"கோ' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு கிரகம் அல்லது கோள் என்று பொருள். "சாரம்' என்ற சொல்லுக்கு அசைதல் என்று பொருள். கிரகங்களின் அசைவினால் ஒரு ராசிக்கு ஏற்படும் நன்மை- தீமை சார்ந்த உண்மைகளை எடுத்துக்கூறுவதே கோட்சாரப் பலனாகும்.
இவ்வுலகின் மக்கள்தொகை உத்தேசமாக 600 கோடி எனில், 12 ராசிகளில் தோராயமாக ஒரு ராசிக்கு 50 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே பொதுவாகக் கூறப்படும் கோட்சாரப் பலன்கள்- அது நல்லதோ, கெட்டதோ அப்படியே நடந்துவிடுகிறதா என்றால், "இல்லை; இல்லவே இல்லை' என்றுதான் பதிவு வரும். இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அவ்வாறாயின் தினப்பலன், வாரப்பலன், மாதப்பலன், சனிப்பெயர்ச்சிப்பலன், குருப்பெயர்ச் சிப்பலன், ராகு- கேது பெயர்ச்சிப்பலன் போன்றவை எதற்காக எழுதப்படுகின்றன? மக்கள் ஆவலுடன் தெரிந்துகொள்ள விரும்புவது ஏன் என்பது போன்ற சந்தேகம் எழுவதில் ஆச்சரியமில்லை.
ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு ராஜயோகம் இருப்பதாகக் கொள்வோம். அந்த யோகம் எப்பொழுது வரும் என்று கேட்டால், இப்போது ராஜாக்களே, மன்னர் மானியத்தில் ஜீவனம் நடத்துகின்றனர்.
எனவே, முதல் மந்திரி யோகம், பண்ணையார் யோகம், நிலச்சுவான்தார் யோகம், எம்.எல்.ஏ., யோகம் என காலத்திற்கேற்றவாறே பதில்கூற இயலும். காலத்தின் உயர்வு- தாழ்வை காலதேவன் எப்போது தருவார் என அறிய "கோட்சாரம்' மிகமிக அவசியம்.
✶ ஜாதகரீதியாக நல்ல பலன்கள் நடைபெறும் தசாபுக்திகள் இருந்து, கோட்சாரத்திலும் கிரகங்கள் அனுகூலமாக இருந்தால் மட்டுமே அந்த யோகத்தால் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்.
✶ கோட்சாரப் பலன் என்பது சந்திரனை மையமாகக் கொண்டு, கிரகங்கள் சந்திரா லக்னத்திலிலிருந்து 12 பாவங்களிலும் சஞ்சரிக்கும் பலன்களைக் கூறுவதாகும்.
✶ ஜாதகரீதியாக கெட்டபலன் தரக்கூடிய தசாபுக்திகள் நடைபெற்றுக் கொண்டிருப்பினும், கோட்சார நிலை அனுகூலமானதாக இருந்தால் நடைபெற வேண்டிய தீய பலன்கள் நடைபெறாமல் போய்விடும்.
✶ ஜாதகரீதியாக நல்ல பலன்கள் தரக்கூடிய தசாபுக்திகள் நடைபெற்றுக் கொண்டிருப்பினும், கோட்சார நிலை அனுகூலமற்ற நிலையில் இருப்பின் நடைபெறவேண்டிய நற்பலன் நடைபெறாமல் போய்விடும்.
தசைக்கும் புக்திக்கும் உள்ள தொடர்பு
ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தசை நன்மை செய்யுமா- தீமை தருமா என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பிறகு அந்த தசையில் வரும் புக்திகள் ஒவ்வொன்றும் வரிசைக்கிரமமாக நன்மை செய்யுமா- தீமை செய்யுமா என்பதை ஆராய வேண்டும்.
✶ தசாநாதனும் புத்திநாதனும் குணரீதியாக நட்பு கிரகங்களாக இருந்தால், புக்திநாதன் தசாநாதனை அனுசரித்தே பலன்களைத் தருவார்.
அதாவது தசாநாதன் அந்த ஜாதகருக்கு நல்லவரானால் புக்திநாதன் நல்ல பலனும், கெட்டவரானால் தீய பலனும் தருவார்.
✶ தசாநாதனும் புக்திநாதனும் குணரீதியாக ஒருவருக்கொருவர் விரோதிகளானால், தசாநாதன் நன்மை தருபவரானால் புக்திநாதன் கெடுதல் செய்வார். தசாநாதன் கெட்டவராக இருந்தால் புக்திநாதன் சமன் செய்வதுண்டு.
✶ தசாநாதனும் புக்திநாதனும் ஒருவருக்கொருவர் சமமாக இருந்தால் சுமாரான பலனைத்தான் எதிர்பார்க்க இயலும். இதை அறிவதற்கு கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பா பகையா, சமமா என அறிதல் வேண்டும்.
✶ கோட்சாரப் பலன் பற்றிய நுட்பங்களை ஆராயும்போது, தங்களுடைய ஜாதகரீதியாக தற்போது நடைபெற்றுவரும் தசாபுக்திக் காலங்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இதன் அடிப்படையில்தான் தற்போது வாரப்பலன், மாதப்பலன்கள், பெயர்ச்சிப்பலன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
✶ ஒவ்வொரு ராசியிலும் அந்த கிரகங்கள் தங்கியிருக்கும் காலத்தில் ஏற்படும் பலன்களை மட்டுமே கோட்சாரப் பலன்கள் கூறுகின்றன.
✶ பத்திரிகைகளில் எழுதப்படும் ராசிபலன்கள் யாவும் கோட்சார முறையில் எழுதப்பட்டு வருகின்றன. கோட்சாரம் என்பது தற்காலப் பலனைத் தெரிந்துகொள்ளக் கையாளும் ஜோதிடத்தின் பகுதி.
✶ ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வது இன்னுமொரு பகுதி. ஜாதக அமைப்பில் கிரகங்கள் எவ்வாறு நின்றிருக்கின்றனவோ அவற்றை அனுசரித்தும், கிரக தசாபுக்திகளை அனுசரித்தும் அவர்கள் வாழ்நாளில் என்ன நன்மை எப்போது ஏற்படுமென்று சொல்லும் வழி. சிலருக்கு இது தனி வழியாகத் தென்படும்.
✶ கோட்சாரம் அப்படியல்ல; ஜாதகரீதியாக நற்பலன்கள் நடவாத காலமெனினும் கோட்சாரத்தில் நற்பலன் தென்பட்டால் குதூகலமாக இருக்கலாம். காலையில் தொலைக்காட்சியில் சொல்வதுபோல், "மேஷ ராசியினரே, இன்று பணம் வரும்; கடன் தொல்லை அகலும்' என்பது நிகழும்.
✶ ஜாதகத்தில் நற்பலன் இல்லையெனும்போது, கோட்சாரத்திலும் நல்லபலன்கள் இல்லையென்றால் பத்திரிகை, தொலைக்காட்சியில் சொல்லப்படும் கெடுபலன்கள் நம்மை நாடிவரும்.
✶ ஆனால் கிரகங்களின் காரகப்பலன்களே போதும் எனவும் ஒரு குறிப்பு உணர்த்துகிறது.
✶ கோட்சாரப் பலன்கள் எழுதும்போதும் கிரகங்களின் பார்வைப் பலன்களை நாம் புறம்தள்ளக்கூடாது.
சந்திராஷ்டமம்
ஜென்ம ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை சந்திராஷ்டமம் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பலனைக் கொடுத்துவரும் சந்திரன், எட்டாமிடமான கொடிய ராசியில் சஞ்சரிக்கும்போது, ஏதாவது கெடுபலன்கள் நிகழ வாய்ப்புள்ளது என்றெண்ணி மனம் பேதலிலிக்கும். சந்திராஷ்டமம் சுமார் இரண்டேகால் நாள்வரை நீடிக்கும். தோராயமாக இரண்டரை நாள் என்பர்.
வளர்பிறைச் சந்திரனின் எட்டாமிட சஞ்சாரம் அதிக கெடுபலன்களை வழங்கக்கூடும். தேய்பிறைச் சந்திரன் நற்பலன்களை வழங்கக்கூடும். எனவே எல்லா சந்திராஷ்டம நாட்களும் கொடியவையல்ல என்பதை அனுபவ ரீதியாக அறிந்துகொள்ளலாம். எனினும் இதைத் தெரிந்துகொண்டு, அந்த நாட்களில் எந்த பிரச்சினைகளிலும் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.
ஒருசிலருக்கு பயணம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கும். பயணத்தில் நன்மையும் ஏற்படலாம்; கெட்டதும் ஏற்படலாம். கெடுதல்கள் நேரா வண்ணம் எப்படி பயணங்களை எதிர்கொள்ளலாம் என்பதற்கு சந்திராஷ்டம எச்சரிக்கை தேவைப்படுகிறது.
நாம் அறிவாளிகள்தாம்; கெட்டிக்காரர்கள்தாம்; படித்தவர்கள்தாம். இருப்பினும் பிறர் நல்லது சொல்வதைக் கேட்பதில் என்ன தவறு என எண்ணிச்செயல்படல் நன்று. புதுத்தொடக்கம், புது முயற்சிகள், புது முதலீடுகள், திருமணம், புதிதாகக் கல்லூரிக்குச் செல்லுதல், சேர்க்கைகள் போன்றவற்றுக்கு சந்திராஷ்டம எச்சரிக்கையைக் கடைப்பிடித்தல் நன்று. ராகுகாலத்தில் ஓடும் வாகனங்கள் எல்லாமே விபத்தை சந்திப்பதில்லை.
எட்டாமிட சந்திரனுக்கு என்ன பரிகாரம்?
✶ சிவனை வணங்கி முயற்சிகளைத் தொடங்கலாம். சிறிது பாலை உட்கொண்டு, சிறிதளவு பச்சரிசையை வாயில் போட்டுக்கொண்டு போவது நன்று.
✶ வெண்முத்து இருந்தால் அதனை பர்சில் வைத்துக்கொள்ளல் நலம்.
✶ வயதில் மூத்தோரிடம் ஆசிர்வாதம் பெறுதல் நல்லது.
✶ நகை வியாபாரிகளிடம் நகை செய்யக்கூறல், ஏற்பாடு செய்தல் போன்றவற்றை நிச்சயமாகத் தவிர்த்தல் நன்று.
✶ இயற்கைக்குப் புறம்பாக, நேர்மையற்ற தொடர்புகளை இந்த சந்திராஷ்டமத்தில் செய்துகொண்டால் குடும்பம் பாதிக்கும். ஆண் சந்ததிக்கு கேடு.
✶ சொந்த ஜாதகத்தில் 5-ல் சந்திரன் இருந்தால் கல்விக்கான பணத்தை செலுத்துதல் கூடாது.
✶ சொந்த ஜாதகத்தில் 8-ல் சந்திரன் இருந்தால் கல்வி மற்றும் எந்த காரணத்திற்கும் சந்திராஷ்டமத்தில் புது முயற்சியில் ஈடுபட்டால் வெற்றிபெறாது.
எனவே கோட்சாரப் பலனுடன் சந்திராஷ்டமத்தையும் இணைத்துக்கொண்டு மதிநுட்பத்துடன் நடந்து கொள்வது நல்லது. சந்திராஷ்டம கால அளவில், ராகு காலத்தில் பச்சைத் தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கவும்.
செல்: 93801 73464