமக்குத் தேவை தீர்வு. ஒவ்வொரு பாவத்தையும் விருத்தி செய்யும் அந்த பாவகத்திற்கு 3-ஆம் பாவகம். உதாரணமாக, லக்ன பாவகத்தை விருத்தி செய்வது 3-ஆம் பாவகம். அதை விருத்தி செய்வது 5-ஆம் பாவகம். அதை விருத்தி செய்வது 7-ஆம் பாவகம். அதை விருத்தி செய்வது 9-ஆம் பாவகம். 9-ஆம் பாவகத்தை விருத்தி செய்வது 11-ஆம் பாவகம்.
ஒரு தலைமுறை விருத்தி அடைகிறதா பலமிழக்கிறதா என்பதை பாவத்பாவ விதிப்படியும், ஒவ்வொரு பாவத்தையும் விருத்தி பெறச் செய்யும் பாவகத்தின் 3-ஆம் பாவகம்மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
ஜாதகத்தில் திரிகோணாதிபதிகள் வலுவுடன் இருந்தாலும், பாவத்பாவ முறையில் லக்னாதிபதியின் பலமே ஒரு ஜாதகத்தின் அஸ்திவாரம்.
பாவத்பாவத்தின் சிறப்பு என்பதே ஒற்றைப்படை வீடுகள்தான். நமக்கு கெடுதல் செய்யும் எல்லா இரட்டைப்படை வீடுகளும் ஒற்றைப்படை வீடுகளைச் சார்ந்து வருவதுதான். கெட்டவன் எல்லாம் நல்லவனைச் சார்ந்துவிட்டால் நமக்கு நல்லதுதானே.
லக்னத்தைத் தவிர்த்து ஒவ்வொரு பாவமும் இன்னொரு பாவத்தைச் சார்ந்துதான் இருக்கும்.
2-க்கு 2-ஆமிடம்- 3-ஆமிடம்.
8-க்கு 8-ஆமிடம்- 3-ஆமிடம்.
3-க்கு 3-ஆமிடம்- 5-ஆமிடம்.
9-க்கு 9-ஆமிடம்- 5-ஆமிடம்
4-க்கு 4-ஆமிடம்- 7-ஆமிடம்.
10-க்கு 10-ஆமிடம்- 7-ஆமிடம்.
5-க்கு 5-ஆமிடம்- 9-ஆமிடம்.
11-க்கு 11-ஆமிடம்- 9-ஆமிடம்.
6-க்கு 6-ஆமிடம்- 11-ஆமிடம்.
12-க்கு 12-ஆமிடம்- 11-ஆமிடம்.
7-க்கு 7-ஆமிடம்- லக்னம்.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் 5-க்கு 5-ஆமிடம்- 9-ஆமிடமாகவும், 9-க்கு 9-ஆமிடம்- 5-ஆமிடமாகவும் வருவதே,ஒரு ஜாதகத்தில் திரிகோண கிரகங்கள் லக்னாதிபதியுடன் தொடர்பு கொண்டால் ஜாதகத்திலுள்ள எல்லா வீடுகளும் பாவத்பாவ முறையில் தொடர்புகொண்டுவிடும். அவை நல்லதாக இருந்தால் இருமடங்கு சக்தியும், கெட்டதாக இருந்தால் இருமடங்கு குறைத்தும் செய்யும். அதாவது ஜாதகருக்கு ஏதாவது பிரச்சினையென்று வந்தால் அது அவருக்கு சாதகமாக முடியும் அல்லது முடித்துக்கொள்வார்.
திரிகோணாதிபதிகள் லக்னாதிபதியுடன் தொடர்புகொண்டால் எல்லா வீடுகளும் கீழுள்ளவாறு சம்பந்தம் பெறும்.
2-க்கு 2-ஆமிடம்- 3-ஆமிடம்.
8-க்கு 8-ஆமிடம்- 3-ஆமிடம்.
3-க்கு 3-ஆமிடம்- 5-ஆமிடம்.
9-க்கு 9-ஆமிடம்- 5-ஆமிடம்.
5-ஆமிடம்- திரிகோணம்.
ஆக 2-ஆம் வீடு, 8-ஆம் வீடு, 3-ஆம் வீடு இவையெல்லாம் 5-ஆம் வீட்டின் அதிபதியின் கீழ் வருகிறது.
6-க்கு 6-ஆமிடம்- 11-ஆமிடம்.
12-க்கு 12-ஆமிடம்- 11-ஆமிடம்.
5-க்கு 5-ஆமிடம்- 9-ஆமிடம்.
11-க்கு 11-ஆமிடம்- 9-ஆமிடம்.
9-ஆமிடம்- திரிகோணம்.
ஆக 6-ஆம் வீடு, 12-ஆம் வீடு, 11-ஆம் வீடு இவையெல்லாம் 9-ஆம் வீட்டின் அதிபதியின் கீழ் வருகிறது.
அதனால் திரிகோணாதிபதிகள் லக்னாதிபதியுடன் சம்பந்தப்பட்டால் ஜாதகத்திலுள்ள எந்த தசை நடப்பிலிருந்தாலும் அந்த ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் ஜாதகருக்கு யோகத்தை வாரி வழங்கும்.
ஆனால் விதி வலியதாயிற்றே.
என்னதான் திரிகோணாதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஜாதகருக்கு யோகத்தை வாரிவழங்கினாலும், லக்னாதிபதி கெட்டால் எல்லாம் கெடும் என்பதை மனதில் வைத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
லக்னாதிபதி கெட்டால் திரிகோணாதிபதிகளும் தங்கள் பலத்தையும் சேர்ந்து இழந்துவிடுவார்கள்.
5-க்கு 9-ஆமிடம்- லக்னம்.
9-க்கு 5-ஆமிடம்- லக்னம்.
ஆக திரிகோணாதிபதிகள் என்னதான் வலுவுடன் இருந்து ஜாதகருக்கு யோகத்தை வழங்கக் காத்திருந்தாலும், லக்னாதிபதி கெட்டதால் திரிகோணாதிபதிகள் தங்கள் பலத்தில் ஒரு பாதியை இழப்பதால் ஜாதகருக்கு யோகம் பாதியாக குறைந்துவிடும். சரி; யோகம்தான் பாதி குறைந்தாலும் மீதி பாதிதான் இருக்கிறதே என்றால் அதுவும் நடக்காது.
ஏன்? லக்னம் எந்த வீடுகளுக்கெல்லாம் நேரடித் தலைவன் என்று பாருங்கள்.
4-க்கு 4-ஆமிடம்- 7-ஆமிடம்.
10-க்கு 10-ஆமிடம்- 7-ஆமிடம்.
7-க்கு 7-ஆமிடம்- லக்னம்.
4-ஆம் வீடு, 7-ஆம் வீடு, 10-ஆம் வீடு- சுகம், மனைவி, தொழில் ஆகிய மூன்றும் மறைமுகமாக பாவத் பாவம் முறையில் பாதிப்படைவதால், ஜாதகர் நிம்மதி அடையமுடியாது அல்லது ஜாதகர் இவற்றை எப்படி மேம்படுத்துவது என்று ஏங்கியே நொந்துகொள்வார்.
லக்னாதிபதி கெட்டு, திரிகோணாதிபதிகள் லக்னாதிபதியுடன் தொடர்பு பெறாமல் தங்களுக்குள் தொடர்புகொண்டால் ஜாதகர் யோகத்தை முழுமையாக அனுபவிக்கமாட்டார்.
விதிவிலக்காக லக்னாதிபதி கெட்டு எவ்விதத்திலாவது திரிகோணாதிபதிகளின் தொடர்பு பெற்றால் ஜாதகரை சிறுவயதில் கஷ்டப்படுத்தி பின் வயதில் நன்றாக இருக்க வைத்துவிடும்.
லக்னாதிபதி வலுப்பெற்று திரிகோணாதிபதிகளின் தொடர்பும் பெற்ற ஜாதகர் இவ்வுலகத்தில் எந்த ஒரு பிரச்சினையுமின்றி வாழ்வாங்கு வாழ்வார் என்பது நிச்சயம்.
மிகச்சுருக்கமாக 1 என்றால் லக்ன பலமும், 5 என்ற பூர்வ புண்ணியமும், 9 என்ற பாக்கிய ஸ்தானமும், செவ்வாய், 3-ஆம் பாவகத்தோடு பெறும்தொடர்பே பூமி தொடர்பான பிரச்சினையின் ஆரம்ப காலத்தையும் முடிவு காலத்தையும் தீர்மானிக்கும்.
தீர்வு
பூமி தோஷத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அருகிலுள்ள சிறுவாபுரி முருகனையும், கர்நாடகா மாநில குக்கே சுப்ரமணியாவையும் சென்று வழிபாடு செய்வது சிறப்பான பலன் தரும்.
செல்: 98652 20406