சென்ற இதழ் தொடர்ச்சி...
காதல் பாசம்
காதல் எல்லாருக்கும் வருவதில்லை. சிலருக்கு வந்தாலும் உண்மையான பாசம் இருப்பதில்லை; இனக்கவர்ச்சியாகவே இருக்கிறது. பாசமாக இருப்பவர்களும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருப்பதில்லை. காதல் அன்பால் உருவாகி, கடைசிவரை அன்பு குறையாமல் இருக்க வேண்டும். திருமணம் செய்துகொண்டு வாழ்தல் மட்டும் காதலாகாது. காதலித்தவர்களை ஏமாற்றுவதற்கு பதில், விட்டுக்கொடுத்து வாழ்தல்கூட பாசம்தான். ஐந்தாமிடமும் சுக்கிரனும் ஆட்சி, உச்சம் என வலுப்பெறுதல், சுபகிரகப் பார்வைபெற்ற காதல் உண்மை யாகவும், திருமணத்தில் முடிந்து, கடைசிவரை பாசம் குறையாமலும் வாழ்வர்.
ஐந்தாமிடம் கெட்டு, ஐந்தாம் அதிபதி மறைவிடத்திலும், பாவத்தன்மையும் பெற்றால் காதல் தோல்வி ஏற்படும். ஏழரைச்சனி, அஷ்டமச்சனிக் காலங்களில் காதல் தோல்வி, அவப்பெயர் ஏற்படுத்தும்.
பெண்களுக்கு செவ்வாய் கெட்டு, சனி பார்வை, இணைவு, சுக்கிரன் கெட்டிருந்தால் முறையற்ற காதல், உறவு, பொய்யான அன்பு, பலருடன் காதல் ஏற்படுத்தும். ஐந்தாமிடம் பாவகிரகங்களால் பாதிக்கப்படாமல் சுபத் தன்மையுடன் இருந்தால், கணவர்- மனை விக்குள் காதல் உண்டாகி சந்தோஷமாகப் பாசமுடன் வாழ்வர்.
உறவினர் பாசம்
சின்னச்சின்ன விஷயங்களில் போட்டி, பொறாமை அதிகமாகி, சொந்தம், பந்தத்தின்மீதான பாசம் இன்று குறைந்து, பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்பதைப் புரிந்து நடக்காதவர்கள் வாழ்க்கையில் சொந்தங்களே இல்லாமல் போய்விடுவர்.
நமக்குப் பிடிக்காதவர்கள் நம்மீது காட்டும் பாசம்கூட வேஷமாகவே தெரியும். பணக்கார உறவினர்கள் இருந்தாலும், பணம்கொடுக்கும் உறவினர்களின் பாசமே உயர்ந்ததாகத் தெரிகிறது. இன்று பணத்தைப் பாசத்துடன் ஒப்பிட்டால் பாசம் தோற்றுதான்போகும்.
நாம் நல்லா இருக்கவேண்டும் என எங்கோ ஒரு கோவிலில் நமக்காக வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கும் உள்ளத்திற்கு பெயர்தான் பாசம்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா போன்ற நெருங்கிய உறவுகளிடமே பாசம் குறைந்து விட்டது. இதற்குமேலுள்ள உறவுகளின் பெயர்களே தெரியாத தலைமுறைகளாக இன்று இருக்கிறார்கள்.
இதனைமீறி உறவினர்கள் பாசம் கிடைப்பது வெகுசிலருக்குதான்.
சுகஸ்தானமாகிய நான்காமிடம் தாயார், உறவினர் களைக் குறிக்கும் இடம். குடும்பத்தில் தாயார், சொந்தங்கள் பற்றி நல்லவிதமாக சொல்லி வளர்த் தால்தான், உறவினர்களோடு பிள்ளைகளுக்குப் பாசமான உறவு நீடிக்கும். 4-ஆமிடம் சுபகிரகப் பார்வை, இணைவு, நான்காமிடம் கெடாமல் சுபத் தன்மை பெற்று, நான்காம் அதிபதி தசையும் நடந்தால், சொந்தபந்த உறவு, பாசமான வாழ்க்கை, அனைத்து சுகபோகங்களும் மதிப்பு, மரியாதை யுடன் உறவினர்களால் கிடைக்கும்.
நான்காமிடம் பலவீனமானால், சொந்தபந்ததுடன் சண்டை, சச்சரவு, பிரிவு, அவமானம், தொல்லைகள் நிறைந்து பாசமே வேண்டாம் என்கிற நிலைக்குச் சென்றுவிடுவோம். உறவினர் பாசம்கெடுவதற்கு, குடும்பத்தில் யாரோ ஒருவரின் சுயநலம் காரணமாக இருக்கும். அதைக்கண்டறிந்து களையெடுத்தால், குடும்பப் பாசம் கெடாது. நல்லதும் நினைக்காமல், கெட்டதும் நினைக்காமல், உறவினர்களை சந்திக் கும்போது கெட்ட எண்ணம் இல்லாமல் பழகுவதே சிறந்த பாசம்தான்.
நண்பர்கள் பாசம்
வாழ்க்கையில் பழகிய எல்லாரும் நண்பர்கள் அல்ல. பாசம் கொண்டவர்கள்தான் நண்பர்கள். பலருடன் பழகினாலும் வெகுசிலர்மீதுதான் நம்பிக்கையும், நம்மை அறியாமல் பாசமும் வரும்.
ரத்த சம்பந்தமான உறவுகளின்றி ஒருவர்மேல் பாசம் கொள்வதைத்தான் நட்பு, நண்பர்கள் என்கி றோம். இன்று சொந்தகாரர்கள் என்கிற உறவுகள் பலவித மனஸ்தாபங்களால் பாசம் செலுத்தமுடியாத சூழ்நிலையிலும், பாசமில்லாமலும் போய்விட்டார்கள். நண்பர்களின் பாசமாவது தேவையாகிவிட்டது. ஆரம்பக்கல்விப் பள்ளிக்கால நண்பர்களை 2-ஆம் இடத் திலும், உயர்கல்வி நண்பர்களை 4-ஆமிடத்தின் நிலையிலும் அறியலாம்.
செவ்வாய் நண்பர்களையும் குறிப்பதால் சுபத்தன்மை பெறும்போது நல்ல நண்பர்களையும், பாவகிரகச் சேர்க்கை, பார்வை பெறும்போது கெட்ட நண்பர் களையும், பாசம்காட்டி துரோகம் செய்பவர்களையும் ஏற்படுத்தும். பத்தாமிடத்தோடு தொடர்பு ஏற்பட்டால் பணிபுரியும் இடத்தில் நண்பர்கள் அமைவர். செவ்வாய் கெடுவது, 2, 4, 10-க்குரிவர்கள் பாதித்திருந்தால் கூடா நட்பு கேடாய் முடியும்.
இன்றைய காலங்களில் யார்மீது பாசம் வைத்தாலும் கவனத்துடன் இருக்கவேண்டும். என்மீது பாசம் காட்டு வதுபோல பேசி நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டால், இழந் தவற்றை ஏதும் பெற இயலாது. நாம் ஏமாந்ததற்கு நம்முடைய எதார்த்தமான பாசம் காரணமல்ல. நம்பிய ஏமாளித்தனம்தான் காரணம். யாரிடமும் ஜாக்கிர தையாக இருக்கவேண்டியது நம்முடைய பொறுப்பு.
பழகியவர்கள் திடீர் பாசம்
வாழ்க்கையில் சிலரை திடீரென்று சந்திப்போம்.
சந்தித்த சில நாட்களில் நம்முடன் நெருக்கமாகி விடுவார்கள். இத்தனை நாள் இப்படி பாசமானவரை- நம் முன்னேற்றத்தில் அக்கறையானவர்களை சந்திக்காமல் இருந்துவிட்டோமே என வருத்தப்படு வதற்குள், நம்மை ஏமாற்றிப் பணம், நகையை எடுத்துவிட்டு, நடுத்தெருவில் நிப்பாட்டிவிடுவர். நம்முடைய பேராசையை சரியாகப் பயன்படுத்திக் கொள்வர். பார்ப்பவர்களிடமெல்லாம் பாசத்தை எதிர்பார்ப் பது முட்டாள்தனமானது. உண்மையான நண்பர்கள் நேரடியாக எப்போதும் புகழமாட்டார்கள்.
""என்ன இப்படி மெலிஞ்சுட்டீங்க?" என்ன குண்டா கிட்டீங்க?' எனப் பார்த்ததும், எதார்த்தமாகக் கேட்பதை ஓடிப்போய்க் கண்ணாடிமுன் நின்று பார்ப்பவர்கள் நீங்களென்றால், நீங்கள்தான் எளிதாக ஏமாறக் கூடியவர்.
"உங்களைப்போன்ற அழகு, அறிவு, பழக்கவழக்கம் யாரிடமும் நான் பார்த்ததில்லை' என ஒருவர் நம்மைப் புகழும்போதே சுதாரித்து விலகாவிட்டால் பெரிதாக ஏமாறவேண்டி இருக்கும். தீய நபர்களின் பாசம் 6, 8, 12-ஆம் அதிபதிகள் தசாபுக்திகளில் கிடைக்கும்.
நம்மிடம் ஏமாந்தவர்கள் நம்மைத் தண்டிக்க வில்லையென்றால், ஏமாளிகள் என்று அர்த்த மில்லை. "பாசம் வச்சுட்டோம். போனா போடா"ன்னு விட்டுவிட்டுப்போவதுதான். அதே ஏமாற்று வேலையை எல்லாரிடமும் காட்டினால் தண்டனைதான் கிடைக்கும்.
தன்னை ஏமாற்றியவர்களிடமிருந்து ஏமாற்று வித்தையைக் கற்று, இன்னொருவரை ஏமாற்றத்தான் நிறையபேர் ஆசைப்படுகிறார்கள். இயல்பாகவே ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற மறுப்பவர்கள்மீது கோபம் வந்துவிடுகிறது. பாசத்தால், பழகியவர்களிடம் பலர் ஏமாந்துபோயிருக்கிறார்கள். கெட்ட நேரம் ஆரம்பிக்கிறதென்றால், நல்லவர்களைவிட்டு விலக ஆரம்பிப்பர். பாதகாதிபதி, ஏழரைச்சனிக் காலங்களில் பழகியவர்களால் பாதகம் ஏற்படும். பலநாள் நம்மைக் கண்டுகொள்ளாதவர்கள் திடீர்ப் பாசம் காட்டுகிறார்கள் என்றால், நம்மிடம் எதையோ எதிர்பார்த்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்து நடந்துகொண்டால் பாதிப் பில்லாமல் தப்பிக்கலாம்.
பரிகாரம்
விலங்குகள், எதற்காகப் பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம், எதற்காக சாகிறோம் என்பதைப் பற்றிய சிந்தனையின்றி சாப்பிடும், தூங்கும். அருகில் ஒத்துவருப வர்களோடு உறவுகொண்டு வாழும். அதேபோல், வெளிநாட்டினர் குடும்ப நெறிகளற்று வாழ்ந்ததால் நிறைய இழந்துவிட்டனர். இந்தியக் கலாசாரத்தைத் தவறவிட்டோம் என்பதை உணர்ந்து, மாற்றம் காண முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
பணம் பணம் எனப் பாசத்தைத் தூக்கியெறிந்ததால், மனித இனம் கெட்டு அழிந்துவிடும் என்கிற நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நமக்கு "கொரோனோ' என்கிற சிறிய வைரஸ் கிருமியால் பல நன்மைகள் நாட்டில் நடந்துவருகிறது. "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்றுதான் சொன்னார்கள். சொந்த ஊரைவிட்டு சொந்தங்களைவிட்டுப் பணம் கிடைக்கும் இடத்திலேயே வாழ்ந்துவிடுங்கள் என சொல்லவில்லை. எங்கே சம்பாதிக்கப் போனாலும் சொந்த ஊர், சொந்த பந்தம்தான் நம் பரம்பரை வாரிசுகளுக்கு நிரந்தரம் என்பதை "கொரோனோ' உறுதி செய்துள்ளது.
கோடிகோடியாக சம்பாதித்தாலும் பாசத்தை வளர்த்தால்தான் அநாதையாக இறக்கும் நிலை ஏற்படாது என புதிய பணக்காரர்கள் பலருக்கு புரியவைத்திருக்கிறது. யாருடைய உதவி, அன்பு, பாசம் தேவையில்லை என்று பேசியவர்கள் இன்று அநாதையாக மருத்துவமனையில் தனிமைப்படுத்திய பின்பு கண்டிப்பாகப் புரிந்திருக்கும். "ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்', "ஊரோடு ஒத்துவாழ்' என்கிற அறிவுரை அனைத்திற்கும் பொருந்தும்.
ஆதலால், பகைமைகளை மறந்து சொந்தபந் தங்களின் பாசத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் கொடுத்தால் உலகம் வியக்கும் சாதனையை நம் சந்ததிகள் சாதித்துக்காட்டுவர்.
செல்: செல்: 96003 53748