படிப்பறிவில்லாத தாய்- தந்தையின் பிள்ளைகள் பட்டதாரி ஆகிறார்கள். கூலி வேலை செய்துவருபவரின் பிள்ளைகள் கைநிறைய சம்பாதித்து வீடு கட்டு கிறார்கள்; கார் வாங்குகிறார்கள். தினக்கூலியாக இருந்தாலும், அவருடைய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தால் பிள்ளைகள்மூலம் வசதி வாய்ப்புகள் பெற்று வாழும் சூழ்நிலை உருவாகும்.
பெரிய தனவந்தருக்கு நான்கு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவு வசதிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் நிம்மதியில்லாமல் போனால் பணம் என்னவாகும்? பிள்ளைகள் இருந்தும் எதற்கும் பயனற்ற வர்களாக இருப் பார்கள். எப்படி சந்தோஷம் வரும்? பணம் இருந்தும் விரும்பியது சாப்பிட முடிய வில்லையென்றால், உடல்நிலை பாதிக்கப்பட்டு கஞ்சியும் கூழும் தான் உணவென்றால் பணம், செல்வம், வசதிகள் இருந்தும் என்ன பயன்?
அதைக்கடந்து அன்பான உறவுகள், பிள்ளைகள், மனைவி, கணவன் இவர் களில் யாராவது ஒருவர் இருந்தால் தொல்லை யில்லாத வாழ்க்கைச் சூழ்நிலை அமையும்.
ஒரு ஜாதகத்தில் லக்னத் திற்கு கேந்திரமான 4, 7, 10-ல் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன் இருந்தால் அது நல்ல ஜாதகம். லக்னத் திற்கு திரிகோணஸ்தானமான 5, 9-ல் குரு, சந்திரன், சுக்கிரன், புதன் இருந்தால் அது நல்ல ஜாதகம். இவர் களில் யாராவது ஒருவர் இருந்தால் ஓரளவு தொல்லை யில்லாத வாழ்க்கை அமையும். தொல்லைகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டுவர உபாயம், வழிகள் எங்கேயாவது இருக்கும். யாராவது உதவி செய்வார்கள்.
எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி கெடக்கூடாது. கெட்டால் தட்டுத்தடுமாற வேண்டியிருக்கும். ஏமாற்றம், எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிரிகளை சமாளிக்கப் போராட வேண்டியிருக்கும். சமயத்திற்கு மூளை வேலைசெய்யாது. பின்யோசனைதான் வரும். ஆக, லக்னாதிபதி வலிமைபெற வேண்டும்.
லக்னாதிபதிக்கு இணையாக அஷ்டமா திபதி வலுக்கக்கூடாது. வலிமை பெற்றால் "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இறுதி வெற்றி கிடைத்தாலும், எல்லா வெற்றியும் கடின முயற்சி, விடாமுயற்சி, கடுமையான போராட்டத்திற்குப் பின்னேதான் கிடைக்கும்.
எட்டுக்குடையவரின் நகல்தான் ஆறுக்குடையவர். அதிகபட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கும். லக்னாதிபதிக்கு இணையாக வலுக்கக்கூடாது. மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் எட்டுக்குடையவர். ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆறுக்குடையவர். துலா லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரன் எட்டுக்குடையவர். விருச்சிக லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் ஆறுக்குடையவர். அப்படியென்றால் இவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்றால் இரண்டு ஆதிபத்தியமும் வரும்.
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் தனது குணத்தை அதிகம் பிரதிபலிப்பார். அவரே ஆறு, எட்டாமிடத்தில் இருந்தால் ஆறு, எட்டுக்குடையவர் குணத்தைப் பிரதிபலிப்பார். அதாவது ஆசை காட்டி மோசம் செய்வார். கொடுத்துக் கெடுப்பார். கெடுத்துக் கொடுப்பார்.
லக்னம், 6, 8-ஆம் இடத்தைத் தவிர வேறிடத்தில் இருந்தால் அவரின் குணத்தை அறிவதெப்படி? லக்னத்தைவிட்டு விலகிய கிரகம்- அதாவது 2, 3, 4, 5, 7-ஆம் இடத்தில் இருந்தால், அடுத்த ஆதிபத்தியம் 6, 8-ஆம் இடத்தை நோக்கிச் சென்றால் அவ்விடங்களுக்குரிய குணத்தைப் பிரதிபலிப் பார். 6, 8-ஆம் ஆதிபத்தியம் லக்னா திபதிக்கு இருந்து, 6, 8-ஆம் இடத்தைக் கடந்து- அதாவது 9, 10, 11, 12-ஆம் இடத்தில் லக்னாதிபதி இருந்தால் லக்னாதிபதியின் குணத் தைப் பிரதிபலிப்பார்.
லக்னாதிபதி 10-ல் இருந்தாலும், 10-ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தாலும் நல்லதே நடக்கும். சம்பாதிக்கும் திறமையுடையவர். 10-ஆம் அதிபர் லக்னத்தில் இருந்தால் அவர் எதைச் செய்தாலும் லாபம் பார்ப்பார். தொட்டது வெற்றி பெறும். கெட்ட தசாபுக்தி நடைமுறையில் வந்தாலும் வெற்றியை தாமதப்படுத்துவார்; தள்ளிவைப்பாரே தவிர யோக தசாபுக்தி வரும்பொழுது அவருக்கு நன்மையே நடக்கும். அவர் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது.
லக்னாதிபதி 10-ல் இருந்தால் பலருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக இருப்பார். அவர் பந்தயக் குதிரை; ஜெயிக்கும் குதிரை.
ஜாதகத்தில் சூரியனும், 9-ஆம் அதிபதியும் வலிமைபெற்றால்- ஆட்சி, உச்சம்பெற் றால்- கேந்திர திரிகோணத்தில் இருந்தால் குடும்ப சொத்துகள் இருக்கும். வருமான வழிகள் இருக்கும். கேந்திரத்தில் ஒரு கிரகம் ஆட்சி, திரிகோணத்தில் ஒரு கிரகம் ஆட்சிபெற்றால் நல்ல ஜாதகம்தான். கோடீஸ்வரனாக வாழமுடியாவிட்டாலும் மானமரியாதையோடு வாழமுடியும். மிக முக்கியமாக 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ஆம் இடத்துக்குரியவர் தசை நடப்பில் வந்தால்- குரு, புதன், சுக்கிரன், சனியாக இருந்தால் பத்து ஆண்டுக்கு மேலாகக் கடந்த தசையாக அமைந்து யோகத்தையும் வாய்ப்புகளையும் தந்து ஜாதகரை நிலைநிறுத்துவார்.
மேற்கண்ட கிரக அமைப்புகள் ஒன்று அல்லது இரண்டு இருந்தால் நல்ல ஜாதகம்தான். அதாவது குறைந்தபட்சம் உத்தரவாத வாழ்க்கை அமையும். இந்த கிரக அமைப்புகள் நன்மைகளா அல்லது தீமைகளா என்று பல கோணத்தில் ஆராய்ச்சி செய்தபிறகே மற்றவற்றை முடிவு செய்ய வேண்டும்.
செல்: 98403 69513