ஜாதகமென்பது ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் வானில் நிலவும் கிரகங்களின் சஞ்சாரத்தைக் காட்டும் ஒரு குறிப்பு. ஒரு மனிதன் தன் வாழ்வில் அனைத்துவிதமான சுபப் பலன்களையும் அடைய, சுய ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில யோகங்கள் இருக்கவேண்டும்.

இதனைதான் நமது முன்னோர்கள், "மலையளவு உழைத்தாலும் கடுகளவு யோகமாவாது இருக்கவேண்டும்' என்றார்கள்.

yogajathagam

ஜோதிட சாஸ்திரத்தில் யோகமென் றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் சம்பந்தமானது சேர்க்கை, பார்வை என எந்தவகையில் இருந்தாலும் யோகமென்று கூறப்படும். இந்த யோகத்தை சுப யோகம், அசுப யோகமென வகைப்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சுப கிரகங்களின் சேர்க்கை இருந்தால் அது சுப யோக மாகும். ஒன்றுக்கு மேற்பட்ட அசுப கிரகங்களின் சம்பந்தமிருந்தால் அசுப யோகமாகும்.

சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களைத் தந்துகொண்டிருக்கின்றன.

ஓரளவு ஜோதிடஞானம் உள்ளவர்கள் ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஜாதகத் திலுள்ள சிறப்பான யோகம்பற்றிக் கூறுவார்கள். ஆனால் ஜாதகர் அனுபவிக் கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டிருக் கும். சில ஜாதகங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது. ஆனால் அனுபவிக்கும் பலன் கள் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணமென சற்று உள்ளாழ்ந்து உற்றுநோக்கினால் இந்தப் புதிருக்கு விடை கிடைக்கும்.

ஒரு தனிமனித ஜாதகத்திலுள்ள யோகத்தை எவ்வாறு தீர்மானிப்பது என்பதன் ஆய்வே இந்தக் கட்டுரை. பொதுவாக ஒரு ஜாதகம் தன் பலத்தை மூன்று நிலைகளில் வெளிப் படுத்துகிறது.

1. கிரகங்களின் பலம்.

2. பாவக பலம்.

3. தசா புக்தியும் கோட்சாரமும்.

கிரகங்களின் பலம்

ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் நின்ற- பார்த்த- சேர்ந்த கிரகங்களின் அடிப்படையில் ஜாதகருக்குக் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளே கிரக பலமாகும்.

கிரகங்களை சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம். அதன்படி குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவை சுப கிரகங்களாகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியவை இயற்கை அசுப கிரகங்களாகும்.

சுப கிரகங்கள் சுபப் பலனும் அசுப கிரகங்கள் அசுபப் பலனுமே தருமென்ற தவறான கருத்து பலரிடம் நிலவிவருகிறது. ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கேற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடும்.

உதாரணத்திற்கு, இயற்கை சுபரான குரு, மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதி. இயற்கையில் அசுப கிரகமான செவ்வாய், கடக லக்னத்திற்கு ஏக யோகாதிபதியாகி சுபத் தன்மையைத் தருவார். லக்ன அடிப்படையில் சில கிரகங்கள் மாரகர்களாக மாறுகின்றனர். மாரகர்கள் லக்னரீதியாக தீமை செய்பவர்கள்.

அவர்களே ஜாதகரின் மரணத்தை, ஜாதக அடிப்படையில் சனிபகவானுடன் இணைந்து தீர்மானிப்பவர்கள். சில மாரகர்கள் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொருத்து, மரணத்தைத் தராமல், மரணத்திற்கு இணையான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

கிரகங்கள் தமது ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ, உச்ச வீட்டிலோ நின்று பலம்பெற்றிருந்தாலும், பகை கிரகங்களுடன் இணைந்து நின்றாலும், லக்னரீதியான அசுப கிரகங்களின் சாரம் பெற்றாலும், அந்த கிரகம் நின்ற வீட்டுக்கு முன், பின்னாக பகை கிரகங்கள் நின்றாலும் அந்த கிரகம் தனது பலத்தை இழந்துவிடும். இது பொதுவான அடிப்படை விதிகள்.

ஆனால் கிரகங்களின் பலம்- பலவீனத்தை ஆட்சி, உச்சம், நட்பு, பாதகம், மாரகம் என்றரீதியில் கணக்கிடாமல், ஷட்பலத்தின்மூலம் கணக்கிட்டால் மிகத் துல்லியாக அறியமுடியும்.

கிரகங்களின் வலிமையை ஆறு விதங்களில் கணக்கிட்டு, அவற்றில் அதிக வலிமையான கிரகம் எது, மிகவும் வலிமை குன்றிய கிரகம் எது என்பதைக் கண்டறிவது ஷட்பலமாகும். "ஷட்' என்றால் ஆறு; "பலம்' என்றால் வலிமை; "ஷட்பலம்' என்றால் ஆறுவித வலிமை எனப் பொருள்படும்.

ஷட்பல நிர்ணயம் ராகு, கேதுக்களுக்குக் கிடையாது. மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே உண்டு.

ஸ்தான பலம், திருஷ்டி பலம், திக் பலம், ஜேஷ்டா பலம், கால பலம், நைசர்க்ய பலம் ஆகியவை ஷட்பலம் எனப்படுகின்றன.

ஏழு கிரகங்களுக்கு ஷட்பலம் கணக் கிட்டு, கிரகங்களை அவற்றின் வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும்.

அதில் அதிக வலிமையுடைய கிரகத்திற்கு முதலிடம் வழங்கப்படும். மிகவும் வலுக் குன்றிய கிரகத்திற்கு கடைசி இடமான ஏழாமிடம் வழங்கப்படும். ஷட்பலத்தில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த கிரகங்கள் ஜாதகத்தில் அதிக வலிமையுடைய கிரகங்களாகும். மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களைப் பிடித்த கிரகங்கள் சராசரி வலிமையுடைய கிரகங்களாகும். ஆறு, ஏழாமிடங்களைப் பிடித்த கிரகங்கள் மிகவும் வலுக்குன்றிய கிரகங்களாகும்.

ஷட்பல கணிதம் செய்வதற்கு அதிக கவனமும், அதிக கால அவகாசமும் தேவைப்படும். தற்போது ஜோதிட சாஃப்ட்வேர்மூலம் எளிமையாகக் கணக்கிடப்படுகிறது. ஆக, ஒரு ஜாதகத்திற் குப் பலன்சொல்ல கிரகபலம் மிக முக்கியம்.

பாவக பலம்

ராசிக் கட்டத்தில் பன்னிரு பாவகங்களை திரிகோணம், கேந்திரம், பணபர ஸ்தானம், மறைவு ஸ்தானமென நான்காக வகைப் படுத்தலாம்.

திரிகோண ஸ்தானம்

ஒரு ஜாதகத்திற்குப் பலனுரைக்கும்முன்பு திரிகோண வலிமையைத் தீர்மானிக்க வேண்டும். திரிகோணம் என்பது ஒரு ஆத்மாவின் பிறவிப் பயனைத் தீர்மானிக்கக்கூடியது. ஒரு ஜாதகருக்கு நிகழக்கூடிய அனைத்து சுக- துக்கங்களும் 1, 5, 9-ஆம் பாவகங்களின் அடிப்படையில் அமைவதால், திரிகோணம் எனும் லட்சுமி ஸ்தானம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பூமியில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கர்மவினையின் அடிப் படையில்தான் சுக- துக்கங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இந்த சுக- துக்கங்கள் அனைத் தும் லக்னம் என்ற மையப்புள்ளியிலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன. விதிப் பயனென் பதால் லக்னமே முதல் திரிகோணம்.

லக்னப் புள்ளியிலிருந்து சுப- அசுபப் பலன்களை நிர்ணயம் செய்வதற்கு, பூர்வஜென்மத்தில் ஜாதகர் செய்த பாவ- புண்ணியங்களும், முன்னோர்கள் செய்த பாவ- புண்ணியங்களும் காரணமாக அமைகின்றன. இதில் பூர்வஜென்மத்தில் செய்த பாவ- புண்ணியங்களை ஐந்தாம் பாவகம் தீர்மானிக்கிறது என்பதால், அது திரிகோணத்தின் இரண்டாவது ஸ்தானமாகும். மேலும் கர்மவினைகளின் அடிப்படையில் ஜாதகரின் சந்ததி விருத்தியைத் தீர்மானிப்ப தால் மிக முக்கியமான ஸ்தானமாக ஐந்தாம் பாவகம் திகழ்கிறது.

ஐந்திற்கு ஐந்தாமிடமான ஒன்பதாம் பாவகம் தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களையும், அவர்கள் செய்த கர்மவினையைப் பற்றியும் கூறுமிடம் என்பதால் அது மூன்றாவது திரிகோணமாகும்.

திரிகோணாதிபதிகள் ஜாதகருக்குப் பரிபூரண சுபர்கள். இவர்கள் ஜாதகருக்கு எந்தத் தீமையும் செய்யமாட்டார்கள். திரிகோணாதிபதிகளையும் திரிகோணத்தில் அமர்ந்த கிரகங்களின் நிலையையும் பொருத்து ஜாதகரின் வாழ்க்கை அமையும். திரிகோணத்திற்கு லக்னரீதியான சுப கிரகங்கள் சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்குப் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் வரமாக செயல்படும். திரிகோணத்திற்கு லக்னரீதியான அசுப கிரக சம்பந்தம் மற்றும் ராகு- கேது சம்பந்தம் இருந்தால் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானம் சுபப் பலன் தராது. திரிகோணாதிபதிகள் வலிமை பெற்ற ஜாதகம் புண்ணிய ஜாதகமாகவும், வலிமையிழந்த ஜாதகம் பாவ ஜாதகமாகவும் கருதப்படும்.

தொடர்ச்சி

அடுத்த இதழில்...

செல்: 98652 20406