ஒருவர் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்றால் நோய் நொடி இல்லாமல் இருக்கவேண்டும். இந்த விஷயம் தர்ம நூல்களிலேயே கூறப்பட்டிருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் நிலைமையையும், லக்னாதிபதியின் நிலைமையையும் பார்த்து அவரின் நோய்பற்றிக் கூறிவிட முடியும்.
ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அடிக்கடி நோய்களின் பாதிப்பு இருக்கும். சந்திரன் எந்த கிரகத்தால் பார்க்கப்படுகிறாரோ, அந்த கிரகம், அந்த தசா காலத்தில் அவருடைய மனதை பாதிக்கும்.
சந்திரன் 6, 8-ல் இருந்தால், அந்த ஜாதகருக்கு மனநோய் இருக்கும். எதைப் பார்த்தாலும் பயப்படுவார். சந்திரன், சனியுடன் சேர்ந்தாலும் மனநோய் இருக்கும். தனக்கு ஏதாவது கெட்டது நடந்துவிடுமோ என்று எப்போதும் பயந்துகொண்டே இருப்பார்.
ஜாதகத்தில் ஆத்மகாரகனான சூரியன் பலவீனமாக அல்லது பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு பலவிதமான நோய்களும் இருக்கும்.
ஜாதகத்தில் புதன் பலவீனமாக அல்லது அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்தால், அவர் அதிகமாக சிந்திப்பார். அவருக்கு மனதில் எப்போதும் பயம் இருக்கும். பல்லில் நோய், தோல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக பாவ கிரகத்துடன் இருந்து அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். எப்போதும் பயத்துடன் இருப்பார். வயிற்றில் நோய் உண்டாகும். சிலருக்கு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி 6, 8, 12-ல் இருந்தால் அவர் பித்த நோயால் பாதிக்கப்படுவார். அதுவும் 6-ல் சனி தனித்திருந்தால், அது 12-ஆவது வீட்டையும் பார்க்கும்; 8-ஆவது வீட்டையும் பார்க்கும். சில நேரங்களில் கோட்சாரம் சரியில்லையென்றால், அந்த சனி 8-ஆவது வீட்டின் பலன்களைக் கொடுக்கும். அந்தச் சமயத்தில் அவருக்கு பித்தம் அதிகமாகி மனதில் பயம் ஏற்படும்.
ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு 8-ல் சனி இருந்தால் அவருக்கு சீதளம் பிடிக்கும். தலைவலி உண்டாகும். ஜுரம் வரும்.
சந்திரன் 11-ல் தனித்திருந்தால்- எந்த சுப கிரகத்தின் பார்வையும் இல்லாமலிருந்தால்- சந்திரனுக்கு முன்பும் பின்பும் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அந்த ஜாதகர் மனநோயால் பாதிக்கப்பட்டு துன்பமடைவார்.
12-ஆவது வீட்டில் சந்திரன் தனித்திருந்தால் அந்த மனிதருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கும். ஜாதகத்தில் சந்திரன், சனி, செவ்வாய் 6-ல் இருந்தால் அவருக்கு காலில் நோய் உண்டாகும். சிலருக்கு முதுகுத்தண்டில் நோய் வரும்.
ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால், அவருக்கு அவரைவிட வயதில் மூத்தவர்களால் மகிழ்ச்சி கிடைக்காது. அவர் யாரையும் மதிக்கமாட்டார். எப்போதும் சந்தோஷத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் மனநோயும் உண்டாகும்.
ஜாதகத்தில் குருவும் சனியும் 4-ல் இருந்து, செவ்வாய், சூரியன் 12-ல் இருந்தால், அந்த மனிதர் இளமையில் பல கஷ்டங்களைச் சந்தித்திருப்பார். அதனால் எப்போதும் அவர் பயத்துடனே வாழ்வார்.
லக்னத்தில் கேது, செவ்வாய் இருந்து, 6, 8, 12-ல் சனி இருந்தால், அவருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வரும்.
வீட்டுச் சுவரில் நீர் கசிந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் வரும். தென்மேற்கில் கழிவறை அல்லது கழிவு நீர்த்தொட்டி இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் வரும். வீட்டின் வடகிழக்கில் படிக்கட்டு இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தலைவலி வரும். வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருந்தால் நோய் வரும். வீட்டின் தெற்கு திசை அதிகமாக காலியாக இருந்து, அந்த வீட்டின் வடமேற்கில் படுத்தால் அங்குள்ளவர்களுக்கு நோய் வரும்.
பரிகாரங்கள்
தினமும் காலையில் சிவனுக்கு நீர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களை வைத்துப் பூஜை செய்தால் மனநோய் குறையும்.
சிவனுக்கு கரும்புச் சாறால் அபிஷேகம் செய்தால் நோய் குறையும். தேனால் அபிஷேகம் செய்தால் நோய்கள் அண்டாது.
தினமும் சூரியனை வழிபட்டால் பலவித நோய்களும் குறையும். மனநோய் குறையும்.தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். அதனால் ஜாதகத்திலுள்ள புதன், சூரியனின் தோஷம் குறையும்.
துர்க்கைக்கு விளக்கேற்றி பாலாபிஷேகம் செய்து சிவப்பு மலர்களால் பூஜை செய்தால் சந்திரன்- சனியின் தோஷங்கள் குறையும்.
ஆஞ்சனேயரைச் சுற்றி வந்தால் செவ்வாய் தோஷம் குறையும்.
சனிக்கிழமை ஆஞ்சனேயரை இரவில் பூஜை செய்து வழிபட்டால் சனியின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
இவற்றைக் கடைப்பிடித்தால் நோய்களிலிருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழலாம்.
செல்: 98401 11534