"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.'
ஒரு மனிதன் ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதைவிட தோன்றாமலிருப்பதே நல்லது என்ற தெய்வப் புலவர் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப ஒரு மனிதன் புகழுடன் பிறக்கவேண்டும்.
அவ்வாறு புகழுடன் பிறக்க வேண்டும் என்றால் 1, 5, 9 என்னும் பூர்வ ஜென்மத் தொடர்புடைய பாவகங்களில் 9-ஆம் பாவகம் மிக முக்கியம். தந்தை என்ற 9-ஆம் பாவகம் இருந்தால்தான் 1-ஆம் பாவகம் என்ற ஜாதகர் ஜனனமாக முடியும். 1-ஆம் பாவகம் என்ற லக்ன பாவகம் சிறப்பாக இருந்தால்தான், 9-ஆம் பாவகம் என்ற பூர்வ புண்ணிய பலத்தால் 5-ஆம் பாவகம் என்ற குழந்தை பிறக்கும். எனவே ஒரு ஜாதகரை வலிமைபெறச் செய்யும் திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9-ல், 9-ஆம் பாவகமாவது வலிமையுடன் இருக்க வேண்டும்.
பிதுர் பாவகம்
"பெற்றிடும் தந்தை மகப்பயிர் தருமம்
பெருமை சேர்பாக்கியம் மடங்கள்
உற்றதோர் பரம புண்ணியம் குளமும்
உயர்திருப்பணி உபதேசம்
வெற்றிசேர் நீர்காவனம் புகழ் கூபம்
விரும்பிய செல்வம் ஈதுஎல்லாம்
கற்றறிந் தோர்கள் ஒன்பதாம்
இடத்தால்
கருணையும் பெற மொழிந்திடுவார்'
என்பது "சாதக அலங்காரப்' பாடல். இதன் பொருள் தன்னை ஈன்ற தந்தையைப் பற்றியும், தந்தை வர்க்கத்தின் மேன்மையும், அவர்களால் உண்டான செல்வம் பற்றியும், பிறருக்குக் கொடுத்து உதவும் தன்மையும், துறவிகள் மற்றும் அறவோர்கள் தங்க மடாலயம் அமைத்தலும், ஊருணி, தண்ணீர்ப் பந்தல் அமைத்தலும், தான் விரும்பிய செல்வத்தை அடைதல் போன்றவற்றையும் இந்த ஒன்பதாம் இடம்கொண்டு அறியலாம் என்பதாகும்.
இந்த ஜென்மத்தில் நமக்கு என்ன கொடுப்பினை உள்ளது? நாம் அனுபவிக்கப்போகும் நல்ல, தீய வினைப் பயன்கள் என்னென்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய இடம் பாக்கியஸ்தானம் எனப்படும் 9-ஆம் இடம். பூர்வ புண்ணியத்தைக் குறிக்கும் 9-ஆம் இடமே நாம்செய்த புண்ணியத்தையும் கூறும்.
ஒரு ஜாதகம் ராஜயோக ஜாதகமா என்பதை 1, 5, 9, 10 ஆகிய நான்கு ஸ்தானங்களும் நிர்ணயம் செய்கின்றன.
இந்த ஸ்தானாதிபதிகள் பலவீனப்படாமல், பாவர்கள், பகைவர்களின் சேர்க்கையோ பார்வையோ படாமல், லக்ன பாவிகள் அமராமல் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்நாளில் நினைத்ததையெல்லாம் அடையக்கூடியவராக, நிம்மதியான வாழ்க்கை நடத்தக்கூடியவராக, சுகபோகங்களை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவராக வாழ்வார். 9-ஆம் பாவக அதிபதி பகை, நீசம், அஸ்தமனம், லக்ன பாவர்களுடன் தொடர்பு, தீய பாவகம் மற்றும் கிரகத்தொடர்பு, திதி சூன்யம், பாதக ஸ்தானம் ஆகியவை இல்லாமல் இருப்பதே சிறப்பு. இப்படியொரு ஜாதகம் எப்படி அமையும்? இது சாத்தியமா என்று வாசகர்கள் கேட்கலாம். எல்லா ஜாதகத்திலும் நிச்சயம் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஸ்தானங்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நான்கு ஸ்தானங்கள் பலம்பெற்றிருப்பதுடன் அதற்குரிய தசாபுக்திகளும் உரிய காலகட்டத்தில் வந்தால் மட்டுமே எல்லா நற்பலன்களையும் அனுபவிக்கமுடியும்.
அடிமட்டதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த நான்கு ஸ்தானங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.
ஒன்பதாம் பாவகத்திலிருந்து தந்தை, பாக்கியம், மத ஆச்சாரம், குலவழக்கம், குலவிருத்தி, குரு, உடனே பலம், பலன் தரும் தெய்வம் (உபாசனை தெய்வம்), மதப்பற்று, நீண்டதூரப் பயணம், தொழில்விரயம், தெய்வ வழிப்பாட்டு இடம், தம்பியின் மனைவி, பணம் புரட்டுதல், ஜபம், உயர்கல்வி, வெளிநாட்டுப் பயணம், தந்தை, தந்தைவழி உறவுகள், பூர்வீகச் சொத்துகள், தானதர்ம குணங்கள், முயற்சியின்றி கிடைக்கக்கூடிய ஆதாயங்கள், மத நம்பிக்கை, அதிர்ஷ்டம், திறமை, நேர்மை, அறிவாற்றலுக்கு மக்களிடமிருந்து அங்கீகாரம் போன்றவற்றைப் பற்றியும் அறியலாம்.
உதவியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று கேட்டுப்பெறும் உதவி.
மற்றொன்று கேட்காமல் நம்மைத் தேடிவரும் பெரிய உதவி. கேட்டுப்பெறும் உதவி நம்முடைய முயற்சியால் நடப்பது. கேட்காமல் நம்மைத் தேடிவரும் உதவி நம்முடைய பூர்வபுண்ணிய பலத்தால் வருவது. நாம் செய்த பூர்வபுண்ணியத்தைக் குறிக்குமிடம் 9-ஆம் இடம் என்றால், நம் பாவகத்தைக் குறிக்குமிடம் 8-ஆம் இடம். ஒரு ஜாதகத்தில் எந்த பாவகத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த பாவகத்திற்கு 12-ஆம் பாவகம் எதிர்மறையான விஷயங்களைக் குறிக்கும். ஜோதிடத்தில் 8-ஆம் பாவகத்தைக்கொண்டு எதிர்பாராமல் வரக்கூடிய துன்பங்கள், அவதூறுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். நாம் கேட்காமலே ஒருவர் வலியவந்து உதவுகிறார் என்றால் பூர்வஜென்மத்தில் நமக்கு கடமைப்பட்டவர் என்றும், வலியவந்து நம்மை வம்புக்கு இழுக்கிறார் என்றால் நாம் சென்ற ஜென்மத்தில் அவரை துன்புறுத்தியிருக்கிறோம் என்றும் பொருள்.
நம்முடைய ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் பாவத்தை லக்னமாகவோ, ராசியாகவோ கொண்டவர்கள், ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் பாவாதிபதியின் தசையை நடப்பாகக் கொண்டவர்கள்மூலம் உதவி கிடைக்கும். 9-க்குடையவன் லக்ன கேந்திர, திரிகோணத்தில் இருத்தல், 9-க்குடையவன் 10-க்குடையவனுடன் சம்பந்தம் பெறும்போதும், 9-க்குடையவன் 3, 11-ஆம் பாவகங்களில் இருந்தால் உதவிகள் தேடிவரும். 9-க்குடையவன் 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெற்றால் உதவிகள் கிடைக்காது.
9-ல் நின்ற கிரகத்தின் சாரத்தில் ஒரு கிரகம் நின்று தசை நடத்தும்போதும், 9-க்குடையவன் சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தும்போதும், 9-க்குடையவன் தசை நடத்தும்போதும், 9-ஆம் பாவகம் தொடர்பான கிரகங்கள் கோட்சாரத்தில் லக்னாதிபதியுடன் தொடர்பு பெறும் காலத்திலும், 9, 10-ஆம் பாவக கிரகங்கள் கோட்சாரத்தில் 10-ஆம் அதிபதியுடன் இணையும் காலத்திலும் உதவிகள் தேடிவரும்.
இங்கே உதவிகள் என்று குறிப்பிடுவது, கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறமுடியாமை, சொத்து விற்கமுடியாமை, மருத்துவ உதவி கிடைக்காமை, உயர்கல்வி கற்க முடியாமை, தொழிலை விருத்திசெய்ய முடியாமை போன்ற வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும், செயல்களையும் குறிக்கும்.
இவற்றிற்கு மற்றொரு வகையாகவும் பலன்கள் பார்க்கப்படுகின்றன. அதாவது விதி, மதி, கதி என்று கூறும் மூன்றில் ஜோதிடரீதியாக லக்னம் என்பது விதியாக, நமது தலையெழுத்தாக அமைகிறது. மதி என்பது நமது புத்தியாக 5-ஆம் இடமாக உள்ளது. கதி என்பது அவற்றால் நாம் அடையும் பலனாக 9-ஆம் இடமாக உள்ளது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது விதி என்னும் லக்னத்தை மதி என்னும் 5-ஆம் பாவத்தால் வெல்லமுடியும். இந்தப் பிறவிக்கான புண்ணிய பலத்தை இந்தப் பிறவியிலேயே அனுபவிக்கவேண்டும் என்பதுதானே மனிதராய்ப் பிறந்து, இன்னல்கள் தீர வழிதெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் அனைவரின் ஆதங்கமும்! 9-ஆம் பாவகம் வலுப்பெற்று அதற்குரிய தசைகளில் பாக்கியங்களை அனுபவிக்கவேண்டிய வயதில் அனுபவிப்பது முதல்தரம். 9-ஆம் பாவகம் வலுப்பெற்று அதற்குரிய பாக்கியப் பலன்கள் கிடைக்கப்பெறக்கூடிய தசைகளில் பாக்கியங்களை, அனுபவிக்கக்கூடிய வயதில் வராமல் வயதான காலத்தில் வருவது 2-ஆவது தரம்.
9-ஆம் பாவகம் வலுப்பெற்று பாக்கியங்களை அனுபவிக்கக்கூடிய தசையே வராமலிருப்பது மிகக்கொடூரமான 3-ஆவது தரம்.
எது எப்படி இருந்தாலும் பாக்கியப் பலன்களை அனுபவிக்க வழியென்ன என்பதே அனைவரின் கேள்வி. ஏனென்றால் விமோசனம் கிடைக்க வழிசொல்வது ஜோதிடரின் கடமையல்வா?
1. முறையான பித்ருக்கள் பூஜை.
2. குல, இஷ்ட, காவல், உபாசனை தெய்வ வழிபாடு 100 சதவிகிதம் பலன் தரும்.
3. குலதெய்வம் கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறுபவர்கள் உபாசனை தெய்வ வழிபாடு செய்வது பெரும் பலன் தரும்.
மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது ஜாதகரீதியான உபாசனை மூர்த்தியே. எனவே உங்களின் உபாசனை தெய்வ வழிபாட்டை முறைப்படுத்தி புண்ணியப் பலன்கள் கிடைக்க முயற்சி செய்யுங்கள். இந்த ஜென்மப் பலன்களை இப்போதே பெற்று ஆனந்தம் அடையுங்கள்.
4. உங்களின் ஜனனகால ஜாதக ராகு, குருவுக்குரிய வழிபாடுசெய்தால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கப்பெறும்.
செல்: 98652 20406