பொதுவாக புகழ், செல்வத்துடன் இருக்கும் நபர்களைப் பார்த்து, "எனக்கும் அவருக்கும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசிதான். ஆனால் எனக்கு மட்டும் அவை கிடைக்கவில்லை' எனவும், "எத்தனை குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி வந்தாலும் எனக்கு மட்டும் கஷ்டம் தீரவில்லை' என்றும், "ஜோதிடர்கள் சொன்ன எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் நிவர்த்தி ஆகவில்லை' எனவும் சொல்பவர்கள் அதிகம். இந்த வேறுபாடான பலனுக்குக் காரணம் அவரவர் சுயஜாதகத்தில் நடக்கும் தசையே. "திருடப்போனாலும் திசை பார்த்துப் போகணும்' என்பதன் பொருள், எல்லாராலும் திருடச்சென்று சிக்காமல் பொருள் கொண்டு வரமுடியாது. அவரவருக்கு நடக்கும் தசையே வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/githa.jpg)
"ஒன்றுக்கும் உதவாதவன் திடீர்னு இந்த மூணு நாலு வருஷத்துல கோடீஸ்வரனாகிட்டான். பிரபலமாகிட்டான். குடிகாரனா இருந்தவன் நல்லவனாகிட்டான். எதிரி மாதிரி அடிச்சுக்கிட்டவங்க- விவாகரத்து வாங்குன கணவன்- மனைவி திடீர்னு ஒண்ணா சேர்ந்துட்டாங்க. என்ன நடந்ததுன்னு தெரியல' என பல ஆச்சரியங்களையும், அதிர்ஷ்டங்களையும் தருவது ஒவ்வொருவருக்கும் நடக்கும் தசையின் மாற்றங்களே. "ஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே- நேற்று நல்லா இருந்த மனுஷன் இன்னைக்கு விபத்துல மாட்டிக்கிட்டாரே- நல்லா தொழில் செஞ்சாங்க; நல்லாதான் வருமானம் வந்தது. திடீரென்று கடனாகி, வீட்டை விற்று, ஊர் மாறிப்போயிட்டாரு' என அதிர்ச்சிகளைத் தருவதும் ஜாதகரின் தசைப்பலனே.
பிறந்த நட்சத்திரத்திற்கான அதிபதியே ஜாதகரின் பிறந்த நேர முதல் தசையாகும். ஒவ்வொரு தசையும் குறிப்பிட்ட வருடங்கள் கொண்டது.
உதாரணமாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசை சூரிய தசை; அதன் வருடம் ஆறு. பிறந்த ஜாதக அடிப்பைடயில் சூரிய தசை இருப்பு வருடம் முடிந்தபின் சந்திர தசை பத்து வருடங்கள் என, இப்படி அட்டவணையில் உள்ளபடி தொடர்ந்து நடைபெறும். மனிதனின் முழு ஆயுள் 120 வருடங்கள். அந்த 120 வருடத்தையே ஒன்பது கிரகங்களாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர்.
ஜாதகத்தில் ஒவ்வொரு தசை மாறும்போதும் வாழ்க்கையில் ஒவ்வொருவித மாற்றங்கள் ஏற்படும்.
தசைப்பலன்
பொதுவாக லக்னத்திற்கு கேந்திர (1, 4, 7, 10), திரிகோண (1, 5, 9) ஸ்தானத்திற்குரிய தசை நடந்தால் அதிக நன்மையைத் தரும். லக்னாதிபதி, ராசியாதிபதி தசை, லக்னம், ராசி அமர்ந்திருக்கும் நட்சத்திர அதிபதி தசை வரும்போது கிரகம் வலுப்பெற்றிருந்தால் மிகச்சாதாரண நிலையில் இருப்பவரையும் கோடீஸ்வரனாகவும், புகழ் பெற்றவராகவும் மாற்றிவிடும். மேலும் 2, 7-க்குடையவன் தசை, 4, 9-க்குடையவன் தசை என இரண்டு சுப ஸ்தான தசை, இரண்டு கேந்திர, திரிகோண தசைகள் அதியோகத்தைத் தரும். சுபகிரகப் பார்வை பெறும் தசை, தன, லாபஸ்தானாதிபதி தசைகள் அதிக வருமானத்தையும், நான்காம் அதிபதி தசை வீடு, வாகன யோகம் சொகுசான, சந்தோஷமான வாழ்க்கையையும் தரும்.
பாதக தசை
யோகத்துடன் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்துவரும்போது 3, 6, 8, 12-க்குடையவன் தசை வருமானால் கஷ்டங்கள் தொடங்கி தசை முழுவதும் கெடுபலனைத் தரும். இதில் சந்திர தசை நடக்கும் காலத்தில் அர்த்தாஷ்டமச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி, கர்மச்சனி, ஏழரைச்சனி நடந்தால் எண்ணிப்பாராத துன்பங்களும், குடும்பத்தில் உறவினர் இழப்புகளையும்கூட தந்துவிடும். 6, 8-க்குடைய தசைகளில் கடன், நோய், எதிர்ப்பு வலுப்பெறுதல், தீய பழக்கவழக்கங்கள், சிறைவாசம்கூட ஏற்படுவதுண்டு. 3, 6-க்குடையவன் தசை தொடங்கினால் உடன்பிறந்தவர்கள் எதிரியாக மாறி, உடன் இருப்பவர்களால் வஞ்சிக்கப்பட்டு நாடோடியாகத் திரிவர். 3-ஆவது நீச தசை, 4-ஆவது சனி தசை, 5-ஆவது செவ்வாய் தசை, 6-ஆவது குரு தசை வரும்போதும் ஜாதகர் எண்ணற்ற துன்பம் அடைவர். மேஷ, ரிஷப லக்னத்தினருக்கு சனி தசை; மிதுனம், கன்னிக்கு குரு தசை; கடகம், கும்பத்திற்கு சுக்கிர தசை; சிம்மம், மகரத்திற்குச் செவ்வாய் தசை, தனுசு, மீனத்திற்கு புதன் தசை; துலா லக்னத்திற்கு சூரிய தசை, விருச்சிக லக்னத்திற்கு சந்திர தசை பாதகாதிபதி தசை என்பதாலும், வலுப்பெற்று டந்தால் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு இழந்து வறுமை கொண்டவனாக மாற்றிவிடும். எவ்வளவு பெரிய அறிவாளியையும் முட்டாள் ஆக்கிவிடும்.
கலப்பு தசை
3, 9-க்குரிய தசை, 6, 9-க்குடையவன் தசை- அதாவது மறைவு ஸ்தானாதிபதி (3, 6, 8, 12) மற்றும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-க்குடைய தசை இணைந்து நடைபெற்றால் பாதி நன்மை, பாதி தீமையாகப் பலன் தரும். உயிர்ச்சேதம், பொருட்சேதம், மாரகத்துக்கு ஒப்பான கண்டம், சிறைவாசம், தீய பழக்கவழக்கம் மற்றும் பொருளாதார வரவு, பதவி உயர்வு, புகழ், வீடு, வாகன யோகம் என இரண்டும் கொடுக்கும். இழப்பால் லாபம், லாபத்தால் இழப்பு என தசைப் பலன் தரும். சிலருக்கு யோக தசைக் காலத்தில் வரும் ஏழரைச்சனி கிடைக்க வேண்டிய நன்மையான பலனைக் குறைத்துவிடும்.
விபரீத யோக தசை
பாதகாதிபதி நீசம், வக்ரம், கிரகப் பார்வையால் பலமிழத்தல், கிரக இணைவு, அஸ்தங்கம் என 3, 6, 8, 12-க்குரியவர்கள் பாதிக்கப்பட்டு தசை நடந்தால், தீய பலன்கள் மாறி விபரீத ராஜயோகத்தால் தசை நற்பலன்களை க்கொடுக்கும். "அவ்வளவுதான்; வாழ்க்கை முடிந்துவிடும்' என நினைக்கும் நேரத்தில் திடீர் அதிர்ஷ்டத்தால் பணம், புகழ் சேரும் யோகத்தைத் தந்துவிடும். 3-ஆம் அதிபதி 6-ஆம் இடத்தில், 8-ஆம் அதிபதி 12-ஆம் இடத்தில், 12-ஆம் அதிபர் 3-ல், 6-ஆம் அதிபர் 8-ஆம் இடத்தில் என மாறி நின்றாலும், செவ்வாய், சனி, சூரியன் போன்ற பாவகிரகங்கள் மறைவிட அதிபதியாக இருந்து மறைவிடத்தில் நின்று தசை நடந்தாலும் நினைத்துப்பாராத யோகம், கோடீஸ்வர வாழ்க்கை தந்துவிடும்.
தசைப்பலன் கணிக்கும் முறை
நடக்கின்ற தசை, அடுத்து நடக்கப்போகும் தசைப் பலனை மேற்கண்ட பொதுமுறைகளில் கணக்கிட்டாலும், தசையின் கிரகத்தின் நிலையறிந்தே முழுப்பலன் அறியமுடியும். உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசை கேது தசையாகதான் இருக்கும். அதற்காக கேது தசைக்குரிய பொதுப்பலன்கள், கேது தசை நடக்கும் எல்லாருக்கும் ஒரேமாதிரியாக இருக்காது. ஏனென்றால் ஒருவரின் பிறந்த நேரத்தைப் பொருத்து லக்னம் மாறுபடும். லக்னத்திற்கு எந்த ராசியில் கேது இருக்கிறது, லக்னத்திற்கு எத்தனையாவது இடத்தில் கேது இருக்கிறது, சுப, அசுப கிரகச் சேர்க்கை இருக்கிறதா, எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது, சுப, அசுப கிரகப் பார்வை உள்ளதா, அம்சத்தில் பலம் பெற்றுள்ளதா, பலமிழந்துவிட்டதா, பலம் பெறுவது கிரகத்திற்கு நன்மையா, தீமையா, எத்தனையாவது தசை, லக்னத்திற்கு நட்பா, பகையா, சுபகிரகமா, நடப்பு கோட்சாரத்தில் குரு பலம், சனி பலம் என்ன? பூர்வ புண்ணிய பலம் இருக்கிறதா, சுயஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் ஆட்சி பெற்று வலுப்பெற்றுள்ளதா, நீசம் பெற்று வலுவிழந்துள்ளதா, லக்னத்திற்கு வலுப்பெறுவது நன்மையா தீமையா போன்ற ஜாதகத்தின் நினையைப் பொருத்தே அந்த தசை எத்தனை சதவிகித நன்மை தரும் என கணக்கிடமுடியும். பொதுவாக தசையின் முதல் புக்தியான சுயபுக்தியில் நன்மை நடந்தால் தசையில் நன்மை குறைந்தே நடக்கும் என்றும், தசை பாதிக்குமேல் நன்மை தரும் என்றும், தசையின் வருடங்களை 3, 4-ஆகப் பிரித்தும் பலன் கூறுவது தோராயமாகவும், பொதுப்படையாகவுமே அமையும். தசையின் முழுப்பலன் அறிய புக்திகளையும் கணக்கிடவேண்டும்.
புக்திப்பலன்
புக்தி என்பது தசையை ஒன்பது பாகங்களாகப் பிரிப்பது. நடக்கும் தசையின் சுயபுக்தி முடிந்தவுடன் வரும் புக்தி தசைக்குரிய கிரகம் இருக்கும் இடத்திற்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறது, லக்னத்திற்கு, தசை கிரகத்திற்கு நட்பா, பகையா, சுபகிரகப் பார்வை உண்டா என புக்தி கிரக நிலையைப் பொருத்தே புக்தியின் பலன் அறியமுடியும்.
அந்தரம் என்பது புக்தியை ஒன்பதாகப் பிரிப்பது. சூட்சுமம் என்பது. அந்தரத்தை ஒன்பதாகப் பிரிப்பது. பிராணன் என்பது சூட்சுமத்தை ஒன்பதாகப் பிரிப்பது. தேகம் என்பது பிராணனை ஒன்பதாகப் பிரிப்பது, ஜாதகருக்கு இவ்வாறாகப் பிரித்து நடப்பு நிலவரம், வரப்போகும் நல்ல நேரத்தை மிகத்துல்லியமாகக் கணக்கிடலாம். நடப்பு கோட்சாரத்துடன் இணைத்து தினந்தோறும் ஒருவருக்கு நடக்கும் பலனைச் சொல்லிவிட முடியும். ஆனால் பிறந்த நேரத்தில் நிமிடங்கள் மாறினாலும் சொல்லும் பலன் முழுவதாய் மாறிவிடும். பிறந்த நேரம் துல்லியமானால் முழுப்பலன் சாத்தியமே.
பரிகாரங்கள்
நடக்கும் தசைக்குரிய தெய்வங்கள், நின்ற நட்சத்திராதிபதி தெய்வங்கள் மற்றும் புக்தி கிரகத்தின் தெய்வங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப வழிபாடு செய்வது அவசியம். பசித்தவருக்கு உணவு தருவது, உடையற்றவருக்கு உடை, ஊனமுற்றோருக்கு உதவுதல், ஏழைக்கு கல்வி தருவது போன்றவை தீமைகளைக் குறைத்து நன்மையை அதிகப்படுத்தும். முடிந்த அளவு நேர்மையுடன்- தன்னம்பிக்கையுடன் உழைத்தால் யோகம் கிடைக்கும். திசைக்குரிய தெய்வத்திற்கு விரதமிருந்து வழிபட ஆரோக்கியமான வாழ்வு பெறலாம்.
செல்: 96003 53748
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/githa-n.jpg)